Thursday, July 28, 2016

நாம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யுட்யூப்... அடிமைகளா ?

2004-ம் ஆண்டில் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டபோது அந்த நிறுவனத்தில் வேலைபார்த்தவர்கள் மூன்றே பேர்தான். 2016-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கிறவர்களின் எண்ணிக்கை 13,598. மலைக்கவைக்கிற அபார வளர்ச்சி. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதும் பாடுபடுவதும் மார்க் ஸூக்கர்பெர்க்கும் அவருடைய சகாக்களும் மட்டுமே அல்ல... அதில் நமக்குத்தான் நிறையவே பங்கு இருக்கிறது. 

உலகம் எங்கும் ஃபேஸ்புக் வளர்ச்சிக்குப் பாடுபடுகிற தோழர்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 165 கோடி.இவர்களில் 98 கோடி பேர், தினமும் செல்போன் மூலமாக மார்க் ஸூக்கர் பெர்க்குக்கு உதவுகிறார்கள். அதில் நீங்களும் நானும் இருக்கிறோம். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரித் தோழி ஒருவரைச் சந்தித்தேன். ஹோட்டலில் விதவிதமான உணவுகளைச் சின்னச் சின்னக் கோப்பைகளில் கொண்டுவந்து வைத்தனர். ஒரு கோப்பையில் கையை வைக்க... `டேய்... இர்ரா இர்ரா!' - எதிரில் இருந்த தோழி என் கையைப் பிடித்துத் தடுத்தார். மொபைலை எடுத்து உணவுப் பண்டங்களை விதவிதமாகப் படம் பிடிக்கத் தொடங்கினார். நிறையப் படங்களை எடுத்து முடித்தவர், அதை அந்த இடத்திலேயே ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார். பசி தாளாமல் நான் அன்னாரின் அனுமதியோடு சாப்பிடத் தொடங்கினேன். ஒரு கையில் மொபைலும் இன்னொரு கையில் ஸ்பூனுமாகச் சாப்பிட ஆரம்பித்தார் தோழி. எதிரில் உட்கார்ந்திருக்கும் என்னோடு அதிகம் பேசவில்லை. என் கேள்விகளுக்கும் மொபைலைப் பார்த்துக்கொண்டே ஏதோ  பதில் சொன்னார். 

உணவு காத்திருந்தது. அவரோடு பேச எனக்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. நான் சாப்பிட்டு முடித்திருந்தேன். அநேகமாக தன் பால்ய நண்பனுடனான உணவகச் சந்திப்பு குறித்து பெருமிதமாக ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரை ஒன்றை அன்றைய இரவில் அவர் எழுதியிருக்கலாம். 

எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதை உடனுக்குடன் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவது அல்லது அதைப் பற்றி எழுதிவிடுவது. எந்தச் செய்தி வந்தாலும் அதன் உண்மைத்தன்மையைக்கூட ஆராயாமல் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வது அல்லது அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றுவது, கேலிசெய்வது. மலை ஏறுகிறோமோ, மாரத்தான் போட்டியோ, ரயிலில் பயணமோ, சினிமா பார்க்கிறோமா, சில்லறை வாங்க அலைகிறோமோ, இழவு வீட்டுக்குப் போனாலும் அதையும் உடனுக்குடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலாவது போட்டுவிட வேண்டும். 

நமக்கு அருகில் இருக்கிறவர்கள் லைக் பண்ணுகிற மாதிரி வாழ்கிறோமோ... இல்லையோ, முகம் தெரியாதவர் களின் லைக்குகளுக்காக வாழப் பழகிவிட்டோம். 

அரிய தருணங்கள் நிகழும்போது படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தது மாறிவிட்டது. போட்டோ எடுப்பதற்காகவும் சமூக வலைத்தளங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதற்கான தருணங்களை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். சுயகழிவிறக்கம் மேலோங்கி சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தேடி அலைகிறோம். வெள்ளத்தில் மிதக்கும்போதும் மீட்கும்போதும் எங்கும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் மனிதர்களை சகஜமாகக் கடக்கிறோம். கடவுளே நேரில் வந்து தரிசனம் தரும் ஒரு நாளில், அந்த நொடியில் `செல்போன் எங்கே... சீக்கிரம் செல்ஃபி எடுத்துடுவோம்' என்ற எண்ணம்தான் நமக்கு எழுமோ! 

