Friday, November 28, 2014

தமிழின் திரை ஆசிரியரைக் கொலைசெய்து விட்டோம்
 
செழியன்
திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகும் ஆசையுடன் நான் ஒரு கோடைகாலத்தில் சென்னைக்கு வந்தேன். வந்த புதிதில் நண்பர் குமாருடன் திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டியிருந்த அவரது வீட்டில் தங்கியிருந்தேன். குமார், எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்கான தனியார் அலுவலகத்தில் பணியில் இருந்தபடி, நடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தார். நானும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்ததால், இரவு வெகுநேரம் வரை இருவரும் சினிமாக்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.
 
அப்படி ஒருநாள் இரவுப் பேச்சின் நடுவே, 'செழியன்... உங்கள என் அங்கிள்கிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணிவைக்கிறேன்...’ என்று சொன்னார். அவர் சொன்ன அங்கிள் இயக்குநர் ருத்ரய்யா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த வாரத்தில் நான் அவசரமாக சிவகங்கைக்குக் கிளம்பவேண்டி இருந்தது. கிளம்பும்போது, 'எய்ட்ஸ் குறித்த விழிப்புஉணர்வுப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருகிறீர்களா?’ என்று குமார் கேட்டார். அது எனக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தியாக இருந்தது. ஊருக்கு வந்ததும் திரைக்கதையை ஒரு வாரத்தில் எழுதி ஷாட்டெல்லாம் பிரித்து ஒரு ஷூட்டிங் ஸ்கிரிப்ட்போல அனுப்பிவைத்தேன்.
 
அதற்கு அடுத்த வாரம் சென்னை திரும்பியதும் 'செழியன்... நீங்க அனுப்புன ஸ்கிரிப்ட்டை மாமாகிட்ட குடுத்தேன். படிச்சுட்டு நல்லாயிருக்குனு சொன்னார். உங்களைப் பாக்கணும்னு சொன்னார்.’
'சாரைப் பாக்கணுமே...'
 
'பொறுங்க ரெண்டு நாள்ல தலைவரே நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார்.'
 
 
இரண்டு நாட்கள் கழித்து ஓர் இரவு. குமார், பைக்கில் அவரை வீட்டுக்கு அழைத்துவந்தார். வேட்டி கட்டி, கை மடித்துவிடப்பட்ட சட்டையுடன் அவர் வண்டியில் இருந்து இறங்குவதை பால்கனியில் இருந்து பார்த்தேன். திரைப்பட ஆசை வந்த பிறகு நான் பார்க்கப்போகிற முதல் திரைப்படப் பிரபலம். சிரித்துக்கொண்டே கைகொடுத்தார். கொஞ்ச நேரம் என்ன செய்வதெனத் தெரியாத மௌனம்.
 
' 'அவள் அப்படித்தான்’ ரொம்பப் பிரமாதமான படம் சார்.’
'தேங்க்ஸ்.’
படம் பற்றி மேலும் பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. அமைதியாக இருந்தேன்.
கடல் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது
'மாப்ள...’
குமார் இரண்டு பியர் பாட்டில்களை எடுத்து வைத்தார்.
 
'நீங்க குமாருக்கு எழுதி அனுப்பிச்ச கதையைப் படிச்சேன். ஒரு கதையா நீங்க எழுதுனது ஓ.கே. ஆனா அதை ஒரு நல்ல ஸ்கிரிப்ட்னு சொல்ல மாட்டேன். எதுக்கு அத்தனை க்ளோஸப். அத்தனை ட்ரக் இன்... ஜூம் இன். சினிமாங்கிறது காட்சி மொழி இல்லையா? வார்த்தை வார்த்தையா ஏன் கதை சொல்லணும்? காட்சி காட்சியாத்தான் சொல்லணும். போட்டோகிராபி உங்களுக்குத் தெரியுமா செழியன்?’
'போட்டோ எடுக்கத் தெரியும். அவ்வளவுதான் சார்.'
 
'முறையா போட்டோகிராபி கத்துக்கங்க... நாளைக்கு இன்ஸ்டிட்யூட் போவோம். நான் அப்ளிக்கேஷன் வாங்கித் தர்றேன். சினிமாட்டோகிராபி ஸீட் வாங்கிரலாம். புக்ஸ் எல்லாம் படிப்பீங்கனு குமார் சொன்னான். நிறையப் படிக்கணும்... படிங்க. சினிமா எங்கேயும் போயிறாது. இங்கதான் இருக்கும். லிட்ரேச்சர் படிச்சுட்டு சினிமாட்டோகிராபியும் கத்துட்டு வாங்க. அப்புறம் நீங்கதான் ராஜா... உங்களை யாரும் அசைக்க முடியாது.'
 
