Monday, June 14, 2021

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

நன்றி ஆனந்தி விகடன்

 இப்போ யோசிச்சாலும் மிரட்சியாதான் இருக்கு. அப்போதான் ஒரு சிசேரியன் முடிஞ்சுது. ரிலாக்ஸா ஆபரேஷன் தியேட்டர்ல உக்கார்ந்து ரெஜிஸ்டர் எழுதிக்கிட்டிருந்தேன். பக்கத்து வார்டுல இருந்து திடீர்னு சத்தம்... எல்லாரும் அலறி அடிச்சுக்கிட்டு வெளியே ஓடுறாங்க. ஜன்னல் வழியா பாக்குறேன்... நெருப்பும் புகையுமா இருக்கு... உள்ளே நிறைய குழந்தைகள் இருக்காங்க. எல்லாம் பிறந்து ரெண்டு மூணு நாளான பச்சிளங்குழந்தைகள். ஏதோ ஒரு உந்துதல்ல ஜன்னலை உடைச்சு இறங்கிட்டேன்...”


இன்னும் சிலிர்ப்பு அடங்கவில்லை ஜெயக்குமாருக்கு. கேட்கும்போது நம்மையும் பதற்றம் பற்றிக்கொள்கிறது. ஜெயக்குமார், 58 குழந்தைகளின் உயிர்மீட்ட செவிலியர். சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சையரங்கில் செவிலியராகப் பணியாற்றும் ஜெயக்குமார், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீக்குள் இறங்கி, ஆபத்திலிருந்த பச்சிளங்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!


சென்னையின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனைகளில் ஒன்று கஸ்தூரிபாய் மருத்துவமனை. தினமும் நூற்றுக்கணக்கில் பிரசவங்கள் நடக்கும். நான்கு தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கிறது பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு. பிறந்து சில நாள்களேயான குறைபாடுடைய குழந்தைகள், வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய குழந்தைகள், குளுக்கோஸ் தேவைப்படும் குழந்தைகளெல்லாம் இங்கே வைத்துப் பராமரிக்கப்படுவார்கள். தாய்மார் அவ்வப்போது வந்து பாலூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

கடந்த 26ம் தேதி. அந்தப் பிரிவில் 3 செவிலியர்கள், 58 குழந்தைகள், 11 தாய்மார் உள்ளே இருந்தார்கள்.

“எனக்கு அன்னைக்கு நைட்ஷிப்ட். இரவு 7 மணிக்கு ஆரம்பிச்சு காலை 7 மணிக்கு முடியும். வந்தவுடனே அடுத்தடுத்து ரெண்டு சிசேரியன். பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்குப் பக்கத்துலதான் ஆபரேஷன் தியேட்டர். சிசேரியன் முடிஞ்சு மாஸ்க், டிரெஸ்கூட கழற்றாம உக்காந்து ரெஜிஸ்டர் எழுதிக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரே சத்தம். ரேம்ப்ல எல்லாரும் பதறிக்கிட்டு ஓடுறாங்க. உள்ளே கடுமையான புகைமூட்டமா இருக்கு. எல்லாரும் வெளியே ஓடிவர முயற்சி செய்றாங்களே ஒழிய உள்ளே நுழைஞ்சு தீயை அணைக்க யாரும் முயற்சி பண்ணலை. உள்ளே புகையைத் தவிர எதுவும் தெரியலே. பின்பக்கமா ஓடிப்போய் தரை துடைக்கிற மாப் கம்பியை வச்சு ஜன்னலை உடைச்சேன். மருத்துவமனையில வரிசையா தீயணைப்புக் கருவிகள் இருக்கு. நான் பழவேற்காடு அரசு மருத்துவமனையில வேலைசெஞ்சப்போ ‘ஹாஸ்பிடல் சேப்டி மேனேஜ்மென்ட் பயிற்சி’ எடுத்திருந்தேன். தீயணைப்புக் கருவியை எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியும். ஜன்னலுக்கு வெளியே நின்னு சிலிண்டரைத் திறந்து அடிச்சேன். கீழே எரிஞ்சுக்கிட்டிருந்த தீ ஓரளவுக்கு அணைஞ்சிருச்சு. ஆனா, மேலே தீவிரமா எரிஞ்சுக்கிட்டிருக்கு. குறிப்பா ஏ.சி அவுட்லெட்ல இருந்து எரிஞ்சு நெருப்புக் கொட்டுது. மின்கசிவாலதான் தீப்பிடிச்சுச்சு போல... கரன்ட்டை கட் பண்ண முடியாது. 3 குழந்தைங்க உள்ளே வெண்டிலேட்டர்ல இருக்கறதாச் சொல்றாங்க.