நாம் ஏன் சமூக வலைத்தளங்களுக்கு அடிக்ட்டுகளாக மாறியிருக்கிறோம்? எது நம்மை அப்படி மாற்றியிருக்கிறது? 

இந்தக் கேள்விகளுக்கு விடையளியுங்கள்!

1. காலையில் தூக்கத்தில் இருந்து கண் விழித்ததும் அலைபேசியைத் தேடி எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் பார்க்கும் பழக்கம் உண்டா?

2. நாள் முழுக்கக் காரணமே இல்லாமல் அடிக்கடி அலைபேசியில் சமூக வலைத்தளங்களை நோண்டுகிறீர்களா?

3. எதிரில் ஒரு நபர் பேசும்போது, அவரை அவமதிப்பதைப்போல வாட்ஸ்அப் குரூப் அப்டேட்ஸ் பார்க்கிறவரா?

4. அசரவைக்கிற எதைப் பார்த்தாலும் அதற்குப் பக்கத்தில் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போடவேண்டும் எனத் தோன்றுகிறதா? 

5. வீட்டிலோ, மொபைலிலோ இணைய இணைப்பு வேலை செய்யாதபோதும், பேட்டரி டவுண் ஆகும்போதும் பதற்றமும் கோபமும் கொண்டது உண்டா?

6. புத்தகங்கள் படிக்கும்போது, திரைப்படம் பார்க்கும்போது, பயணம் செய்யும்போது விடாமல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதுகுறித்து அப்டேட் செய்யும் பழக்கம்கொண்டவரா?

7. ஆறாவது பாயின்ட்டில் சொன்னதை எல்லாம் சமூக வலைத்தளங்களை நோண்டாமல் நிறுத்தி நிதானமாகக் கடைசியாக ரசித்து செய்தது எப்போது? 

8. எந்நேரமும் சமூக வலைத்தளங்கள் பார்ப்பதற்காக செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பதால், வீட்டில் சச்சரவுகள் உண்டாகி சண்டையாக வெடித்திருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு மார்க்குகள் கிடையாது. ஆனால், இந்தப் பழக்கங்களில் உங்களுக்குப் பாதி இருந்தாலும் உடனடியாக விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்.

 பதற்றப்பட வேண்டாம். நல்லவேளையாக நாம் எல்லாம் தனியாக இல்லை, உலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் இப்படி சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். செல்ஃபி தொடங்கி ஸ்டேட்டஸ், கமென்ட்ஸ், வீடியோ பதிவு, மீம்ஸ் என இந்த அடிக்‌ஷன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் பாதிப்பை உண்டாக்கிவருகிறது. 

இதற்கு நாம் மட்டுமே காரணம் இல்லை. சமூக வலைத்தள நிறுவனங்கள், தங்களுக்குள் தொடர்ந்து மறைமுகமாக ஒரு போரை நிகழ்த்தி வருகின்றன. யார் அதிகப் பயனாளர்களைக் கொண்ட வலைத்தளம், யாருடைய வலைத்தளத்தில் மக்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பதில் நடக்கும் வியாபாரப் போட்டி இது. அதனாலேயே இங்கே வருகிறவர்களை எப்படி மேலும் மேலும் கவர்ச்சிகரமான விஷயங்களைப் காட்டி தக்கவைப்பது என்பதைக் கண்டறிந்து செயல்படுத்துகின்றன. அதற்காக பல கோடிகளில் புதிய விஷயங்களையும் புதுப்புது உத்திகளையும் ஒவ்வொரு நாளும் புகுத்திக்கொண்டே இருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் 2012-ம் ஆண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கு இன்ஸ்டாகிராமை விலைக்கு வாங்கியதும், ட்விட்டர் நிறுவனம் வீடியோ பகிர்வு சமூக வலைத்தளமான பெரிஸ்கோப்பை விலை பேசி முடித்ததும் இதற்குத்தான். அவர்களுடைய லாப வேட்கைக்கான கச்சாப் பொருட்கள்தான் நாம்.