இரண்டு நாட்களில் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் அழைத்துப்போய் ஒளிப்பதிவில் சேர்வதற்கான விண்ணப்பம் வாங்கிக் கொடுத்தார். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்த சூழலில், திரும்பவும் படிப்பது சாத்தியமாகவில்லை. எனவே, என் திரைப்பட ஆசைகளை முறையான  தொழில்நுட்பத்துடன் சந்திப்பதுதான் சரி என்கிற தெளிவு  ருத்ரய்யாவின் சந்திப்புக்குப் பிறகுதான் எனக்குத் தோன்றியது. உதவி இயக்குநர் ஆசையை விட்டுவிட்டேன். அரைகுறையாகத் தெரிந்த போட்டோகிராபியை இன்னும் ஆழமாகக் கற்றுக்கொண்டு சென்னை வரலாம் என சிவகங்கை திரும்பினேன்.
 
திரும்பவும் ஐந்து வருடங்கள் கழித்துதான் சென்னை வந்தேன். ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமுடன் எனது முறையான திரைப்பட வாழ்க்கை தொடங்கிவிட்டது. அப்போது ஒருமுறை  சென்னைப் புத்தகக் கண்காட்சியில் குமாருடன் அவரைப் பார்த்தேன்.
 
'என்ன செழியன்... பி.சி-கிட்ட இருக்கீங்களாமே. வெரிகுட். நாம மீட் பண்ணுவோம்... கூப்பிடுறேன்'’ என தோளைத் தொட்டார்.
திரைப்படத்தின் டிஸ்ஸால்வ்போல வருடங்கள், சூழல்கள், பருவங்கள், நொடிகளில் கடந்துசெல்கின்றன. ஒருநாள் கைபேசியில் அழைத்தார்.
'செழியன், நாம மீட் பண்ணணுமே...'
 
இரவு 7 மணிக்கு சென்னை லைட்ஹவுஸ் அருகில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. அவர் சொன்ன இடத்துக்கு நான் வந்தபோது, கடந்து செல்லும் வாகனங்களின் மஞ்சள் ஒளியில் வெள்ளைச்சட்டையும் வேட்டியும் அணிந்த ருத்ரய்யா சாலையோரம் நின்று கைகாட்டினார்.
 
ஒன்பதாவது மாடியின் மேல்தளத்துக்கு வந்தோம். கடல் காற்றும் அந்த ஏகாந்தமும் அற்புதமாக இருந்தது. ஒரு நாற்காலி தனியே கிடந்தது. இன்னோர் இரும்பு நாற்காலியைத் தூக்கி வந்தார். 'சார் குடுங்க...’ என்று வாங்கி தனியே இருந்த நாற்காலியின் எதிரில் போட்டேன். 'இருங்க வந்துர்றேன்’ என்று சொல்லிவிட்டு இருளில் நடந்தார்.
 
நான் மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் ஓரம் நின்று, கடற்கரைச் சாலையைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான ஒளிப்புள்ளிகள் நகர்ந்துகொண்டிருந்தன. கலங்கரை விளக்கத்தின் ஒளி என்னைத் தொட்டு அந்தக் கட்டடத்தின் மேல்தளத்தைத் தடவிக் கடந்து சென்றது. முதல்முறையாக கலங்கரை விளக்கத்தின் ஒளி இவ்வளவு அருகில் கடந்துசெல்வதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். மாநகரத்தின் இருளை வாசிக்கும் ஒற்றைக்கண் போல, அந்த ஒளி வானத்தில் நகர்ந்து சென்றுகொண்டிருந்தது.
 
'இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு சார்...'
'பல நேரங்கள் இங்கதான் வந்து தனியா உக்காந்துருவேன்...' எனச் சொல்லும்போது ஒரு வேலைக்காரச் சிறுமி கையில் சில்வர் பாத்திரத்துடன் வந்தது. 'குடுப்பா' என வாங்கி அந்தச் சிறுமியை அனுப்பிவிட்டு தேநீரை ஊற்றினார்.
 
'சார் குடுங்க...' என்று சொல்கையில் 'இருக்கட்டும் செழியன்...' எனச் சொல்லி அவரே ஊற்றிக் கொடுத்தார். தேநீர் அருந்தும்போது தலை சாய்த்துக் கீழே பார்த்து கண்களை அடிக்கடி இமைத்துக்கொண்டிருந்தார். கதை சொல்லத் தயாராகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். கலங்கரை விளக்கத்தின் ஒளி, அவர் முகத்தின் ஒரு பாதியை மஞ்சளாக வெளிச்சமிட்டு நகர்ந்தது.
'ஒரு சப்ஜெக்ட் செழியன்...'
 
