Thursday, June 19, 2014

இந்தியாவில் வெளிநாட்டு  நிறுவனங்களுக்கு முதலீட்டைவிட 10 மடங்கு அதிக சலுகைகள்
 
2005-ல் அ.தி.மு.க ஆட்சியில் நோக்கியா தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு வந்த தி.மு.க ஆட்சியும் நோக்கியாவை ஆதரித்து வரிச் சலுகைகளை வாரி வழங்கியது.
 
 
சிப்காட்டுக்குச் சொந்தமான 210 ஏக்கர் நிலம், ஒரு ஏக்கர் 4.5 லட்சம் என்ற கணக்கில் 99 வருட குத்தகைக்கு நோக்கியாவுக்கு வழங்கப்பட்டது. இதில் சிப்காட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக் கட்டணம் கிடையாது. நோக்கியா நிறுவனம், தன் தேவைக்குப் போக மீதமுள்ள இடத்தை பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டுக்கொள்ளலாம். மாநிலமே மின்வெட்டில் புழுங்கினாலும் நோக்கியாவுக்குத் தடையில்லா மின்சாரம் உறுதி. தொழிற்சாலைக்குத் தேவையான மின்சார விநியோகத்துக்காக, ஆலையின் உள்ளே அரசு செலவில் ஒரு துணை மின் நிலையம் அமைத்துத் தரப்பட்டது. நோக்கியா, தன் சொந்த செலவில் மற்றொரு துணை மின் நிலையத்தை அமைத்துக்கொண்டது. அதன் செலவில் 50 சதவிகிதத்தை அரசே தந்தது. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நோக்கியா விற்பனை செய்துகொள்ளலாம். அதன் மீது வரி கிடையாது. நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை வசதி, அரசு செலவில் செய்து தரப்பட்டது.
 
வாட் வரியாகவும், விற்பனை வரியாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு செலுத்துகிறதோ, அந்தத் தொகையை மாநில அரசு திருப்பித் தந்துவிடும். இந்த வகையில் 2005 தொடங்கி 2011-ம் ஆண்டு வரை நோக்கியாவுக்கு, தமிழக அரசு கொடுத்த தொகை சுமார் 850 கோடி ரூபாய். நோக்கியா ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதால், சுங்க வரி, உற்பத்தி வரி ஆகியவை கிடையாது. இந்த வகையில் 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் நோக்கியா பெற்ற வரிச் சலுகை 681 கோடி ரூபாய். நோக்கியாவுக்கு 20 சதவிகித வருமான வரியும் கிடையாது. இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பு சுமார் 700 கோடி ரூபாய். எட்டு ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் இந்தத் தொகை மட்டும் 5,600 கோடி ரூபாய். இப்படியாக நோக்கியா பெற்றுள்ள மொத்த வரிச் சலுகையின் மதிப்பு, எப்படியும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரும். ஆனால், நோக்கியாவின் முதலீடு வெறும் 1,125 கோடி ரூபாய் மட்டுமே. முதலீட்டைவிட 10 மடங்குத் தொகையை வரிச் சலுகைகளாக மட்டுமே பெற்றுள்ளது நோக்கியா. முக்கியமாக, இந்த அனைத்து வரிச் சலுகைகளும், நோக்கியாவுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  
 
தனது உற்பத்தியின் மூலம் நோக்கியா ஈட்டிய லாபம், தனிக் கணக்கு. ஒரு மாதத்துக்கு 1.3 கோடி செல்போன்கள் வீதம் தயாரித்து, 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது நோக்கியா. இதன் மூலம் 2006-2013 காலகட்டத்தில் ஈட்டிய மொத்த வருமானம் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய். இதில் 20 சதவிகிதம் லாபம் எனக்கொண்டால், 30 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது. இப்படி... வரிச் சலுகையாகவும் லாபமாகவும் பல்லாயிரம் கோடியை அள்ளிக்கொண்ட நோக்கியா, தன் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஊதியம் சொற்பத்திலும் சொற்பம்!
 
 
 
எப்படி ஏமாற்றியது நோக்கியா?
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், தன் செல்போன்களில் பயன்படுத்தும் மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையை, தன் தாய் நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கியாவின் இந்தியத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையாக, 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 20,000 கோடி ரூபாய் பின்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு டீ.டி.எஸ் பிடித்தம் செய்து, இந்திய வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டும். அதை நோக்கியா செலுத்தவில்லை. அந்தத் தொகை அபராதம், வட்டி என அதிகரித்து 21,153 கோடியாக உயர்ந்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் கட்டவில்லை என்பதால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து நோக்கியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது மத்திய அரசுடன் உள்ள வழக்கு.
 
தமிழக அரசுடன் மற்றொரு வழக்கு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சென்னை நோக்கியாவில் உற்பத்திச் செய்யப்படும் செல்போன்களில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி ஏற்றுமதி செய்வதாகச் சொல்லித்தான் வரிச் சலுகைகளைப் பெற்றுவந்தது நோக்கியா. ஆனால், 80 சதவிகித செல்போன்கள் உள்நாட்டிலேயே விற்கப்பட்டிருப்பதாக சொன்ன தமிழக அரசு, இந்த வகையில் மாநில அரசுக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம், 'மொத்த வரியின் 10 சதவிகிதமான 240 கோடியை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தொகையையும் செலுத்த முடியாது என இப்போது நோக்கியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
 
நோக்கியா மட்டுமல்ல... இந்திய அரசு பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், கடைசியில் கடும் வரி ஏய்ப்பில்தான் ஈடுபடுகின்றன. வோடஃபோன் நிறுவனத்தின் 11,000 கோடி வரி ஏய்ப்பு பிரச்னை, நாடு தழுவிய அளவில் பேசப்பட்டது. ஷெல், கூகுள் ஆகியவை மீதும் வரி மோசடி சர்ச்சைகள் உள்ளன. 2005-06வது நிதி ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட 1,915 பன்னாட்டு நிறுவனங்களில் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார் அப்போதைய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

No comments:

Post a Comment