கொரோனாவின் முதல் இலக்கான முதியோரை பாதுகாக்க
தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் முதியோரை வதைக்கவேண்டாம். அவர்களுக்குத் தேவை ஆதரவு. சமூக இடைவெளி இருக்கட்டும். தூரத்தில் இருந்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுங்கள். அவர்களோடு உரையாட மறக்காதீர்கள். முதியோருக்குத் தனிமை, கொரோனாவைவிடக் கொடுமையான நோய்.
முடிந்த அளவு முதியவர்களோடு இருங்கள். பிடித்தமான செயல்களைச் செய்யவிடுங்கள். படிப்பவர்களாயின், அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கித்தாருங்கள்.
உறவினர்களோடு பேச விரும்பினால் அனுமதியுங்கள். அது அவர்களுக்கு ஆறுதல் தரும்.
டயட் ரொம்பவே முக்கியம். முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். பழங்கள் கொடுக்கலாம். குறிப்பாக நெல்லி, ஆரஞ்சு, கொய்யாப் பழங்கள் நல்லது. பாதாம் தரலாம். உணவில் இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
எதிர்மறைச் செய்திகள் அவர்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாசிட்டிவான செய்திகளாக அவர்களிடம் சொல்லுங்கள்.
தடுப்பூசி ரொம்பவே முக்கியம். அதுபற்றிய மூடநம்பிக்கைகளை அகற்றி, நம்பிக்கை தந்து தடுப்பூசி போடச் சொல்லுங்கள். நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், நிமோனியா வந்தவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். செப்டம்பர் வாக்கில் மூன்றாம் அலைத் தாக்குதல் இருக்கலாம் என்கிறார்கள். அதனால் தடுப்பூசி அவசியம்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். வயதானால் தாக உணர்ச்சி குறைந்துவிடும். வீட்டில் இருப்பவர்கள் கவனித்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் தரவேண்டும். பிரிட்ஜி்ல் வைத்து சாப்பிடுவது, அருந்துவது நல்லதல்ல... வெந்நீர் ரொம்பவே நல்லது. இதயநோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தண்ணீரின் அளவைத் தீர்மானிக்கவேண்டும்.
காற்றோட்டமான இடங்களில் முதியோரை உலவ விடுங்கள். ஏ.சி இருந்தால் குறைவாகப் பயன்படுத்துங்கள்.
அரை மணி நேர வாக்கிங், உடற்பயிற்சி முக்கியம்.
அதிகாலைச் சூரிய ஒளியில் இயற்கையான வைட்டமின் டி இருக்கிறது. உணவைவிட சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி ரொம்பவே நல்லது. கொரோனாவுக்கு இது தடுப்பு மருந்து.
மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. ஆசுவாசமாக அமர்ந்து மூச்சை நன்கு இழுத்து முடிந்தவரை உள்ளே வைத்திருந்து மெதுவாக வெளியே விடவேண்டும். இது நல்லது.
கொரோனா அறிகுறி வந்துவிட்டாலும் பயப்பட வேண்டாம். உடனடியாக டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். நூற்றில் ஒருவரோ இருவரோதான் அதிதீவிர நிலைக்குச் செல்கிறார்கள்.
அச்சம் வேண்டாம். அதுதான் பாதிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. எல்லாம் கடந்துபோகும்.
No comments:
Post a Comment