Monday, December 14, 2020



























நான் பாரதி வந்திருக்கிறேன்
பாரதி யார்? என்று
சிலர் கேட்பது என் காதுகளில் விழுகிறது
உங்கள் கேள்வியிலேயே பதிலுண்டு

ஆம்
பாரதியாரென்றும் என்னை அழைப்பர்
இன்னும் விளங்கவில்லையா?

மதம் கொண்ட யானையினால்மரித்துப்போன 
மகா கவி என்று பெயரெடுத்தவன்
எட்டையபுரத்திலிருந்து இன்னொரு முறை
எழுந்து வந்திருக்கிறேன்
 
இப்போது ஏன் மறுவருகை என்று
என்னை நீங்கள் கேட்டால்?

எதிலாவது இச்சமூகம் மாறியிருக்கிறதா
என்று பார்க்கும் ஆசையில்தான் வந்தேன் இப்படி!
 
இக்கணம் வரை இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்

இப்போது யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற
எம் தமிழ் சூழ் நிலம் நிற்கிறேன்

ஓடி விளையாண்ட பாப்பாக்களே
ஓய்வறியா இவ்வுலகத்தில் 
ஓயாது பெற்றோர் கனவு மெய்ப்பிக்க
ஆடி ஆடி ஓடி ஓடி தேடி தேடி
தீர்த்துவைக்கும் கைநூல் பொம்மையாய்
சுற்றி சுற்றி வெற்றி நோக்கியே சுழன்றதால்
அப்பாலகர் இழந்த பால் பருவம் கண்டு

ஓடி விளையாடு உன் வீட்டுக்குள்ளே
என்றா நான் பாடினேன்? என்று கேட்க தோணுது

மாதர் உம்மை உணர்ந்து விட்டீர்
மடமையை மாதரே கொளூத்துகிறீர்
கல்வியில் சிறந்து ஓங்கவே     
கண்டம்விட்டு கண்டம்கூட பாய்கிறீரே
என்றெண்ணும் வேளையில்

பால் வேட்கையில் பாலியல் வேட்டைக்கு
பலியாகும் பால்பருவ மழலைக்கு
பாகுபாடு பார்த்தே பாவம் பார்ப்பது சரியா?

மாட மாளிகை மாதருக்கும்
மண்குடிசை மாதருக்கும் ஓரே மானம்
என்று உணரா மாதரே நீ மாற
மாதரென்றால் எல்லோரும் மாந்தரே என்று
இன்னோர் கவிபாட எனக்கு தோணுது  
 
 
காதலை கொண்டாடிய நான்
காதலியை கண்ணம்மாவாக்கினேன்
கண்ணம்மா காதலர்களின்
பொதுவுடைமை பெண்பாலானாள்
கண்ணப்பன்களை ஆண்பாலாக்கி
பெண்டிருக்கு பொதுவுடைமை செய்யாதது
என் பிழையல்ல

நான் வெறும் கோடிட்டேன்
என்பின்னே சாலையிட
என்னைப்போல் கவி வருவானென்று
நினைத்தே அப்பிழை விட்டேன்
 
இன்றோ 
இங்கே சட்டம் போட்டு 
காதல் சமைக்கின்றீர்
சைவெமென்றும் அசைவமென்றும்
சாதியென்றும் மதமென்றும்
விதவித பண்டங்கள் பல வண்ணங்களில்
உண்போருக்கோர் சுயம்
உண்டோருக்கோர் பயம்
இலைமுன் இருப்போருக்கோர் ஐயம்
எடுக்கவோ கடிக்கவோ
என்று யோசிப்பதற்கா காதலுணவு
 
பரந்துவிரிந்த இந்த பாரில்
காதலால் வந்தது உயிரினங்கள்
அதற்கு மூலக்கூறுகளூம் இருந்ததில்லை
வாய்ப்பாடுகளும் இல்லை
இலக்கணங்களும் இல்லை
அதை குறிக்க இலக்கங்களும்
இதுவரை இல்லை இனியும் இல்லை

காதல் இயற்கை 
அது மானுட நிலை
என்று புரியாத பதர்களுக்கு
காதலால் ஆன கவிதைகளை
நிறைய எழுதாமல் விட்டுவிட்டோமே
என்றழுகத்தோணுது

காக்கையையும் குருவியையும்
மானுட சாதியாய் ஆக்கிய நான்
அம்மானிடமோ சந்துக்கொரு சாதி 
சங்கம் தமிழுக்கல்ல சாதிக்கென்று  கண்டு  
காக்கையையும் குருவியையும்
ஏன் நான் கட்டிப்பிடித்த கழுதையையும்கூட
பறவையாய் விலங்காய் பறந்தும் திரிந்தும்
பாரெங்கும் பழையபடி பண்பாய் வாழச்சொல்ல தோணுது
 

எங்கு காணினும் சக்தியடா
என்று சொன்னதை 
எப்படி எடுத்துக்கொண்டதோ?
இந்த மனித புத்தி
சக்தியை மத யுத்தியாக்கிய
இச்சைவ சவர்க்கர்கள் கண்டு
எனக்கோர் பயம்
 
எங்கேனும் இன்னோர் மதம் பிடித்த ஆணை
என்னை ஏறி மிதிக்கும்
என் பயம் எனை சூழ்ந்தாலும்
 
இன்னும் எங்கோ சில கங்கு வெப்பம்
சுள்ளென சற்றே சுட்டும் ஒளி வீசி எறிகிறது
நான் பற்றவைத்த தீ குஞ்சுகள் அவை
என் எழுத்தை கவிதையை
சரியாய் புரிந்து எரிந்து சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்
அவை இருக்கும் நம்பிக்கையால்தான்
 
தேடிச்சோறு நிதந்தின்று- பல
சின்ன்ஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடி துன்பமிக உழன்று-பிறர்
வாட பல செயல்கள் செய்து-நரை
கூடி கிழப்பருவ மெய்தி- கொடுங்
கூற்றுக் கிரையெனபின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று இன்னும் சத்தமாய்
கத்தி கவிபாட தோணுது

திரும்ப திரும்ப வருவேன்
வெந்து தணிந்த அநீதிக்காடு காணும்வரை

- ரெபி

-  

No comments:

Post a Comment