`99 Days of freedom' என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றி விவரங்களைப் பதிவு செய்துகொண்டு, 99 நாட்களுக்கு நாம் ஃபேஸ்புக் உபயோகிக்கக் கூடாது. ஒவ்வொரு 33  நாட்களுக்கும் ஒருமுறை ஃபேஸ்புக் இல்லாத வாழ்க்கை குறித்த நம்முடைய உணர்வுகளை அப்டேட் செய்ய வேண்டும். இந்த ஆய்வில் உலகம் எங்கும் இருந்து பல ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், கலந்துகொண்ட பலராலும் 99 நாட்களுக்கு ஃபேஸ்புக் இல்லாமல் இருப்பது சாத்தியப்படவில்லை. காரணம், அது அவ்வளவு எளிதாக இல்லை என்பதே. இதற்கு, இவர்கள் எல்லோருமே சொன்ன ஒரே காரணம், `ஃபேஸ்புக் பார்க்காம இருக்க முடியலை' என்பது மட்டும்தான். 

`நம்மால் சமூக வலைத்தளங்களின் பிடியில் இருந்து ஏன் விடுபட முடிவதில்லை?' என்பதற்கு மனநல நிபுணர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர். 

1.FOMO (Fear Of Missing Out) 

ஒரு செய்தியை அல்லது தகவலைத் தவறவிட்டுவிடுவோம் என்ற அச்சம். ஒரு தகவலை/அனுபவத்தை இன்னொருவர் அடைந்துவிடுவார். அதன்மூலம் அவர் நம்மைவிட ஒரு படி முன்னே இருப்பார் என்ற குழப்பமான மனநிலை. எல்லோரும் `கபாலி' படம் பற்றி விமர்சனம் செய்யும்போது, நாமும் அதைப் பற்றி ஏதாவது சொல்லியாக வேண்டும் என உருவாகிற சோஷியல் நிர்பந்தம். அதைச் சொல்லவில்லை என்றால், இந்தச் சமூகக் குழுவில் இருந்து விலக்கப்படுவோமோ என்ற அச்சம். நீங்கள் சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருந்தாலும் உங்களை சமூக வலைத்தளங்கள் விடாது. தினமும் உங்களுடைய மின்னஞ்சலுக்கே வந்துவிடுவார்கள். பாருங்கள், உங்க நண்பர்கள் என்ன போட்டிருக்கிறார்கள்... இதை எல்லாம் தவறவிட்டீர்கள் என விடாமல் மெயில் அனுப்பி ஈர்க்க முயற்சிக்கும். இது ஃபோமோவைத் தூண்டக்கூடிய செயல்களில் ஒன்று.

2. Peer Pressure

எல்லோரும் செய்வதாலே நாமும் ஒரு காரியத்தைச் செய்தே ஆகவேண்டிய அழுத்தம். ``ஒருமுறை உள்ளே வந்துவிட்டால் இந்த பிரஷர் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சுற்றிச் சுற்றி எண்ணற்ற விஷயங்கள்... எல்லோரும் படிக்கிற லிங்க்குகள், பார்க்கிற வீடியோக்கள், கிளிக் பண்ண ஆரம்பித்தால் ஓய மாட்டீர்கள். எல்லாவற்றையும் படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள துடிப்பீர்கள். அதற்குப் பிறகு அது தொடர்ச்சியான பழக்கமாக மாறி அடிமைப்படுத்த ஆரம்பிக்கும்'' என்கிறார் இன்ஸ்டாகிராமை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான ஹோச்முத். 

3. Notification 

சமூக வலைத்தளங்களின் மிக முக்கியமான தூண்டில் இது. நம்முடைய டைம்லைனின் உச்சந்தலையில் பூத்திருக்கும் இந்தச் சிவப்பு நிறப் பூவைப் பார்த்ததும் நமக்கு உள்ளம் பூரிக்கிறது. நமக்கே நமக்கான செய்திகள் அவை. எத்தனை லைக்கு வந்ததோ, என்ன கமென்ட் வந்ததோ என்ற பேரார்வம். நாம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாதபோதும்  உள்ளுக்குள் எத்தனை நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்  என்ற  எண்ணம்  உள்ளாடிக்கொண்டே இருக்கும். அதனாலேயே தினமும் ஒருமுறையாவது ஒரு விசிட் அடித்து நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கத் தூண்டப்படுகிறோம். 

