Thursday, November 27, 2014

அணையே துணை!
 
'இந்தப் புவியில் நான் வந்தது என்பது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயலைப் புரிந்திட வேண்டும்; அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்த்துவிடுவதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இந்தப் புவியில் வரப்போவது இல்லை!’ எனச் சொன்ன பென்னி குயிக், இறந்துவிடவில்லை; இதோ முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் எழுந்து நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
 
பென்னி குயிக், சீரியஸான ஆள் அல்ல; விளையாட்டுத்தனமானவர். அதுவும் கிரிக்கெட் மீது பெரும் கிறுக்கு உள்ளவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வேலைபார்க்க வந்தபோது (1865-ம் ஆண்டு) சென்னை கிரிக்கெட் கிளப் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது சென்னை - பெங்களூரு என இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்திருக்கிறது. அதில் ஓர் அணிக்கு பென்னி குயிக் தலைவர். நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்த நேரமும் அது. போட்டி தொடங்கும் முன் பென்னி குயிக் ஜாலியாகச் சொன்னார், 'இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டப்போகிறார்கள்’ என்று!
 
 
பென்னி குயிக் அணி வென்றது. அந்தச் சவாலை மனரீதியாகவே ஏற்க பென்னி குயிக் தயார் ஆனார். 'கலோனியல் ஜான் பென்னி குயிக்’ என, பெயரை அறிவித்தார் மகாராணி எலிசபெத். பென்னி குயிக், அப்போது ராணுவத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்தார். திட்டத்தின் அன்றைய மதிப்பு 17.5 லட்சம் ரூபாய்!
 
'முல்லைப் பெரியாறு’ என்ற பெயர், தந்தை பெரியாரின் நினைவாகச் சூட்டப்படவில்லை; காரணப் பெயர் அது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் ஆறுகளிலேயே பெரிய ஆறு இது என்பதால், 'பெரியாறு’ என மகுடம் சூட்டப்பட்டது. இது, சுமார் 56 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது. சிறுசிறு நதிகளாக ஐந்து நதிகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. ஆறாவதாக 'முல்லை’ என்ற இன்னோர் ஆற்றையும் சேர்த்துக்கொள்கிறது. இந்த ஏழும் இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கின்றன. அந்த மாநிலத்துக்குள் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது.
 
உற்பத்தியாகும் இடத்துக்கும் பயன்தராமல், ஓடிப்போய்ச் சேரும் இடத்துக்கும் பயன்தராமல் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறதே என்ற வருத்தத்தில் உதித்த சிந்தனைதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த வருத்தம், முதலில் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு வந்தது. ஓர் அணையைக் கட்டி தண்ணீர் தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற யோசனையில் தன்னுடைய மந்திரியாக இருந்த முத்து இருளப்பப் பிள்ளையோடு 12 பேர் கொண்ட குழுவை அணை கட்ட இடம் பார்த்து வரச் சொன்னார். அந்தக் காடு, மலைகளுக்குள் முதலில் கால் பதித்த 12 பேர் இவர்கள்தான். அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
 
 
பிறகு பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பென்னி குயிக். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை, திறப்பு விழா கண்டது. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள்கூட நிம்மதியாகக் கழியவில்லை. அணை கட்டும் வேலை தொடங்கியது முதல், மழையும் பெய்து தீர்த்தது. ஓர் ஆண்டு கழிந்திருக்கும்... அதுவரை கட்டிய கட்டுமானத்தை ஒருநாள் நள்ளிரவில் யானைகள் கூட்டம் வந்து இடித்துத் தள்ளிவிட்டுப் போனது. இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும்... தொடர் மழையால் மண் தடுப்பு மொத்தமும் தகர்ந்தது. வேலையில் இருந்த மொத்த பேரும் கைகோத்து மனிதக் கேடயமாக மாறி, நீர்ப் பெருக்கைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை இடித்ததும்... மழை கரைத்ததையும் மீண்டும் எழுப்ப வேண்டுமானால் கூடுதல் நிதி தேவை. சென்னைக்கு வந்தார் பென்னி குயிக். பணம் கேட்டு நின்றார்; மறுத்துவிட்டார்கள்.
 
அதைவிட அவமானம்... 'உனக்கு அணை கட்டத் தெரியவில்லை. தேவை இல்லாமல் செலவு செய்துவிட்டாய்’ எனக் கண்டித்தார்கள். 'உண்மையில், இவ்வளவு பணத்தை அதற்குச் செலவு செய்ததாகத் தெரியவில்லையே’ எனச் சந்தேகமும் எழுப்பினர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. வருந்திய மனநிலையில் 'எல்லாவற்றையும் விட்டுவிடலாம்’ என லண்டன் போனார். திரும்பி வரும்போது 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தார். அது, அரசாங்கப் பணம் அல்ல; அவரது சொந்தப் பணம். தனது சொத்துக்களை விற்று எடுத்து வந்த பணம். அணையைக் கட்டி முடிப்பதுதான் அவரின் ஒரே லட்சியம். அணை திறக்கப்பட்ட பிறகு சொன்னார், 'நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பப்போவது இல்லை. எனவே, நான் மௌனமாகவே இருந்தேன். அணை எழுப்பப்பட்டுவிட்டது. இனி அணை பேசும்!’ - அப்போது முதல் இப்போது வரை பென்னி குயிக்கைப் பற்றித்தான் அந்த மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்டன், முப்பாட்டன் மரியாதை அவருக்கு.
 
அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவருக்கு இணையான மரியாதை லோகன் துரைக்கு. பென்னி குயிக், பெரிய அதிகாரி. அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்தவர்தான் லோகன் துரை. இவரது பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைத்தார்கள். அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 119 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணம்.
 
கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணையும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறும் தமிழ் மக்களின் வளத்துக்கும் நலத்துக்கும் மட்டும் அல்ல; பாரம்பர்ய கட்டுமானத் திறமைக்கும் சான்றாக உயர்ந்து நிற்கின்றன. மன்னர் ஆட்சியிலும் காலனி ஆதிக்கத்திலும் கிடைத்த நன்மைகளை மக்களாட்சி காலத்தில் மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகவும் முல்லைப் பெரியாறு மாறிப்போனது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து வந்தவனுக்கு, தேனி கூடலூரும் இடுக்கி குமுளியும் ஒரே ஊராகத்தான் தெரிந்தன. ஆனால், நாட்டுப்பற்று உள்ள இந்தியர்களுக்குத்தான் கூடலூரும் குமுளியும் 'வேறு வேறு நாடுகளாகத்’ தெரிகின்றன. மற்ற அனைவரின் பிரச்னைகளிலும் இந்தியர்களாக முடிவெடுப்பவர்கள், தமிழர் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டும் 'தமிழர் பிரச்னை’யாகத் தள்ளி நிற்கும் சரித்திரத் துக்கு முல்லைப் பெரியாறும் விதிவிலக்கு அல்ல.
 
இடுக்கி அணையைக் கட்டி இடைஞ்சல்களை ஏற்படுத்தியது கேரளா. அதில் தண்ணீர் நிரம்பாதபோதெல்லாம், முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என குழவிக் கல்லால் காந்தாரி இடித்துக்கொண்டதைப்போல இடித்துக் கொள்ளும் கேரளா. இடுக்கி நிறையாததற்குக் காரணம் தமிழன் அல்ல; இயற்கை. இன்னும் சொன்னால், இயற்கைகூட காரணம் அல்ல; கேரள அரசியல்வாதிகளின் ஏமாற்றும் பேராசை. 555 அடி உயரம் கொண்டது அந்த அணை. அதாவது முல்லைப் பெரியாறு அணையைவிட ஐந்து மடங்கு பெரியது. 142 அடி நிரம்புவதற்கும், 555 அடி நிரம்பாமல்போவதற்கும் யாரைக் குறை சொல்ல முடியும்? கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தொட்டியைப் பெரிதாகக் கட்டியவனின் நிலைமைதான் கேரளாவுக்கு.
 
இன்னொன்றையும் சொல்கிறார்கள்... '142 அடி... 152 அடி எனத் தமிழகம் பேராசைப் படுகிறது’ என்று. முல்லைப் பெரியாறு அணை என்பது, மதகுவைத்துத் திறந்துவிடப்படும் அணை அல்ல; தண்ணீரைத் தேக்கிவைக்கும் அணை. 104 அடி வரை தேங்கும் நீரை எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு மேல் தேங்கும் நீரைத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் '142’ எனத் தமிழகம் கோரிக்கை வைக்கிறது. அணையின் கொள்ளளவு 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அனுமதித்து இருப்பது 142 அடி மட்டுமே.
 
கேரளா சொல்லும் அனைத்து காரணங்களையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (27.2.2006) தவிடுபொடி ஆக்கிவிட்டது. 'கேரளாவின் அறிக்கைகள், கேரளா அரசின் தரப்பில் முட்டுக்கட்டைபோடும் அணுகுமுறையையே தெளிவுபடுத்துகிறது’ என மண்டையில் கொட்டினார்கள் மூன்று நீதிபதிகள். 'அணை கட்டியதால் வனவளம் பாதிக்கப்பட்டது’ என கேரளா கூறியதற்கு, 'காட்டுக்குள் இருக்கும் ஓர் அணையைப் பலப்படுத்தும் பணியை ஒரு வனவிரோத நடவடிக்கையாகக் கருத இடம் இல்லை. இயற்கையில் நீர் பரவியிருக்கும் இடத்தைத்தான் அனைத்து பறவைகளும் விலங்குகளும் நேசிக்கும்’ என்றனர் நீதிபதிகள். 'அணை பலவீனமாக இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக எந்த அறிக்கையும் இல்லை’ என்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கேரளா, கேவலமான முஸ்தீபுகளைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் பார்க்கிறது.
 
சுண்ணாம்பு சுர்க்கிக் கலவையில் கருங்கல் உபயோகித்துக் கட்டப்பட்ட அணையை, குடை வைத்து தட்டிப் பார்க்கிறார் ஓர் அமைச்சர்.  குத்திப் பார்க்கிறார் ஒரு எம்.எல்.ஏ. எப்படியாவது அதை அசைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் கேரளா அரசியல்வாதிகள் தூக்கம் இல்லாமல் கிடக்கும்போது... இயற்கை இம்முறை கைவிடவில்லை. 142 அடித் தண்ணீரைத் தாங்கி நிற்கிறது அணை.
 
 

No comments:

Post a Comment