Thursday, March 3, 2016

போடுங்கம்மா ஓட்டு
போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப் பார்த்து’ என பள்ளிச் சிறுவர்கள் சகிதமாக, தெருத் தெருவாகச் சுற்றித்திரிந்த தேர்தல் அல்ல இது. தேர்தல் வருவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே ஊரில் உள்ள எல்லா சுவர்களிலும் ‘DMK Reserved’, ‘ADMK Reserved’ என எழுதிவைத்த தேர்தல் அல்ல இது. ஆட்டோக்களில் வளையவரும் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், ‘வாக்காளப் பெருங்குடி மக்களே...’ எனக் கரகரக் குரலில் மக்களை அழைக்கும் தேர்தல் அல்ல இது. ‘இதோ, நமது வேட்பாளர் வந்துகொண்டிருக்கிறார். உங்கள் வீட்டுப் பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்...’ என ஏழெட்டு வாகனங்கள் புடைசூழ வேட்பாளர்கள் கிராமத்து வீதிகளில் வளையவரும் தேர்தல் அல்ல இது.

இது வேற மாதிரி!

வதந்திகள் உலவும் வாட்ஸ்அப்பில், ‘உங்கள் சகோதரி பேசுகிறேன்...’ என்கிறார் ஜெயலலிதா. மிஸ்டு கால் கொடுத்தால், கருணாநிதியே  கதைக்கிறார். நகைக்கடைகளும் துணிக்கடைகளும் விளம்பரம்செய்யும் நாளிதழ் முதல் பக்கத்தில், `சிங்கம்’ பட பன்ச் வசனத்தை ரீமிக்ஸ் செய்து கலவரப்படுத்துகிறார்கள். விஜய்-அஜித் ரசிகர்கள் மல்லுக்கட்டும் ஹேஷ்டேக் ஏரியாவில் #jayafails என அதிரடியாக மிரட்டுகிறார்கள். ஆங்ரிபேர்ட்ஸும் சப்வே சர்ஃபரும் முந்தும் ஆப்ஸ் உலகில் அன்புமணி ஆப் `உள்ளேன் ஐயா’ என்கிறது. நிச்சயம் சொல்லலாம், இது தேர்தல் சீஸன் 2.0.
‘மூணு படி லட்சியம்... ஒரு படி நிச்சயம்’ என்பது 40 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் முழக்கம். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பது

10 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் முழக்கம். இப்போதைய தேர்தல் முழக்கம், ‘#என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!’

வீடு வீடாகச் சென்று துண்டு நோட்டீஸ் கொடுத்தவர்கள், இப்போது வாட்ஸ்அப்பில் வாக்குறுதிகள் தந்துகொண்டிருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக்கு, இனி மதிப்பே  இருக்காது. நள்ளிரவு 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாக்கு கேட்பதை ஆணையத்தால் தடுக்க முடியுமா? வாட்ஸ் அப்பில் மீம்ஸ் அனுப்புவதை யாரால் என்ன செய்ய முடியும்? ஃபேஸ்புக்கில் களமாடுவதை யார் கேட்க முடியும்? 

ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால், இதுவரை நாம் தேர்தலை அணுகிவந்த பாரம்பர்ய முறையை அடியோடு தகர்க்கிற முதல் தேர்தல் இது. அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் மாற்றம் வந்திருக்கிறது. அவர்கள் நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சல்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வதந்திகளை உருவாக்கி, கூட்டணிகளை உருவாக்குவது, கூட்டணிகளை உடைப்பது என்பதில் தொடங்கி, வாக்காளர்களை இறுதிநேர மனமாற்றத்துக்குத் தூண்டுவதற்கும் இந்தத் தொழில்நுட்பங்கள் பெரும் பக்கபலமாக இருக்கப்போகின்றன. தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே செல்போன் வழியிலான இந்த யுத்தம் பெரும் உச்சத்தைத் தொடும். தன் பலத்தைச் சொல்வதைக் காட்டிலும் எதிராளியின் பலவீனத்தைப் பகிரங்கப்படுத்தி, மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அதைத் தனக்கான ஆதரவுத் தளமாக மாற்றிக்கொள்ளும் போக்கு அதிகரிக்கும்.
 
