Thursday, October 17, 2013

யார் ஏழை?
நன்றி : ஆனந்த விகடன்
ரு குக்கிராமத்தின் மண் ரோட்டில் வயல்கள், எலுமிச் சைத் தோட்டங்களைத் தாண்டி இருக்கிறது ஒரு சிறு குடிசை. அதன் பின்புறத்தில் விவசாய வேலை பார்க்கும் ஒரு பெரிய வரைக் காட்டி, 'இவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதிஎன்றால் எப்படி உணர்வீர்கள்?
'உலகின் ஏழை ஜனாதிபதிஎன்று அழைக்கப்படும், உருகுவே நாட்டு ஜனாதிபதி ஜோஸ் முஜிகாதான் இப்படி வாழ்பவர். இவருக்குச் சொந்தமாக இருப்பது பழைய வோல்ஸ்வோகன் கார் மட்டும்தான். தவிர, தன் மாதச் சம்பளத்தின் 90 சதவிகிதப் பணத்தை ஏழைகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
தன் ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர், சிறு வயதில் வறுமையை விரட்ட சைக்கிளிங் கிளப்புகளில் சேர்ந்து, சைக்கிள் ஓட்டிப் பிழைப்பு நடத்தினார். 'உழைத்தால் மட்டுமே சோறுஎன்ற நிலைமையில் கொஞ்சம் கொஞ்ச மாகத் தேசிய அரசியலில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவம்தான் காரணம் என்று, வீதிகளில் முழங்கியவர், அதை எதிர்க்கும் 'டுபாமராஸ்கெரில்லாப் படையில் இணைந்து, அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். ஒரு தாக்குதலில் ராணுவம் இவரைச் சுட்டுப் பிடி
த்து, 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை தந்தது. 1985-ல் ஜோஸ் விடுதலையானபோது நாடு மக்களாட்சிக்கு மாறியது. மக்களாட்சி சமூகம் புது ரத்தம் பாய்ச்ச... மீண்டும் தீவிர அரசியலில் இயங்க ஆரம்பித்தார். கடந்த 2009-ம் ஆண்டு வரை பல ஆண்டுகள் செனட் உறுப்பினராகவும், விவசாயத் துறை, மீன்வளத் துறை அமைச்சராக வும் இருந்தார்.

ஜோஸின் எளிமை மக்களுக்குப் பிடித்துப்போக, அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். அரசு அளித்த ஜனாதிபதி மாளிகையை உதறிவிட்டு, தன்னுடைய சிறிய குடிசையில் வாழ்கிறார். 'நான் ஒன்றும் ஏழை கிடையாது. அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக்கொண்டு. 'போதாது... போதாதுஎன அலைபவர்கள்தான் உண்மையான ஏழைகள்!''- இது ஜோஸின் ஸ்டேட்மென்ட்.
பாராட்ட  விடுபட்டவர்களை நாம பாராட்டுவோம்
 
பல பாராட்டு விழாக்கள் பார்த்த கலைஞர் முதல், பல பாராட்டுகளைப் பெற்ற கலைஞர்கள் வரை சென்னையில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுல கண்டுக்கப்படாமப் போயிட்டாங்கனு குறை இருக்கு. ஆயிரம் வேலை இருக்கிற ஃபிலிம் சேம்பர், அவங்களைக் கண்டுக்கலைன்னா என்ன, நாம பாராட்டுவோம் பாஸ்!
 
ராஜ்கிரண்: 'டைனிங் டேபிள்ல வாழை இலை போட்டுச் சாப்பிடுறவங்க மத்தியில, வாழை இலையவே டைனிங் டேபிளா பயன்படுத்தி சாப்பிட முடியும்’னு காண்பிச்சவர் நம்ம மாயாண்டி. இவர் கறி திங்கிறதை மட்டும் ஆடும் கோழியும் பார்த்துச்சுன்னா, அதுங்களே கைக்காசு போட்டு குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கும்.
 
டவுசர் தெரிய வேட்டி கட்டியே நடிச்சவர்... சாராயத்தை சர்பத்தாக் குடிச்சவர்! ரைமிங்ல தக்காளினு வர்ற கெட்ட வார்த்தையை, தான் பேசுற ஒவ்வொரு வார்த்தையோட ஆரம்பத்திலும் வெச்சிப் பேசி நடிச்ச இவரை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலை. இருந்தாலும் தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் 'முனியாண்டி விலாஸ்’ சார்பா முந்திக்கிட்டுப் பாராட்டிக்கிறோம்!
 

 
நெப்போலியன்: 'அதிகமா அருவாள் வெச்சிருந்தது அய்யனார் சிலையா... இந்த ஆறடி மலையா?’னு, பொங்கலுக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வெக்கிற அளவுக்கு அருவா தூக்கி நடிச்சவர் இவர்.  அருவாளும் அரிக்கேன் விளக்கும் வெச்சிக்கிட்டு, சுத்துவட்டாரத்தையே காக்கும் குலசாமியா ரெண்டு லட்சம் படங்களில் நடிச்சவர்.
இன்னைக்கும் தமிழ் சினிமாவுல 'எட்டுப்பட்டி’யைக் காக்கிற செக்யூரிட்டி வேலைக்கு இவரை அடிச்சுக்க ஆளே இல்ல... ஆளே இல்ல... ஆளே இல்ல. இவரை புதுக்கோட்டை பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பா பாராட்டிருவோம்!
 
