Thursday, March 19, 2020

ஆஸ்விச் வதைக்கூடம்!
5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... 


உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்தே, இனத்தின் மீதான பற்று என்பது ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை அனைத்துக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. பெரும்பாலும், உணவுக்கும் இருப்பிடத்துக்கும் மட்டுமே ஐந்தறிவு உயிரினங்கள், தான் சாராத மற்ற இனத்தின்மீது வன்முறையில் ஈடுபடுகின்றன. ஆறறிவு கொண்ட நாம்தான் ஓர் இனத்தின்மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக வன்முறையில் ஈடுபடுகிறோம். எந்த அளவுக்கு என்றால், அப்படி ஓர் இனம் வாழ்ந்ததற்கான சுவடே இருக்கக் கூடாது எண்ணுமளவுக்கு கொடூரமான இன எதிர்ப்பு.

மரணவாயில், ஆஸ்விச் கூடத்தின் கைதிகள் நுழைவுவாயில்

11-ம் நுற்றாண்டிலிருந்தே யூதர்கள் மீதான தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இங்கிலாந்து, உக்ரைன், ஸ்பெய்ன், ரஷ்யா, அரேபியா என உலகம் முழுவதும் யூத வெறுப்பு என்பது பொதுவான ஒன்றாக இருந்திருக்கிறது. யூத மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறவும் பல யூதர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான யூதர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களை `ஆன்டிசெமிட்' (Antisemit) என்றழைக்கின்றனர். இந்த ஆன்டிசெமிட் கொள்கைக்கு ஹிட்லரும் தப்பவில்லை. யூதர்கள் மீதான வன்மம் மற்றவர்களைவிட ஹிட்லரிடம் கொஞ்சம் வலுவாகவே காணப்பட்டது.

1939 செப்டம்பர் 1, தனக்கு எதிராக படையெடுக்கத் திட்டம் தீட்டுகிறது எனக் கூறி, போலந்தின்மீது தாக்குதல் தொடுக்கிறது ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் படை. 27 நாள்கள் போருக்குப் பிறகு, 1939 செப்டம்பர் 27ல் நாஜி ஜெர்மனியிடம் வீழ்கிறது போலந்து. 1940ல், போலந்தில் உள்ள ஆஸ்விச் (Auschwitz) என்ற இடத்தில் இருந்த போலந்து ராணுவத் தளத்தை, மிகப் பெரிய வதைக்கூடமாக மாற்றுகிறது ஜெர்மனி. இடத்தைச் சுற்றி 40 சதுர கிலோமீட்டர்கள் வரை வாழ்ந்துவந்த மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய வதைமுகாம் தயாராகிறது. ஹிட்லரின் ஆட்சிக்கு எதிராக இருப்பவர்கள், ஊனமுற்றோர், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் மிக முக்கியமாக யூதர்கள், இவர்களை சிறைக் கைதிகளாக வைக்கவும், வதைத்துக்கொல்வதற்குமான கொடூரமான ரசனைமிக்க கூடமாக இருக்கப்போகிறது, அந்த ஆஸ்விச் வதைக்கூடம்.
அந்த இடத்துக்கான வாயில், `மரணவாயில்' என்றழைக்கப்படுகிறது. ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட வாயிலில், ரயிலில் அடைத்துக் கொண்டுவரப்படும் கைதிகளுக்கு இருப்பது இரண்டே தேர்வுதாம். ஒன்று, உடனடியாக இறக்க வேண்டும் அல்லது வாழ்நாள் முழுவதும் வேலை செய்து, வதைபட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மடிய வேண்டும்.