பொதுவாக இந்திய அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்தப் பிராந்திய சிக்கல்களை முன்னிறுத்தி, அதற்காகப் போராடித்தான் தலைவர்கள், மக்களின் செல்வாக்கைப் பெறுவார்கள். இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி தி.மு.க மேலெழுந்தது. கல்வியின் தேவையைப் பூர்த்திசெய்து காமராஜர் மக்கள் நாயகராக உயர்ந்தார். மாயாவதி, பஸ்வான், சந்திரபாபு நாயுடு... ஆகியோர் இப்படித்தான். உள்ளூர் மக்கள் பிரச்னைகளை அவர்கள் பிரநிதித்துவப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தலைமையாக உருவெடுத்தார்கள். ஆனால், இப்போது மக்களின் தேவைகளுக்கும், அரசியல் தலைவர்களின் எழுச்சிக்கும் சம்பந்தமே இல்லை. எங்கே இருந்தார் என்றே தெரியாத, சில ஆண்டுகள்கூட அரசியல் பின்புலம் இல்லாத அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென தலைவராக உருவெடுக்கிறார். ஒரு மாநிலத் தலைவர், தேசியத் தலைவராக மாற்றம் பெறுவது அத்தனை சுலபமா? ஆனால், குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, திடீரென தேசியத் தலைவராக முன்னிறுத்தப்பட்டு இந்தியப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். இவர்கள் இணையம் வழியே தங்களுக்கான இமேஜை உருவாக்கி, தக்கவைத்து, பிரமாண்டப்படுத்தி வாக்குகளாக மாற்றினர். இந்த ட்ரெண்டுதான் இன்னும் டாப் ஸ்பீடில் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைக்கிறது. ஸ்டாலின் மற்றும் அன்புமணியின் அணுகுமுறையில் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
 
‘முதல்முறையாக வாக்களிக்கப்போகும் இரண்டு கோடி இளைஞர்கள்தான் எங்கள் இலக்கு’ என வெளிப் படையாக அறிவித்து, அந்த இளைய மனங்களை வெல்வதற்கு ஏற்ற நவீன அணுகுமுறையைப் பின்பற்று கிறார் அன்புமணி. `மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ விளம்பரத்தில் தொடங்கி, கடைசியாக வண்டலூர் மாநாட்டில் பிரமாண்டமான திறந்தவெளி மேடையில்... மைக் மாட்டிக்கொண்டு நடந்துகொண்டே பேசியது வரை எல்லாமே இந்த அஜண்டாவின் ஒரு பகுதிதான். இதுவரை வார்த்தைக்கு வார்த்தை ‘சின்ன அய்யா’ என அன்புமணியை அழைத்துக்கொண்டிருந்த பா.ம.க-வினர், இந்த மாநாட்டில் `அன்புமணி’ எனப் பெயரைச் சொன்னார்கள். தவறியும் ‘சின்ன அய்யா’ என்ற வார்த்தை உச்சரிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்களின் இலக்கு வாக்காளர்களான (Target voter) இளைஞர்கள், இத்தகைய புகழாரங்களின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே, அவர் தன்னை நவீன ஆளாக முன்னிறுத்த முயற்சிக்கிறார். ஸ்டாலினும் இதேதான். `முடியட்டும்! விடியட்டும்!’ பேரணி மற்றும் தற்போதைய ‘என்னம்மா’ விளம்பரங்கள், இளைய மனங்களை வெல்வதற்கான வழிமுறைதான்.
 
அரசியல் கட்சிகளின் இந்தப் புதிய வகை பிரசாரத்துக்குப் பின்னால், மிகப் பெரிய விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள்தான் இந்தக் கட்சிகளின், தலைவர்களின் ஒவ்வோர் அசைவையும் தீர்மானிக்கிறார்கள். எல்லாமே ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நம் முன்னே நடித்துக்காட்டப்படுகிறது. தி.மு.க-வின் தற்போதைய பிரசார விளம்பரங்கள் அனைத்தையும் ‘ஜே.வால்டர் தாம்சன்’ என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இது, உலகின் முன்னணி விளம்பர நிறுவனங் களில் ஒன்று. இணையத்தில் புகழ்பெற்ற ஹேஷ்டேக் ஆன, #jayafails என்பது தி.மு.க-வின் சார்பில் இயக்கப்படுகிறது. இதை ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனின் விளம்பர நிறுவனம் இயக்குகிறது. திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்தி ‘முடியட்டும்! விடியட்டும்!’ கோஷத்தை  ஸ்டாலின் அறிமுகப்படுத்திய போது #MudiyattumVidiyattum என்ற ஹேஷ்டேக் கொல்கத்தாவில் ட்ரெண்ட் ஆனது. காரணம், கொல்கத்தாவில் இயங்கும் ஆன்லைன் நிறுவனம் ஒன்று இந்த வேலையைப் பெற்றிருந்தது. பா.ம.க-வின் பின்னாலும் இதே கதைதான். 

