Wednesday, December 9, 2020

அம்பேத்கரை தமிழ் சினிமா எவ்வாறு கையாள்கிறது
எவ்வாறு கையாளவேண்டும்

நன்றி விகடன் 


அரசியல் சார்பற்றது என்று சொல்லப்பட்டாலும்கூட, தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே அது ஏதோ அரசியலைச் சார்ந்துதான் இருக்கிறது, படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சமயங்களில் பாடலாசிரியர் அரசியல்கூட திரைப்படத்தில்
பிரதிபலிப்பது உண்டு. அந்த 'சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி' என்று காங்கிரஸில் சேருவதற்காக காமராஜரிடம் கண்ணதாசன் பட்டணத்தில் பூதம் பாடல் மூலம் தூதுவிட்டார்.

தமிழ் சினிமாவை முழுக்க அரசியலுணர்வுடன் நன்கு பயன்படுத்தி வெற்றி கண்ட இயக்கம் திராவிட இயக்கம்.

பத்திரிகை, இலக்கியம், நாடகம், திரைப்படம் என எல்லாவற்றையும் தங்கள் கொள்கை பரப்பும் சாதனங்களாகவே கண்ட திரைப்பட இயக்கத்தினர், திரைப்படங்களில் தங்கள் தலைவர்களின் பிம்பங்கள், கொடியின் நிறம், சின்னம் ஆகியவற்றை நேரடியாக குறியீட்டு ரீதியிலாகவோ காட்சிப்படுத்தினர். ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம், திராவிட இயக்க சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர்களின் முன்னோடியான பெரியார் பெரிதாக திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது. காரணம் அவருடன்
 முரண்பட்டு தனிக்கட்சி கண்ட தி.மு.க, அவருக்கோ அவர் கருத்துகளுக்கோ எதிரா சித்திரிக்கவில்லையே தவிர பெரியார் உருவத்தை திரைப்படங்களில் காட்சிப்படுத்தவுமில்லை.

உதயசூரியன், கறுப்பு - சிவப்பு, காஞ்சித்தலைவன் என்று இயன்றவரையில் தி.மு.க அடையாளங்கள் அவர்கள் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என்ற எம்.ஜி.ஆர் பாடும் பாடலில் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்றே ஒலிநாடாவில் இருக்கும்.  தணிக்கை காரணமாகப் படத்தில் 'மேடையில் முழங்கு திரு.வி.கவைப்போல' என்று மாறியிருக்கும்.  பெரியார், அண்ணா இருவருடனும் நட்புடன் இருந்த, காந்தியத்தின் மீதும் ஈர்ப்பும் மரியாதையும் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் 'தீனா மூனா கானா' என்றே பாடல் பாடினார். திராவிட இயக்கச் சினிமாக்களில் பெரியார் அவ்வளவு பெரியதாகவே காட்சிப்படுத்தப்படாதது
போல் அம்பேத்கரும்கூட காட்சிப்படுத்தப்படவில்லை

திராவிட இயக்க சினிமா அலை ஓய்ந்தபிறகு அரசியல் சினிமா குறைந்துவிட்டன. பாரதிராஜா படங்களில் அரசியல் பேசப்பட்டாலும் அவர் எந்த குறிப்பிட்ட இயக்கத்தையும் வலிந்து காட்சிப்படுத்தவில்லை. குறிப்பாக 'வேதம் புதிது' போன்ற நேரடியான நாத்திகமும் பார்ப்பன எதிர்ப்பும் பேசிய படத்திலும் பெரியார் குறித்து எப்படியும் காட்சிப்படுத்தப்படவில்லை. பாரதிராஜாவும் பாலசந்தரும் இருவர் எடுத்த பெண்ணியம் பேசும் படங்களில் அதிகமும் பாரதியாரின் உருவப்படமும் பாடல்வரிகளுமே வலிந்து காட்சிப்படுத்தப்பட்டன.

