Tuesday, October 25, 2016


எப்பதான் செய்ய போறோம் 

சில விஷயங்களை  உடனே செய்துவிட சபதம் எடுப்போம். ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், அவை எல்லாம் உடனே செய்யவேண்டிய அவசியமான வேலைகள். அப்படித் தள்ளிப்போடும் 20 விஷயங்கள்.

ஜிம்முக்குப் போய் ஜம்முனு ஆக நினைப்போம். `வருஷ ஃபீஸ் பத்தாயிரம்’ எனச் சொன்னதும் உடனே அதைக் கட்டி மெம்பரும் ஆகிவிடுவோம். ஒரு வாரம் போவோம்... அதற்குப் பிறகு அந்தப் பக்கம் ஒதுங்க மாட்டோம்; மறந்தேபோவோம்!

செய்கிற செலவுகளை எல்லாம் குறிப்பு எடுத்துவைத்துக் கொண்டு, சிக்கனமாகச் செலவழித்து, காசுசேர்க்க நினைப்போம்; அதற்காக ஆண்ட்ராய்டில் ஒரு ஆப்கூட இன்ஸ்டால் பண்ணுவோம். ஆனால், அப்பேட் மட்டும் பண்ண மாட்டோம்!

மாதந்தோறும் சில ஆயிரம் ரூபாய்களை மியூச்சுவல் ஃபண்டில் அல்லது வேறு சில வழிகளில் சேமிக்க நினைப்போம். அதைப் பற்றி எல்லா நூல்களையும் படிப்போம். ஆனால், சேமிக்க மாட்டோம்ல!


நிறைய வாசிக்க நினைத்து, ஒவ்வொரு புக் ஃபேரிலும் சல்லிசாகக் கிடைக்கிற புத்தகங்களை, கெத்துக்காக வாங்கிக் குவிப்போம். ஆனால், அதை எல்லாம் அடுத்த புக் ஃபேர் வரும் வரை புரட்டிக்கூடப் பார்க்க மாட்டோம்!

கல்லூரி, பள்ளித் தோழர்கள் மீது உயிரையே வைத்திருப்போம். அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேச நினைப்போம். ஆனால், ஏதாவது உதவி தேவைப்படும்போதுதான் அவர்களை அழைத்துப் பேசுவோம்!

இயற்கை உணவுகள் சாப்பிடுவது, ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் பழங்கள் உண்பது, ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்கு மாறுவது... எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து வைத்திருப்போம் .ஆனால், மாறுவதற்கான சந்தர்ப்பம் மட்டும் அமையாது!

நண்பரிடமோ, உறவினரிடமோ ஏதோ சண்டைக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருப்போம். அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்கக்கூடத் தோன்றும். ஆனால், அதற்கு நல்ல நாள் அமையாது. எதற்காக சண்டை என்பதே மறந்தாலும் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காது!

பல்லில், இடுப்பில், முதுகில் மூட்டுக்களில்... என எங்கேயாவது சின்னதாக ஒரு வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால், பண்ண மாட்டோம். கடைசியில் `கிட்னியில் கல்’ என டெஸ்ட் ரிப்போர்ட் வரும்போது `ஓஓஓஓ’ என அழுவோம்!

கார் அல்லது பைக்குக்கு இன்ஷூரன்ஸ் முடிந்துபோய் இருக்கும். நாளைக்கே பண்ணிவிட வேண்டும் என நினைத்திருப்போம். ஆனால், கார் ரிப்பேர் ஆகியோ, வெள்ளத்தில் சிக்கியோ, வீணாய்ப்போன பிறகுதான்  `ச்சே அப்பயே பண்ணிருக்கலாம்’ என உரைக்கும்!

கார் அல்லது பைக்கில் ஏதோ ஒரு பாகத்தில் சின்னதாக ஏதாவது ஒரு குறை இருக்கும். அது தொடர்ந்து சத்தம் போட்டு அறிவுறுத்தும். அதைக் கொண்டுபோய் சரிபண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்போம். ஆனால், காட்ட மாட்டோம். கடைசியில் `மொத்தமாக இன்ஜினே போச்சு’ என்று மெக்கானிக் சொல்லும்போது மெக்கானிக் மேல் கடுப்பாவோம்!