வாகை சந்திரசேகர்: தமிழ் சினிமா கண்ட தன்னிகரற்ற தற்கொலை வீரர். அவனவன் காரை பார்க் பண்ண இடம் கிடைக்காமத் தவிக்கிறப்போ, வில்லனுங்க கத்தியை பார்க் பண்றதே இவர் வயித்துலதான். ஹீரோவை வில்லன் கத்தியால குத்த வர்றப்பவும், துப்பாக்கியால சுட வர்றப்பவும், இவரா குறுக்க பாய்ஞ்சு வயித்துல வாங்கிக்குவார். தமிழ் சினிமாவுல இப்படி இவர் காப்பாத்துன உயிர்களின் எண்ணிக்கை, 40 ஏக்கர் நெற்பயிர்களின் எண்ணிக்கையைவிட நாலைஞ்சு மடங்கு அதிகம்.
 
இன்று தமிழ் சினிமாவில், வேலை வெட்டி இல்லாம புட்டி அடிச்சுட்டு, குட்டி பின்னால சுற்றும் போஸ் பாண்டிக்களுக்கு, கேடிகளுக்கு முன்னோடி இவரது டீம்தான். இவரை தமிழ்நாடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பா பாராட்டிக்கிறோம்!
 
காந்திமதி: 'நல்லெண்ண, விளக்கெண்ண, கடலெண்ண, நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன’, 'கூட்டிக் கூட்டிப் பிஞ்சிப்போச்சாம் வெளக்கமாறு... ரவிக்கை போடாம போறவ எந்த ஊரு?’, 'ஒத்தையூரு மேட்டுக்காரி முப்பது புள்ள பெத்தாளாம்... மேலத் தெரு வீட்டுக்காரி முக்கி முக்கிச் செத்தாளாம்’ போன்ற பல பல டின்ச் டயலாக்குகளைச் சொல்லி தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் பாரம்பரியத்தை ஆரம்பித்துவைத்தவர்.
இன்றளவும் தமிழ் சினிமாவில் இவரோடு ஒப்பிட்டுப் பார்க்க ஓர் அப்பத்தாவும் இல்லை என்பதே இவரது சரித்திர, விசித்திர வெற்றி! 'அடியே இவளே, அவ புருஷன் கதையக் கேளேன்...’ என்று இவர் கிளப்பிய புரளிகளும் குசலங்களும்தான் இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் மெகா சீரியலாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அமரரான இவரை, தமிழக பெட்டிக் கடை வியாபாரிகள் சங்கம் சார்பா பாராட்டிக்கிறோம்!
 
ஆனந்த்ராஜ்: இதுவரை தமிழ் சினிமாவுல அதிகமான கற்பழிப்பு முயற்சிகள் மேற்கொண்டது இவர்தான். ஆனா, கற்பழிப்பு வெற்றிபெறும் விகிதம் நூத்துக்கு மூணோ, நாலோதான். அதுவும் ஹீரோவோட தங்கச்சியா இருந்தா மட்டும்தான். ஹீரோயின்கிட்ட முயற்சி நடக்கிறப்பவே விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்னு வந்து இவரை நொங்கெடுத்து ஹீரோயினைக் காப்பாத்திக் கட்டித் தழுவி அழைச்சிட்டுப் போயிடுவாங்க. தமிழ் சினிமாவுல கிட்டத்தட்ட எல்லா ஹீரோயினுக்கும் முறைமாமனா நடிச்சது இவராத்தான் இருக்கும். ஆனா, எப்பவும் ஹீரோயினுங்க இவரைக் குறை மாமனாத்தான் பார்ப்பாங்க. பனியன் வெளிய தெரியற அளவு சில்க் ஜிப்பால வந்து சீன் போடுறதும், ஹீரோ அடிக்கிற அடியில சட்டை கிழிஞ்சி அதே பனியன் வெளியே தொங்குறதும் இவரது கேரக்டரின் சிறப்பு அம்சம். அதனால, அண்ணனுக்கு உள்ளாடை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பா உளமாறப் பாராட்டிக்கிறோம்!
 
விசு: 'பறந்து கடிச்சா கொசு... பேசிக் கடிச்சா விசு’னு ஸ்கூல் பசங்க ரைமிங் பண்ற அளவு பிரபலம் நம்ம விசு சார். 'இங்க பாருடா கண்ணா...’னு இவரு பேச ஆரம்பிச்சா, அவனவன், ரத்தக்கண்ணீர் மட்டுமில்ல... வாழ்நாளுக்கான மொத்தக் கண்ணீரையும் வடிச்சிருவான்.
இவர் சினிமாக்களுக்கு வசனம் எழுதுன காலகட்டங்கள்ல, தமிழ்நாட்டுல பல பேப்பர் மில்லுங்க செழிப்பா வாழ்க்கையை ஓட்டுச்சுங்க. ஒருதடவை இவர் வசனம் எழுதிய ஃபைல்களை, லாரி வெச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு போனாங்கன்னா பார்த்துக்கங்க. இவருக்கு தமிழ்நாடு பேப்பர் மில் தொழிலாளர்கள் சார்பா பாராட்டுத் தெரிவிச்சிக்கிறோம்!
 
