Thursday, January 28, 2016

புளிச்சகீரை
 
ந்திராவின் கோங்குரா சட்னி மிகவும் பிரசித்தம். அதன் காரத்தை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்துவிடும். நம் ஊரில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுவதுதான் ஆந்திராவில் கோங்குரா. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் முதன்மையானது புளிச்சகீரை. எனினும், தென் இந்தியாவில்தான் இந்தக் கீரையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் இந்தக் கீரைக்கு உள்ளன.

புளிச்சகீரையைக் கடைந்து, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். சிலர், புளிச்சகீரையை ஊறுகாயாகவும் பயன்படுத்துகிறார்கள். பெயருக்கு ஏற்றார்போல புளிப்புச்சுவைகொண்ட இந்தக் கீரைக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உண்டு.

பித்தம் உடலில் அதிகமாகி, சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், கரப்பான், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை சிறந்த தீர்வு.
இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் அளவாகச் சாப்பிட்டுவர, உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை நீங்கும். சொறி, சிரங்கு முதலிய சருமப் பிரச்னைகளும் நீங்கும்.

புளிச்சகீரை, காமப்பெருக்கியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

புளிச்சகீரை இலைகளை நசித்து, உடலில் உள்ள பெருங்கட்டிகளின் மீதுவைத்துக் கட்ட, வீக்கம் குறைந்து, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. உடல் வலுவின்றி இருக்கும் குழந்தைகளுக்குப் புளிச்சகீரையை கொடுத்துவந்தால், உடல் புஷ்டி அடையும்.

புளிச்சகீரையை, மிளகாய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால், குடற்புண்கள் ஆறும்; சிறுநீரக நோய்கள் நீங்கும். உப்பு சேர்க்காமல் புளிச்சகீரையை உணவில் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

No comments:

Post a Comment