கொடிகட்டிப் பறக்கும் இயற்கை சாகுபடி!
மாதம் 81 ஆயிரம் லாபம்
த. ஜெயகுமார் படங்கள்: தி. குமரகுருபரன்
அரசாங்க வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் பலருக்கும் 'அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற கேள்விதான் பெரியவிஷயமாக முன்நிற்கும். பெரும்பான்மையோருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் தடுத்துவிடும். அதையெல்லாம் தாண்டி, விவசாயத்தில் இறங்கி வெற்றிக்கொடி நாட்டும் மூத்தக் குடிமக்களில் ஒருவ ராக சாதித்துக் கொண்டிருக்கிறார்... காஞ்சிபுரம் மாவட்டம், பவுஞ்சூர் அருகேயுள்ள ஜல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட ரெட்டி. இவருடைய தோட்டத்துக் காய்கறிகள், சென்னையில் உள்ள இயற்கை அங்காடிகள் பலவற்றின் வழியாக நுகர் வோரைச் சென்றடை கின்றன.
சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால், 81 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூவத்தூர். இங்கிருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் பயணித்தால், ஜல்லிமேடு. சாலையின் வலதுபுறத்திலேயே 'பத்மாவதி பண்ணை’ என்ற பெயர் பலகை வரவேற்கிறது. தோட்டத்துக்குள் நுழைந்தபோது, மினி டெம்போவில் வேலையாட்கள் மற்றும் மகன் பரணி ஆகியோரோடு சேர்ந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டிருந்த வெங்கட ரெட்டி, நம்மை காத்திருக்கச் சொல்லிவிட்டு, பணிகளில் தீவிரமானார். அதையெல்லாம் முடித்துவிட்டு நம்மிடம் வந்தவர், விரிவாகப் பேசத் தொடங்கினார்.
இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!
''எனக்குப் பூர்வீகம் திருவண்ணாமலை. கல்பாக்கம் அனல்மின் நிலையத்துல ஃபோர்மேன் வேலை கிடைச்சதால குடும்பத்தோட வந்துட்டேன். 2001-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். அதுக்கப்பறம் விவசாயம்தான்னு முடிவு பண்ணி, இந்த 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். பொட்டல்காடா இருந்த நிலத்த சரிசெஞ்சு, சாகுபடிக்கு ஏத்த நிலமா மாத்தினேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தைப் பயன்படுத்தித்தான் நெல், வேர்க்கடலைனு விவசாயம் செஞ்சேன். 'பசுமை விகடன்’ அறிமுகமான பிறகு... அமுதக்கரைசல், ஜீவாமிர்தம்னு கொஞ்சம் கொஞ்சமா இயற்கைக்கு மாறிட்டேன். என்னோட மகன், பாதுகாப்புத் துறையிலிருந்து விருப்ப ஓய்வு வாங்கிட்டு வந்து, என்னோட கைகோத்த பிறகு, முழுமையா இயற்கை முறையில காய்கறிகளை விளைய வெக்குறோம். அதுக்கு சுழி போட்டுக் கொடுத்தது 'பசுமை விகடன்’தான்'' என்று நெகிழ்ந்த வெங்கட ரெட்டி, தான் பயன்படுத்தும் விவசாயத் தொழில்நுட்பங்களைப் பற்றி சொன்னார்.
''பீர்க்கன், சுரைக்காய், பாகல், கோவைக்காய், புடலை, காராமணி, வெள்ளரி, சேப்பங்கிழங்கு, பரங்கிக்காய், தர்பூசணி, தக்காளி, வெண்டை, கத்திரி, மிளகாய், அவரைனு 10 ஏக்கரை காய்கறிகளுக்காக ஒதுக்கிட்டேன். 5 ஏக்கர்ல மா இருக்கு. மீதி 2 ஏக்கர்ல வீடு, மாட்டுக்கொட்டகை, மண்புழு உர ஷெட் எல்லாம் இருக்குது. வரப்பு, சும்மா இருக்குற நிலத்துல 800 தென்னை, 1,000 தேக்கு இருக்கு. 14 மாடுகளையும், ஒரு கிர் இன காளையையும் வளத்துட்டிருக்கேன். மாடுகளோட சாணம், மூத்திரத்தை வெச்சு... மண்புழு உரம், அமுதக் கரைசல், பஞ்சகவ்யானு தயாரிச்சுக்குறேன். இது செம்மண் நிலம். காய்கறிகளையும் சாகுபடி செஞ்சு ஆர்கானிக் கடைகளுக்கு அனுப்பிட்டிருக்கேன்'' என்ற வெங்கட ரெட்டி, காய்கறிப் பயிர்களுக்கான சில தொழில்நுட்பங்களைச் சொன்னார்.