வினு சக்ரவர்த்தி: உள்ளூர்ல கோவணம் காணாமப்போனதில் இருந்து, உலகளவுல விமானம் காணாமப்போனது வரை எல்லா பஞ்சாயத்துலயும் 'உள்ளேன் ஐயா’ போடுற ஒரே தமிழ் சினிமா நடிகர் நம்ம ஆளுதான். ஒரு பஞ்சாயத்துல, 'ஆட்டுற விரலு யாருக்குச் சொந்தம்... ஆட்டுப்புழுக்கை யாருக்குச் சொந்தம்’னு இவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டு ஐ.நா. சபையே அசந்து போச்சாம்.
 
'என்ன எழவுடா இது?’னு இவர் சீன்ல என்ட்ரி கொடுத்தாலே, ஆலமரத்து மேல குடியிருக்கிற காக்காங்க ஆறு மாசம் வெளியூர் சுற்றுப்பயணம் போயிடுங்க. பஞ்சாயத்து சீன்ல சொம்புங்கிற பிராப்பர்ட்டிய பிராப்பரா யூஸ் பண்ற ஒரே நடிகர். சந்தனத்தை மாருலயும், கட்டுப்பாட்ட ஊருலயும் வெச்சிருக்கிற இவரை, பித்தளைச் செம்பு தயாரிப்போர் சங்கம் சார்பா தாராளமாப் பாராட்டிரலாம்!
 
'மைக்’ மோகன்: I don't know-னு சொல்லி தலையாட்டுறவர் மன்மோகன்னா, என்ன பாடுறோம்னே தெரியாம மைக்கு முன்னால தலையாட்டுறவரு 'மைக்’ மோகன். ஒருகாலத்துல தமிழ் சினிமா நடிகைகளின் அம்மாக்கள் தங்கள் பொண்ணுங்களை இவருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு நினைச்ச அளவுக்கு ஜென்டில்மேன். இவரை தமிழ்நாடு மைக் செட் மற்றும் மேடை அலங்காரம் சங்கத்தினர் சார்பா, பாராட்டிக்கிறோம்!
 
விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் ஹீரோ. பாலை தூக்கி அடிக்கிற கேப்டன் டோனின்னா, காலைத் தூக்கி அடிக்கிற கேப்டன் இவர். தமிழ்நாடு காவல் துறைகிட்ட சம்பளம் வாங்கினாலும், வேறுபாடு பார்க்காம, இன்டர்போல், அமெரிக்கக் காவல் துறை, நேபாள கூர்க்கா குழுனு எல்லாத்துக்காகவும் டியூட்டி பார்ப்பார்.
 
இவர் இதுவரை புடிச்ச பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணிக்கை, பாகிஸ்தான் வாக்காளர் லிஸ்ட்டைவிட பெரிசு. பள்ளி குழந்தைங்க எப்படி யூனிஃபார்ம்லயே இருப்பாங்களோ, அதுபோல24 மணி நேரமும் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுத் திரிஞ்சவர் நம்ம கேப்டன். இப்ப நடிக்கிறதை விட்டாலும், அடிக்கிறதை விடலை. இப்படித்தான் போன தேர்தல் பிரசாரத்தின்போது... ஓ... அப்படியா? ஸாரிங்க... இது சினிமா கட்டுரையாம். அரசியல் கலக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. எட்டி உதைச்சே பல பேரு முட்டியப் பேத்த நம்ம கேப்டனுக்கு கிக் பாக்ஸிங் கற்றுக்கொண்டோர் சங்கம் சார்பா பாராட்டுகளைக் குவிச்சுடுறோம்!
 
சாருஹாசன்: பல மாசம் சாப்பிடாத கேரக்டர் போல இருந்ததால, எப்பவும் ரொம்ப சாஃப்ட் கேரக்டர்ல நடிச்சே தமிழ் ஜனங்களின் மனங்களில் நின்னவர். சாஃப்ட்னா சாதாரண சாஃப்ட் இல்லை, ஜாக்கி ஜட்டியைவிட சாஃப்ட்... சொல்லப்போனா, microsoft. தளபதி படத்துல 'நீ என்ன கோத்திரம்?’னு இவரு மூணு வார்த்தை டயலாக் சொல்லி முடிக்கிறதுக்குள்ள, டி.வி. பார்க்கிற பொம்பளைங்க, மொத்தப் பாத்திரத்தையும் கழுவி வெச்சிட்டு வந்திடுவாங்க. 30 வருஷமா இவர் தமிழ் சினிமாவுல பேசின மொத்த டயலாக்குகளையும் மொத்தமா 40 பக்க நோட்டுல எழுதினாலும், பாதி நோட்டு காலியா கெடக்கும். அதனால ஐயாவை, பேட்டை வெத்தலை வியாபாரிகள் சங்கம் சார்பா வாழ்த்திக்கிறோம்!
 
