ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக உலக மக்களின் கவனத்தையும், அதற்காக காத்திருக்கும் உலகளாவிய ரசிகர்களையும் கொண்ட விளையாட்டு உலக கோப்பை கால்பந்து போட்டி மட்டுமே. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டிக்கு தனிச் சிறப்பு. இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; சாதனைக்கான பிறப்பிடம். திருவிழாப்போல கொண்டாடப்படும் இந்நிகழ்வு 64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேசில் நடத்தும் 20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று 12-ந் தேதி அரங்கேற ஆயத்தமாகிறது. கோப்பையை வெல்லப்போவது யார்? வெற்றி வாய்ப்பு யார் பக்கம்? ஆவலுடன் எல்லோரையும் கிரங்கடிக்கும் ஆட்டம் ஆரம்பம்.. உலககோப்பை கால்பந்து பற்றியும், இதுவரை நிகழ்ந்த போட்டிகளின் சில சுவாரஸ்ய தொகுப்பு இதோ...
எப்படி வந்தது உலக கோப்பை கால்பந்து:
முதன் முதலில் சர்வதேச கால்பந்து போட்டி 1872-ல் இங்கிலாந்தின், கிளாஸ்கோவில் நடைபெற்றது. இதில் ஸ்காட்லாந்து-இங்கிலாந்து விளையாடி டிராவில் ஆட்டம் முடிந்தது. 1904-ல் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) தோற்றுவிக்கப்பட்டது. பின் 1908ல் ஒலிம்பிக்கில் நுழைந்தது கால்பந்து ஆட்டம். ஆனால் ஒலிம்பிக்கில் தொழில்முறை போட்டி வீரர்களுக்கு தடை இருந்ததால் பின் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) நிர்வாகிகள் இணைந்து ஒலிம்பிக்கிற்கு நிகரான உலக கால்பந்து போட்டியை உருவாக்க எண்ணினர். பிபா-வின் தலைவரான ஜூலஸ் ரிமெட் தலைமையில் நெதர்லாந்தில் 1928ல் கூடி ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவில் தயாரானது உலக கால்பந்து போட்டி. பின்னர் சுதந்திர நூற்றாண்டினை கொண்டாடும் வகையில் உருகுவேயில் 1930-ல் முதலாவது கால்பந்து போட்டியை நடத்தப்பட்டது. இந்த முதல் உலக கால்பந்து போட்டி ஜூலஸ் ரிமெட் பெயரிலேயே அழைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அது பிபா உலக கோப்பை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. நடப்பு உலக கோப்பையினை வடிவமைத்தவர் சில்வியோ காஸானிகா. உலக கோப்பை 14.4 அங்குலம் நீளமும், 5.1 அங்குலம் சுற்றளவும் உடையது. 5கிலோ எடைகொண்ட இந்த கோப்பை 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது. முக்கிய செய்தி, வெற்றிப் பெற்ற அணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பையே வழங்கப்படும். அசல் கோப்பை பிபா தலைமையிடத்தில் இருக்கும்.
வரலாற்றின் தங்க கிரீடம்:
முதலாவது உலக கோப்பை 1930 உருகுவேயில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 அணிகள் பங்கேற்றன. அன்றைய நாட்களில் கடல் கடந்து வரவேண்டும் என்பதால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நான்கு அணிகள் மட்டுமே வந்தன. தகுதி சுற்றில்லாமல் போட்டியில் நேரிடையாக எல்லா அணிகளும் பங்கேற்றன. மெக்சிகோவுடன் பிரான்ஸ் மோதிய ஆட்டத்தில் சரியாக 19வது நிமிடத்தில் முதல் உலக கோப்பையின் முதலாவது கோலை பிரான்ஸ் வீரர் லுசியன் லாரென்ட் அடித்தார். இறுதிப் போட்டிக்கு உருகுவே-அர்ஜென்டினா முன்னேறியது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் விறுவிறுப்பாக தொடங்கியது ஆட்டம். யார் அந்த முதல் உலக் கோப்பை சாம்பியன் என்று உலகமே அதற்காக காத்திருந்தது. முதல் சுற்றில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் உருகுவே 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. வரலாற்றின் அபார வெற்றி அது. உலகக் கோப்பையின் கிரிடத்தினை உருகுவே தட்டிச்சென்றது இன்றும் பேசப்படும் நிகழ்வு. இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக 70 கோல்கள் உதைக்கப்பட்ட முதல் திருவிழா...