அவை முழுமையான பெண்ணியப்படங்களா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் தீவிரப் பெண்ணியக் கருத்துகளை முன்வைத்த பெரியாரை ஏன் அவர்கள் காட்சிப்படுத்தவில்லை? என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

பாரதிராஜாவின் சீடரான மணிவண்ணன் மார்க்சியம், பெரியாரியம் அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவரது படங்களில்தான் ஓரளவுக்கு அரசியல் தன்னுணர்வுடன் அம்பேத்கர், பெரியார் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஏன் தமிழ் சினிமாக்களில் அம்பேத்கர் படங்கள் அதிகம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதற்கான பதில் மிக எளிமையானது. தமிழ் சினிமா நாயகர்களாகத் தலித் பாத்திரங்கள் இடம் பெறாதபோது அங்கே அம்பேத்கரும் இடம்பெறவில்லை.
சில சமயங்களில் நாயகர்களின் நண்பர்களாக, சீர்திருத்தப்பட வேண்டியவர்களாக, எளிய வாய்ப்புகளையும் தியாகம் செய்பவர்களாகத் தலித் பாத்திரங்கள் சித்திரிக்கப்படும்போது மூலையில் அம்பேத்கர் படமும் இடம் பெற்ற சாத்தியங்கள் உண்டு. விசுவின் படங்களைப் போலவே குடும்ப நாடகமாக எடுக்கப்பட்ட வி.சேகர் படங்களில் சாதி மறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகியவை பேசப்பட்டதுடன் பெரியார், அம்பேத்கர் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பெரியாரிஸ்டான வேலு பிரபாகரன் இயக்கிய 'கடவுள்' படம் அம்பேத்கரின் பிம்பத்தைக் காட்சிப்படுத்தவில்லையே தவிர, தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையைப் பிரசார பாணியில் சொன்னது.

90களில் கிராமப்படங்கள் என்ற பெயரில் எடுக்கப்பட்ட நாட்டாமை, பண்ணையார் நிலப்பிரபுத்துவப் படங்கள் மிகக் கொடூரமானவை. அவை உழைக்கும் மக்கள் நாட்டாமைக்கும் பண்ணையாருக்கும் குடை பிடிப்பதையோ காலில் விழுவதையோ காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வதையோ எந்தக் கூச்சமும் இல்லாமல் காட்சிப்படுத்தின. இவர்கள் எல்லாம் யார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. விவசாயக்கூலி அல்லது வேலைக்காரப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டாமை பஞ்சாயத்து தீர்ப்பு கூறும் காட்சி இடம்பெறாத கிராமப்படங்களே இல்லை எனலாம். ஒரு பாலியல் வன்புணர்வுக்குக்கூட சட்டப்படியான நீதி கிடைத்ததாகச் சரித்திரமில்லை. இந்தப் படங்கள் எல்லாம் சட்டத்துக்கு வெளியே இயங்கிக்கொண்டிருந்தது விநோதமானதுதான்.

2000க்குப் பிறகுதான் தமிழ் சினிமாவின் முகம் மாறத்தொடங்குகிறது. மேல்பூச்சு முற்போக்கைத் தாண்டி அரசியல் தன்னுணர்வு கொண்ட சினிமாக்கள் உருவாகின. இதற்கான முன்னோடிப்படமாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'ஈ' படத்தைச் சொல்லலாம். ராமநாராயணன் படத்து மசாலா கம்யூனிசமாக இல்லாமல் நேரடியான மார்க்சிய-லெனினிய அரசியலைச் சித்திரித்தது 'ஈ'. கம்யூனிச அடையாளங்களே காட்சிப்படுத்தப்பட்டபோதும் சாதிய ஒடுக்குமுறையையும் வர்க்க அரசியலையும் இணைத்ததன் மூலம் அம்பேத்கரிய அரசியலும் உள்ளார்ந்து இருந்தது.

வெளிப்படையாக அம்பேத்கரைத் திரைப்படங்களில் சித்திரிப்பது, தலித் அரசியலைப் பேசுவது ஆகியவற்றைத் தொடங்கிவைத்தவர் பா.இரஞ்சித். அவரது முதல் படமான 'அட்டக்கத்தி' காதல் - காதல் தோல்வி குறித்து பகடியாகச் சித்திரித்த படம் என்றாலும் சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் அம்பேத்கர் உருவப்படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். இங்கிருந்தே இரஞ்சித்தின் அரசியல் செயற்பாடு தொடங்குகிறது என்று சொல்லலாம். 'மெட்ராஸ்' திரைப்படத்தில் நேரடியாகவே தலித் அடையாளங்களைப் பாத்திரங்களாக மாற்றியதுடன் அம்பேத்கர், குடியரசுக் கட்சி, அயோத்திதாசர், நீல நிறம் என தலித் அரசியல் அடையாளங்களைக் காட்சிப்படுத்தினார்.