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கிற கதை. முதல் காட்சியை அவர் விவரிக்கிறபோது சில நொடிகளில் அது நிஜக் காட்சியாக மலரும் விதம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. களங்களும் நுட்பமான மனித உணர்வுகளும் மாறிச் செல்லும் கதை. கதையின் சில இடங்களைச் சொல்லும்போது அவர் கண்கள் பனிப்பதை, கடந்துசெல்லும் வெளிச்சத்தில் பார்த்தேன். 30 நிமிடங்களில் சொல்லி முடித்துவிட்டு, இன்னொரு ஐடியா என அதையும் அடுத்த 30 நிமிடங்களுக்குள் சொல்லி முடித்தார்.
'சப்ஜெக்ட் எப்படி இருக்கு செழியன்... ஓல்டா இல்லையே..?'
'இல்ல சார்.'
'இல்ல... இப்ப கரன்ட்ல இருக்கது மாதிரி இருக்கா? ஏன்னா நான் படம் பண்ணி 35 வருஷம் ஆச்சு.'
'கரன்ட் என்ன சார்... 'அவள் அப்படித்தான்’ இப்பவும் கரன்ட்ல இருக்கிறது மாதிரிதான் சார் இருக்கு. ரெண்டு கதைகளுமே ரொம்ப நல்லாயிருக்கு சார்.'
 
பிறகு பிரபலமான இளம் நடிகர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவர் இருந்தா நல்லா இருக்கும் என்றார். அவரை எப்படி அணுகுவது என்று பேசினோம்.
 
'திரும்பக் கேக்குறேன்னு நினைக்காதீங்க. இந்த சப்ஜெக்ட் ஓல்டா இல்லையே..?'
'நிச்சயமா இல்ல சார்.'
 
'நானும் 35 வருஷமாப் போராடுறேன் செழியன்.பிடிவாதமா இருந்துட்டேன். இனிமே பண்றதை சாதாரணமாப் பண்ண முடியாது. நிறையப் படிக்கிறேன்... எழுதுறேன். முதல்ல சொன்ன கதைக்கு ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. முதல்ல சொன்னதுக்கு மூணு கோடி போதும். ரெண்டாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன்கிறதால 3D-யில் பண்ணணும். பெரிய பட்ஜெட். அதுதான் கமல்கிட்ட பேசியிருக்கேன். பாசிட்டிவாதான் இருக்கு.'
 
'சார், முதல் கதையை உடனே பண்ணலாம் சார்.'
'நல்ல புரொடியூசர் வேணும் செழியன். உங்களுக்கு யாராவது தெரியுமா?'
'இருக்காங்க சார்... பேசலாம். ஆனா, அவங்களுக்கு இந்தக் கதை புரியணுமே சார். காமெடி கதைதான் எல்லாரும் கேக்குறாங்க.'
'ப்ச்... அதுதாங்க இங்க பிரச்னை.'
'உங்க மேல அபிமானம் இருக்கிற நண்பர்கள் யாராவது வந்தாங்கன்னா, ரொம்பக் கம்மியான பட்ஜெட்ல டிஜிட்டல்ல பண்ணிடலாம் சார்.'
'இருக்காங்க... பேசிட்டுத்தான் இருக்கேன். இந்த வருஷம் நாம எப்படியும் பண்ணிடணுங்க.'
'பண்ணிடலாம் சார்.’
அமைதியாக இருந்தார்.
'சார்... பசங்கல்லாம் நல்லா இருக்காங்களா சார்..?'
'நல்லா இருக்காங்க. பையன் ஒர்க் பண்றான்.பொண்ணு கனடால படிக்குறா. நல்ல பசங்க செழியன்... அவங்கதான் என்னை இப்ப சப்போர்ட் பண்றாங்க. டைவர்ஸ் ஆனது உங்களுக்குத் தெரியும்ல... குமார் சொன்னானா?'
'ஆமா சார்.'
அமைதியாக இருந்தார். தலை சாய்த்து கதை சொல்வதற்கு முன் இருந்ததைப் போன்ற மனநிலை.
 
'இடையில நிறைய நடந்துருச்சு செழியன். என் மேல நிறையத் தவறுகள் இருக்கு. ஆனாக்கூட இருந்தவரைக்கும் என்னையை அப்படிப் பாத்துக்கிட்டாங்க. இத்தனை வருஷத்துல ஒரு வேலைகூட நான் செஞ்சது இல்ல; இங்க இருக்க டம்ளரைக்கூட நான் இப்படி நகர்த்திவெச்சது இல்ல.'
அமைதியாக இருந்தார். வெளிச்சம் அவர் முகத்தைக் கடந்துசெல்லும்போது, அவர் கண்களின் ஓரங்கள் மினுங்குவதைப் பார்த்தேன். கண்களைத் துடைத்துக்கொண்டார். எழுந்து இரண்டு அடிகள் நடந்து நின்றார்; நானும் நின்றேன்.
 
வெளிச்சம் வெற்று நாற்காலிகளின் மேல் கடந்துசென்றது.
'11.30 ஆயிருச்சுங்க...'
'ஆமா சார்.'
 