4. Algorithmic Filtering

ஃபேஸ்புக்கோ ட்விட்டரோ உள்ளே நுழைந்ததும் வரிசையாக நம் மனசுக்கு ஏற்ற வீடியோக்கள், இணையதள லிங்க்குகள், படங்கள், நண்பர்களின் ஸ்டேட்டஸ்கள் டைம்லைனில் முன்னணியில் எப்படி வருகிறது என யோசித்தது உண்டா? சமூக வலைத்தளங்கள் தொடர்ச்சியாக நம் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளையும் நமக்குத் தெரியாமல் கூர்ந்து கவனிக்கின்றன. நாம் எதை வாசிக்கிறோம், எந்த மாதிரியான விஷயங்களில் அதிக நேரத்தைச் செலவழிக்கிறோம், எந்த மாதிரியான வீடியோக்கள் பார்க்கிறோம், எதைத் தேடுகிறோம் என்பதை எல்லாம் அலசி ஆராய்கின்றன. இந்த முறைக்கு `அல்காரித்மிக் ஃபில்டரிங்' என்று பெயர். இணையதளத்தின் உள்ளே நுழைந்ததும் தொடர்ச்சியாக அதிக நேரம் உங்களைத் தக்கவைக்க நடக்கும் சின்ன சூது இது. 

இவை அல்லாமல் வேறு சில விஷயங்களும் நம்மை சமூக வலைத்தளங்களில் இருந்து தப்பவிடாமல் செய்கின்றன. 

வீடியோ ஆபத்து!

வீடியோ போதையில் சிக்குகிறவர்கள் பெரும்பாலும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்கிறது ஆய்வு. எந்தவித விஷயங்களும் இல்லாமல் தனிமனிதர்கள் நேரடியாகப் பேசுவது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் நம்மை ஈர்க்கக்கூடியவை என்றும், அது பயனுள்ளதோ இல்லையோ, ஆனால் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நாம் விரும்புகிறோம் என்றும் கண்டறிந்துள்ளனர். ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை வீடியோக்கள் பத்து மடங்கு அதிக கமென்ட்களையும் லைக்குகளையும் பெறுகின்றன என்கிறது ஃபேஸ்புக் தரப்பு. ``வீடியோதான் இணையத்தின் எதிர்காலம். ஐந்து ஆண்டுகளை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்தால், நாம் ஃபேஸ்புக்கில் பார்க்கும் விஷயங்களில் 90 சதவிகிதம் வீடியோவாக மாறிவிடும். இப்போதே அந்த மாற்றம் வர ஆரம்பித்துவிட்டது'' என்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க். இந்தியாவில் இந்த வீடியோ சுழலில் அதிகம் சிக்கியிருப்பது 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள். இந்தியாவின் டாப் டென் வீடியோ சேனல்களில் மூன்றாம் இடம் பிடித்த சேனல் `CHUCHU TV '. இது முழுக்க குழந்தைகளுக்கான வீடியோக்கள் அடங்கிய சேனல். 

519 கோடி ஹிட்ஸ் வாங்கிய அதிபயங்கர சேனல். ஒவ்வொரு நாளும் இந்த சேனலுக்கு 7,000 பேருக்கும் அதிகமான குட்டிப்பயல்கள் இணைகிறார்கள். குழந்தைகள் சேனல்களின் வெற்றிக்குக் காரணம் நாம்தான். குழந்தைகளைச் சாப்பிடவைக்க குறும்பு பண்ணாமல் உட்காரவைக்க யூடியூபுக்குப் பழக்குகிறோம். இடைவிடாமல் ஓடும் இந்த வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றி நாம் கருத்தில்கொள்வதே இல்லை. 

புகைப்பட போதை!

நம் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் நார்ஸிசக் கூறுகள் எப்போதுமே இருக்கின்றன. `அதென்ன நார்ஸிசக் கூறு?' தன்னைத்தானே சிலாகித்துக்கொள்ளும் குணம். அதற்கு சரியான தீனி போடக்கூடிய இடமாக இருப்பவை சமூக வலைத்தளங்கள். புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இருப்பதிலேயே நார்ஸிச மனநிலையைத் தூண்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாளும் 200 கோடி புகைப்படங்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிரப்படுகின்றன என்ற தகவலே இதற்கு சாட்சி.