சர்ச்சைகளுக்கு மத்தியில் இரண்டாவது உலக கோப்பை 1934:
இத்தாலி நாட்டில் இரண்டாவது உலக கோப்பை ஆரம்பித்தது. அப்போது 16 அணிகள் பங்கேற்றன. அப்போது இத்தாலியின் ஆட்சிப் பொறுப்பில் சர்வாதிகாரி முசோலினி இருந்ததால், பிபா நிரிவாகக் குழுக்களின் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு இரண்டாவது வாய்ப்பு இத்தாலிக்கு தரப்பட்டது. பல சர்ச்சைகளுக்கு நடுவே தொடங்கியது இரண்டாவது உலக் கோப்பை. போட்டியில் நுழைவதற்கே தகுதிச் சுற்று ஒன்று வைக்கப்பட்டது. இதில் மொத்தம் 32 அணிகள் விண்ணப்பித்து, தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 16 அணிகள் மட்டுமே, உலக கோப்பைக் கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றன. நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதின. சுற்றின் முடிவில் கால் இறுதிக்கு 8 அணிகள் முன்னேறின. அதில் இறுதியாக இத்தாலியும் செக்கோஸ்லோவக்கியாவும் இறுதி ஆட்டத்தினை எதிர்கொண்டது. அப்போது பரபரப்புடன் பேசப்பட்ட ஆட்டமாக இது அமைந்தது. சர்வாதிகாரி முசோலினி ஆட்டத்திற்காக நடுவர்களை தேர்ந்தெடுப்பதில் தலையிட்டதாவும் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் வந்த வண்ணமாக இருந்தது. அதற்கு மத்தியில் 2-1 என்ற கணக்கில் செக்கோஸ்லோவக்கியா அணியை தோற்கடித்து இத்தாலி உலக கோப்பையினை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை போட்டியிலும் 70 கோல்கள் உதைக்கப்பட்டது.
மூன்றாவது உலக கோப்பை யாருக்கு? 1938
பிரான்ஸ் நடத்திய மூன்றாவது உலக கோப்பை ஆரம்பமானது. ஐரோப்பா நாடுகளுக்கே உலக கோப்பை நடத்தும் வாய்ப்பு தரப்படுகிறது என்று பல சர்ச்சைகள் எழுந்தன. இதனால் உருகுவே போன்ற நாடுகள் விளையாட்டை புறக்கணித்தன. மேலும் ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டு கலவரம் போன்ற காரணத்தால் அதுவும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை, அதனால் இந்த முறை 15 அணிகள் மட்டுமே போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் ஹங்கேரி- சுவீடனையும், இத்தாலி- பிரேசிலையும் எதிர் கொண்டது. இதில் இறுதி ஆட்டத்திற்கு இத்தாலியும், ஹங்கேரியும் மோதின. இத்தாலி வீரர்களின் அபார ஆட்டம் இத்தாலியின் பலமாக இருந்தது. குறிப்பாக கோலாஸ்சி, பியலா இருவரும் தலா இரண்டு கோல் அடித்து 4-1 என்ற கணக்கில் ஹங்கேரியை தோற்கடித்து மீண்டும் நடப்பு சாம்பியனாக இத்தாலி வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பியது.