கீழ்த்தளம் வந்து காரில் அவரை அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
'சார்... 'அவள் அப்படித்தான்’ படத்தை இப்ப இருக்க ரெண்டு பேரை வெச்சு ரீமேக் செய்யலாமா சார்..?' பிரபலமான இரண்டு இளம் நடிகர்களின்  பெயர்களையும் சொன்னேன்.
'ஏங்க அந்த ரெண்டு கதைகள் உங்களுக்குப் புடிக்கலையா..?'
'இல்ல சார்... நீங்க சொன்ன கதை ரொம்ப நல்லாயிருக்கு. 'கோடார்ட்’ படம் மாதிரி இருக்கு சார். ஆனா, இவங்க எல்லாருக்கும் காதல் கதைதானே சார் தேவைப்படுது... அதான்.'
அது குறித்து சில நிமிடங்கள் பேசினோம். 'இனிமே காதல் கதையெல்லாம் பண்ண முடியாதுங்க. லெஃப்ட்ல போங்க. இந்த ரெண்டு ஸ்க்ரிப்ட் இருக்குல்ல... இதைப் பண்ணினாப் போதும் செழியன்.'
நள்ளிரவின் அமைதி. இருவரும் பேசவில்லை.
'இங்க இறங்கிறேன்...’
காரை நிறுத்தினேன்.
'நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க... நானும் பாக்குறேன். கிடைச்சா பாக்கலாம். இல்லைன்னா அதுக்காக என்னங்க செய்ய முடியும்? சோத்தைத் தின்னே சாக வேண்டியதுதான்.'
சில நொடிகள் அமைதியாக இருந்தவர், காரைத் திறந்து இறங்கினார். நான் கைகாட்ட, அவரும் கைகாட்டினார்.
 
கண்ணாடியின் வழியே பின்நகர்ந்து மறையும் முகம். பிறகெல்லாம் இருள். ஆட்களற்ற சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு உடல் நடுங்கிவிட்டது. திரைப்பட வாழ்க்கை குறித்த பயமும் கடுமையான அவநம்பிக்கையும் முதல்முறையாக மனதை அழுத்த, என் கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன.
 
நல்ல சினிமாவே யாரும் எடுப்பது இல்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், அதை நம் அருகில் இருந்து எடுத்த ஒருவரை, அடுத்த படம் எடுக்கவிடாமல் 35 வருடங்கள் காக்கவைக்கிறோம்.
 
'புதிய அலை’ சினிமா இயக்கம் தொடங்கியபோது பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல் ஜனரஞ்சகமான மர்மப் படங்களை எடுத்து, அதில் இருந்து வருகிற பணத்தை தனது சகாக்களான கோடார்ட், த்ரூபோவிடம் படம் தயாரிக்கக் கொடுத்திருக்கிறார். 'நான் இதுமாதிரிப் படங்கள் எடுத்துப் பணம் தருகிறேன். நீங்கள் எந்தச் சமரசமும் இல்லாமல் விரும்பிய மாதிரி படத்தை எடுங்கள்' என்று. நம்மில் ஒருவர்கூட அப்படி இல்லையே... ஏன்?
 
அதற்குப் பிறகு அவரிடம் பேசிய விஷயங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல குமாரும் நானும் சந்தித்தோம். மூன்று கோடிக்கான தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டே இருந்தோம். இந்த வாரம் ஒருநாள் இரவு கைபேசியில் குறுஞ்செய்தியை குமார்தான் அனுப்பியிருந்தார்.
uncle is no more..
 
தமிழில் முக்கியமான கலை ஆளுமைகள் யார் மறைந்தாலும், அது இயற்கையான மரணமாக எனக்குத் தெரியாது. அது ஒரு கொலையாகத்தான் தெரியும். வாழும் காலத்தில் எந்தக் கவனிப்பும் இருக்காது. அவர்களது பங்களிப்பு குறித்து குறைந்தபட்சக் கவனிப்புகள்கூட இருக்காது. மலினமான விஷயங்கள் தொடர்ந்து வெளிச்சம் பெறுவதையும் வெற்றி அடைவதையும் அவர்கள் பார்க்கவேண்டியிருக்கும். புறக்கணிப்பின் வலியும், லௌகீக வாழ்க்கையின் தோல்விகளும் மௌனமாகப் பின்தொடரும். தன் படைப்புக்காக அடைந்த பெருமையெல்லாம் போய், 'ஏன்டா இதைச் செய்தோம்... செய்திருக்கக் கூடாதோ?’ என்று வருந்தவைக்கும்.
 
அந்த வகையில் தமிழின் பெருமைக்குரிய இன்னோர் ஆசிரியரைக் கொலைசெய்து விட்டோம்!

Thursday, November 27, 2014

அணையே துணை!
 
