சாதி ஒழிப்பை கையில் எடுங்கள்!
இந்த ஆண்டுக்கான பெரியார் விருது ஒன்பது பேருக்கு தரப்பட்டுள்ளது!
பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், உறியடித்தல்... என்று கோலாகலமாக, திருவிழாபோல், சென்னை பெரியார் திடலில் கி.வீரமணி தலைமையில் 'திராவிடர் திருநாள்’ மூன்று நாட்கள் நடந்தது. அதில் பத்திரிகை, எழுத்து, இசை, விமர்சனம் என்று இயங்கும் ஒன்பது பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்கள் பேச்சில் இருந்து...
இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்: ''யார் ஒருவன் இந்தச் சமூகத்தில் நீதி நிலைக்கிறது என்று நினைக்கிறானோ... யார் ஒருவன் இந்தச் சமூகத்தின் நீதி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அனைவருக்கும் சமமானதுதான் என்று பரந்த பார்வை கொள்கிறானோ... அவனே சிறந்த பத்திரிகையாளனாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் சுயமரியாதை இயக்கம் என்பது, அடிப்படையில் ஒரு மனிதனாக செயல்படுவதற்கான பார்வையைக் கொடுத்து இருக்கிறது.'
'
எழுத்தாளர் இமையம்: ''என்னுடைய தந்தையும் தாயும், நான் படிக்க வேண்டும்; மனிதனாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்கள் மூடநம்பிக்கைகளை எனக்குள் விதைத்தனர். ஆனால், நான் சுயசிந்தனை உள்ள மனிதனாக மாறியதற்குக் காரணம் பெரியார்தான்!''
எழுத்தாளர் பாமரன்: ''நான் சின்ன வயதில் ஒழுங்காகத்தான் இருந்தேன். என்னைக் கெடுத்ததே இந்த மாதிரி கறுப்புச் சட்டை போட்டவர்கள்தான். செவ்வாய்க்கிழமை காமாட்சியம்மன் கோயிலுக்குப் போவேன். போகும் வழியில் சுவரில், 'பச்ச ரத்தம் குடிக்கும் பூசாரி, பால்டாயில் குடிப்பானா?’, 'பரிசுத்த ஆவியால் இட்லி வேகவைக்க முடியுமா?’ என்றெல்லாம் எழுதி இருக்கும். இதைப் பார்த்துக்கொண்டே சென்றால், எப்படி விளங்கும்? எல்லாத்தையும் விட்டுட்டேன். நம் இயக்கத்தைப் பற்றியும் விமர்சனம் செய்து எழுதி இருக்கிறேன். ஆனால், அதை எல்லாம் மறந்து எனக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள்.''
எழுத்தாளர் பிரியா பாபு: ''இந்த விருதைப் பெற்ற எனக்கு இரண்டு வகையான மகிழ்ச்சி. ஒன்று, பொங்கல் திருநாள் அன்று திருநங்கைகளுக்கு புது வெளிச்சம் கிடைத்து இருக்கிறது. அடுத்து, என்னுடைய தேடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இந்த விருது உத்வேகமாக அமைந்து இருக்கிறது. திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதும் இல்லை; வாய்ப்பு கிடைப்பதும் இல்லை. ஒரு வாய்ப்பை மட்டும் எங்களைப் போன்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள்... திருநங்கைகள் எவ்வளவு சாதிப்பார்கள் என்பது புரியும்.''
டிரம்ஸ் சிவமணி: ''சிறுவயதில் இருந்தே இசையோடு வளர்ந்தவன் நான். என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு வாசிப்பதைக் கேட்கும்போது அருமையாக இருக்கும். அப்படி என்னுள் ஆர்வம் கலந்து வளர்ந்ததுதான் இசை.''
ஆவணப்படத் தயாரிப்பாளர் நிழல் திருநாவுக்கரசு: ''பெரியாரின் கருத்துக்கள் மீது, சிறு வயதில் இருந்தே ஆர்வமும் பரிச்சயமும் இருந்தது. அதன் மூலமாக தமிழ் சமுதாயத்துக்கு தேவையான பணிகளை தொடர்ந்து செய்து வந்தேன். தமிழகத்தில் மறைக்கப்பட்ட இசையாளர்களைக் கண்டு அவர்களது வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு பெரியாரின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்கிறது.''
எழுத்தாளர் தமிழ்மகன்: ''என் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு சின்னஞ்சிறு வயதில் இந்தத் திடலுக்கு முதன்முதலில் வந்தேன். மேடையில் பெரியாரைப் பார்த்தேன். அந்த மேடையில் எனக்கு அவர் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரை இழிவுபடுத்திப் பார்க்க ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. ஆனால், அவர்களால் வெல்ல முடியாது.''
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: ''விபூதி பூசிக்கொண்டு விழாவுக்கு வந்து இருக்கிறேன்னு பார்க்குறீங்களா? நான் இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால் மூடநம்பிக்கை இல்லாதவன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழன் தனித்துத் தெரிவான். தமிழனால் முடியாதது எதுவுமே கிடையாது.''
பேராசிரியர் அ.மார்க்ஸ்: ''எனக்கு விருதுகள் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அப்படி விருதுகள் கொடுக்க முன்வந்தாலும், ஏதாவது காரணத்தைச் சொல்லி நான் கழண்டுவிடுவது வழக்கம். பெரியார் அறிவுப் புரட்சி செய்தார். அவரது பெயரால் வழங்கப்பட்ட இந்த விருது, எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.''
- இப்படி ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை பதிவு செய்தார்கள்.
தலைமை உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. ''திராவிடர் கழகத்துக்காரர்களுக்குக்கூட கலை உணர்வு இருக்கிறதா... கலைஞர்களை அழைத்து பாராட்டுகிறார்களே என்று சிலர் எண்ணுகிறார்கள். எங்களுக்கு கலைஞர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் அக்கறை இருக்கிறது. நாங்க அவர்களைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்தும் பணி எங்களுடையது.
சிங்கப்பூரின் பிரதமராக இருந்தவர் லீ குவான் யூ. அவரது காலகட்டத்தில்தான் சிங்கப்பூர் பெரிய நாடாக வளர்ந்து வந்தது. அவர் 'one man view of the world' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். பல நாடுகளைப் பற்றியும் அவரது பார்வையில் சொல்கிறார். இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்போது, 'இந்தியா வளராததற்கு முக்கியக் காரணம் சாதி. அதனால்தான் இந்தியா இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. சாதிகளால்தான் இந்தியா பிரிந்து சிதறிக் கிடக்கிறது’ என்கிறார். பெரியாரும் இதையேதான் தொலைநோக்குடன் சொன்னார். இத்தகைய கருத்துக்களை விருது பெற்றவர்கள் மக்களிடம் ஆணித்தரமாக எடுத்து உரைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
சாதிகள் ஒழிய அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்!