வீட்டை பளிச் என மாற்ற வேண்டும். ஃபேன் தூசியாக இருக்கிறது, ஒட்டடை ஜாஸ்தியாக இருக்கிறது, பாத்ரூம் மஞ்சள் கறையாக ஜொலிக்கிறது, இண்டுஇடுக்கு விடாமல் சுத்தம் பண்ண வேண்டும் எனப் போன நூற்றாண்டில் திட்டம் போட்டிருப்போம். பத்து ஆயுதபூஜைகள் தாண்டிய பிறகும் அதைச் செய்யவே மாட்டோம்!

வீட்டில் இருக்கிற  முதியவர்களுக்கு சின்னச் சின்ன ஆசைகள் எப்போதும் உண்டு. நாம் அவர்களோடு பேச வேண்டும், அவர்களிடம் அறிவுரைகள் கேட்க வேண்டும், அவர்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல வேண்டும்... என விரும்புவார்கள். அந்த ஆசைகள் நமக்கும் தெரியும். நாமும் அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்யவே நினைப்போம். ஆனால், அதைச் செய்வதற்கான நேரம்தான் நம்மிடம் இருக்காது!

மாஸ்டர் ஹெல்த் செக்கப், மைனர் ஹெல்த் செக்அப் என விதவிதமாக கத்தைக் கத்தையாக மருத்துவமனைகளில் விசாரித்துவைத்திருப்போம். நாளைக்குப் பண்ணிடுவோம், நாளன்னிக்குப் பண்ணிடுவோம் எனத் தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு...

குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும், அவர்களுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என ஆசைப்படுவோம். நம் குழந்தை வளர்ந்து, திருமணமாகி, குழந்தையே பெற்றுக்கொண்டுவிடும். ஆனால், நாம் மொபைலை நோண்டிக்கொண்டே சீரியல் பார்த்துக்கொண்டிருப்போம்!

அடுத்தமாதமே  கடன் எல்லாவற்றையும் கொஞ்ச கொஞ்சமாக அடைத்துவிட்டு, ஜீரோ கடனாளி ஆகி, ஹேப்பி வாழ்க்கை வாழ ஆசைப்படுவோம். ஆனால், ஒரு கடன் முடிக்கும் முன்பே இன்னொரு கடனை வாங்கி டாப்அப் பண்ணி போய்க்கொண்டே இருப்போம்!

வீட்டில் ஏதாவது வொயர் பிய்ந்து தொங்கும். அதைச் சரிசெய்ய இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், அதைச் செய்யமாட்டோம். மழை வந்து யாருக்காவது அல்லது நமக்கே ஷாக் அடித்து கத்தி கூப்பாடு போட்டபின்புதான் கட்டிங் பிளேயரோடு களமாடக் கிளம்புவோம்!

