ஸ்மார்ட் போன்
நண்பனா ?! வில்லனா ?!
நண்பனா ?! வில்லனா ?!
கார்க்கிபவா
'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் மொபைலில் மூழ்கியிருக்க வேண்டும் பல நேரங்களில்?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!
இதுவரை ஒரு மனிதனின் ஆதாரமாக அம்மா, அப்பா, காதலி, நண்பன் என ஏதோ ஓர் உறவாக சகமனிதர்களே இருந்திருக் கிறார்கள். ஆனால், அந்த இடத்தை அசுரகதியில் ஆக்கிரமித்துவிட்டது 'ஸ்மார்ட் போன்’!
மொபைலை உடலின் முக்கிய அங்கமாகவே கருதுகிறது இளைய தலைமுறை. அதனால்தான் எந்நேரமும் மொபைலுடனே அலைகிறார்கள். குளிக்கும்போதும் உறங்கும்போதும்கூட விலகுவதே இல்லை. மொபைலைப் பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்டதுபோல பதறுகிறார்கள். அமெரிக்கர்கள் இடையே சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் பத்தில் ஒருவர் உடலுறவுகொள்ளும்போதுகூட மொபைலை எட்டிப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். 'அமெரிக்கர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு பொய் சொல்கிறார்கள். ஆசியாவில் பத்தில் ஐந்து பேர் 'அப்போதும்’ மொபைலைப் பயன்படுத்தவே செய்கிறார்கள்’ என அதிர்ச்சி தருகிறது இன்னொரு சர்வே!
'ஸ்மார்ட்போன் இல்லா மனிதன் அரை மனிதன்’ என ஆக்கிவிட்டது நாகரிகம். மொபைல்போன்கள் நம் வேலையை விரைவாகவும் திறம்படவும் முடிக்க உதவுகின்றன என்பது நிச்சயம் உண்மை. தனிமனிதனின் புரொடக்ட்டிவிட்டியை மொபைல்போன் இரட்டிப்பாக்கிவிட்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம், 'தண்ணீர் வேண்டுமா, பாத்ரூம் போறீங்களா?’ எனக் கேட்பதைப்போல 'WiFi பாஸ்வேர்டு வேண்டுமா?’ எனக் கேட்பதும் விருந்தோம்பல் என மாறிவிட்டது. 'பேட்டரி ஃபுல்’ என்பதே வெளியே கிளம்புவதற்கு நல்ல நேரம். ஒரு நிமிடம் கிடைத்தாலும், மொபைலில் மூழ்கி முந்தைய நொடியில் உலகில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கிறோம்; கேண்டி கிரஷில் யாருக்கேனும் 'உயிர்’தந்து உதவுகிறோம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணினியும் இணையமும் மக்களிடம் சென்றுசேர எடுத்துக்கொண்ட காலத்தைவிட ஸ்மார்ட்போனுக்குக் குறைவான காலமே தேவைப்பட்டிருக்கிறது. அப்போது மெயில் அனுப்பிய அப்பாக்களை விட, இப்போது மொபைலில் லைக் போடும் அம்மாக்கள்தான் அதிகம். ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் நகராத நொடிகளை வேகமாக நகர்த்துவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது. அதே சமயம், அதிதீவிர மொபைல் பயன்பாடு மனிதனின் இயல்பையே மாற்றுகிறது எனப் பதறவைக்கின்றன ஸ்மார்ட்போன் ஆய்வுகள்.
நான்கு நண்பர்கள் கேன்டீனுக்கு வருவார்கள். இடம் கிடைத்து அமர்ந்த பின் எல்லா கைகளையும் ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமிக்கும். அரட்டை அடிக்க வந்தவர்கள் மொபைலில் அப்டேட்ஸ் தட்டிக்கொண்டிருப்பார்கள். உச்சக்கட்ட காமெடியாக, எதிரில் இருப்பவருக்கே வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஃபார்வர்டு செய்தி அனுப்புவார்கள். அவரும் அனுப்பியவரை நிமிர்ந்து பார்க்காமலே, அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.
முன்பு குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் இருந்தது. இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் என பல இலவச மெசெஞ்சர்கள் வந்துவிட்டன. இதனால் தேவையோ இல்லையோ எப்போதும் எதையாவது டைப்செய்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டே ட்விட்டுகிறார்கள். 15 நொடிகளுக்கு மேல் சிக்னலில் நின்றால், மொபைலை எடுத்து நோண்டுகிறார்கள். சிலர் கார் ஓட்டிக்கொண்டே மெசேஜ் அனுப்புவதும் உண்டு. சாப்பிடும்போதும் கையில் மொபைல். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யப் பழகிக்கொள்வதால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல்போகிறது. 'மல்ட்டிஸ்கில்’ என்பதும், 'மல்ட்டிடாஸ்க்’ என்பதும் வெவ்வேறு. 'மல்ட்டிடாஸ்க்கிங்’ என்பது எந்த வேலையும் ஒழுங்காக நடக்காமல் சிக்கலாக்கிக்கொள்ளும் வழிமுறைதான்.
