Saturday, September 2, 2023

Sugar Free - Health free 

உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் வாழ்பவர்கள் சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தாலோ, உணவுகளைச் சாப்பிட்டாலோ, அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை இன்னும் அதிகமாகும். எனவே அவர்கள் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது வழக்கம். இவை தங்களுக்கு ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் இவர்கள் நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.


‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் உடல் பருமனைக் குறைப்பதற்கோ, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கோ சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பயன் தருவதில்லை. இவற்றால் உடலுக்குப் பாதகமான விளைவுகள் உருவாகக்கூடும். இவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பதால் நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் தன்மையும் அதிகரிக்கிறது' என்கிறது அந்த அறிவுறுத்தல்.

சுகர் ஃப்ரீ
‘கலோரி இல்லாதது' என்றும் ‘சுகர் ஃப்ரீ' என்றும் அடையாளப்படுத்தி, இனிப்புச் சுவையைக் கூட்டுவதற்காக சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. ஜீரோ கலோரி உணவுகள்/பானங்கள், சாக்லேட்கள், பபுள் கம், ஸ்வீட் வகைகள், கேக்குகள், பிஸ்கட்டுகள், பிரெட் போன்றவற்றிலும் இவை சேர்க்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் சாக்கரின், அஸ்பார்டேம், அசிசல்ஃபேம், சுக்ராலோஸ், நியோடேம், ஐசோமால்டோஸ் போன்ற சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை கலக்கப்பட்ட உணவை உண்ணும்போதும், பானங்களைப் பருகும்போதும், உடல் எடை ஏறாது என்றும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்காது என்றும் நம்பி மக்கள் இவற்றை நுகர்கின்றனர்.

ஆனால், கலோரிகள் இல்லாத இத்தகைய இனிப்புச் சுவை கூட்டப்பட்ட உணவுகளையும் பானங்களையும் உட்கொள்ளும் ஒருவர், இவற்றில் வரம்பு மீற அதிக வாய்ப்புள்ளது. இதுவரை இத்தகைய இனிப்புச் சுவைகூட்டிகளை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகளில், இவை பாதுகாப்பானவை என்று அறியப்பட்டாலும், வரம்பு மீறி தொடர்ந்து நீண்ட நாள்கள் இவற்றை உட்கொள்ளும்போது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

இத்தகைய கலோரி இல்லாத உணவுகளை உண்பதால் ஒருவருக்கு வயிறு நிரம்பாத நிலையே இருக்கும். அதனால் அவர் மேலும் பசி கொண்டு மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதற்கு வாய்ப்பு அதிகம். அதிலும் சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் சேர்க்கப்பட்ட ஸ்வீட், கேக், பானங்களால் பிரச்னை இல்லை என்று நம்பி அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மாவுச்சத்து அளவு அதிகரித்து அதனால் உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

இந்த இனிப்புச் சுவைகூட்டிகளில் நாம் உண்ணும் இயற்கையான சர்க்கரையைவிட 200 முதல் 13,000 மடங்கு வரை அதிக தித்திப்பு இருக்கிறது. இவை கலந்த உணவுகளை உண்பதன் மூலம் மூளையில் இனிப்புச் சுவைமீது எப்போதும் ஒருவித போதைத் தன்மை இருந்துகொண்டே இருக்கும். இதன் விளைவாகத் தொடர்ந்து இனிப்பை உண்ணும் உந்துதல் ஏற்பட்டபடி இருக்கும். இந்த உந்துதலால், இவற்றைத் தொடர்ந்து பருகுவதும் உண்பதும் தொடரும். எடையும் கூடும், நீரிழிவும் கட்டுப்பாடற்றுப் போகும்.

ஒருவர் எடையைக் குறைக்க எண்ணினால் அல்லது நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன், பனங்கற்கண்டு ஆகியவற்றை நிறுத்துவதுடன் செயற்கையான சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகளையும் கட்டாயம் நிறுத்த வேண்டும். இனிப்புச் சுவை தரும் அனைத்து உணவுகளையும் முழுவதுமாக நிறுத்துவதன் மூலம் மட்டுமே மூளையை சர்க்கரை உந்துதல் இல்லாதபடி முழுவதுமாக டீ-அடிக்‌ஷன் செய்ய முடியும். மாறாக சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதால் க்ரேவிங் அதிகமாகவே செய்யும்.

இனிப்பு க்ரேவிங் ஏற்படுவதைத் தவிர்க்க புரதச்சத்தும், நன்மை செய்யும் கொழுப்புச்சத்தும் நிரம்பிய உணவுகளான முட்டை, மாமிசம், மீன், பயறு வகைகள், கடலை, பனீர் போன்றவற்றை உண்ணலாம். புரதச்சத்து மிக்க உணவுகளை உண்ணும்போது அவை இரைப்பையில் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வயிறு நன்றாக நிரம்பும். அடிக்கடி பசிக்காது என்பதால் மீண்டும் மீண்டும் உண்ணும் தேவையும் இருக்காது. தினசரி ஒரு மணி நேரமேனும் வாக்கிங், சைக்கிளிங் போன்ற உடல் உழைப்பு செலுத்துவதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சரிசெய்ய முடியும்.

சுகர் ஃப்ரீ
மெக்னீசியம் குறைபாட்டினால் அதிக இனிப்பு உண்ணும் உந்துதல் ஏற்படக்கூடும். மெக்னீசியம் சத்து நிரம்பிய நட்ஸ் வகைகள், சியா விதை, பூசணி விதை, கீரை வகைகள், வாழைப்பழம், அவகாடோ, மீன்களை உண்பதன் மூலம் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த முடியும். இனிப்புச் சுவையுடன் சத்துகளும் வேண்டுமென்றால், அவ்வப்போது மிதமான அளவில் பழங்கள் உண்பது நல்லது. பழங்களிலும் வரம்பு மீறுவது நன்மையன்று. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பழுக்காத பதத்தில் பழங்களை உண்பது சிறந்தது.


சர்க்கரை அல்லாத இனிப்புச் சுவைகூட்டிகள் மூலம் நன்மையைவிடத் தீமைகளே அதிகம் என்பதால், அவற்றைக் கைவிடுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

No comments:

Post a Comment