நீண்ட இடைவெளிக்குப் பின் நான்காவது உலக கோப்பை 1950
உலகத்தினையே குலுக்கி எடுத்த இரண்டாம் உலகப்போர் 1942 முதல் 1946 வரையும் நீடித்ததால் தற்காலிகமாக உலக கோப்பை நிறுத்திவைக்கப்பட்டது. பின் அதே புதுமையும், ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்தாக 12 வருடங்களுக்குப் பிறகு 4வது உலக கால்பந்து போட்டியை பிரேசில் நடத்தியது. பிரேசிலின் மறக்க முடியாத துயர விளையாட்டு இறுதிப் போட்டியில் நடத்தப்பட்டது. உலக கோப்பையில் விருப்பமில்லாமல் இருந்த இங்கிலாந்து முதன் முறையாக இந்த முறை போட்டியில் பங்கேற்றது. உலகப் போரின் தாக்கம் கால்பந்தையும் விட்டபாடில்லை. ஜெர்மனி, ஜப்பான் உள்ளே நுழைய முடியவில்லை. அர்ஜென்டினா, பிரான்ஸும் விளையாடவில்லை. இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெறும் காலுடன் விளையாடி பழக்கப்பட்டதாலும், பயணச் செலவு எல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவும் விளையாடவில்லை. இறுதியில் 13 நாடுகளுடன் ஆரம்பமானது மீண்டும் உலக கோப்பை. இறுதி ஆட்டத்தில் பிரேசிலும் உருகுவேயும் எதிர் கொண்டது. பிரேசில் வெற்றி பெறும் என்ற ஆனந்தத்தில் அனைத்து ரசிகர்களும் இருக்க 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றிவாகை சூடியது. இறுதி கோலை தவறவிட்ட கோல் கீப்பர் பார்போசாவை பிரேசில் நாடே திட்டித் தீர்த்தது. அவருக்கான எல்லா சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. எங்கு சென்றாலும் அவமானத்துடன் திரும்பும் அவலத்துடனே இறுதி வரை வாழ்ந்தார். இதை விட சுவாரஸ்யம், போட்டியில் பிரேசில் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் இருவர் மைதானத்திலேயே தன் உயிரை விட்டனர். பலரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த முறை மொத்தமாக 88 கோல்கள் உதைக்கப்பட்டது.
ஐந்தாவது உலக போட்டி 1954
இந்த முறை சுவிட்சர்லாந்து போட்டியை நடத்தியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியிலும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் குறையவில்லை. கடந்த போட்டியில் மறுக்கப்பட்ட ஜெர்மனி இந்த முறை களத்தில் குதித்தது. மொத்தம் 140 கோல்கள் உதைக்கப்பட்டது. இதுவரையிலும் அதிக கோல் மழை பொழிந்த ஆட்டமாக 5வது உலக கால்பந்து போட்டி அமைந்தது.
இதில் ஹாங்கேரியே 27 கோல்களை உதைத்து தள்ளியது. இந்தப்போட்டியில் இறுதி ஆட்டத்தினை ஹங்கேரியும் ஜெர்மனியும் எதிர்கொண்டன. நடப்பு சாம்பியனான ஹங்கேரியை முதன்முறையாக தோற்கடித்து 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. லீக் சுற்றில் ஹங்கேரியுடன் தோற்றாலும் இறுதியில் வெற்றிவாகை சூடி சாதித்தது ஜெர்மனி.
ஆறாவது உலக கோப்பை யாருக்கு வெற்றி? 1958
சுவீடன் நாடு நடத்திய போட்டியில் 16 அணிகளுடன் தொடங்கியது ஆட்டம். புதியதாக சோவித் யூனியன், அயர்லாந்து நாடுகளும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜென்டினாவும் ஆட்டக்களத்தில் குதித்தன. இறுதி ஆட்டத்தில் பிரேசிலுடன் சுவீடன் களத்தில் எதிர்கொண்டது. வலுபொருந்திய பிரேசில் எளிதில் சுவீடனை களத்தில் கிரங்கடித்து, 5-2 என்ற வீதத்தில் வெற்றிகொண்டது. இருப்பினும் ஆட்டநாயகனாக பிரான்ஸ் வீரர் ஜஸ்ட் போன்டெ தங்க ஷூவை சொந்தமாக்கினார். 6 ஆட்டங்களில் 13 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். மொத்தமாக 126 கோல்கள் உதைக்கப்பட்டன.