`நம் புகைப்படங்களுக்குக் கிடைக்கும் லைக்குகள் நம் அடையாளத்துக்கும் அழகுக்கும் கிடைக்கும் ஒன்றாகக் கருதுகிறோம். இதனால் நம் இணைய அடையாளங்களில் புதிதாக சில பாசிட்டிவ் விஷயங்களைச் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் நமக்கு இன்னும் அதிகமாக மரியாதை கொடுப்பார்கள்; கௌரவிப்பார்கள் என நம்புகிறோம். அது இன்னும் இன்னும் புதிய விஷயங்களோடு புகைப்படங்களை வெளியிட நம்மைத் தூண்டுகிறது. நாம் அந்தத் தருணத்தில் இருப்பதைவிடவும், நம் நோக்கமும் கவனமும் இந்தத் தருணத்தை எப்படி உபயோகித்து நம் முகத்தை, உடலை காட்சிவடிவமாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்பதிலேயே இருக்கிறது' என `சைக்காலஜி ஆஃப் டிஜிட்டல் ஏஜ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்காவின் மனோதத்துவப் பேராசிரியர் சூலர். இப்போது புரிகிறதா, ஏன் ஃபேஸ்புக் தளம் இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது என்று! 

இன்று அமெரிக்காவில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 53 சதவிகிதம் பேர் இன்ஸ்டாகிராமில்தான் பழியாகக் கிடக்கிறார்கள். `மில்லெனியல்ஸ்' எனப்படும் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு இன்ஸ்டாகிராம்தான் இனிக்கிறது. காரணம், இப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்வதுதான் ட்ரெண்ட். 

டோபோமைன் எமன்

எலி ஒன்றை கூண்டில் அடைத்து, அதற்கு முன்னால் On-OFF சுவிட்ச் ஒன்று வைக்கப்பட்டது. எலி அந்த சுவிட்சைத் தொட்டு ஆன் பண்ணினால், அதன் மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் தூண்டப்படும். சுவிட்சைப் போடும்போது எல்லாம் அதற்கு டோபோமைன் உதவியால் உள்ளுக்குள் பேரானந்தம் உண்டாகும். ஒருகட்டத்தில் ஒவ்வொரு நாளும் விடாமல் அந்த டோபோமைன் பட்டனைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. விடாமல்... மணிக்கணக்கில், சோறு, தண்ணீர் இல்லாமல் எந்நேரமும் அது டொக்கு டொக்கு எனத் தட்டிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் முழுமையாக அந்த பட்டனுக்கே அடிமையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் வழி நமக்குள் நடப்பது இது மாதிரியான ஒரு மாற்றம்தான்.

டோபோமைன் என்பது, நம்முடைய மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி இந்த டோபோமைன். இந்த வேதிப்பொருள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது என்பதுதான் இதுவரை நம்முடைய புரிதலாக இருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் டோபோமைன் `தேடல் குணத்தை' (Seeking Behaviour)உருவாக்கவல்லது எனக் கண்டறிந்துள்ளனர். இதன் தூண்டுதலால்தான் நாம் ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்பட ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான பண்பாக இருக்கிறது. கற்றுக்கொள்வதிலும் பிழைத்திருப்பதிலும் இது அவசியமானது. ஆனால், இந்தத் தூண்டுதல் என்பது உடல் தேவைகளான உணவு மற்றும் செக்ஸ் என்பதைத் தாண்டி நவீன யுகத்தில் தகவல்களைத் தேடுவதாக முன்னேறியுள்ளது. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தகவல்களைக் கண்டடைவது என முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தேடல் குணத்தை சமூக வலைத்தளங்கள் இலகுவாக்கிவிட்டன. 

டோபோமைன் எப்போதும் ஒரே ஷாட்டில் அமைதியாவது இல்லை. அது எப்போதும் இன்னும் இன்னும் இன்னும் என நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் கூகுளிலும் விக்கிபீடியாவிலும் ஃபேஸ்புக்கிலும் எதையாவது தேடப்போய் அல்லது பார்க்கப்போய் என்னென்னவோ தேடிப் படித்து லைக் பண்ணி மணிக்கணக்கில் மெய்மறந்து அந்த டோபோமைன் சுழலில் சிக்கிக்கொள்வது நேர்கிறது.