இப்படி தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு விளம்பர நிறுவனத்தைப் பணியமர்த்தி, தேர்தலை ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்போல மாற்றும் இந்தப் போக்கை, தீவிரமாகத் தொடங்கிவைத்தது நரேந்திர மோடி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பிரசார உத்திக்குப் பின்னால் APCO Worldwide என்ற நிறுவனம் செயல்பட்டது. அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்குப் பணிபுரிந்ததும் இந்த நிறுவனம்தான். இவர்கள், ஒரு புதுப்பொருளை சந்தையில் அறிமுகப்படுத்துவதைப் போல, தேர்தல் பிரசாரத்தையும் செய்கிறார்கள். அவர்களின் வார்த்தையிலேயே இதற்கு ‘பிராண்ட் லான்ச்சிங்’ (Brand Launching) என்றுதான் பெயர். மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அதை நிவர்த்திசெய்யும் திட்டங்களை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட காலம், கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருக் கிறது. மாறாக, தேர்தல் பிரசாரம் என்பது 20:20
ஐ.பி.எல் மேட்ச்போல மாறிவிட்டது. ஏலம் எடுப்பது, ஏலம் விடுவது, சூதாடுவது... எல்லாம் இங்கு உண்டு.

இதில் ஒரு முக்கியமான அம்சம், அரசியல் கட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஹேஷ்டேக், மீம்ஸ் என நவீன வடிவம் எடுப்பதற்குக் காரணம். ‘அப்படிச் செய்தால் தான் இளைய தலைமுறை வாக்காளர்களைக் கவர முடியும்’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது ஒரு மோசடியான வாதம். உண்மையில் வாக்குறுதிகளை முன்வைத்து மக்களைக் கவரும் தகுதியை அரசியல் கட்சிகள் இழந்துவிட்டன. ‘ஊழலை ஒழிப்போம்’ என தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வாக்குறுதி கொடுக்க முடியுமா? ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்’ என ஜெயலலிதாவால் சொல்ல முடியுமா? ‘மதுவின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம்’ என்று சொல்லும் தகுதி அ.தி.மு.க-வுக்கு இருக் கிறதா? ‘சாதிக் கலவரங் களைத் தடுத்து நிறுத்து வோம்’ என பா.ம.க-வால் உறுதிதர முடியுமா? எதுவும் முடியாது. வாக்குறுதி தந்து வாக்கு கேட்கும் அருகதையை இழந்து விட்டதால்தான், இவர்கள் நவீனத்தின் பின்னே ஒளிந்துகொள்கிறார்கள். இது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கிறது.
 
‘சொத்துக்குவிப்பு வழக்கில் இந்த அம்மையார் தண்டிக்கப்பட்டாரே...’ என ஸ்டாலின் பேச ஆரம்பித்தால், பதிலுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடங்கி,

30 வருடங்களுக்கு முந்தைய ஊழல் கதை வரை ஜெயலலிதா தோண்டுவார். எதற்கு இதெல்லாம்? ஒரு ஹேஷ்டேக்கைப் போட்டு, ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ எனச் சொன்னால், பதிலுக்கு அவர்களும் இதேபோல ஏதாவது பன்ச் லைன் வெளியிடு வார்கள். அதோடு முடித்துக்கொள்ளலாம். ‘கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்; நீயும் வரக் கூடாது’ டீலிங்.
 
ஆனால், இவர்களின் ஆபாசமான இந்தத் தேர்தல் பிரசாரத்தில், மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் நகைச்சுவையாக மாற்றப்படுகின்றன. சென்னை மழை வெள்ளத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய, மோசமாக நடவடிக்கை எடுத்து பெரும் உயிர் சேதத்துக்கும், பொருள் சேதத்துக்கும் காரணமாக இருந்த இந்த அரசை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக... அதை ஒரு நாள் விளம்பரமாக, அன்றைய நாளின் ட்ரெண்டிங் மெட்டீரியலாக மாற்றுகிறது தி.மு.க. எல்லாவற்றையும் மேம்போக்கான தாக அணுகும் இணைய மனநிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதையே பொதுப் பண்பாக வளர்த்தெடுக்கிறது. அதேநேரம் நவீனம், தொழில்நுட்பம் ஜிகினா காட்டும் இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் எது பெரும்பான்மை சாதியோ, அந்தச் சாதியை சேர்ந்தவருக்குத்தான் ஸீட் தரப்போ கின்றனர். அங்கு நவீனத்தின் ஒரு சிறுதுளி கூட எட்டிப்பார்க்காது.

இவர்கள் நம் முன்னே ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் பழையவர்கள்... வேடம்தான் புதிது

No comments:

Post a Comment