பீட்சா வட்டமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதை முக்கோண வடிவமாகத்தான் பார்ப்பார்கள். அதுபோல, ஸ்மார்ட்போனிலேயே வாழ்பவர்களுக்கு நண்பர்கள் என்பவர்கள்கூட நம்பர்கள்தான். மொபைல் மூலமான உரையாடலில் நன்றாகப் பேசும் இவர்கள் நேரில் பேசவே அஞ்சுவார்கள். மனிதர்களின் அடையாளமே இவர்கள் பார்வையில் மாறியிருப்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயம். மொபைல் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள், 'ஸ்மார்ட் தீவு’ என்ற மாய வலைக்குள் சிக்கிக்கொள்வதாகத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தினம் ஒரு புதுப் பிரச்னையை உருவாக்கும் ஸ்மார்ட்போன்களின் இப்போதைய சங்கடம்... செல்ஃபி. நம்மை நாமே படம் எடுத்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? இருக்கிறது. அமெரிக்காவில் டீன் ஏஜ் பெண் ஒருவர் ஒரே இரவில் 2,000 செல்ஃபிக்கள் எடுத்திருக்கிறார். அதைவிடக் கொடுமை, அந்த செல்ஃபிக்கள் எவையுமே திருப்தி தராமல் மறுநாள் காலை தற்கொலை செய்துகொண்டார். இப்படியான சம்பவங்கள் அதிகரிக்கவும், செல்ஃபி மீதான அதீத ஆர்வத்தைப் புதுவித மனநோய் என வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
அதிர்ச்சியாக இருக்கிறது... சராசரியாக நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவழிக்கிறார்களாம் இந்திய இளைஞர்கள். இதனால் உடல் எடை பிரச்னை, முதுகு வலி எனப் பல கோளாறுகள் வருகின்றன. சிறு வயதில் நம் இடது மூளை வளர்ந்து, பின் வலது மூளை வளரும். ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாடு இடது மூளை வளர்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் மனிதர்களுடன் உரையாடாமல் மொபைல், டேப்லட் போன்ற 'இன்ட்டராக்டிவ்’ கருவிகளுடன் அதிக நேரம் செலவிட்டால் அவர்களது யோசிக்கும் முறையே மாறிவிடும். மனிதர்களையும் அவர்கள் இன்னொரு கருவியாக மட்டுமே பார்ப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் அன்பு, பாசம், பயம் போன்ற எந்த மனித உணர்வுக்கும் வேலையே இருக்காது என எச்சரிக்கிறார்கள்.
சரி... இதற்கு எல்லாம் என்ன தீர்வு? மொபைல் இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால், குறைக்க வேண்டும்! அத்தியாவசிய அழைப்புகள், அலுவலக விஷயங்கள் தவிர, மற்ற எதையும் பயன்படுத்தாமல் உங்கள் மொபைலுடன் ஒரு நாள் இருந்துபாருங்கள். இருக்க முடியாமல் தவித்தால், நீங்கள் எந்த அளவுக்கு மொபைலுக்கு அடிமையாகியிருக்கிறீர்கள் எனப் புரியும். தொழில்நுட்ப வளர்ச்சியும் பணத்தைப்போலத்தான். நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரைதான் அது வரம். அதன் கட்டுப்பாட்டில் நாம் போய்விட்டால், சாபம்!
வினையாகும் விளையாட்டு!
மொபைல் எனும் ரிமோட்!
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மிந்த்ரா, தனது இணையதளத்தை மூடிவிட்டது. மொபைல் மூலமாக மட்டுமே பொருட்களை வாங்க முடியும். ஏனெனில், மொபைல் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் நம் செயல்திறன் குறைகிறது. பார்ப்பதை எல்லாம் ஓகே செய்யும் முடிவுக்கு நாம் தள்ளப்படுகிறோம். கணினிபோல பல தளங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியாமல்போகிறது. நம் மொபைல் சொல்லும் அனைத்து தகவல்களையும் 'உண்மை’ என நம்புகிறோம். யாரோ ஒருவர் நம்மை நம் மொபைல் மூலம் கட்டுப்படுத்திச் செயல்படவைக்கிறார் என்பதை உணர மறுக்கிறோம்!
மொபைல் மோகம் குறைக்க...
1) காலையில் எழுந்தவுடன் மொபைலில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையும் பார்க்காதீர்கள்.
2) தேவை ஏற்படும்போது மட்டும் மொபைலைப் பயன்படுத்துங்கள். சும்மா இருக்கிறோமே என
மொபைலைக் கையில் எடுக்கும் அடுத்த சில நொடிகள், பல மணி நேரங்களைக் கபளீகரம் செய்யலாம்!
3) என்ன அவசரமாக இருந்தாலும் சில இடங்களில் மொபைலை எடுப்பது இல்லை எனத் தீர்மானமாக இருங்கள்... போக்குவரத்து சிக்னல், கார் ஓட்டும்போது, மருத்துவமனை, துக்க வீடு, வகுப்பறை என்பதுபோல.
4) நீங்கள் மொபைலை எப்படியெல்லாம் உபயோகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணித்துச் சொல்லவும் சில ஆப்ஸ் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்கள்!
5) மற்ற முக்கிய வேலைகள் இருக்கும்போது, ஆஃப்லைன் போய்விடுங்கள். 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்க, ஸ்மார்ட்போன் உங்கள் வாழ்க்கைத் துணை கிடையாது!
No comments:
Post a Comment