இயற்கையின் தோழர் நம்மாழ்வார்
கறுப்புச் சட்டை அணிந்த பகுத்தறிவுப் பெரியார் செய்தது அரசியல்- சமூகப் புரட்சி எனில், பச்சைத் துண்டு அணிந்த இந்தப் பசுமைப் பெரியார் செய்தது இயற்கை வேளாண் புரட்சி. நம் மண்ணின் மேன்மையை, பயிர்த் தொழிலின் தொன்மையை, இயற்கையின் பேராற்றலை... இந்தத் தலைமுறைக்கு உரத்துச் சொன்ன உழவன் கிழவன். 'விவசாயம்’ என்ற முறிந்துகொண்டிருந்த கிளையை, மரத்துடன் ஒட்டவைத்த நம்மாழ்வார்... நம் காலத்தின் நாயகன்; தமிழ் நிலத்தின் தாய் விதை!
1937-ல் பிறந்தது முதல் 2013 டிசம்பர் 30-ம் தேதி இயற்கை எய்தும் வரை தன் வாழ்நாளின் பெரும்பகுதிக் காலத்தை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதிலேயே செலவிட்டவர். இப்போது நம்மாழ்வார் நம்முடன் இல்லை. ஆனால், அவர் பேணி வளர்த்த ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு மரமும் அவரை உயிர்ப்புடன் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.
'கேணி வீடு’ - தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தில் உள்ள நம்மாழ்வாரின் வீட்டுக்கு, இதுதான் பெயர். அந்த ஊரில் முதன்முதலில் குடிநீர்க் கேணி வெட்டியது அவரது வீட்டில் என்பதால் இந்தப் பெயர். பெற்றோருக்கு இவர் ஆறாவது மகன். எல்லோருக்கும் வைணவப் பெயர்களாக வைத்தார் தந்தை கோவிந்தசாமி. ஆனால் மூத்த சகோதரர் சடகோபன், தி.மு.க-வில் இணைந்து தன் பெயரை 'இளங்கோவன்’ என்று மாற்றிக்கொண்டார். திருவையாறு தொகுதியில் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். அண்ணன் வழியில் நம்மாழ்வாரும் திராவிட இயக்க சிந்தனையுடன் இருந்ததால், ''நீயாவது உன் பெயரை மாற்றாதே. இந்தப் பெயர் தான் உனக்குப் பிற்காலத்தில் அடையாளமாக இருக்கப்போகிறது'' என்று கேட்டுக்கொண்டார் அவரது தந்தை. அவர் சொன்னதுபோலவே அந்தப் பெயரை இப்போது தமிழ் மண் மொத்தமும் அறியும்.
''5,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை பண்ணிக்கலை. அவருக்குக் கடன் கொடுத்த வங்கி ஆபீஸருங்க யாரும் தற்கொலை பண்ணிக்கலை. அந்தக் கடனைக் கொடுக்கச் சொன்ன நம்ம அமைச்சருங்க தற்கொலை பண்ணிக்கலை. ஆனா, நமக்கெல்லாம் சோறு போடுற எங்க ஏழை உழவன் சில ஆயிரம் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமத் தற்கொலை பண்ணிக்கிறான். ஏன்னா, உழவனுக்கு மானம்தான் பெரிசு!'' - ஆதங்கமும் பெருமிதமுமாக நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.
நம்மாழ்வார், மிகச் சிறந்த பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசுவார். விவசாயம், இலக்கியம், பாடல், நடிப்பு, சட்டம், மருத்துவம், கட்டடக் கலை...எனப் பல்துறைகளைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர். அவரிடம் பேசுவதற்குக் காரணங்கள் தேவை இல்லை. அவரே பேசத் தொடங்கி, சற்று நேரத்தில் நம்மையும் பேச்சில் இணைத்துவிடுவார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, ''அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல... அது என்ன?'' என்று நம்மாழ்வாரிடம் ஒரு விடுகதை போட்டாராம். இவருக்கு விடை தெரியவில்லை. ''நெல்லு அறுக்கும்போது அடிக்கட்டையை வயக்காட்டுலயே விட்டுறோம். நடுவுல இருக்குற வைக்கோலை மாட்டுக்குக் கொடுக்கிறோம். நுனியில் இருக்கிற நெல்லை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறோம்'' என்று அந்தப் பெண் விடையைச் சொன்னபோது, நம்மாழ்வாருக்குள் இருந்த 'இயற்கை விஞ்ஞானி’ விழித்துக்கொண்டார். தன் இறுதிக்காலம் வரையிலும் இந்த 'அடி, நடு, நுனி’ தத்துவத்தை அவர் பரப்பினார்.
''யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க. யூரியா மூட்டையில் '46 சதவிகிதம் நைட்ரஜன்’னு (தழைச்சத்து) எழுதியிருக்கான். ஆனால், நாம பள்ளிக்கூடத்துல என்ன படிக்கிறோம்? வீசுற காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கு. காற்றுலயே அவ்ளோ இருக்கும்போது, எதுக்கு பொண்டாட்டி தாலியை அடகுவைச்சு யூரியா வாங்கிப் போடணும்? காற்றில் இருக்கிற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்கிற தட்டைப் பயறு, உளுந்து, துவரை மாதிரியான பயறு வகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்'' - இப்படித்தான் இயற்கை விவசாயம் குறித்தப் பாடங்களை மிகவும் எளிமையாக, நடைமுறை உதாரணங்களுடன் விளக்குவார்.
வேம்பு காப்புரிமைக்கு வெளிநாட்டினர் சொந்தம் கொண்டாடிய நேரம். ஜெர்மனி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த இந்தியக் குழு ஒன்று சென்றது. அதில் நம்மாழ்வாரும் உண்டு. வெற்றிகரமாக காப்புரிமையை மீட்டு வந்த பின்னர், வெற்றி விழாக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் நம்மாழ்வாரின் பேச்சைக் கேட்ட யாரும் அதை மறக்கவே முடியாது. ''கோர்ட்டுக்கு வெளியே பல நாட்டுக்காரனும் நின்னுக்கிட்டு இருக்கான். நான் வேப்பங்குச்சியை எடுத்து வாயில் வெச்சு நல்லாக் கடிச்சேன். ஒருத்தன், 'என்ன பண்ணிக்கிட்டு இருக்க?’னு கேட்டான். 'பிரஷ் பண்றேன்’னேன். 'எது பிரஷ்?’னு கேட்டான். வாயில மென்னுக்கிட்டிருந்த வேப்பங்குச்சியைக் காட்டினேன். 'பேஸ்ட் எங்கே?’னு கேட்டான். 'குச்சிக்குள்ளயே இருக்குற கசப்புச் சாறுதான் பேஸ்ட்’னு சொன்னேன். எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. கோர்ட்டுக்குள்ள, 'எங்க ஊர் விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்து, பூச்சி விரட்டியாத் தெளிக்கிறான். உங்களுக்கு மேரி மாதா மாதிரி எங்களுக்கு மாரியாத்தா பொம்பளை தெய்வம். அவளுக்கு வேப்ப இலையிலதான் மாலை போடுவோம்’னு சொல்லி சங்கப்பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை எல்லாத்தையும் பாடிக்காட்டினேன்!'' என்று வாதாடியதை நினைவுகூர்வார்.
'இயற்கை விவசாயம் உடனடிப் பயன் தராது. மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ரசாயன உரம் காரணமாகச் சீரழிந்துகிடக்கும் மண், பழைய பக்குவத்தை அடையவே பல ஆண்டுகள் ஆகும்’ என்ற பிரசாரம், 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அப்போது வட இந்தியாவில் நடைபெற்ற இயற்கை விவசாயக் கருத்தரங்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீபாத தபோல்கர் என்கிற கணிதப் பேராசிரியர் 'அமிர்த பானி’ என்ற இயற்கை வளர்ச்சி ஊக்கியைப் பற்றி பரிந்துரைத்தார். அதாவது மாட்டுச் சாணம், மாட்டுக் கோமியம், வெல்லம் ஆகிய கலவையைத் தெளித்தால், பயிர்கள் மிக விரைவில் செழிப்புடன் வளரும் என்பதே அது. அதன் உபயோகம் பற்றி தபோல்கரிடம் மேலும் விசாரித்துத் தெரிந்துகொண்டு தமிழகம் திரும்பிய நம்மாழ்வார் 'அமிர்தபானி’க்கு 'அமுதக்கரைசல்’ என்று பெயர் சூட்டி தமிழ்நாட்டில் பரப்பினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள காந்தியடிகளின் 'வார்தா’ ஆசிரமத்தில் நம்மாழ்வாருடன் ஓர் அதிகாலை நேரத்தில் நடந்துகொண்டிருந்தோம். உடன் வந்த நண்பர் ஒருவர், ''ஐயா, காந்திக்கு இந்தியா பூராவும் தெரிஞ்சவங்க இருந்தாங்க. ஆனா, ஏன் வார்தாவுல வந்து ஆசிரமம் அமைச்சார்?'' என்று நம்மாழ்வாரிடம் கேட்டார். ''சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்த நேரம். நாடு முழுக்கப் போகணும். அதுக்குத் தோதா இந்தியாவின் மத்தியில் வார்தாவில் ஆசிரமத்தை அமைச்சார். நமக்கும்கூட தமிழ்நாட்டுக்கு நடுவில் ஓர் இடம் வேணும்யா. அது உலகத்துல உள்ள எல்லா விவசாயிகளுக்கும் சொந்தமானதா இருக்கணும்'' என்றார். அவர் சொன்னதைப்போலவே தமிழ்நாட்டின் மையத்தில், கரூர் மாவட்டம் கடவூரில், அவர் விரும்பி உருவாக்கிய 'வானகம்’ இயற்கைப் பண்ணையில்தான் விதைக்கப்பட்டிருக்கிறது நம்மாழ்வாரின் உடல்
No comments:
Post a Comment