பிரேசிலுக்கு சாதகமான ஏழாவது போட்டி 1962
சிலி நாடு நடத்திய ஏழாவது கால்பந்து போட்டி, வரலாற்றின் பல திருப்புமுனைகளையும் சந்தித்தது. தகுதி சுற்றிற்கே 52 அணிகள் போட்டி போட்டன. அதில் 16 அணிகள் மட்டுமே தேர்வாகின. இதில் சுவீடன், பிரான்ஸ் போன்ற அணிகளால் தங்கள் தகுதியை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. கோல்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இறுதிப் போட்டியில் பிரேசில் - செக்கோஸ்லோவக்கியாவை எதிர்கொண்டது. இதில் அமாரில்டோ, ஜிடோ, வாவா ஆகிய வீரர்கள் உதைத்த கோல்கள் வீதம் 3-1 என்ற கணக்கில் பிரேசில் வெற்றிவாகை சூடியது. லிட்டில் பேர்டு என்றழைக்கப்படும் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் காரின்ச்சா தங்க ஷூவை பெற்றார்.
8-வது உலக கோப்பை 1966
16 அணிகளுடன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் போர்ச்சுகல், வட கொரியா புதிய விருந்தினராக கால்பந்து போட்டியில் நுழைந்தது. இங்கிலாந்து கால் இறுதியில் அர்ஜென்டினாவையும், அரை இறுதியில் போர்ச்சுகலையும் வீழ்த்தி இறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்ட இறுதியில் ஜெப் ஹர்ஸ்ட் அடித்த கோல் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை மண்ணை கவ்வ வைத்தது. போட்டியை நடத்த்திய நாடே வென்றது நாட்டிற்கு பெருமைதானே.
புதிய விதிமுறைகளுடன் 9வது உலக கோப்பை 1970
மெக்சிகோ நடத்திய 9வது உலக கால்பந்து திருவிழா, மிகவும் கலர்ஃபுல்லாக நடந்தது. முதன் முறையாக நவீன கேமராவுடன் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு கலர்புல்லாக ரசிகர்களுக்கு நேரடி விருந்து வைக்கத்தான் செய்தது. 68 அணிகள் விளையாடி பிரதான சுற்றினை 16 அணிகள் அடைந்தன. அதில் பல புதுப் புது நாடுகளின் அறிமுகம், உலகளாவிய கால்பந்து வெறியர்களின் எண்ணிக்கை கூடிய நிலையில் இருந்தது. இறுதிச் சுற்றில் இத்தாலியுடன் பிரேசில் களத்தில் நின்றது. 4-1 என்ற கணக்கில் பிரேசில் 3வது முறையாக வென்று, சக்திவாய்ந்த அணியாகவே மாறியது. இந்த மூன்று முறையும் விளையாடிய வீரர் பீலே, ஹாட்ரிக் உலக கோப்பை வென்ற வீரராகவே இருந்தார். மாற்று வீரரை பயன்படுத்தும் முறை, மஞ்சள், சிவப்பு அட்டை காட்டும் முறை... என புது அறிமுகமும் புது பொலிவுடனும் நடந்தேறியது. மொத்தமாக 95 கோல்கள் உதைக்கப்பட்டது.