தண்ணீர் சேமிக்க மல்சிங் ஷீட்!
''கத்திரி, அவரை, மிளகாய், வெள்ளரி, பரங்கிக்காய்க்கு மல்ஷிங் சீட் பயன்படுத்தித் தான் சாகுபடி செய்றேன். 2 அடி அகலம், 1 அடி உயரத்துல பார் அமைச்சு கோழி எருவைப் போட்டு... சொட்டுநீர்க் குழாய்களைப் பதிச்சு, அது மேல மல்சிங் ஷீட் போட்டு மூடிடணும். விதையையோ அல்லது நாத்துகளையோ மல்சிங் ஷீட்டில் துளை போட்டு நடவு செய்யலாம். இப்படி செய்றப்போ களைகள் வராது. அதில்லாம தண்ணியும் குறைவாத்தான் தேவைப்படும். தினமும் ஒரு மணி நேரம் பாய்ச்சினா போதும். வெப்பநிலை சீரா இருக்குறதோட, மல்சிங் ஷீட்ல இருந்து சூரிய ஒளி எதிரொலிக்கிறதால பூச்சிகளும் குறையுது. ஒரு ஏக்கருக்கு மல்சிங் ஷீட் போடுறதுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
முறையான பராமரிப்பு... முத்தான மகசூல்..!
காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க, சிமெண்ட் தூணைப் பயன்படுத்துறேன். இது ரொம்ப வருஷத்துக்குத் தாங்கும். சீக்கிரத்துல உடையாது. பயிர் சுழற்சிக்காக ஒரு போகம் நெல் போட்டு எடுப்பேன். இதனால மண்ணுல சத்துக்கள் நிலையா இருக்கும். தோட்டத்துல 6 தேனீப் பெட்டிகள் இருக்கு. இது மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். ஒரு பயிர் அறுவடை ஆரம்பிச்சதுமே, அடுத்த போகத்துக்கு நிலத்தைத் தயார் பண்ணிடுவேன். அதுக்காகத்தான் கொஞ்ச நிலத்தை எப்பவும் சும்மா வெச்சிருப்பேன். வேலை கெட்டுடக்கூடாதுனு 2 டிராக்டர், 1 பவர் வீடர் சொந்தமா இருக்கு. தோட்டத்திலே வேலை செய்யறதுக்காக 3 குடும்பங்கள் இருக்கு. முறையான பராமரிப்பு பண்றதால, எப்பவுமே குறைவில்லாத மகசூல் வந்துட்டே இருக்கு'' என்று ஆனந்தம் பொங்கச் சொன்னார் வெங்கட ரெட்டி.
விற்பனைக்கு பிரச்னையில்லை!
வருமானம் பற்றிப் பேசிய பரணி, ''பலவகையான காய்கறிகள் விளையறதால எந்த நிலத்திலிருந்து எவ்ளோ வருதுனு கணக்கு வெச்சுக்குறதில்லை. சென்னையில் இருக்கிற இயற்கை அங்காடிகளுக்கு வாரத்துக்கு ரெண்டு தடவைனு மாசத்துக்கு 3 டன் காய்கறிகளை அனுப்பிட்டிருக்கோம். வெளி மார்க்கெட்ல விக்கிறதைவிட கூடுதல் விலைக்கு எடுத்துக்கிறாங்க. நியாயமான விலை கிடைக்கிறதால தைரியமா விளைவிக்க முடியுது. மாசத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. காய்கறிகள் ஃப்ரெஷ்ஷா போய்ச் சேரணுங்கிறதுக்காக டெம்போவும் சொந்தமா இருக்கு. வாரத்துல செவ்வாய், வெள்ளி மட்டும் இயற்கை அங்காடிகளுக்கு காய்கள் போகும். அன்னன்னிக்கு அறுவடை செய்ற காய்கறிகளை கோயம்பேடு மார்க் கெட் அல்லது பக்கத்துல நல்ல விலை கிடைக்கிற மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் மூலமா அனுப்பிடுவேன். இப்படி மாசத்துக்கு 6 டன் காய்கறி போகுது. இது மூலமா சராசரியாக 96 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. காய்கறிக்கு 10 ஏக்கரை ஒதுக்கியிருந்தாலும், ஏழு ஏக்கர்லதான் இப்போதைக்கு காய்கறிகள் இருக்கு. இது மூலமாவே, மாசத்துக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வருமானமா வருது. போக்குவரத்து, வேலையாட்கள், இடுபொருள்னு எல்லாம் போக மாசம் 81 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது'' என்று சந்தோஷமாக விடைகொடுத்தார்
No comments:
Post a Comment