'இந்தப் புவியில் நான் வந்தது என்பது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயலைப் புரிந்திட வேண்டும்; அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்த்துவிடுவதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இந்தப் புவியில் வரப்போவது இல்லை!’ எனச் சொன்ன பென்னி குயிக், இறந்துவிடவில்லை; இதோ முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் எழுந்து நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
 
பென்னி குயிக், சீரியஸான ஆள் அல்ல; விளையாட்டுத்தனமானவர். அதுவும் கிரிக்கெட் மீது பெரும் கிறுக்கு உள்ளவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வேலைபார்க்க வந்தபோது (1865-ம் ஆண்டு) சென்னை கிரிக்கெட் கிளப் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது சென்னை - பெங்களூரு என இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்திருக்கிறது. அதில் ஓர் அணிக்கு பென்னி குயிக் தலைவர். நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்த நேரமும் அது. போட்டி தொடங்கும் முன் பென்னி குயிக் ஜாலியாகச் சொன்னார், 'இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டப்போகிறார்கள்’ என்று!
 
 
பென்னி குயிக் அணி வென்றது. அந்தச் சவாலை மனரீதியாகவே ஏற்க பென்னி குயிக் தயார் ஆனார். 'கலோனியல் ஜான் பென்னி குயிக்’ என, பெயரை அறிவித்தார் மகாராணி எலிசபெத். பென்னி குயிக், அப்போது ராணுவத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்தார். திட்டத்தின் அன்றைய மதிப்பு 17.5 லட்சம் ரூபாய்!
 
'முல்லைப் பெரியாறு’ என்ற பெயர், தந்தை பெரியாரின் நினைவாகச் சூட்டப்படவில்லை; காரணப் பெயர் அது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் ஆறுகளிலேயே பெரிய ஆறு இது என்பதால், 'பெரியாறு’ என மகுடம் சூட்டப்பட்டது. இது, சுமார் 56 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது. சிறுசிறு நதிகளாக ஐந்து நதிகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. ஆறாவதாக 'முல்லை’ என்ற இன்னோர் ஆற்றையும் சேர்த்துக்கொள்கிறது. இந்த ஏழும் இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கின்றன. அந்த மாநிலத்துக்குள் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது.
 
உற்பத்தியாகும் இடத்துக்கும் பயன்தராமல், ஓடிப்போய்ச் சேரும் இடத்துக்கும் பயன்தராமல் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறதே என்ற வருத்தத்தில் உதித்த சிந்தனைதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த வருத்தம், முதலில் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு வந்தது. ஓர் அணையைக் கட்டி தண்ணீர் தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற யோசனையில் தன்னுடைய மந்திரியாக இருந்த முத்து இருளப்பப் பிள்ளையோடு 12 பேர் கொண்ட குழுவை அணை கட்ட இடம் பார்த்து வரச் சொன்னார். அந்தக் காடு, மலைகளுக்குள் முதலில் கால் பதித்த 12 பேர் இவர்கள்தான். அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
 
 
பிறகு பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பென்னி குயிக். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை, திறப்பு விழா கண்டது. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள்கூட நிம்மதியாகக் கழியவில்லை. அணை கட்டும் வேலை தொடங்கியது முதல், மழையும் பெய்து தீர்த்தது. ஓர் ஆண்டு கழிந்திருக்கும்... அதுவரை கட்டிய கட்டுமானத்தை ஒருநாள் நள்ளிரவில் யானைகள் கூட்டம் வந்து இடித்துத் தள்ளிவிட்டுப் போனது. இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும்... தொடர் மழையால் மண் தடுப்பு மொத்தமும் தகர்ந்தது. வேலையில் இருந்த மொத்த பேரும் கைகோத்து மனிதக் கேடயமாக மாறி, நீர்ப் பெருக்கைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை இடித்ததும்... மழை கரைத்ததையும் மீண்டும் எழுப்ப வேண்டுமானால் கூடுதல் நிதி தேவை. சென்னைக்கு வந்தார் பென்னி குயிக். பணம் கேட்டு நின்றார்; மறுத்துவிட்டார்கள்.
 
அதைவிட அவமானம்... 'உனக்கு அணை கட்டத் தெரியவில்லை. தேவை இல்லாமல் செலவு செய்துவிட்டாய்’ எனக் கண்டித்தார்கள். 'உண்மையில், இவ்வளவு பணத்தை அதற்குச் செலவு செய்ததாகத் தெரியவில்லையே’ எனச் சந்தேகமும் எழுப்பினர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. வருந்திய மனநிலையில் 'எல்லாவற்றையும் விட்டுவிடலாம்’ என லண்டன் போனார். திரும்பி வரும்போது 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தார். அது, அரசாங்கப் பணம் அல்ல; அவரது சொந்தப் பணம். தனது சொத்துக்களை விற்று எடுத்து வந்த பணம். அணையைக் கட்டி முடிப்பதுதான் அவரின் ஒரே லட்சியம். அணை திறக்கப்பட்ட பிறகு சொன்னார், 'நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பப்போவது இல்லை. எனவே, நான் மௌனமாகவே இருந்தேன். அணை எழுப்பப்பட்டுவிட்டது. இனி அணை பேசும்!’ - அப்போது முதல் இப்போது வரை பென்னி குயிக்கைப் பற்றித்தான் அந்த மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்டன், முப்பாட்டன் மரியாதை அவருக்கு.
 
அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவருக்கு இணையான மரியாதை லோகன் துரைக்கு. பென்னி குயிக், பெரிய அதிகாரி. அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்தவர்தான் லோகன் துரை. இவரது பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைத்தார்கள். அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 119 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணம்.
 
கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணையும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறும் தமிழ் மக்களின் வளத்துக்கும் நலத்துக்கும் மட்டும் அல்ல; பாரம்பர்ய கட்டுமானத் திறமைக்கும் சான்றாக உயர்ந்து நிற்கின்றன. மன்னர் ஆட்சியிலும் காலனி ஆதிக்கத்திலும் கிடைத்த நன்மைகளை மக்களாட்சி காலத்தில் மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகவும் முல்லைப் பெரியாறு மாறிப்போனது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து வந்தவனுக்கு, தேனி கூடலூரும் இடுக்கி குமுளியும் ஒரே ஊராகத்தான் தெரிந்தன. ஆனால், நாட்டுப்பற்று உள்ள இந்தியர்களுக்குத்தான் கூடலூரும் குமுளியும் 'வேறு வேறு நாடுகளாகத்’ தெரிகின்றன. மற்ற அனைவரின் பிரச்னைகளிலும் இந்தியர்களாக முடிவெடுப்பவர்கள், தமிழர் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டும் 'தமிழர் பிரச்னை’யாகத் தள்ளி நிற்கும் சரித்திரத் துக்கு முல்லைப் பெரியாறும் விதிவிலக்கு அல்ல.
 
இடுக்கி அணையைக் கட்டி இடைஞ்சல்களை ஏற்படுத்தியது கேரளா. அதில் தண்ணீர் நிரம்பாதபோதெல்லாம், முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என குழவிக் கல்லால் காந்தாரி இடித்துக்கொண்டதைப்போல இடித்துக் கொள்ளும் கேரளா. இடுக்கி நிறையாததற்குக் காரணம் தமிழன் அல்ல; இயற்கை. இன்னும் சொன்னால், இயற்கைகூட காரணம் அல்ல; கேரள அரசியல்வாதிகளின் ஏமாற்றும் பேராசை. 555 அடி உயரம் கொண்டது அந்த அணை. அதாவது முல்லைப் பெரியாறு அணையைவிட ஐந்து மடங்கு பெரியது. 142 அடி நிரம்புவதற்கும், 555 அடி நிரம்பாமல்போவதற்கும் யாரைக் குறை சொல்ல முடியும்? கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தொட்டியைப் பெரிதாகக் கட்டியவனின் நிலைமைதான் கேரளாவுக்கு.
 
இன்னொன்றையும் சொல்கிறார்கள்... '142 அடி... 152 அடி எனத் தமிழகம் பேராசைப் படுகிறது’ என்று. முல்லைப் பெரியாறு அணை என்பது, மதகுவைத்துத் திறந்துவிடப்படும் அணை அல்ல; தண்ணீரைத் தேக்கிவைக்கும் அணை. 104 அடி வரை தேங்கும் நீரை எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு மேல் தேங்கும் நீரைத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் '142’ எனத் தமிழகம் கோரிக்கை வைக்கிறது. அணையின் கொள்ளளவு 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அனுமதித்து இருப்பது 142 அடி மட்டுமே.
 
கேரளா சொல்லும் அனைத்து காரணங்களையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (27.2.2006) தவிடுபொடி ஆக்கிவிட்டது. 'கேரளாவின் அறிக்கைகள், கேரளா அரசின் தரப்பில் முட்டுக்கட்டைபோடும் அணுகுமுறையையே தெளிவுபடுத்துகிறது’ என மண்டையில் கொட்டினார்கள் மூன்று நீதிபதிகள். 'அணை கட்டியதால் வனவளம் பாதிக்கப்பட்டது’ என கேரளா கூறியதற்கு, 'காட்டுக்குள் இருக்கும் ஓர் அணையைப் பலப்படுத்தும் பணியை ஒரு வனவிரோத நடவடிக்கையாகக் கருத இடம் இல்லை. இயற்கையில் நீர் பரவியிருக்கும் இடத்தைத்தான் அனைத்து பறவைகளும் விலங்குகளும் நேசிக்கும்’ என்றனர் நீதிபதிகள். 'அணை பலவீனமாக இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக எந்த அறிக்கையும் இல்லை’ என்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கேரளா, கேவலமான முஸ்தீபுகளைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் பார்க்கிறது.
 