பிபா உலக கோப்பை வடிவமைப்பு 1974
மேற்கு ஜெர்மனி நடத்திய 10வது உலக கோப்பை 16 அணிகளுடன் ஆரம்பமானது. இதில் முன்னணி அணிகள் நுழையும் வாய்ப்பை இழந்தது. பின் பல புதிய விருந்தாளிகளாக கிழக்கு ஜெர்மனி, ஹைதி, ஆஸ்திரேலியா, ஜாயிர் முதலிய அணிகள் உள் நுழைந்தது. முதன் முறையாக சிலி வீரர் கார்லஸ் கேஸ்ஜிலி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது வரை உலக் கோப்பை ஜூல்ஸ் ரிமெட் பெயரில் தரப்பட்டது. இந்த முறை புதியதாக உலக கோப்பை வடிவமைக்கப்பட்டது. இத்தாலி சிற்பி சில்வியோ வடிவமைத்த உலக கோப்பைக்கு பிபா என்ற பெயரில் உலகக்கோப்பை தரப்பட்டது. இன்று வரை இதுவே நிலைத்திருக்கிறது. பழைய ஜூல்ஸ் ரிமெட் கோப்பை மூன்றுமுறை சாம்பியனான பிரேசிலிடம் நிரந்தரமாக கொடுக்கப்பட்டது. மேலும் இந்தப் போட்டியில் நெதர்லாந்தினை 2-1 என்ற வீதத்தில் மேற்கு ஜெர்மனி தோற்கடித்து புதிய பிபா கோப்பையினையும் கைப்பற்றியது.
அர்ஜென்டினாவுக்கு சாதகமான 11வது உலக கோப்பை 1978
அர்ஜென்டினா நடத்திய 11வது உலக கோப்பை இது. இதில் 16 அணிகளுடன் 102 கோல்கள் அடிக்கப்பட்டு உணர்வுப்பூர்வமான திருவிழாவாகவே மாறியது உதைபந்து திருவிழா. ஈரான் நாடுகளின் வரவு, உருகுவே, இங்கிலாந்து வெளியேற்றம் என்று மாற்றத்துடன் அமைந்தது இந்த முறை ஆட்டம். இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா- நெதர்லாந்தினை எதிர்கொண்டது. 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா தன் சொந்த நாட்டிலேயே உலக கோப்பையினை கைப்பற்றி முதன்முறையாக கைப்பற்றியது.
லக்கி இத்தாலியின் 12வது உலக கோப்பை 1982
ஸ்பெயின் நடத்திய உலகக் கால்பந்து போட்டி, முதன்முறையாக 24 அணிகளுடன் ஆரம்பமானது. ஆசியா, ஆப்பிரிக்கா அணிகளுடன் ஆட்டம் தொடங்கியது. இறுதிப் போட்டியில் இத்தாலியும் மேற்கு ஜெர்மனியும் எதிர்கொண்டன. அதில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி மூன்றாவது முறையாக மகுடம் சூட்டியது. குறைந்த கோல்கள் மட்டுமே அடித்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றது இத்தாலியின் சிறப்பு. 7 ஆட்டங்களில் 12 கோல்கள் மட்டுமே இத்தாலி அடித்தது. குறைந்த கோல் எண்ணிக்கையுடன் மகுடம் சூட்டிய லக்கி இத்தாலியாக திகழ்ந்தது.
மாயாஜால வெற்றியான 13வது உலக கோப்பை 1986
மெக்சிகோ நடத்திய உலக கோப்பையில் 24 அணிகளுடன் ஆட்டம் சூடுபிடித்தது. கால்இறுதி போட்டியில் இங்கிலாந்தினை எதிர்கொண்டது அர்ஜென்டினா. அப்போது அணியின் கேப்டன் மரடோனா கோல் அடிக்கும்போது தவறி கையால் தட்டி விடுவார். ஆனால் முதலில் கவனிக்காத நடுவர்கள் கோல் கொடுத்துவிடுவார்கள். ஆனால் கேமராவில் அவர் கையால் பந்தை அடித்தது பதிவானது தெரிய வந்தது. இதனால் பல சர்ச்சைகளும் வெளியானது. ஆயினும் அந்த கோல் மூலம் அர்ஜென்டினா வெற்றி பெற்றுவிடும். கடவுளின் கையால் கிடைத்த வெற்றி என்று சொல்லி கேப்டன் லாவகமாக தப்பித்துவிட்டார். வரலாறு கடந்து இந்த கோல் மட்டும் இன்றுமே நிலைத்து நிற்பது சிறந்தது. பிபாவின் உலகின் மிகச் சிறந்த கோலாகவும் இது அமைந்தது. இறுதி சுற்றில் அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த ஆட்டங்களில் மொத்தமாக 132 கோல்களும் அடித்து உதைத்து தள்ளப்பட்டது.