கைதிகளின் செருப்புகள்


ஹங்கேரி, போலந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, கிரீஸ், ஸ்லோவாக்கியா, பெல்ஜியம், இத்தாலி மற்றும் நார்வே ஆகிய நாடுகளிலிருந்து ரயில் மூலம் யூதர்கள் கொத்துக்கொத்தாக ஆஸ்விச் வதைக்கூடத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். 8 நாள்களுக்கு மேலாக நீளும் அந்த ரயில் பயணங்களில், 100 பேர் அடைக்கப்பட்ட பெட்டிகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவது தினமும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே. இயற்கை உபாதைகளுக்கு ஒரு பெட்டி. இவற்றுடன் ஆஸ்விச் வதை முகாம்களுக்கு வரும்போதே பாதி பிணமாக வந்துசேரும். கைதிகளின் (பெரும்பாலும் யூதர்கள் மட்டுமே) வாழ்க்கை வந்திறங்கிய அடுத்த 30 நொடிகளில் தீர்மானிக்கப்படுகிறது. வதைமுகாமின் உள்ளே இருக்கும் பிளாட்பார்மில் ரயில் நின்றவுடன், உள்ளே இருந்து இறங்கும் கைதிகளின் உடலை ஒரு கணம் மேலும் கீழும் பார்க்கும் மருத்துவர் தம்ஸ் அப் அல்லது தம்ஸ் டவுன் காட்ட, அந்தக் கைதி செல்வது வதைக்கூடத்துக்கா இல்லை கொலைக் கூடத்துக்கா என முடிவாகும்.

கூடத்தினுள் இருக்கும் ரயில் நடைமேடை

கொலைக் கூடத்துக்குச் செல்லும் கைதிகள், மொத்தமாக ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு, விஷவாயுவைப் தெளிப்பதன் மூலம் உடனடியாகக் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் மொத்தமாக தகனம் செய்யப்படும். எந்தவொரு கைதியும் தப்பிக்கக் கூடாது என்ற உறுதியோடு கட்டப்பட்ட முகாம் என்பதால், சுற்றிலும் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறி தப்பிக்க முயன்றவர்கள், பாரபட்சம் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எவ்வளவு குளிராக இருந்தாலும் அணிந்துகொள்ள ஒரே ஒரு மெல்லிசான துணி மட்டுமே. உணவு பற்றாக்குறை காரணமாகச் சராசரியாக ஒருவரின் எடையே 25-ல் இருந்து 30 கிலோ மட்டுமே. யூதர்கள் என்றாலே கொல்லப்பட வேண்டியவர்கள்தான் என்ற மனநிலையின் காரணமாக, இரண்டு வயது குழந்தையில் இருந்து 80 வயது முதியவர்கள் வரை எந்தப் பாரபட்சமும் இல்லை.

மின்வேலி

1940-ம் ஆண்டிலிருந்து 1945-ம் ஆண்டு வரை மட்டும் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் 13.5 லட்சம் பேர் இந்த ஆஸ்விச் முகாமில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 1944-ல் சோவியத் படையிடம் தோற்கும் தறுவாயில் ஜெர்மன் இருந்தபோது, ஆஸ்விச் முகாமில் இருந்த 60,000 கைதிகள் உடனடியாக ஜெர்மனியில் உள்ள மற்ற முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
வேறு முகாம்களுக்கு மாற்றும்போது, நடக்க முடியாதவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். சோவியத் படை ஆஸ்விச்சை அடைந்தாலும், அவர்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்காத வண்ணம் அனைத்துக் கோப்புகளும் தீக்கிரையாக்கப்பட்டன. சோவியத் படை ஆஸ்விச்சை அடைந்தபோது, அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம், சவரம் செய்யப்பட்ட டன் கணக்கான முடியும், நடக்கக்கூட வலிமை இல்லாத வெறும் 6000-த்துக்கும் மேற்பட்ட கைதிகளும்தான்.

இந்த வதைக்கூடம், தற்போது அருங்காட்சியகமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வதைக்கூடத்தை நேரில் கண்ட சித்தார்த், இந்தத் தகவல்களையும் தன் அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், "அந்த இடத்தைச் சுற்றி வர்றப்போவே, வெளிப்படுத்த முடியாத ஒரு விதமான சோகம் மனசுல மோதிட்டே இருந்துச்சு. அங்கிருந்து வந்த பிறகும் சில நாள்களுக்கு, இயல்பான வாழ்க்கைக்கு என்னால வர முடியல. ஒரு மனிதனை, இன்னொரு மனிதனால இந்த அளவுக்கு கொடுமை பண்ண முடியுமான்னு ஆச்சர்யம் கலந்த ஓர் எரிச்சல். வலியோட சேர்த்த ஒரு அனுபவத்தைக் கொடுத்தாலும், உலக மக்கள் அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஓர் இடம். முக்கியமா இளைஞர்கள்!" என்றார்.

75 வருடங்கள் கழித்து, இன்றும் இறந்தவர்களின் மரணத்துக்கு சாட்சியாக நிற்கிறது, ஆஸ்விச்.

No comments:

Post a Comment