Friday, February 26, 2016

மதிப்புக்குரிய இந்துத்துவர்களே
ஜேஎன்யு என்பது பாபர் மசூதி அல்ல.

 - மருதன்   

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை வெறுப்பதற்கான எல்லா நியாயங்களும் பாஜகவுக்கு இருக்கின்றன. ஜேஎன்யு-வால் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருக்கிறதா என்று சீறி விழுவதற்கும், ஜேஎன்யு தேசவிரோதிகளின் கூடாராமாகத் திகழ்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கும்கூட இந்துத்துவர்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது.
அவ்வளவு ஏன், ஜேஎன்யுவை இழுத்து மூடவேண்டும் என்று அவர்களில் ஒரு பகுதியினர் துள்ளிக்குதித்து கூப்பாடு போடுவதையும்கூட கொஞ்சம் அவர்கள் பக்கம் நின்று பார்த்தால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்!

மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜான் காட்டன் என்னும் கிறிஸ்தவ குருமார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பி.ஏ., எம்.ஏ என்று படித்தவர். மிகுந்த பேரும் புகழும் பெற்று தேவாலயத்தில் பணியாற்றிவந்தார். பல நூல்களைக் கரைத்துக் குடித்தவர். கற்றறிந்த ஞானி என்று போற்றப்பட்டவரும்கூட. இவ்வளவு செல்வாக்குடன் இருந்த இந்த காட்டன்,  தனது நூல் ஒன்றில் இப்படி எழுதி வைத்தார். ’அதிகம் படிப்பவர்களும் அதிக அறிவாற்றல் கொண்டவர்களும் சாத்தானுக்குப் பணியாற்றுவதற்கே தகுதியானவர்கள்!’
அவரே படித்தவர்தான் என்றாலும் அதிகம் படிப்பவர்களைக் கண்டு காட்டன் எரிச்சலடைந்ததற்குக் காரணம் அவர்கள் பைபிள், இறையியல் என்று மட்டும் திருப்தி கொள்ளாமல் அறிவியல், வரலாறு, புவியியல் என்றெல்லாம் கண்டபடி தேடிப் படித்ததுதான். இந்தத் துறைகள் எல்லாம் அவரைப் பொறுத்தவரை தேவையற்றவை மட்டுமல்ல, ஆபத்தானவையும்கூட. காரணம் இவற்றையெல்லாம் படிக்கும் ஒருவர் இறைவனின் இருப்பையும் தேவலாயத்தின் அதிகாரத்தையும் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்.

எதையும் சந்தேகிக்கும் குணம், எதையும் நம்ப மறுக்கும் பழக்கம், யாரையும் எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆற்றல் வளர்ந்துவிடும். புண்ணியத்தைத் தேடித்தரும் பக்தியைக் கைவிட்டுவிட்டு தீங்கு விளைவிக்கும் அறிவை நாடிச் செல்பவர்கள் சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்தான். இல்லையா?

ஜேஎன்யுவுக்கு வருவோம். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சங் பரிவாரங்களும் இன்னபிற இந்துத்துவர்களும் ஜேஎன்யுவை  கண்டு எரிச்சல் கொள்வது ஏன் என்பது இப்போது புரிந்திருக்கும். அறிவைத் தேடிச் செல்பவர்களை,  ஜான் காட்டனைப் போல் ஏன் அவர்கள் வாய்க்கு வந்தபடி சபிக்கிறார்கள் என்பதும் புரிந்திருக்கும். அறிவுத் தேடலுடன் உள்ளவர்களை வெறுக்கும் போக்கு கிட்டத்தட்ட உலகம் தழுவியது.

ஓராண்டு முழுக்க ஒரு புத்தகத்தைக் கூடப் புரட்டாமல் காலம் கழித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 28 சதவிகிதம். அதே அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர்  இன்னமும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியலை வெறுப்பவர்கள் மற்றும் புறக்கணிப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கே குறைவில்லை.

ஜான் காட்டன் உலகம் முழுக்கப் பரவியிருக்கிறார். இந்தியாவில் அவர் இந்துத்துவர் என்று அறியப்படுகிறார்.  காஷ்மீர் அவருக்குப் புனிதமானது என்பதால் எல்லோரும் அதை ஒரு புனிதப் பொருளாகப் பாவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பும் ஜேஎன்யு மாணவர்களை அவர் மனதார வெறுக்கிறார். உடன்படுபவர்களையும் வழிபடுபவர்களையும் மட்டுமே அவர் தேச பக்தர்கள் என்று கருதுகிறார்.  முரண்படுபவர்கள், சந்தேகிப்பவர்கள் தேச விரோதிகள். சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்.

