குழந்தைகளைக் கவனியுங்கள்!
Saturday, September 2, 2023
கலைஞர் எனும் பேராளுமை
ஆட்சியாளராக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட முயல்வது வியர்த்தம். ஒற்றை வரியில் சொல்லலாம். இன்று தமிழ்நாடு கண்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களின் ஒவ்வொரு இழையிலும் அவரது பங்களிப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது.
சமூகநீதி ஆட்சியென்பதால் ஒரு சாராருக்கு மட்டுமான ஆட்சியல்ல கலைஞருடையது.
பொது விநியோகத் திட்டம்,
பேருந்துகள் அரசுடைமையாக்கம்,
கூட்டுறவுத்துறை விரிவாக்கம்,
கிராமப்புறம் முழுதும் ஆரம்ப சுகாதார மையங்கள்,
மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி,
அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவபுரம்,
தொழில்துறை வளர்ச்சிக்காக ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்,
ஸ்பிக் போன்ற அரசு-தனியார் கூட்டுத்துறை,
எல்காட்,
மாநில அரசின் கணினிக் கொள்கை,
சென்னை - மதுரை - கோவை என டைடல் பார்க்குகள்,
கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை,
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை,
தமிழில் கற்றோருக்கு முன்னுரிமை...
இலவசங்கள் என இழித்துரைத்துவிட்டு இன்று இந்தியாவே பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் எனும் திராவிட சிந்தனைச் சிற்பியே. வாய் ஓயாமல் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து ஈரமுள்ள / நன்றியுள்ள மக்கள் நெஞ்சில் தனக்கும் அவர்களுக்குமான நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்.
Sugar Free - Health free
உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் வாழ்பவர்கள் சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தாலோ, உணவுகளைச் சாப்பிட்டாலோ, அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை இன்னும் அதிகமாகும். எனவே அவர்கள் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது வழக்கம். இவை தங்களுக்கு ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் இவர்கள் நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.
Friday, September 1, 2023
பாம்புகளிடம் எச்சரிக்கை
பாம்புகள் கடிக்கையில், அது என்ன பாம்பு என்பதை அறிந்து அதற்கேற்ற விஷ முறிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பாம்புகளைப் பிடிப்பதற்கு கருவிகள் வந்துள்ளன. கையால் பாம்புகளைப் பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
நாகன், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றன. இவற்றில் கண்ணாடி விரியன் அதிகமாகத் தென்படுவதாகக் கூறுகின்றனர். கண்ணாடி விரியன் ஆள்கள் முன்னே வர வர பின்வாங்கும். எந்தளவு பின்வாங்குகிறதோ, அந்தளவு வேகமாக பாயும். கண்ணாடி விரியன் பின்வாங்குவதைப் பார்த்தால், ஐந்தடி ஆறடி தள்ளி நிற்க வேண்டும்.
பாம்புகளைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களின் சகவாசம் இல்லாமலே வாழ விரும்புகிறது. மனிதர்களுக்கு அருகில் இருக்க பாம்புகள் விரும்புவதில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி வர வேண்டியதாகிறது. பாம்புகளை கையாளத் தெரியாதவர்கள் பாம்புகளை நசுக்கும்போது, அது பயப்படும். அப்போது கடுமையாகத் தாக்கும் அல்லது கடிக்கும்.
பாம்புகளுக்கான இனப்பெருக்க காலத்தில் ஒரு வித திரவத்தை கசிய விட்டுக்கொண்டே இருக்கும். அவை துணையைத் தேடி வரும்போது அடித்து விடுவோம். அது தன்னுடைய உடலில் இருந்த இனப்பெருக்க திரவத்தை எங்கே அடித்தோமோ அங்கேயே கசிய விட்டுவிடும். இந்த வாசம் மற்றொரு பாம்புக்குச் சென்று, அந்தப் பாம்பு அங்கே வரும். இதை பழிவாங்க பாம்பு வருகிறது என நினைத்துக் கொள்கிறோம்.
கறையான் புற்றில் பாம்பிருப்பதாகக் கருதி, பலர் பால் ஊற்றுவார்கள். பாம்புக்கு பால் உணவல்ல. கறையான் புற்று பாம்புக்கான வாழ்விடமும் அல்ல. பாம்பு எப்போதாவது நீர் அருந்தும் பழக்கமுடையது.
பாம்பு மகுடிக்கு ஆடுவதாக கூறுவார்கள். பாம்புக்கு காதுகள் இல்லை. காதுகள் இல்லாதபோது இசை எப்படி கேட்கும். மகுடி ஊதுபவரை கவனித்து அதற்கேற்றாற்போல ஆடுமே தவிர, அவை இசைக்கு ஆடுவதில்லை. பாம்புகள் அதிர்வுகள் மூலமாகவே அதை உணர்கிறது.
நல்ல பார்வை பாம்புகளுக்கு கிடையாது. இரட்டை நாக்கால் காற்றில் வருகிற வாசத்தை வைத்து தன் இரையை பாம்புகள் தேடிக்கொள்ளும். எனவே, பாம்புகளிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்று தெரிவித்தார்.