சுண்ணாம்பு சுர்க்கிக் கலவையில் கருங்கல் உபயோகித்துக் கட்டப்பட்ட அணையை, குடை வைத்து தட்டிப் பார்க்கிறார் ஓர் அமைச்சர்.  குத்திப் பார்க்கிறார் ஒரு எம்.எல்.ஏ. எப்படியாவது அதை அசைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் கேரளா அரசியல்வாதிகள் தூக்கம் இல்லாமல் கிடக்கும்போது... இயற்கை இம்முறை கைவிடவில்லை. 142 அடித் தண்ணீரைத் தாங்கி நிற்கிறது அணை.
 
 

Wednesday, November 26, 2014

முடிந்தால் பிடி 
 
'ஸ்ட்ரீட் ஆர்ட்’ என அழைக்கப்படும் தெரு ஓவியத்தில் இவர்தான் முன்னோடி. இவர் தீட்டும் ஓவியத்துக்காக அல்ல... ஓவியத்தின் புகைப்படத்துக்கே ரசிகர்களிடம் அவ்வளவு அடிதடி. 2010-ம் ஆண்டில் 'டைம்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களில் இவரும் ஒருவர். இவ்வளவு புகழ்பெற்ற ஒருவர் எவ்வளவு பிரபலமாக இருக்க வேண்டும்? ஆனால், 'யார் அவர்?’ எனத் தெரியாமலேயே சந்துசந்தாகத் தேடிக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய போலீஸ்.
 
 
1990-94 காலகட்டத்தில் லண்டன் புறநகர் பகுதிகளில் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள், காலை கண் விழித்துப் பார்த்தால், வீட்டுச் சுவரில் பென்சிலில் பயன்படும் கிராஃபைட் தூள் கொண்டு ஏதாவது ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பெரும்பாலும் அது அரசின் கொள்கைகளை விமர்சிக்கும்; நாட்டுநடப்பைக் கிண்டல் செய்யும். சுவரில் இருக்கும் ஜன்னல், சிராய்ப்புகள், செடி-கொடிகள் என இருப்பவற்றைவைத்தே கிரியேட்டிவிட்டி கில்லியாக இருக்கும் அந்த ஓவியம். மறுநாள் இன்னொரு சுவர், இன்னோர் ஓவியம். சில ஓவியங்கள் செம ஜாலியாக இருக்கும்; நுணுக்கமாக விழிப்புஉணர்வு பரப்பும்; பொளேரென அரசியல் பேசும். எப்படி இருந்தாலும் அடுத்த வீட்டுச் சுவரில் வரைவது தப்புதானே? 'யார் அந்த ஆர்ட்டிஸ்ட்?’ எனத் தேட ஆரம்பித்தது உள்ளூர் போலீஸ். யாருக்கும் தெரியவில்லை. காரணம், ஓவியம் வரையப்படும் நேரம் நள்ளிரவு. இருக்கும் ஒரே தடயம் ஓவியத்துக்குக் கீழே இருக்கும் 'பாங்க்ஸி’ என்ற கையெழுத்து மட்டும்தான்.  
 
'நான் உலக வெப்பமயமாதலை நம்பவில்லை’ என ஒரு வாசகம். அதுவே பாதித் தண்ணீரில் மூழ்கியிருப்பதுபோல இருக்கும். இப்படி சிம்பிள் ஐடியாவில் பாங்க்ஸி விழிப்பு உணர்வு ஓவியங்கள் வரைய வரைய, 'யார் அவர்?’ என்ற ஆர்வம் ஒருபுறம், 'பின்றான்யா’ என்ற ரசனை மறுபுறம். முகம் தெரியாமலேயே அவரை ஆராதிக்கத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை ராணுவ வீரர்கள் திருடுவதுபோல, டெடிபியர் வைத்திருக்கும் பெண் குழந்தையை, ஒரு போலீஸ் அத்துமீறி சோதனை செய்வதுபோல... அதிகாரத்துக்கு எதிரான ஓவியங்களும் சுவர்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தன. போலீஸ் செம காண்டாகி அவரைத் தேட ஆரம்பித்தது. மக்களிடையிலும் எதிர்ப்பு ஒரு பக்கம், ஆதரவு மறுபக்கம் என பாங்க்ஸிக்குப் புகழ் எகிறியது. ஒவ்வொரு நாளும் விடிந்ததும் முதல் வேலையாக பாங்க்ஸியின் சுவர் ஓவியங்களைத் தேட ஆரம்பித்தார்கள் மக்கள். இரவு முழுக்க விழித்திருந்து போலீஸ் பாரா காவல் காக்க, மறுநாள் வேறு ஊர் சுவரில் இரண்டு போலீஸ்காரர்கள் முத்தமிட்டு க்கொள்வதுபோல வரைந்து அவர்களுக்கு பி.பி ஏற்றினார் பாங்க்ஸி.
 