Friday, October 14, 2016

முதல் உதவி 
முதல் உதவி செய்யும்போது செய்யக் கூடாத  ஏழு விஷயங்கள்...
கையில் தீக்காயம் பட்டுவிட்டால், உடனே ஓடிப்போய் பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் வாங்கி வைத்த தீக்காய க்ரீமைத் தடவுவோம். அப்படிச் செய்யக் கூடாது. தீக்காயம்பட்ட இடத்தை, முதலில் தண்ணீரில் 15 நிமிடங்களாவது வைக்கவேண்டும். இது தோலில்பட்ட அதிக உஷ்ணத்தைக் குறைக்கும். தீக்காயம் பட்டதும் மருந்து எதையும் தேய்க்கக் கூடாது. இப்படித் தேய்ப்பது உஷ்ணத்தை அப்படியே தேக்கிவைத்துவிடும். எந்த மருந்தாக இருந்தாலும் 20 நிமிடங்களுக்குப் பிறகுதான். (எக்ஸ்பயரி ஆனதா என்பதை கவனிக்கவேண்டும்.)
லிப்பு வந்தவரை, ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இரும்புப் பொருட்களை கையில் திணிக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர் தன்னையே காயப்படுத்திக்கொள்ள நேரும். நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ, வேறு திரவமோ தரக் கூடாது. அவை மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.வலிப்பு வரும்போது தலை தரையில் இடித்துக்கொள்ளாமல் இருக்க, தலையை மடியிலோ அல்லது தலையணையிலோ வைக்கலாம்.
ரு விபத்து நடந்து காருக்குள் அல்லது பைக்கின் கீழ் யாராவது சிக்கிக்கொண்டால், உடனே பாய்ந்து சென்று அவரை வெளியே இழுத்துப்போட்டுக் காப்பாற்ற முயற்சி செய்வோம். அப்படிச் செய்வது சமயங்களில் ஆபத்தாகிவிடும். முதுகு எலும்புகளிலோ, முக்கிய உறுப்புகளிலோ காயம்பட்டிருந்தால், இப்படி இழுக்கும்போது நிலைமை மோசமாகிவிடும். வண்டி, பற்றி எரிகிறது அல்லது பள்ளத்தில் விழப்போகிறது... வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபரை இழுத்துப்போட்டுக் காப்பாற்றலாம் தவறு இல்லை. அவசரம் இல்லையென்றால் முதலில் செய்யவேண்டியது, ஆம்புலன்ஸை அழைப்பது; வாகனத்தின் இன்ஜினை ஆஃப் செய்வது, பேட்டரிக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டிப்பது, ரத்தம் பாய்ந்துகொண்டிருந்தால், அதைத் தடுப்பது, விபத்துக்கு உள்ளானவரைச் சாந்தப்படுத்துவது.
காய்ச்சலால் உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தால், குளிரில் உடல் நடுங்கும். உடனே நோயாளியின் மீது நான்கு போர்வைகளைப் போத்தி ஒரே அமுக்காக அமுக்குவோம். அப்படிச் செய்வது மிகவும் தவறு. அது ஏற்கெனவே கொதிக்கும் உடலின் வெப்பநிலையை மேலும் அதிகமாக்கி, உடலை இன்னும் மோசமாக மாற்றும். காய்ச்சலால் உடல் கொதித்தால், வெப்பத்தைக் குறைக்கவே முயற்சி செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
திர்பாராத சந்தர்ப்பங்களில் முன்னால் சென்று உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே அவசியம் இருக்கவேண்டிய குணம். ஆனால், உதவுவதற்கு முன்னால் நாம் செய்யும் காரியங்களால் நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதையும், விபத்தில் நாமும் சிக்கிவிடக் கூடாது என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். தண்ணீரில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனே பாய்வது நல்லதுதான். உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு முடிவு எடுப்பதே புத்திசாலித்தனம். மின்சாரத் தாக்குதலுக்குள்ளான நபரின் கையைப் பிடித்து இழுத்தால், நமக்கும் ஷாக் அடிக்கும் என்பதை உணர்ந்து சுவிட்ச்சை அணைப்பதே விவேகம்.
ஹார்ட் அட்டாக் வந்து யாராவது சரிந்துவிட்டால், உடனே வாயோடு வாய் வைத்து ஊதி, அவருக்கு உதவ முன்வருவோம். நல்ல எண்ணம்தான் என்றாலும், அது அவசியம் இல்லை. சி.பி.ஆர் cardiopulmonary resuscitation முதல் உதவி சிகிச்சையில், கைகளால் மட்டுமே உதவ அறிவுறுத்துகிறது. மயக்கம் அடைந்த நபரின் நெஞ்சுக்கு மத்தியில் கைகளை வைத்து வேகமாக விட்டுவிட்டு அழுத்த வேண்டும்.
கைகளிலோ, கால்களிலோ அடிப்பட்டு ரத்தம் வழிந்தால், உடனே ஒரு துணியைக் கிழித்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும் வகையில் காயம்பட்ட இடத்துக்கு சற்று மேலே டைட்டாகக் கட்டிவிடுவது நம் பழைய சினிமா பாணி. ஆனால், அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது. அடிபட்ட இடத்தை நீரால் கழுவி, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தரமால் கட்டுப்போடவேண்டும். முடிந்தால், கைகளை அல்லது கால்களை உயர்த்திவைக்கலாம்

Monday, October 10, 2016

சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுத் தினம் இன்று.

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.
1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.
கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.
‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.
‘சே’வின் கடைசி நிமிடங்கள்!
1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரகளுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.
குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.
‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.
‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.
“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.

எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”
“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த