ஜெய்சங்கர்:  தமிழ் சினிமாவின் முதன்மையான, முக்கியமான சி.ஐ.டி. ஆபீஸர். 'இல்லை இல்லை... சி.ஐ.டி. காலனில இருந்த ஒரு ஆபீஸ்ல வேலை செஞ்சதால, இவருக்கு சி.ஐ.டி. ஆபீஸர்னு பேர் வந்துச்சி’னு சொல்வாங்க பொறாமைக்காரங்க. ஒரு படத்துல இவர்தான் சி.ஐ.டி-னே கடைசி சீன் வரை சொல்ல மாட்டாங்க. அவ்வளவு சஸ்பென்ஸா இருக்கும். ஆனா, படத்தோட பேரு 'சி.ஐ.டி.’ சங்கர்! ஒரு பக்கமா சாய்ஞ்சிட்டு ஓடுறது, எப்பவும் ஒரு காலை மடக்கி முட்டிக்கால் போட்டுச் சுடுறதுனு இவர் ஸ்டைல் எல்லாமே பட்டையைக் கிளப்பும். மாவீரன் அலெக்ஸாண்டர், மாவீரன் நெப்போலியனுக்குப் பிறகு அதிகமா குதிரையில போனது இவர்தான். அதனால விண்ணுலகில் இருந்து அருள்பாலிக்கும் ஜெய்சங்கர் சாரை ஊட்டியில் குதிரை சவாரி கூட்டிப் போறவர்கள் சங்கம் சார்பா பாராட்டிக்கிறோம்!
 
சின்னி ஜெயந்த்: உலகத்துலயே அதிகமான நாள் காலேஜுக்குப் போனவர் என்ற கின்னஸ் சாதனையை வெச்சிருப்பவர். இவர் கல்லூரிப் படிப்பை முடித்து டிகிரி வாங்குவதற்குள் 137 பிரின்சிபால்களும், 12,478 புரொஃபஸர்களும் ரிட்டையர்டு ஆகியிருக்காங்கனு புள்ளிவிவரம் சொல்லுது. படிக்கிற பசங்களை கேன்டீனுக்கு அடம்பிடிச்சி அழைச்சிட்டுப் போய் வடை, பஜ்ஜி, போண்டா விற்பனைக்கு அடித்தளமிட்டதால், கல்லூரி கேன்டீன் உரிமையாளர்கள் சங்கம் சார்பா இவரை கும்பிட்டுக்கிறோம்!
 
'வெண்ணிற ஆடை’ மூர்த்தி: தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ஆசான்... இல்லை இல்லை... குரு! எஸ்.ஜே.சூர்யா, சந்தானம் போன்ற பல பலாமரங்கள் இந்த ஆலமர நிழலில் வளர்ந்தவைதான். சிவாஜி சார் முதல் சிவகார்த்திகேயன் வரை எல்லோரையும் 'தம்ப்ரீரீரீ...’ என்ற வார்த்தையிலும், சரோஜாதேவி முதல் ஷகிலா வரை 'பாப்ப்ப்ப்பா...’ என்ற வார்த்தையிலும் அடக்கிவிடும் இரட்டை அர்த்த ஜாம்பவான். வாயில் இருந்து 'ப்ப்ப்பர்ர்ர், டர்ர்ர்ர்ர்’னு டீசல் தீர்ந்த பம்புசெட் மோட்டார் போல வினோத சத்தமிட்டே நடித்து முடித்த இவருக்கு சைக்கிள் - டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்கள் மற்றும் காத்தடிப்பவர்கள் சங்கம் சார்பா பாராட்டுகள்!
 
 

Friday, October 4, 2013

எனக்குப் பள்ளிக்கூடம் போக ரொம்பப் பிடிக்கும்
 
ள்ளிப் பேருந்து நடுவழியில் பிரேக் டவுன் ஆனாலோ, அரசுப் பேருந்து முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தாலோ... நம் பள்ளி மாணவர்கள் பலர் என்ன செய்வார்கள்? 'நாளைக் குப் பார்த்துக்கலாம்!’ என்று பள்ளிக்குச் செல்லாமல் 'கட்’ அடித்துவிடுவார்கள். ஆனால், கோவை - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பூச்சமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா செய்வதோ வேறு!
 
ஆறாவது படிக்கும் சந்தியாவுக்கு பள்ளிப் பேருந்து பஞ்சாயத்தெல்லாம் கிடையாது. ஆனால், 'பரிசல்’ பஞ்சாயத்து உண்டு! பூச்சமரத்தூர் கிராமத்திலிருந்து பரளியில் அமைந்திருக்கும் பவர் ஹவுஸ் பள்ளிக்கூடத்தை அடைய, பவானி ஆற்றைக் கடக்க வேண்டும். ஆறு என்றால் சலசலத்து ஓடும் வாய்க்கால் அல்ல; சீற்றமும் வேகமுமாகச் சுழித்துக்கொண்டு ஓடும் ஆறு. அந்த ஆற்றை பரிசலில் பெரும்பாலும் தனிநபராகக் கடந்து, பள்ளி சென்று வருகிறாள் சந்தியா. நாங்கள் அவளைச் சந்திக்கச் சென்றிருந்தபோதும், தனியாளாக துடுப்புப் போட்டபடி பரிசலில் வந்து இறங்கினாள் அவள்.  
 