மேலும் மேலும் முரண்பாடுகள் முளைக்காதிருக்க வேண்டுமானால், காஷ்மீர் போல் மேலும் பல புனிதங்கள் சிதறடிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், மேலும் பல கன்ஹையா குமார்களும் உமர் காலித்துகளும் பெருகாமல் இருக்கவேண்டுமானால், ஜேஎன்யு என்னும் சாத்தானின் கோட்டை அகற்றப்பட்டாகவேண்டும். எனவேதான் ஜான் காட்டன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களை அச்சுறுத்துகிறார். ஜேஎன்யு-வுக்கு முடிந்த அளவுக்கு இழிபெயரை வாங்கித் தந்துவிடமுடியாதா என்று தலைகீழாக நின்று பிரயத்தனப்படுகிறார்.

இந்துத்துவ நண்பர்களே, ஜேஎன்யுவை இந்த வழிகளில் எல்லாம் வீழ்த்துவது சாத்தியமில்லை. ஜான் காட்டனைப் போல் சபிப்பதிலும் பலனில்லை. உங்கள் விருப்பு, வெறுப்புகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் கோபத்தையும் எரிச்சலையும் கையறு நிலையையும் தாற்காலிகமாக மறந்துவிட்டு நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.
ஜேஎன்யு,  இடதுசாரிகளின் கோட்டையாக மாறிவிட்டது என்று வெறுமனே குற்றம் சுமத்தாமல்,  அந்தப் பல்கலைக்கழகத்தின் அமைப்பையும் அடித்தளத்தையும் ஆராய்ந்து பாருங்கள். ஊர் பேர் தெரியாத ஒரு கன்ஹையாவுக்காக எங்கிருந்தோ நோம் சாம்ஸ்கியால் எப்படிக் குரல் கொடுக்க முடிகிறது? ஜேஎன்யு வளாகத்துக்குள் காவல் துறையினர் நுழைந்ததை இலக்கியத்துக்கான நோபல் பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் ஏன் கண்டிக்கிறார்? தற்போதைய அரசு எதேச்சதிகார போக்குடன் செயல்படுவதைக் கண்டிக்கிறேன் என்று ஜுடித் பட்லரால் எப்படி அறிக்கை வெளியிடமுடிகிறது?

கொலம்பியா பல்கலைக்கழகம், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்,பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், சான் மார்டின் பல்கலைக்கழகம் என்று தொடங்கி உலகின் பல மூலைகளில் இருந்தும் பேராசிரியர்களும் அறிவுஜீவிகளும் போராடும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக எப்படிக் கூட்டாக இணைகிறார்கள்? நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று எப்படி அவர்களால் ஒரே குரலில் சொல்லமுடிகிறது?
கடைசியாக இப்படியொரு ஆதரவை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? விமானத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரியையும் நாங்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் சொன்னபோது எத்தனை பல்கலைக்கழகங்களில் இருந்து உங்களுக்கு ஆதரவு திரண்டுவந்தது? எவ்வளவு கற்றறிந்த அறிஞர்கள் உங்களுடன் இசைந்தார்கள்?   

சாவர்க்கரும், ஹெட்கேவாரும்,  கோல்வால்வரும் ஏன் உலகின் கவனத்தை இன்றுவரை ஈர்க்கவேயில்லை என்பதை நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களுடைய இந்துத்துவா ஏன் உலகால் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? உலகை விடுங்கள், நாக்பூரைத் தாண்டினால் எவ்வளவு பேருக்கு சாவர்க்கர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தீன்தயாள் உபாத்யாயாவை எவ்வளவு தென்னிந்தியர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நேருவைத் தாக்குகிறீர்கள். அவர் பெயர் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தையும் தூற்றுகிறீர்கள். தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரேயொரு தலைவரையாவது உங்களால் இதுவரை உருவாக்கமுடிந்திருக்கிறதா? சர்தார் வல்லபபாய் படேலைக்கூட முழுமையாகச் சொந்தம் கொண்டாடமுடியாமல், நீங்கள் ஏன் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இன்றைய தேதி வரை ஏன் சாவர்க்கரை உங்களால் சஞ்சலமின்றி முன்னிறுத்த முடியவில்லை? ஏன் அவர் கருத்துக்களை மக்களிடம் பிரசாரம் செய்யமுடியவில்லை? என்ன தயக்கம்?

கடைசியாக ஓர் இந்துத்துவர் எழுதி வெளியிட்ட ஓர் ஆய்வு நூல் என்ன? அந்நூல் சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா? வரலாற்றை இடதுசாரிகளின் பிடியில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று முழங்க முடிந்த உங்களால், ஏன் ஒரு ரொமிலா தாப்பரை, ஒரு இர்ஃபான் ஹபீப்பை, ஒரு ரஜனி கோத்தாரியை உருவாக்கமுடியாமல் இருக்கிறது? இன்னொரு ஆர்.சி. மஜும்தாரைக்கூட ஏன் காணமுடியவில்லை?

அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், அரசியல் சித்தாந்தவாதிகள், தத்துவவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று அறிவுத்துறையின் எந்தக் கதவைத் திறந்தாலும் அங்கே இடதுசாரிகள் அணிவகுத்து நிற்பது ஏன்? வலதுசாரி சிந்தனையோட்டம் இங்கே ஒரு படி கூட வளராமலே இருப்பதால்தானே? இதை நீங்கள் எப்போதாவது நேர்மையுடன் எண்ணிப் பார்த்ததுண்டா?

