எப்பதான் செய்ய போறோம்
சில விஷயங்களை உடனே செய்துவிட சபதம் எடுப்போம். ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், அவை எல்லாம் உடனே செய்யவேண்டிய அவசியமான வேலைகள். அப்படித் தள்ளிப்போடும் 20 விஷயங்கள்.
ஜிம்முக்குப் போய் ஜம்முனு ஆக நினைப்போம். `வருஷ ஃபீஸ் பத்தாயிரம்’ எனச் சொன்னதும் உடனே அதைக் கட்டி மெம்பரும் ஆகிவிடுவோம். ஒரு வாரம் போவோம்... அதற்குப் பிறகு அந்தப் பக்கம் ஒதுங்க மாட்டோம்; மறந்தேபோவோம்!
செய்கிற செலவுகளை எல்லாம் குறிப்பு எடுத்துவைத்துக் கொண்டு, சிக்கனமாகச் செலவழித்து, காசுசேர்க்க நினைப்போம்; அதற்காக ஆண்ட்ராய்டில் ஒரு ஆப்கூட இன்ஸ்டால் பண்ணுவோம். ஆனால், அப்பேட் மட்டும் பண்ண மாட்டோம்!
மாதந்தோறும் சில ஆயிரம் ரூபாய்களை மியூச்சுவல் ஃபண்டில் அல்லது வேறு சில வழிகளில் சேமிக்க நினைப்போம். அதைப் பற்றி எல்லா நூல்களையும் படிப்போம். ஆனால், சேமிக்க மாட்டோம்ல!
நிறைய வாசிக்க நினைத்து, ஒவ்வொரு புக் ஃபேரிலும் சல்லிசாகக் கிடைக்கிற புத்தகங்களை, கெத்துக்காக வாங்கிக் குவிப்போம். ஆனால், அதை எல்லாம் அடுத்த புக் ஃபேர் வரும் வரை புரட்டிக்கூடப் பார்க்க மாட்டோம்!
கல்லூரி, பள்ளித் தோழர்கள் மீது உயிரையே வைத்திருப்போம். அவர்களை அடிக்கடி சந்தித்துப் பேச நினைப்போம். ஆனால், ஏதாவது உதவி தேவைப்படும்போதுதான் அவர்களை அழைத்துப் பேசுவோம்!
இயற்கை உணவுகள் சாப்பிடுவது, ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் பழங்கள் உண்பது, ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்கு மாறுவது... எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து வைத்திருப்போம் .ஆனால், மாறுவதற்கான சந்தர்ப்பம் மட்டும் அமையாது!
நண்பரிடமோ, உறவினரிடமோ ஏதோ சண்டைக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருப்போம். அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்கக்கூடத் தோன்றும். ஆனால், அதற்கு நல்ல நாள் அமையாது. எதற்காக சண்டை என்பதே மறந்தாலும் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காது!
பல்லில், இடுப்பில், முதுகில் மூட்டுக்களில்... என எங்கேயாவது சின்னதாக ஒரு வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால், பண்ண மாட்டோம். கடைசியில் `கிட்னியில் கல்’ என டெஸ்ட் ரிப்போர்ட் வரும்போது `ஓஓஓஓ’ என அழுவோம்!
கார் அல்லது பைக்குக்கு இன்ஷூரன்ஸ் முடிந்துபோய் இருக்கும். நாளைக்கே பண்ணிவிட வேண்டும் என நினைத்திருப்போம். ஆனால், கார் ரிப்பேர் ஆகியோ, வெள்ளத்தில் சிக்கியோ, வீணாய்ப்போன பிறகுதான் `ச்சே அப்பயே பண்ணிருக்கலாம்’ என உரைக்கும்!
கார் அல்லது பைக்கில் ஏதோ ஒரு பாகத்தில் சின்னதாக ஏதாவது ஒரு குறை இருக்கும். அது தொடர்ந்து சத்தம் போட்டு அறிவுறுத்தும். அதைக் கொண்டுபோய் சரிபண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்போம். ஆனால், காட்ட மாட்டோம். கடைசியில் `மொத்தமாக இன்ஜினே போச்சு’ என்று மெக்கானிக் சொல்லும்போது மெக்கானிக் மேல் கடுப்பாவோம்!
வீட்டை பளிச் என மாற்ற வேண்டும். ஃபேன் தூசியாக இருக்கிறது, ஒட்டடை ஜாஸ்தியாக இருக்கிறது, பாத்ரூம் மஞ்சள் கறையாக ஜொலிக்கிறது, இண்டுஇடுக்கு விடாமல் சுத்தம் பண்ண வேண்டும் எனப் போன நூற்றாண்டில் திட்டம் போட்டிருப்போம். பத்து ஆயுதபூஜைகள் தாண்டிய பிறகும் அதைச் செய்யவே மாட்டோம்!
வீட்டில் இருக்கிற முதியவர்களுக்கு சின்னச் சின்ன ஆசைகள் எப்போதும் உண்டு. நாம் அவர்களோடு பேச வேண்டும், அவர்களிடம் அறிவுரைகள் கேட்க வேண்டும், அவர்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல வேண்டும்... என விரும்புவார்கள். அந்த ஆசைகள் நமக்கும் தெரியும். நாமும் அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்யவே நினைப்போம். ஆனால், அதைச் செய்வதற்கான நேரம்தான் நம்மிடம் இருக்காது!
மாஸ்டர் ஹெல்த் செக்கப், மைனர் ஹெல்த் செக்அப் என விதவிதமாக கத்தைக் கத்தையாக மருத்துவமனைகளில் விசாரித்துவைத்திருப்போம். நாளைக்குப் பண்ணிடுவோம், நாளன்னிக்குப் பண்ணிடுவோம் எனத் தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு...
குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும், அவர்களுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என ஆசைப்படுவோம். நம் குழந்தை வளர்ந்து, திருமணமாகி, குழந்தையே பெற்றுக்கொண்டுவிடும். ஆனால், நாம் மொபைலை நோண்டிக்கொண்டே சீரியல் பார்த்துக்கொண்டிருப்போம்!
அடுத்தமாதமே கடன் எல்லாவற்றையும் கொஞ்ச கொஞ்சமாக அடைத்துவிட்டு, ஜீரோ கடனாளி ஆகி, ஹேப்பி வாழ்க்கை வாழ ஆசைப்படுவோம். ஆனால், ஒரு கடன் முடிக்கும் முன்பே இன்னொரு கடனை வாங்கி டாப்அப் பண்ணி போய்க்கொண்டே இருப்போம்!
வீட்டில் ஏதாவது வொயர் பிய்ந்து தொங்கும். அதைச் சரிசெய்ய இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், அதைச் செய்யமாட்டோம். மழை வந்து யாருக்காவது அல்லது நமக்கே ஷாக் அடித்து கத்தி கூப்பாடு போட்டபின்புதான் கட்டிங் பிளேயரோடு களமாடக் கிளம்புவோம்!
உண்மை,இந்த பொருளாதார சீழ் பிடித்த சமூகம் நம் சந்தோசங்களையெல்லாம் தின்று செரித்து விடுகிறது????
ReplyDelete