 
நாம் ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கவனித்தவள், ''என்னண்ணா அப்படிப் பார்க்கிறீங்க? எங்க ஊர்ல எல்லாருக்கும் பரிசல் ஓட்டத் தெரியும். பெரிய அண்ணன்களோட பள்ளிக்கூடத்துக்குப் போறப்ப நான் துடுப்புப் போட்டு ஓட்டக் கத்துக்கிட்டேன். அண்ணன்கள் வராதப்ப எங்களை மாதிரி சின்னப் பொண்ணுங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மாட்டாங்க. ஆனா, எனக்குப் பள்ளிக்கூடம் போக ரொம்பப் பிடிக்கும். அதனால நான் மட்டும் துடுப்புப் போட்டுட்டுக் கிளம்பிடுவேன். என் சோட்டுப் பிள்ளைங்கள்லாம் தனியா என்கூட வரப் பயந்தாங்க. ஏன், என் அப்பாவே பயந்தாரு. ஆனா,  நான் பள்ளிக்கூடத்துக்குப் போயே ஆகணும்னு பிடிவாதம் பண்ணதால, 'பத்திரமா போய்ட்டு வரணும்’னு சொல்லி ஒருதடவை ஆத்துக்குள்ள வழியைக் காட்டி, பரிசலைக் கையில கொடுத்துட்டாரு. காலையில ஒரு அளவுல இருக்கிற தண்ணி, சாயங்காலம் ஜாஸ்தியாகிடும். காலையில துடுப்புப் போடுறதுதான் கஷ்டம். ஏன்னா, ஆத்துத் தண்ணிக்கு எதிர் திசைல படகை ஓட்டிட்டுப் போகணும்'' - குழந்தைக் குறும்பும் மழலைத் தொனியும் மாறாத வார்த்தைகளில் பேசுகிறாள் சந்தியா. 
 
''பரிசல் ஓட்டும்போது பயமா இருக்காதா? ஆறு முழுக்க தண்ணி தளும்பி ஓடுதே!''
''பயம்லாம் கிடையாது. ஆனா, மழைக் காலத்துல மட்டும் கொஞ்சம் திக்..திக்னு இருக்கும். அப்போ யாரும் பள்ளிக்கூடத்துக்கும் போக மாட்டாங்க. ஆத்துத் தண்ணியும் ரொம்ப வேகமா இருக்கும். ஆனா, நான் என்ன பிரச்னைனாலும் பள்ளிக்கூடத்துக்கு லீவ் எடுக்க மாட்டேன். ஆனா, உடம்பு சரியில்லாதப்ப மட்டும் வீட்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மாட்டாங்க. அப்போலாம் கஷ்டமா இருக்கும். சீக்கிரம் உடம்பு சரியாகணும்னு, எந்தச் சேட்டையும் பண்ணாம இருப்பேன்!''
 
''இப்படி ரிஸ்க் எடுத்து பரிசல்ல பள்ளிக்கூடம் போற அளவுக்கு படிப்பு மேல அவ்ளோ இஷ்டமா?''
''ஆமாண்ணா! படிப்புதானே முக்கியம். ஆனா, அதை எங்க ஊர்ல பல பிள்ளைங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நான் நல்லா படிப்பேன். எனக்கு காலேஜ்லாம் போய் படிச்சு டீச்சர் ஆகணும்னு ஆசை. அப்பத்தான் எங்க ஊர்லயே வெச்சு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரமுடியும். ஒருவேளை டீச்சர் ஆக முடியலைன்னா, நர்ஸ் ஆகணும். அப்பத்தான் எங்க ஊர்ப் பொண்ணுங்களுக்கு ஊர்லயே பிரசவம் பார்க்கலாம்...'' பெரிய பெரிய கனவுகளை எளிமையான வார்த்தைகளில் அடுக்கிக்கொண்டே இருக்கிறாள் சந்தியா.
 
 
''ஆனா, அதுல ஒரு சிக்கல்ண்ணா...'' என திடீரென குரல் கம்முகிறது சந்தியாவுக்கு. 'என்ன சிக்கல்?’ என்று விசாரித்தால், ''இப்ப நான் படிக்கிற பள்ளிக்கூடத்துல பத்தாப்பு வரைக்கும்தான் இருக்கு. அப்புறம் வெள்ளியங்காடு போகணும். அது இங்கே இருந்து
30 கிலோமீட்டர் இருக்கும். அங்கே ஹாஸ்டல்லயே தங்கிப் படிக்கணும். ஆனா, எங்க ஊர்க்காரங்க யாரும் அப்படிலாம் வெளியே தங்க மாட்டாங்க. அதனால என்னை அங்கே அனுப்பிப் படிக்க வைப்பாங்களானு தெரியலை. ஆனா, நான் படிச்சிருவேன்னு நினைக்கிறேண்ணா. ஏன்னா, பரிசல்ல துணைக்குப் போக ஆள் இல்லைனு என் அக்காவை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நிப்பாட்டிட்டாங்க. நான் பரிசல் ஓட்டக் கத்துக்கிட்டு இப்போ தனியாவே பள்ளிக்கூடத்துக்குப் போயிடுறேன். அதே மாதிரி வேறு எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிச்சுடுவேண்ணா!''
 
