முதல் உதவி
முதல் உதவி செய்யும்போது செய்யக் கூடாத ஏழு விஷயங்கள்...
கையில் தீக்காயம் பட்டுவிட்டால், உடனே ஓடிப்போய் பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் வாங்கி வைத்த தீக்காய க்ரீமைத் தடவுவோம். அப்படிச் செய்யக் கூடாது. தீக்காயம்பட்ட இடத்தை, முதலில் தண்ணீரில் 15 நிமிடங்களாவது வைக்கவேண்டும். இது தோலில்பட்ட அதிக உஷ்ணத்தைக் குறைக்கும். தீக்காயம் பட்டதும் மருந்து எதையும் தேய்க்கக் கூடாது. இப்படித் தேய்ப்பது உஷ்ணத்தை அப்படியே தேக்கிவைத்துவிடும். எந்த மருந்தாக இருந்தாலும் 20 நிமிடங்களுக்குப் பிறகுதான். (எக்ஸ்பயரி ஆனதா என்பதை கவனிக்கவேண்டும்.)
வலிப்பு வந்தவரை, ஒருபக்கமாகத் திருப்பிப் படுக்கவைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இரும்புப் பொருட்களை கையில் திணிக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர் தன்னையே காயப்படுத்திக்கொள்ள நேரும். நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ, வேறு திரவமோ தரக் கூடாது. அவை மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.வலிப்பு வரும்போது தலை தரையில் இடித்துக்கொள்ளாமல் இருக்க, தலையை மடியிலோ அல்லது தலையணையிலோ வைக்கலாம்.
ஒரு விபத்து நடந்து காருக்குள் அல்லது பைக்கின் கீழ் யாராவது சிக்கிக்கொண்டால், உடனே பாய்ந்து சென்று அவரை வெளியே இழுத்துப்போட்டுக் காப்பாற்ற முயற்சி செய்வோம். அப்படிச் செய்வது சமயங்களில் ஆபத்தாகிவிடும். முதுகு எலும்புகளிலோ, முக்கிய உறுப்புகளிலோ காயம்பட்டிருந்தால், இப்படி இழுக்கும்போது நிலைமை மோசமாகிவிடும். வண்டி, பற்றி எரிகிறது அல்லது பள்ளத்தில் விழப்போகிறது... வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில், பாதிக்கப்பட்ட நபரை இழுத்துப்போட்டுக் காப்பாற்றலாம் தவறு இல்லை. அவசரம் இல்லையென்றால் முதலில் செய்யவேண்டியது, ஆம்புலன்ஸை அழைப்பது; வாகனத்தின் இன்ஜினை ஆஃப் செய்வது, பேட்டரிக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டிப்பது, ரத்தம் பாய்ந்துகொண்டிருந்தால், அதைத் தடுப்பது, விபத்துக்கு உள்ளானவரைச் சாந்தப்படுத்துவது.
காய்ச்சலால் உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தால், குளிரில் உடல் நடுங்கும். உடனே நோயாளியின் மீது நான்கு போர்வைகளைப் போத்தி ஒரே அமுக்காக அமுக்குவோம். அப்படிச் செய்வது மிகவும் தவறு. அது ஏற்கெனவே கொதிக்கும் உடலின் வெப்பநிலையை மேலும் அதிகமாக்கி, உடலை இன்னும் மோசமாக மாற்றும். காய்ச்சலால் உடல் கொதித்தால், வெப்பத்தைக் குறைக்கவே முயற்சி செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
எதிர்பாராத சந்தர்ப்பங்களில் முன்னால் சென்று உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே அவசியம் இருக்கவேண்டிய குணம். ஆனால், உதவுவதற்கு முன்னால் நாம் செய்யும் காரியங்களால் நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதையும், விபத்தில் நாமும் சிக்கிவிடக் கூடாது என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். தண்ணீரில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனே பாய்வது நல்லதுதான். உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு முடிவு எடுப்பதே புத்திசாலித்தனம். மின்சாரத் தாக்குதலுக்குள்ளான நபரின் கையைப் பிடித்து இழுத்தால், நமக்கும் ஷாக் அடிக்கும் என்பதை உணர்ந்து சுவிட்ச்சை அணைப்பதே விவேகம்.
ஹார்ட் அட்டாக் வந்து யாராவது சரிந்துவிட்டால், உடனே வாயோடு வாய் வைத்து ஊதி, அவருக்கு உதவ முன்வருவோம். நல்ல எண்ணம்தான் என்றாலும், அது அவசியம் இல்லை. சி.பி.ஆர் cardiopulmonary resuscitation முதல் உதவி சிகிச்சையில், கைகளால் மட்டுமே உதவ அறிவுறுத்துகிறது. மயக்கம் அடைந்த நபரின் நெஞ்சுக்கு மத்தியில் கைகளை வைத்து வேகமாக விட்டுவிட்டு அழுத்த வேண்டும்.
கைகளிலோ, கால்களிலோ அடிப்பட்டு ரத்தம் வழிந்தால், உடனே ஒரு துணியைக் கிழித்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும் வகையில் காயம்பட்ட இடத்துக்கு சற்று மேலே டைட்டாகக் கட்டிவிடுவது நம் பழைய சினிமா பாணி. ஆனால், அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது. அடிபட்ட இடத்தை நீரால் கழுவி, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தரமால் கட்டுப்போடவேண்டும். முடிந்தால், கைகளை அல்லது கால்களை உயர்த்திவைக்கலாம்
No comments:
Post a Comment