வறுமை, மனிதநேயம், மனித உணர்வுகள் என அவர் வரைந்த ஒவ்வோர் ஓவியமும் புகைப்படங்களாக மக்களிடையே பரவ ஆரம்பித்தது. பாங்க்ஸியைப் பிடிக்க நகரைத்தையே போலீஸ் காவல் காக்க, அடுத்த நகரம், அடுத்த சுவர் என தாவிக்கொண்டே இருந்தார் அவர். 2000-ம் ஆண்டில் பாங்க்ஸி ஐரோப்பா முழுக்க பிரபலம் ஆக, அவரது படைப்புகளைக் கொண்டு ஓர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் ஒரு பார்வையாளரைப்போல வந்துபோனார் பாங்க்ஸி. அவரைப் பிடிக்க போலீஸ் லண்டன் புறநகர் முழுக்க, சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்த, 'ஓர் உலகம்- கண்காணிப்பு கேமராவின் கீழ்!’ எனக் கொட்டை எழுத்தில் வரைந்து கிண்டலடித்தார். சிலசமயம் அவர் வரையும்போது போலீஸ் பார்த்துவிட, திடுதிடுவென ஓடி பக்கத்து சுவரில் ஏறிக் குதித்துத் தப்பிவிடுவார். ஒரு சுவரை வரையத் தேர்ந்தெடுக்கும்போதே அந்த இடத்தின் அமைப்பு, எங்கெல்லாம் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என முன்கூட்டியே பார்த்துவிட்டு வருவதால், போலீஸ் துரத்தும்போது, மிக எளிதாகத் தப்பிவிடுவது பாங்க்ஸிக்கு சுலபமாக இருந்திருக்கிறது.
 
 
அவரைத் தொடர்புகொள்ள மிக அதிகபட்ச வழி மெயில் ஐ.டி-தான். அதுவும் மாறிக்கொண்டே இருக்கும். அது அவரது வக்கீலுக்கு மட்டுமே தெரியும். அவருடைய பேட்டிகள் மெயில் மூலம்தான் கிடைக்கும். 2003-ல் ஒருமுறை முகத்தை மூடிக்கொண்டு செய்தித்தாள் ஒன்றுக்கு நேருக்குநேர் பேட்டி கொடுத்தார். அதற்கு அடுத்து அவரை யாரும் பார்க்கவே இல்லை. 'என்னை நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள். அரசுக்கு எதிரான கண்டனக் கூட்டங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நான் வந்துசெல்வேன். நான் யார் என யாரிடமும் கூறியது இல்லை’ என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் பாங்க்ஸி.
 
 
லண்டன் தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இவருக்கு ஆதரவு பெருக, மற்ற நாடுகளுக்கும், அதன் தலைநகரங்களுக்கும் பயணம் செய்ய ஆரம்பித்தார். வியன்னா, சான் பிரான்சிஸ்கோ, பார்சிலோனா, பாரீஸ், டெட்ராய் போன்ற நகரங்களுக்கு எப்போது வந்தார், எப்படி வெளியேறினார் எனத் தெரியாது. திடீரென ஒருநாள் அந்தந்த நகரின் ஆள் இல்லாத சந்து ஒன்றில் அரசைக் கிண்டலடித்து கறுப்பு ஓவியம் வரையப்பட்டிருக்கும். 'எங்க ஆளு வந்துட்டார்யா’ என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அவரது சமூக விழிப்பு உணர்வுப் பணிக்காக இதுவரை நான்கைந்து விருதுகள் அறிவித்துவிட்டார்கள். ஆனால் ஒருமுறைகூட அவர் அவற்றைப் பெற்றுக்கொண்டது இல்லை.
 
 
பாங்க்ஸி தனிப்பட்ட ஓர் நபரா அல்லது ஒரு குழுவா, அவ்வளவு உயரமான கட்டங்களின் மேல் எப்படி ஏறுகிறார் என்ற கேள்விகளுக்கு போலீஸிடமே இதுவரை பதில் இல்லை. அவரைத் தெரிந்தவர்களும் அவரைக் காட்டிக்கொடுப்பது இல்லை. 'அவர் ஒரு பெண்’, 'அது ஏழுபேர் கொண்ட குழு’, 'பாருங்கள், 2014-ம் ஆண்டு அக்டோபருக்கு அப்புறம் அவர் படம் வரையவே இல்லை... ஏன்னா 'பாங்க்ஸியைக் கைதுபண்ணிட்டாங்க’ என மக்கள் விதம்விதமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ மக்களோடு மக்களாக நின்றபடி அதையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டே இருக்கிறார் அவன் / அவள் / அல்லது அவர்கள்!