சந்தியாவின் நம்பிக்கையை ஆமோதிப்பது போல சலசலக்கிறது பவானி ஆறு!

Thursday, September 26, 2013

தமிழை இந்தியாவின் இரண்டாவது மொழி ஆக்குங்கள்!”
பி.ஆரோக்கிய வேல்
    
 ''இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் நம்மில் பலரும், ஒருவிதமான அகங்காரத்திலேயே இருந்துவிட்டோம். அதனால்தான் நம் சொந்த நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும்  அறிந்துகொள்ளவில்லை.
 
ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தமிழ் மொழியின் தாக்கம் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. நம் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய தமிழ் மொழிக்கு, உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் கொடுக்கத் தவறி விட்டோம். அதனால், இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது.
 
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழைப் போதிக்கும் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!'' - இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. தருண் விஜய் என்றால் நம்ப முடியுமா? அதுவும், 'இந்திதான் இந்தியாவையே இணைக்கும் மொழி’ என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரின் குரல் இது என்பது கூடுதல் வியப்பு!
'பி.ஜே.பி-யின் சிந்தனைச் சிற்பிகளில் ஒருவர்’ என்று சொல்லப்படும் தருண் விஜய், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சீடர். வாஜ்பாயைத் தொடர்ந்து 'பஞ்சன்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ். இதழுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்தவர். அவரைத் தொடர்புகொண்டு தமிழ்க்குறித்து அவர் பேசியதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம். நம்மைவிட மகிழ்ச்சியாக பேசத் தொடங்கினார் தருண் விஜய்...
 
''என்னுடைய தமிழ் ஆர்வத்தைப் பார்த்த என் மகள் சாம்பவி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அவளது தோழியிடமிருந்து தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிவந்து கொடுத்திருக்கிறாள். வசந்தி ஸ்டான்லி போன்ற சில நண்பர்களின் உதவியோடு தமிழ் படித்துவருகிறேன். தமிழ் முனிவர் அகத்தியர் தொடங்கி சுப்பிரமணிய பாரதி வரை தமிழ் அறிஞர்கள் பலரைப் பற்றி படித்திருக்கிறேன்.
 
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்தபோது தமிழில் 'வணக்கம்’ என்று சொன்னேன். அதோடு பாரதியின் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றையும் அவருக்குப் பரிசளித்தேன்!''
 
'' 'இந்தி’யைத் தாய்மொழியாகக் கொண்ட உங்களுக்கு 'தமிழ்’ மொழி மீது எப்படி இந்த அளவுக்குக் காதல்?''
''கங்கையை வணங்குவதற்கு ஒருவர் கங்கை நதிக்கரையில்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுபோலத்தான், தமிழின் மேன்மையைப் போற்றுவதற்கு நான் தமிழ்நாட்டில் வாழ்பவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை!
தமிழ் மொழி, ஒரு வானவில் போன்றது. அதன் வண்ணங்களை பல மொழிகளிலும் காண முடியும். பாரத தேசத்தின் பண்பாட்டையும் ஞானத்தையும் தமிழ் தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது. இந்திய மொழிகள் பலவற்றுக்கும் அதுதான் ஊற்று மொழி. குறிப்பாக, விந்திய மலைக்குத் தெற்கே இருக்கும் அனைத்து மொழிகளிலும் தமிழின் தாக்கம் மிகவும் அதிகம். அதனால் தமிழ் மொழிக்காகப் பேசவேண்டியது 'இந்தியன்’ என்ற வகையில் எனது தர்மம்.
 
உலகின் எந்தப் பெருநகரங்களுக்குச் சென்றாலும் அங்கே ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொடுக்க ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இந்த மொழிகளைக் காட்டிலும் இலக்கணமும் இலக்கியச் செறிவும்கொண்ட மொழி, தமிழ். ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் மொழிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் ஏன் தமிழுக்குத் தரப்படவில்லை என்பதே என் ஆதங்கம்!''
 
''வட இந்தியர்கள் தமிழைத் தள்ளிவைப்பதற்கு என்ன காரணம்?''
'' 'இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்’ என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், ஏன் அப்படிப்பட்ட போராட்டம் அங்கு தோன்றியது என்பதன் பின்னணி சொல்லப்படவில்லை. இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ... தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!''
 
''ஆனால், ஆங்கில மொழியின் தாக்கம் தமிழ் மொழி உள்பட பல இந்திய மொழிகளை பெருமளவு பாதித்து இருக்கிறதே!''
''உண்மைதான்! இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அனைத்தும் வர்த்தகத்துக்கும், விஞ்ஞானத்துக்கும், தொழில்நுட்பத்துக்கும் ஆங்கிலத்தை வெகுவாகச் சார்ந்திருக்கின்றன. 'ஆங்கிலம்தான் வளர்ச்சிக்கான வழி’ என்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஜெர்மனி, ஃப்ரான்ஸ் உள்பட  ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் அனைத்திலும் ஆங்கிலம் இல்லை. அந்த நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழிதான் கோலோச்சுகிறது. அதே நிலையை இந்தியாவிலும் சாத்தியப்படுத்த வேண்டும்!''
சர்க்கரையைத் தடுக்கும் காபி!-
டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்
 
ன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றையும், இங்கே கடுமையாக விமர்சிக்கிறேன். ஒரு மாறுதலுக்காக, 'கெடுதல்' என்று இதுவரை கருதப்பட்ட காபி, மிக நல்ல மருத்துவக் குணங்கள் கொண்டது என்பதைப் பற்றி இந்த இதழில் பேசலாம் என நினைக்கிறேன்!
 
காபியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதில் முக்கிய இடம் வகிப்பது, கேஃபின். காபியின் பற்பல நல்ல குணங்களுக்கும், சில கெட்ட குணங்களுக்கும் காரணமாக அமைவது இந்த கேஃபின். இன்னொரு முக்கியமான வேதிப்பொருள், 'ஃபீனாலிக்ஸ்என்று அழைக்கப்படும் 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்ஸ்குழுமத்தைச் சேர்ந்தது. தற்போது காணப்படும் பல்வேறு வியாதிகளும் (சர்க்கரை, புற்று உட்பட) 'ஃப்ரீ ரேடிகல்ஸ்என்ற ஆக்ஸிஜன் சிதைவுப் பொருட்களால்தான் உண்டாகின்றன. இந்த சிதைவுப் பொருட்களை உறிஞ்சி எடுத்து, உடலைத் தூய்மைப்படுத்தும் பொருட்கள்தான் 'ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸ். இவை காபியில் அபரிமிதமாக இருப்பதாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
காபியினால் விளையும் நன்மைகளையும், கட்டுப்படுத்தப்படும்/தடுக்கப்படும் வியாதிகளையும் பட்டியலிட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்! அது மிகமிக நீளமானதொரு பட்டியல். இங்கே ஒருசிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்என்ற பிரபல மருத்துவ இதழில், ஒரு கட்டுரை வெளியானது. தினமும் 2-3 கப் காபி குடிப்பவர்களின் மரண விகிதம் 10-15 சதவிகிதம் குறைகிறது என்ற உண்மை, 12 வருடங்களாக 4 லட்சம் பேரிடம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் தெரிந்தது. ஆண்களைவிட பெண்களிடம் இந்த நன்மை அதிகமாகத் தெரிந்திருக்கிறது.
உலகம் முழுவதையும், குறிப்பாக நம் நாட்டை பயமுறுத்தி வரும் சர்க்கரை நோயையும் காபி தடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. ஆகவே, சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று 'சயின்ஸ் டெய்லிஇதழ் கூறுகிறது.
 
உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோரின் சிறுநீரில் கேஃபின் உள்ளது என்பதே இதற்கு சாட்சி என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
காபியிலிருக்கும் 'கேஃபிஸ்டால்' என்கிற வேதிப்பொருள் ரத்தத்தில் கொழுப்பை அதிகப்படுத்தும். அதனால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு அதிகமாகலாம் என்று வலுவான ஒரு கருத்து முதலில் இருந்தது. ஆனால், 2-3 கப்புக்கு மிகாமல் அருந்தினால்... கெடுதல் இல்லை - இதயத்துக்கு நல்லதுதான் என்பது தற்போதைய கருத்து.
 
'காபி குடிப்பதன் மூலம் மனஅழுத்த வியாதி, வெகுவாகக் குறையும். குறிப்பாக, பெண்களுக்கு. தற்கொலைகளை 50% வரை குறைக்க முடியும்' என்கிறது ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி.
இவ்வளவு நல்ல குணங்களையுடைய காபியினால் கெடுதல்கள் என்று ஏதாவது வந்தால், அதற்கு காபிக்கொட்டை தூளுடன் கலக்கப்படும் மற்ற கொட்டைகளும், காபியில் கலக்கும் சர்க்கரை, பால், பாலுக்கு மாற்றுப் பொருளான 'கிரீமர், கிரீமரில் கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்களும்தான் காரணம்.
http://cdnw.vikatan.com/aval/2013/09/zdynmu/images/p88a.jpg
காபியில் சுவைக்காக கலக்கப்படும் இன்னொரு பொருள், சிக்ரி. காபி 70 சதவிகிதமும், சிக்ரி 30 சதவிகிதமும் கலக்கப்படும். இதை ஒரு கலப்படப் பொருளாகவே பலரும் முதலில் நினைத்தனர். உண்மையில் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் மிக அற்புதமாகக் கருதப்படுகிறது சிக்ரி. மூலிகைச் செடியான காசினியின் வேரிலிருந்து கிடைக்கும் பொடிதான் இது. சுவைக்குச் சுவை, அதோடு உடலுக்கு - முக்கியமாக ஈரல், குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் நன்மை கிடைக்கும்.
 