சிலிக்கு தடை; உலக கோப்பை 1990
இத்தாலி நடத்திய 14வது உலக கோப்பை 116ல் தேர்ச்சியாக 24 பேருடன் ஆரம்பமானது பிரதான சுற்றுக்கள். இதில் ஒரு கோல்மாலும் அரங்கேற்றப்பட்டது. சிலி-பிரேசில் இடையே தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் சிலி அணியின் கோல் கீப்பர் ரோஜாஸ், விளையாடும்போது நெற்றியை பிடித்தபடி கிழே விழுந்தார். தலையிலிருந்து ரத்தமும் வந்தது. மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். காரணம் கேட்டபோது, கேலரியிலிருந்து பறந்து வந்த வெடியால் தான் தாக்கப்பட்டதாகவும், இங்கு விளையாடுவது ஆபத்தானது என்று அவரும் சிலி அணியும் மறுத்து வந்தது. பின் கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை பார்த்தபோது, அவரின்மேல் எந்த வெடியும் தாக்கவில்லை. மேலும் கையிலிருந்த பிளேடால் தன்னையே காயமாக்கியதும் தெரியவந்து அவரை வாழ்நாள் முழுவதும் விளையாட தடைவிதித்தது பிபா. அதுமட்டுமல்லாமல் 1994ல் நடக்கப்போகும் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட சிலிக்கு தடை விதித்தது. இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனி - அர்ஜென்டினா விளையாடியது. இதில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து மேற்கு ஜெர்மனி சாம்பியனானது. அதுமட்டுமில்லாமல் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி தனித்தனியே விளையாடிய கடைசி போட்டியும் இதுவே. பிறகு இரண்டும் சேர்ந்து ஒரே ஜெர்மனி நாடானது.
பெனால்டி ஷூட் உலக கோப்பை 1994
அமெரிக்காவிற்கு இந்த முறை வாய்ப்பு. அதிகமான ரசிகர்கள் பார்வையிட்ட கால்பந்து போட்டி, லட்சத்தினை தாண்டிய ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த முதல் உலக கோப்பை இதுவே. ஜெர்மனி நாட்டிலிருந்து ஒரே ஜெர்மனி அணி மட்டும் ஆட்டத்தில் இறங்கியது. இறுதி ஆட்டத்தில் பிரேசில் - இத்தாலியும் மோதின. ஆனால் இருவரும் எந்த கோல் அடிக்காத நிலையில் பார்வையாளர்கள் சோர்ந்து விட்டனர். அதனால் இறுதிச் சுற்றில் பெனால்டி ஷூட் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டது. இதில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியும் பெற்றது.
பிரான்ஸுக்கான உலக கோப்பை 1998
இந்த முறை பிரான்ஸ் நடத்திய உலக கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றது. இறுதிச் சுற்றில் பிரான்ஸ், நடப்பு சாம்பியன் பிரேசிலை எதிர்கொண்டது. பிரேசிலை எதிர்த்து தன் சொந்த நாட்டிலேயே 3-0 என்ற கோல்கணக்கில் கால்பந்து பூதமான பிரேசிலை உதைத்து வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் போட்டியை நடத்திய நாடே கோப்பை வாங்குவதிலும் 6வது இடம். உலக கோப்பையை வென்ற 7வது நாடாக தரவரிசையில் இடம் பிடித்தது. மொத்தத்தில் 171 கோல்கள் உதைக்கப்பட்டன.