வணிகரீதியாகவும் 'மெட்ராஸ்' வெற்றி பெற்றதால் நீலப்புரட்சி பரவலானது. அவரது அடுத்தடுத்த படங்களான 'காலா', 'கபாலி' படங்களிலும் வசனங்கள், பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றில் அம்பேத்கர் சித்திரிக்கப்பட்டார். இரஞ்சித்தைத் தொடர்ந்து அம்பேத்கர், பெரியார், மார்க்ஸை முன்வைக்கும் அரசியல் சினிமாக்கள் தமிழில் அதிகமாக வரத்தொடங்கின. 'விசாரணை'யில் மனித உரிமை அரசியலைப் பேசிய வெற்றிமாறன் 'அசுரன்' படத்தில் பஞ்சமி நிலப்பிரச்னை, தலித் அரசியல் என்று நேரடியாகவே காட்சிப்படுத்தினார்.

ஜீவா' படத்திலேயே கிரிக்கெட்டில் நிலவும் சாதி குறித்து தொட்டுக்காட்டியிருந்த சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' திரைப்படம் முழுக்க முழுக்க சாதி எதிர்ப்புப் படமாக உருவாகியிருந்தது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் படங்களும் அடையாளங்களும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டன. ராஜூமுருகனின் 'ஜோக்கர்' திரைப்படத்திலும் 'ஜிப்ஸி'யிலும் தொடர்ச்சியாக அம்பேத்கர் காட்சிப்படுத்தப்பட்டார். இயக்குநர் பிரம்மாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் ஜோதிகா அம்பேத்கரை முன்னிலைப்படுத்தும் பெரியாரிஸ்ட்டாக நடித்திருந்தார். உடுமலை சங்கர் - கௌசல்யா சம்பவமும் கதையினூடாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 'சூரரைப் போற்று' போன்ற மணிரத்னம் பாணியில் உருவாகியிருந்த சினிமாவிலும்கூட இன்று அம்பேத்கரையும் பெரியாரையும் தவிர்க்க முடியாது என்ற சூழல் உருவாகியிருக்கிறது. மற்ற திரைப்படங்களில் இருந்து விலகி 'மகாமுனி'யில் பௌத்தம் தழுவிய துறவுநிலை அம்பேத்கர் சித்திரிக்கப்பட்டிருந்தார். மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை என்று அம்பேத்கரிய அரசியலை எடுத்துச் செல்லும் பல இயக்குநர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

அம்பேத்கரோ பெரியாரோ மார்க்ஸோ விற்பனைச் சரக்கு என்று உணர்ந்து அவர்களை வெறுமனே பிம்பங்களாகச் சித்திரிக்கும் படங்களும் வரத்தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு 'கறுத்தவன்லாம் கலீஜா' என்ற பாடல் வெளியிட்டபோது அம்பேத்கரின் உருவமும் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்தப் படம் பேசும் கருத்துகளுக்கும் அம்பேத்கருக்கும் எந்தத் தொடர்புமில்லை. விடுதலை அரசியலை முன்வைத்தவர்களைத் தவிர்க்க முடியாத சூழல் உருவாகியிருப்பது என்பது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களை வெறுமனே பிம்பங்களாக மாற்றிவிடக்கூடிய, அவர்கள் கருத்தியலுக்கு எதிரான படங்களில்கூட அவர்களின் பிம்பங்கள் இடம்பெறக்கூடிய அபாயமும் உண்டு என்ற எச்சரிக்கை தேவை.

இரண்டாவதாகத் தலித் பாத்திரங்கள் இடம்பெறக்கூடிய கதையிலோ தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மட்டுமே அம்பேத்கர் என்று சுருக்கிவிடக்கூடாது. அம்பேத்கர் வெறுமனே தாழ்த்தப்பட்ட தலைவர் மட்டும் அல்லர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோல்களின் வழியாக இந்தியச் சமூகத்தை ஆராய்ந்த அறிவின் சின்னம் அவர். தன்னால் முடிந்தளவு சட்டங்களினூடே அறத்தைத் தூவிய அறக்காவலர். ஆழ்ந்த படிப்பாளி. அவர் பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர்கள், பெண்கள் என பலதரப்பு மக்களுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் அதிகம்.

No comments:

Post a Comment