தேடல் மட்டும் அல்ல, எதிர்பார்ப்பு மூலமாகவும் டோபோமைன் தூண்டப்படுகிறது என்கிறார்கள்.  ஒரு பரிசு  கிடைப்பதைவிடவும் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், அந்தப் பரிசு என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்ஸும் மூளையில் அதிக டோபோமைன் தூண்டுதலை ஏற்படுத்தக்கூடியது. இதை சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு நொடியும் நமக்கு அளிக்கின்றன. ``இப்படி தொடர்ச்சியான டோபோமைன் தூண்டுதல்களுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒருகட்டத்தில் டோபோமைன் வேதிப்பொருள் தீரும்போதோ அல்லது குறையும்போதே நாம் கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளார்ந்த தனிமைக்கும் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு'' என்கிறார் சூசன் வெய்ன்செங்க் என்கிற உளவியல் நிபுணர்.

எப்படி மீள்வது?

சோஷியல் மீடியா அடிக்‌ஷன் என்பது, இருக்கிறது என்பதை முதலில் நம்ப வேண்டும் (இருப்பதிலேயே அதுதான் சிரமமான காரியம்!). அது நம்முடைய வாழ்க்கையில், தொழிலில், பணியில், கல்வியில் பெரிய பாதிப்புகளையும் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அதில் இருந்து விலகி தள்ளி நின்று அது என்ன மாதிரியான பாதிப்புகளை நமக்குள் உருவாக்குகிறது என்பதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு வழி இல்லை. ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் சமூக வலைத்தளங்களில் வீணடிக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு, அந்த நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே ஒருமுறைதான் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது என சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம். 

வெளிநாடுகளில் `டிஜிட்டல் ஃபாஸ்டிங்' எனப்படும் இ-விரதங்கள்தான் இப்போது ட்ரெண்ட். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்கு விரதம் இருந்து அன்றைய நாள் மட்டும் எந்தவித சமூக வலைத் தளங்களையும் நான் கைதொட மாட்டேன் என உறுதிபூண்டு தவ வாழ்க்கை வாழலாம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஃபேஸ்புக் பக்கமே வர மாட்டேன் என முடிவெடுத்து ஓடிவிடலாம். 
கொஞ்ச கொஞ்சமாக நிகோட்டினில் இருந்து வெளியேறுவதன் மூலம் சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதைப்போலவே. முடிந்தவரை செல்போனில் சமூக வலைத்தளங்களைப் பின்தொடர்வதைத் தவிர்த்தாலே பல பாதிப்பு களைத் தவிர்த்துவிட முடியும் அல்லது 2ஜி மாதிரியான குறைந்த வேகம் உள்ள இணைய வசதிகளை செல்போனில் பயன்படுத்துவது பலன் தரும்.

நண்பர்களோடு உரையாட வேண்டுமா, நேரடியாகச் சந்தியுங்கள். பணியில் சந்தேகமா, சீனியர்களிடம் உதவி கேளுங்கள். அங்கும் கிடைக்கவில்லை என்றால், மட்டும் கூகுளை நாடுங்கள். நூல்கள் படிக்கும்போதும், சினிமா பார்க்கும்போதும் மொபைலை சைலன்ட்டில் வையுங்கள். வெளியூர் பயணமா, மொபைலில் படம் எடுக்காமல் டிஜிட்டல் கேமராவில் படம் எடுங்கள். செல்ஃபி எடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை எந்த இடத்தில் இருந்தும் எதையும் செய்வதற்கான ஆற்றலை வழங்கியிருக்கிறது. ஆனால், அது நம்முடைய ஆற்றலை உறிஞ்சும் வேலையையும் சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தால் நமக்குக் கிடைத்திருக்கிற சாதகமான அம்சங்களை நாம் வியந்து கொண்டாடு கிறோம். நாம் எந்த இடத்தில் இருந்தும் எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்று விட்டோம். ஆனால், கூட்டத்திலும் தனித்திருக்கப் பழகிவருகிறோம். இந்தத் தகவல்தொடர்பே நிரந்தரமான தனிமைக்குள் நம்மை ஆட்படுத்திவைத்திருகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேற முன்னேற... நம்முடைய உணர்வுகளில் நாம் சறுக்க ஆரம்பித்திருக்கிறோம். அதை முதலில் உணரவேண்டும்.


