Friday, January 22, 2016

இவர்தான்யா இயக்குநர்!
ங்களுக்கு மிகவும் பிடித்த வேலையை 20 ஆண்டுகளுக்கு செய்யக் கூடாது என அரசாங்கம் சொன்னால் என்ன செய்வீர்கள்? குடும்பத்தினரை மனதில் வைத்து வேறு வேலை செய்ய ஆயத்தமாவீர்கள். அங்குதான் தனித்து நின்றார் ஈரானிய இயக்குநரான ஜஃபர் பனாஹி.
‘தி வொயிட் பலூன்’ , ‘தி மிர்ரர்’ , ‘தி சர்க்கிள்’, ‘கிரிம்சன் கோல்ட்’, ‘ஆஃப்சைட்’ என இவர் எடுத்த படங்கள் எல்லாம் ஈரான் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவை. ஈரான் இந்தப் படங்களுக்குத் தடை விதித்து இருக்கிறது. இவரது படங்கள் மட்டும் அல்ல, ஈரானில் இருந்து வெளியா கும் எல்லாப் படைப்புகளுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது.

இதையெல்லாம் கடந்துதான் ஈரானிய படைப்புகள் வெளியுலகத்திற்கு வருகின்றன. பிப்ரவரி மாதம்  2010 வரை சில காரணங்களைச் சொல்லி பனாஹியை கைது செய்வதும், விடுவிப்பதும் என பூச்சாண்டி காட்டியது ஈரான் அரசு. அதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் படங்களை இயக்கி வந்தார் பனாஹி. மார்ச் மாதத்தில் அரசுக்கு எதிராகப் படம் இயக்குவதாக கூறி பனாஹியையும், அவரது குடும்பத்தாரையும் கைது செய்தது ஈரான் அரசு. மற்றவர்களை விடுவித்துவிட்டாலும், பனாஹிக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை, 20 ஆண்டுகள் திரைப்படங்கள் எடுக்கக் கூடாது, ஈரானை விட்டு செல்லக் கூடாது என்று தடை போட்டது.
 
தடைக்குப் பிறகும் பனாஹி படங்கள் இயக்குவதை நிறுத்தவில்லை. தன் வீட்டினுள் இருந்தபடியே ‘திஸ் இஸ் நாட் எ ஃபிலிம்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தார். ‘படம்தானே இயக்கக் கூடாது’ எனத் தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் திரைக்கதையைச் சொல்லி அதை அவரது வீட்டிலேயே வீடியோ எடுத்தார். இதை பென் ட்ரைவில் பதிவு செய்து ஒரு பிறந்த நாள் கேக்கிற்குள் ஒளித்து வைத்து கேன்ஸ் திருவிழாவிற்கு அனுப்பினார்கள்.

2013-ம் ஆண்டு கம்போசியா பர்டோவி என்ற இன்னொரு இயக்குநருடன் இணைந்து, ‘குளோஸ்டு கர்டைன்’ என்ற அடுத்த படத்தை இயக்கினார் பனாஹி. பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த கதைக்கான விருது வென்றார். ‘எங்கள் அனுமதி இல்லாமல், இப்படி சிலர் அனுப்பும் படங்களை ஒளிபரப்புவது கண்டனத்திற்குரியது’ என எச்சரித்தது ஈரான் அரசு. பர்டோவியின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தது.
 
இப்படிப்பட்ட நிலையில் தன் அடுத்த படமான ‘டாக்ஸி’யைக் கடந்த ஆண்டு வெளியிட்டார் பனாஹி. படத்தில் ஒரு டாக்ஸி ஓட்டுநராக வருவார் பனாஹி. சிலர் பனாஹியை அடையாளம் கண்டுகொள்ள, சிலர் அவரை ஓட்டுநர் என நினைத்துப் பேசிக்கொண்டே வருவார்கள். அரசைப் பல காட்சிகளில் எள்ளி நகையாடி இருப்பார்கள் டாக்ஸியில் பயணிப்பவர்கள். படம் முழுவதும் காருக்குள்ளேயே படமாக்கப்பட்டது. ‘சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில்தான் தூக்குத் தண்டனை அதிகம். அதனால் இங்கு குற்றங்கள் குறைந்துவிட்டனவா?’ போன்ற வசனங்கள் எடுத்துக்காட்டு. இறுதியாய் அங்கு படம் பதிவு செய்துகொண்டு இருந்த கேமராவை சிலர் திருடிவிட்டதாய்ப் படம் முடியும். இது ஏதோ ஷூட்டிங் செய்து எடுக்கப்பட்ட படம் அல்ல. நிஜ மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

ஐரோப்பிய பாராளுமன்றம் மனிதநேயத்திற்காகவும், விடுதலை சிந்தனைகளுக்காவும் சக்கரோவ்  என்ற விருதினை வழங்கிவருகிறது. 2012ல் ஈரானின் பெண் வழக்கறிஞர் நஸ்ரின் சொடோடெவிற்கும், பனாஹிக்கும்  இந்த விருதை வழங்குவதாக அறிவித்து இருந்தார்கள். ஆனால் இருவருமே விருது வாங்க இயலாத நிலையில் இருந்தார்கள். தேசியப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி நஸ்ரினை 20 ஆண்டு காலம் வழக்காடாமல் இருக்கவும், ஈரானை விட்டுச் செல்ல முடியாமலும் தடை விதித்தது ஈரான் அரசு. 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நஸ்ரினும் ‘டாக்ஸி’ படத்தில் வக்கீலாகவே நடித்து இருக்கிறார்.
பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கக் கரடி விருது வென்றது ‘டாக்ஸி’. பனாஹிக்கு தடை விதித்து இருப்பதால், படத்தில் அவரோடு நடித்த அவரது சகோதரர் மகள் ஹனா சைதி பரிசை பெற்றுக்கொண்டார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், மார்ட்டின் ஸ்கர்கோஸி போன்ற பலர் பனாஹியின் விடுதலைக்காக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

‘டாக்ஸி’யின் இறுதி வசனம் என்ன தெரியுமா ?

‘நாங்கள் திரும்பி வருவோம்’

No comments:

Post a Comment