காபி நன்கு கொதிக்கும்போதுதான் நன்மை பயக்கும். அப்போதுதான் பல நல்ல வேதிப்பொருட்கள் காபி கொட்டையிலிருந்து கசிந்து வெளிவரும். கொதிக்கும் காபியை ஃபில்டரில் செலுத்தும்போது கேஃபிஸ்டால் போன்ற சில கெட்ட பொருட்கள் வடிகட்டப்பட்டு விடும். எஸ்பிரஸோ காபியும், இன்ஸ்டன்ட் காபியும்கூட நல்லதுதான். ஆனாலும், கொதிக்கும் காபியை டபராவில் ஆற்றிக் குடிப்பதுதான் மிகவும் சுவையானதும், சுகமானதும், நல்லதும்கூட. அப்போதுதான் நிறைய நுரை வரும் - அதில் நல்ல வேதிப்பொருட்கள் நிறைய மிதந்து வரும்.
 
சத்துக்கள் மிகவும் செறிந்துள்ள உணவுகளை 'சூப்பர் உணவுகள்' (Super Foods) என்று அழைக்கிறோம். மிகவும் சிறியதான அந்தப் பட்டியலில் தற்போது காபியும் இடம்பெற்றிருக்கிறது!
- நலம் வரும்...
 
அதிகபட்சம் 4 கப்!
'அல்ஸைமர்முதியவர்களைத் தாக்கும் ஞாபக மறதி நோய், 'பார்க்கின்ஸன் (முதியவர்களைத் தாக்கும் உடல் நடுக்க நோய்), ஈரல் நோய்கள், பித்தப்பை கற்கள், பல வகையான புற்றுநோய்கள், ஆண் மலட்டுத்தன்மை, 'கவுட்என்கிற மூட்டுவலி உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்ல மருந்து இந்த காபி என்கின்றன பல்வேறு ஆராய்ச்சிகள். 2 முதல் அதிகபட்சமாக 4 கப் வரை மட்டுமே அருந்த வேண்டும் என்பது முக்கியம். கர்ப்பிணிகள், 2 கப்புக்கு மேல் குடித்தால், குறைப்பிரசவம் போன்றவை நேரலாம். எனவே, அவர்கள் டீ அருந்தலாம்.
 
இந்தியா வந்த கதை!
எத்தியோப்பியாதான் காபியின் பூர்விகம். காபிக் கொட்டைகளை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வறுத்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கூடுதல் சுவை என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. எத்தியோப்பியாவில் இருந்து ஏமன், எகிப்து, துருக்கி, பிரேசில் என்று இது பரவியது. 1670-ல் இன்றைய கர்நாடக மாநில பகுதியைச் சேர்ந்த பாபா பூடான் என்கிற முஸ்லிம் பெரியவர், மெக்காவுக்கு 'ஹஜ்பயணம் சென்றார். அவர், ஏமன் நாட்டின் வழியாக திரும்பியபோது, காபியைச் சுவைக்க நேரிட்டது. நம் ஊரிலும் இது கிடைப்பதற்கு என்ன வழி என்று யோசித்தவர், பச்சைக் காபி கொட்டைகளை இடுப்பு பெல்ட்டில் மறைத்து எடுத்து வந்தார். மைசூர் அருகில் சந்திரகிரி மலையில் அவற்றை விதைத்தார். அனைத்தும் முளைத்தன. இந்தியாவில் காபி வேரூன்றியது இப்படித்தான்.

Thursday, September 19, 2013

சென்னைக்கு நடுவே கீச்... கீச்... கீச்!
நன்றி - ஆனந்த விகடன் 
    
சேர்ந்தாற்போல இரண்டு சிட்டுக்குருவிகளை சென்னையில் பார்ப்பதே அபூர்வம். ஆனால், அதிசயம்... ராயப்பேட்டை ஜாம்பஜாரில் இருக்கும் 'கேமரா’ சேகரின் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான கிளிகள் கச்சேரி நடத்துகின்றன.
 
தினமும் காலை, மாலை இருவேளையிலும் தன் வீட்டின் பிரதானக் கதவைத் தாழிட்டுக்கொள்கிறார் சேகர். அந்த இரண்டு மணி நேரமும் வீட்டுக்குள் நுழையவோ, வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை. கிளிகளைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் காலிங் பெல்லையும் மொபைல் போனையும் ஆஃப் செய்துவிட்டு மௌனமாகக் காத்திருக்கிறார் சேகர். மொட்டை மாடி முழுக்க பரவிக்கிடக்கும் அரிசியை உண்பதற்காக எங்கிருந்தோ பறந்து வருகின்றன பச்சை விருந்தினர்கள். 'கீச்... கீச்...’ என்று கிளிப் பேச்சு கேட்பது, அத்தனை இனிமை.
 
''30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். கொஞ்ச வருஷம் முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை. என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 - 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு.
 
 
கொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை
 
 
 
மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது. ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ 600 கிளிகள் தினமும் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும்.
 
அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் அரிசி, கோதுமையை மொட்டை மாடி முழுக்கப் பரப்பி வெச்சிருவேன். ஆறு மணியில் இருந்து கிளிகள் வர ஆரம்பிக்கும். எட்டு மணி வரைக்கும் சாப்பிடும். அதே மாதிரி சாயங்காலம் நாலு மணிக்கு வந்து ஆறு மணிக்கு சொல்லி வைச்ச மாதிரி கிளம்பிரும்.
 
சென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு. இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ ரேஷன் அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்!'' என்றார் சேகர்.