`ஹிப் ஹாப்' ஆதி (இசையமைப்பாளர்): ``சோஷியல் மீடியாங்கிறது தீக்குச்சி மாதிரிதான். தீக்குச்சியால வீட்டைக் கொளுத்தவும் செய்யலாம்...  நான் `ஹிப் ஹாப்' தமிழாவா வெளியில தெரியறதுக்கு  உதவியது சோஷியல் மீடியாதான். அதே நேரம் போட்டோ ஷேர் போன்ற விஷயங்களால் தற்கொலைகளைத் தூண்டுறதும் இதே சோஷியல் மீடியாதான்.''

ஷான் கருப்பசாமி (கவிஞர்): ``நிறையத் திறமைகள் இருக்கிறவங்க மக்களுக்கு வெளியில தெரியும் வகையிலான ஒரு பிளாட்ஃபார்மா சோஷியல் மீடியாக்கள் இருக்கு. ஆனால், சோஷியல் மீடியா பத்தி முழுசா தெரியாம உள்ளே வந்து யார் யாரையோ ஃபாலோ பண்றது, சாட் பண்றது சில நேரங்களில் தப்பா போய் முடியுது. அதனால சோஷியல் மீடியாவை எப்படி யூஸ் பண்ணணும்னு முதலில் எல்லோரும் தெரிஞ்சுக்கிறது நல்லது.''


அராத்து (எழுத்தாளர்): ``நான் சோஷியல் மீடியாவில் அடிக்ட்டா இருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனா, அடிக்கடி யோசிப்பேன்... `இதுக்கு இவ்ளோ டைம் செலவழிக்கவேண்டியிருக்கே’னு. நான் ஒரு வாரம் போஸ்ட் போடலைன்னாலே தேட ஆரம்பிச்சுடுறாங்க; தொலைந்துபோன ஒரு மனிதனா நினைச்சுடுறாங்க. அதனாலேயே எவ்ளோ பிரச்னைகள் இருந்தாலும் கடமைக்காக ஒரு போஸ்ட் போடவேண்டியிருக்கு. ஆனா, நான் மொபைலில் ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டால் பண்ணிவைக்கலை. என் நண்பர்கள் நிறையப் பேர் ஒரு டிஸ்கஷன் நடக்கிறப்போகூட மொபைலில் சாட் பண்ணிட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.''

ஆர்.ஜே பாலாஜி (பண்பலைத் தொகுப்பாளர்): ``இதை அடிக்‌ஷனா நான் நினைக்கலை. ஆனா, என் வாழ்க்கையில இது ஒரு நியூசென்ஸா ஆகிடுச்சோனு ஃபீல் பண்றேன். ஒரு விஷயத்துக்குப் போராடுறதுனா நேரடியாப் போய் அதைச் செய்யணும். ரியல் லைஃப்ல கோபத்தைக் காட்ட முடியாம, உதவி செய்ய முடியாம சோஷியல் மீடியாவில் மட்டும் போஸ்ட் போடுறது என்னைப் பொறுத்தவரையில் நியூசென்ஸ்தான்.''

லீனா மணிமேகலை (கவிஞர்): ``சோஷியல் மீடியா, எனக்கு ஒரு அடிஷனல் மீடியம் அவ்ளோதான். இது இல்லைன்னா அடுத்து அதுக்கு வழிகாட்ட வேற  ஒரு  விஷயம் கிடைக்கும். தொழில்நுட்பங்கள் நாம் சார்ந்த விஷயங்களை மத்தவங்களுக்கு எடுத்துப் போற வாகனம். இது இல்லாட்டி இன்னொண்ணு அவ்ளோதான்.''
வித்யா விஜயராகவன் (மாணவி): ``சோஷியல் மீடியா இல்லாட்டியும் நான் ஜாலியா ஊர் சுத்திட்டுத்தான் இருப்பேன். ஃப்ரெண்ட்ஸ்கூட வெளியில போவேன். புக்ஸ் படிப்பேன். அங்கே பேசுறதை இங்கே ஃப்ரெண்ட்ஸ்கூடப் பேசுவேன்.''

No comments:

Post a Comment