21ம் நூற்றாண்டின் சாம்பியன் உலகக் கோப்பை 2002
21ம் நூற்றாண்டின் முதல் உலகக் கோப்பை போட்டியை தென்கொரியாவும் ஜப்பானும் இணைந்து நடத்தின. 7 உலக சாம்பியன் அணிகளும் போட்டியில் தகுதிபெற்று உள்ளே நுழைந்ததும் இதுவே முதல்முறை. ஆசிய மாகாணத்தில் நடந்த முதல் உலக கோப்பையும் இதுவே. இறுதிச் சுற்றில் பிரேசிலும் ஜெர்மனியும் சந்தித்தன. பிரேசில் 2-0 என்ற கோலில் வெற்றிபெற்று 5வது முறையாக பிபா கோப்பையினை தட்டிச் சென்றது. 8 கோல் அடித்து பிரேசிலின் ரெனால்டோ தங்க ஷூவையும் தட்டிச் சென்றார். ஜெர்மனியின் ஆலிவர் கான் என்ற கோல் கீப்பருக்கு தங்க பந்தினை கொடுத்து கவுரவித்தது பிபா. இதுவரையிலும் இவர் ஒருவரே இதை வாங்கிய முதல் மற்றும் கடைசி நபர்.
உலக கோப்பையின் 18வது கோப்பை யாருக்கு? 2006
ஜெர்மனி இரண்டாவது முறையாக போட்டியை நடத்தியது. இதில் இறுதிப்போட்டியில் ஜெர்மனி நடப்பு சாம்ப்யன் பிரேசிலை தோற்கடித்துவிடும் என்று எதிர்பார்க்கையில், இத்தாலி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச் சுற்றில் பிரான்ஸை இத்தாலி 5-3 என்ற வீதத்தில் வெற்றி பெற்றது. இது இத்தாலியின் நான்காவது வெற்றி. இதில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறியது. இறுதி ஆட்டத்தில் பிரானஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மெட்டாசியை ஆடுகளத்தில் தன் தலையால் முட்டி சாய்த்தார். சந்தோஷத்துடன் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் ஜிடேன். காரணம் என்னவென்று தெரியவந்தது. ஜிடேனின் தங்கையே மெட்டாசி தவறாக பேசியதாலே தான் தாக்கியதாகவும் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து, பிரான்ஸில் ஜிடேன் -மெட்டாசி மோதுவது போன்ற சிலையை வடிவமைத்து பொது இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
19வது உலக கால்பந்து ஆட்டம் 2010
தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம். ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தினை வென்றது. நாளுக்கு நாள் கால்பந்தாட்டத்தின் ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்பதற்கு இந்த ஆட்டமே சாட்சி. மேலும் சாகிராவின் வாக்கா வாக்கா பாடல் கால்பந்தாட்டத்தின் உண்மையான உணர்வுபூர்வமான வீடியோ வைரலில் கால்பந்து இன்னும் அதிக ரசிகர்களை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - நெதர்லாந்து மோதியதில் ஸ்பெயின் 1-0 என்ற வீதத்தில் வெற்றியும் பெற்றது வாக்கா வாக்கா..
.
யாருக்குக்காக காத்திருக்கிறது உலக கோப்பை 2014?
32 அணிகளுடன் இன்று 12ம் தேதி உலகமே ஏங்கும் கால்பந்து திருவிழா நிகழவுள்ளது. யாருக்கு கிரீடம் என்று பல விமர்சனங்களும் செய்திகளும் வந்த வண்ணம் இருந்தாலும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்தபாடில்லை. உலக கோப்பை போட்டிகளில் அதிக வெற்றிகளையும் 5முறை சாம்பியன் பட்டமும் வென்ற பிரேசிலில் ஆட்டம் ஆரம்பமாகிறது. அதுமட்டுமில்லாமல் எல்லா உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலும் ஆடிய ஒரே அணியும் இதுவே. பிரேசிலுக்கான உலக கால்பந்து போட்டியில் சகிரா ஆல்பம் லாலாவும் வெளியாகி இன்னும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும், வரலாற்றின் முக்கியமான 2014ன் சாம்பியன் யார் என்று
|