அறிவுசார் துறைகளுக்குக்கூடப் போகவேண்டாம். உங்கள் இருப்புக்கும் லட்சியங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் மதத்தையே எடுத்துக்கொள்வோம். இஸ்லாத்தை, கிறிஸ்தவத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, அந்த மதங்களைச்  சேர்ந்தவர்களைப் பகைச் சக்திகளாகப் பார்க்க உங்களால் முடிந்தது. என்றேனும் இந்துக்களை நீங்கள் நட்புச் சக்திகளாகப் பார்த்ததுண்டா? இந்து மதத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பிளவுகளையும் சாதி மோதல்களையும் நீங்கள் எதிர்த்ததுண்டா? அடித்தட்டு தலித் மக்களை இந்துத்துவத்தின் பெயரைச் சொல்லி அரவணைத்துக் கொள்ளமுடிந்ததா? இந்துவாகப் பிறந்தேன், ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று அறிவித்து இந்து மதத்தைத் துறந்த அம்பேத்கரை இன்று சொந்தம் கொண்டா விரைந்தோடி வரும் உங்களால் அம்பேத்கரை அன்று ஏற்கமுடிந்ததா? அவருடன் உறவு பேண முடிந்ததா? அவரை இந்து மதத்தில் தக்க வைக்கமுடிந்ததா?
வரலாற்றுக்குப் போகவேண்டாம்... இன்று நடப்பது என்ன? ரோகித் வெமுலாவின் அப்பாவின் சாதி என்ன, அவருடைய மூதாதையரின் சாதி என்ன என்னும் அளவுக்குத்தான் உங்கள் ஆய்வுப் பார்வை வளர்ந்திருக்கிறது என்பது உண்மையிலேயே அவமானகரமானது இல்லையா? இன்று உங்களுக்கு அதிகாரம் கைகூடியிருக்கிறது. உங்கள் பலம் கட்டற்ற முறையில் வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்தப் பலத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே பாருங்கள். இதைத்தான் நீங்கள் செய்ய விரும்பினீர்களா? ஒரு பல்கலைக்கழகம்தான் உங்கள் எதிரியா?

உண்மையில், ஜேஎன்யு-வை நீங்கள் எதிரியாகப் பாவிப்பது தவறில்லை. ஆனால் ஜேஎன்யு-வுடன் போரிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? உங்கள் அதிகார பலத்தையோ அரசு பலத்தையோ அல்ல, அறிவு பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கவேண்டும். ஜேஎன்யு எந்த அடித்தளத்தின் மீது எழுந்து நிற்கிறதோ அப்படியொரு அடித்தளத்தில் நீங்களும் ஏறி நின்று உரக்கப் பேசியிருக்கவேண்டும். அறிவு என்பது அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. அதைத் தனியே பிரயத்தனப்பட்டுதான் வளர்த்துக்கொண்டாகவேண்டும். கடினமானதுதான், ஆனால் அதைத்தவிர வேறு வழியில்லை. சிக்கல் என்னவென்றால் ஜேஎன்யு-வை நீங்கள் இதைக்கொண்டு மட்டுமே எதிர்கொண்டாகவேண்டும்.

ஜேஎன்யு என்பது பாபர் மசூதி அல்ல. எனவே, இடிப்பதைப் பற்றி யோசிக்காமல் உருவாக்குவதைப் பற்றி யோசியுங்கள்.

எங்கே உங்களுடைய ஜேஎன்யு?

உங்களால் ஒரு ஜேஎன்யுவை உருவாக்கமுடியுமா? முடியுமென்றால் அதை உருவாக்கிக் காட்டிவிட்டு பிறகு அங்கிருந்து உரையாடத் தொடங்குங்கள். அப்சல் குரு, காஷ்மீர், தேச பக்தி, தேச விரோதம், இந்து தேசியம், இந்துத்துவம், சாவர்க்கர் என்று நீங்கள் பேச விரும்பும் எதையும் அங்கிருந்தபடி பேசுங்கள். உங்கள் தரத்தை உயர்த்திக்கொண்டு, உங்கள் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டு உரையாடுங்கள். உங்களால் ஏற்கமுடியாத கருத்துக்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆதாரங்களுடன் மறுத்து உங்கள் தரப்பை முன்வையுங்கள். விஞ்ஞான கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் நடத்துங்கள். போராடுங்கள். கோஷமிடுங்கள்!

நீங்கள் வெறுத்தொதுக்கும் இடதுசாரிகள் அனைவரும் இதைத்தான் செய்தார்கள்.

இறுதியாக ஒன்று. ஜான் காட்டன் தோற்கடிக்கப்பட்டவர் என்பதை மறந்துவிடவேண்டாம்

No comments:

Post a Comment