எனக்கு ஆஸ்துமா பிரச்னை வேற... புகை மூக்குக்குள்ள போய் சுவாசிக்கவே முடியலே. வேறு யாருக்கும் சிலிண்டரை ஆபரேட் பண்ணத் தெரியலே. வேற வழியில்ல... உள்ளே இறங்கிட்டேன். கார்பன் டை ஆக்சைடு சிலிண்டரை வச்சு மேலே அடிச்சேன்... 90 சதவிகிதம் தீ தணிஞ்சிருச்சு. பத்தடி உயரத்துக்கு மேல ஏசியில எரிஞ்ச தீயை அணைக்க முடியலே. சிலிண்டரோட ஓஸ் ரெண்டு அடிதான் இருக்கு. தோள்ல தூக்கி சிலிண்டரை வச்சுக்கிட்டு அடிச்சேன்... அண்ணாந்து அடிச்சதுல புகை நேரடியா மூஞ்சியில அடிச்சிருச்சு. முழுசா தீ அணைஞ்சபிறகு, தள்ளாடிக்கிட்டே வெளியே வந்து விழுந்துட்டேன்...” இன்னும் ஜெயக்குமாரின் முகத்தில் மிரட்சி இருக்கிறது.

அரை மணி நேரம் கடுமையாகப் போராடி தனி நபராகத் தீயை முழுமையாக அணைத்த ஜெயக்குமார், ஐந்து நாள்கள் ஐசியூவில் சிகிச்சையிலிருந்து மீண்டிருக்கிறார். இந்த வார்டுக்குக் கீழ்த்தளத்தில்தான் ஆக்சிஜன் ரூம் இருக்கிறது. கோவிட் காரணமாக 7 அடி அளவிலான 30 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த பிளாக்கில் உள்ள எல்லாத் தளங்களிலும் ஆக்சிஜன் செல்லும் வகையில் காப்பர் குழாய் இணைப்புகளும் இருக்கின்றன. ஜெயக்குமார் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் இழப்பு மிகப்பெரிதாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

ஜெயக்குமாருக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம். அப்பா நெசவாளி. அம்மா இல்லத்தரசி. வறுமை சூழ்ந்த குடும்பம். அக்கா, அரசு உதவித்தொகை பெற்று செவிலியர் படிப்பில் சேர, ஜெயக்குமார் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல் ஒரு மருந்தகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஜெயக்குமார் எடுத்த மதிப்பெண்கள் பற்றி அறிந்த மருந்தகத்தின் உரிமையாளர், தன் செலவில் டிப்ளமோ செவிலியர் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்து முடித்தவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணி கிடைத்திருக்கிறது. 2016-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

தீ விபத்து நடந்த உடனேயே தகவல் கிடைத்து அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் எவருக்கும் ஜெயக்குமார்தான் தீயை அணைத்தார் என்பது தெரியவில்லை. ஐ.சி.யூவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகு வழக்கம்போல பணிக்குச் வந்து சென்றிருக்கிறார் ஜெயக்குமார். திடீரென்று, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமிருந்து போன் வந்திருக்கிறது.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

“அமைச்சர் கூப்பிட்டு, ‘நீங்க செஞ்சது மிகப்பெரிய செயல் தம்பி... சி.எம். உங்களைப் பாக்கணும்ங்கிறார். கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு நாளைக்குக் காலையில வந்திடுங்க’ன்னு சொன்னார். மனைவி, குழந்தைகளோட முதல்வர் வீட்டுக்குப் போயிட்டேன். முதல்ல உதய் சார் வந்தார்... ‘நீங்கதானா அது’ன்னு கேட்டுட்டு குழந்தைகளோட விளையாட ஆரம்பிச்சுட்டார். பிறகு அவரே உள்ளே கூட்டிட்டுப் போனார். சேகர் பாபு சார், துரைமுருகன் சார், அன்பில் மகேஷ் சார் எல்லாரும் இருந்தாங்க. முதல்வர் சார் என்னை துரைமுருகன் சார்கிட்ட அறிமுகம் செஞ்சார். ‘எந்த ஊருப்பா’ன்னு கேட்டார் துரைமுருகன். ‘குடியாத்தம்’ன்னு சொன்னேன்... ‘நம்ம ஊருப் பயடா... அப்படித்தான் இருப்பான்’னு அவர் சொல்ல, எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அரை மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டிருந்தாங்க. கிளம்பும்போது, ‘எதைப்பத்தியும் கவலைப்படாம பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க’ன்னு பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பணமும், பெரிய கேடயமும் பரிசாகக் கொடுத்தார் முதல்வர். எல்லாமே கனவு மாதிரியிருந்துச்சு...” என்கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

சிகிச்சை முடிந்து பணியில் இணைந்த ஜெயக்குமாரைத் தேடிவந்து சந்தித்திருக்கிறார் ஓர் இளம்தாய். கையில் ஒரு சிசு. “தம்பி... நீங்க இல்லேன்னா, என் குழந்தை என் கையில இருந்திருக்குமான்னு தெரியலே... உங்களை வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்” என்று சொல்லி, கையெடுத்து வணங்கியிருக்கிறார். “வாழ்க்கையில் அதுவும் மறக்கமுடியாத தருணம் சார்” என்கிறார் ஜெயக்குமார்.

No comments:

Post a Comment