Friday, August 28, 2015

சுந்தர காண்டம் (அழகு ஆணுறை)
 
காண்டம் கண்டுபிடித்த வரலாற்றைத் தேடினால், அது 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட பிரெஞ்சு குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. எகிப்து, இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளின் ஹிஸ்டரியை நோண்டினால், கர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பெண்களின் தலையில் கட்டிவிட்டு, ஆண்கள் ஹாயாகக் காரியம் நடத்தியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
 
சற்று பின்னோக்கி வந்தால், 'ஆண்டோனினஸ் லிபராலிஸ்’ என்னும் கிரேக்க அறிஞர்தான் 'மினோஸ்’ என்னும் நாட்டுப்புறக் கதையில் காண்டம் பற்றி பேசியிருக்கிறார். மினோஸ் என்கிற அரக்கன், தன் உயிர் அணுவில் கலந்துவரும் நாகங்களையும் தேள்களையும் 'ஃபில்டர்’ பண்ணுவதற்காகத்தான் காண்டம் உபயோகப்படுத்தினானாம். அதுவும் ஆட்டின் சிறுநீரகப் பையை காண்டமாக உபயோகித்தானாம்.
 
சீனர்கள் பட்டுத்துணியையும் எண்ணெய்க் காகிதங்களையும் காண்டமாக உபயோகித்திருக்கிறார்கள். எகிப்தியர்கள் விலங்குத் தோல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பானியர்கள் சில விலங்குகளின் கொம்புகளையே பயன்படுத்தியிருப்பதைப் படிக்கும்போது 'கிர்’ரென இருக்கிறது.
 
15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, உலகம் எங்கும் படையெடுப்புகளை நடத்திய மேற்கத்திய நாடுகளின் படைவீரர்கள், 'சிப்லிஸ்’ என்னும் பால்வினை நோயால் அவதிப்பட, அவர்களின் அறிவியல் உலகம் விழித்துக்கொண்டு யோசித்திருக்கிறது.
 
16-ம் நுற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த காப்ரியேல் ஃபெலாப்பியோ என்னும் மருத்துவரின் கடும்முயற்சியால், தற்போதைய காண்டத்தின் முதல் வடிவம் கிட்டத்தட்ட உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு சில நூற்றாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு நாம் இன்றுபார்க்கும் ரப்பரால் ஆன காண்டம் பல்வேறு ஆராய்ச்சிகளின் வழியாக உருவாகியிருக்கிறது. காண்டம் கதை, இப்படி பல 'காண்டங்களையும்’ 'கண்டங்களையும்’ தாண்டி, இந்த நூற்றாண்டிலும் எக்ஸ்ட்ராவாக நீள்கிறது!

Friday, August 21, 2015

படித்ததில் பிடித்தது 
 
நீங்கள் காதலித்திருப்பீர்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த இடத்தில் நான் சொல்கிறேன்... உங்கள் காதலரின் உடலுக்காக அதாவது அவரோடு பாலுறவுகொள்வதற்காக, உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதற்காக அதாவது இந்த மனித இனம் தழைத்திருக்க உடலின் சுரப்பிகளும் மூளையும் போடும் வேதியியல் நாடகம் மட்டும்தான் 'காதல்’ என்பது. இப்படித்தான் அறிவியல் சொல்கிறது. இதை ஒப்புக்கொள்கிறீர்களா? நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்படித் தர்க்கபூர்வமாக, அறிவியல்பூர்வமாக எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, 'அடடா இவ்வளவுதான் மேட்டரா?’ எனத் தெளிந்த பின்னும், நாளையோ அதற்கு மறுநாளோ உங்கள் காதலரைச் சந்திக்கும்போது, ஏதோ ஒன்று மெள்ள 'நுரை ததும்பி’ உங்களில் நிறையும்... அது என்ன?
கண்டிப்பாக அறிவோ தர்க்கமோ அல்ல... அது உணர்வு. இந்த உணர்வுதான் இயற்கையின் விருப்பமாக இருக்கிறது என யோசிக்கவைத்தது,
 
 நான் படித்த ஒரு இயற்கையியல் புத்தகம். 'முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’. ஆசிரியர், ம.செந்தமிழன்.
புத்தகத் தலைப்பைக் கவனியுங்கள். மரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும் என்பது நாம் அறிந்த லாஜிக். ஆனால், ஆதி பூமியில் மரங்கள் உருவாவதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே மழை பெய்துகொண்டிருந்தது. அது இயற்கையின் விருப்பம் என்னும் உணர்வு. அந்த விருப்பத்தின் துளிகள்தான் விலங்குகள், மனிதர்கள், மரங்கள்.
மனிதன் மட்டுமே இயற்கையின் மையம் அல்ல என்ற பேருண்மையை உணர்ந்துகொள்வோம் நாம்!

Thursday, August 20, 2015

ஸ்மார்ட் போன்
நண்பனா ?! வில்லனா ?!
கார்க்கிபவா

'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் மொபைலில் மூழ்கியிருக்க வேண்டும் பல நேரங்களில்?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! 
 
இதுவரை ஒரு மனிதனின் ஆதாரமாக அம்மா, அப்பா, காதலி, நண்பன் என ஏதோ ஓர் உறவாக சகமனிதர்களே இருந்திருக் கிறார்கள். ஆனால், அந்த இடத்தை அசுரகதியில் ஆக்கிரமித்துவிட்டது 'ஸ்மார்ட் போன்’!
 
மொபைலை உடலின் முக்கிய அங்கமாகவே கருதுகிறது இளைய தலைமுறை. அதனால்தான்  எந்நேரமும் மொபைலுடனே அலைகிறார்கள். குளிக்கும்போதும் உறங்கும்போதும்கூட விலகுவதே இல்லை. மொபைலைப் பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்டதுபோல பதறுகிறார்கள். அமெரிக்கர்கள் இடையே சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் பத்தில் ஒருவர் உடலுறவுகொள்ளும்போதுகூட மொபைலை எட்டிப் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். 'அமெரிக்கர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு பொய் சொல்கிறார்கள். ஆசியாவில் பத்தில் ஐந்து பேர் 'அப்போதும்’ மொபைலைப் பயன்படுத்தவே செய்கிறார்கள்’ என அதிர்ச்சி தருகிறது இன்னொரு சர்வே!
 
'ஸ்மார்ட்போன் இல்லா மனிதன் அரை மனிதன்’ என ஆக்கிவிட்டது நாகரிகம். மொபைல்போன்கள் நம் வேலையை விரைவாகவும் திறம்படவும் முடிக்க உதவுகின்றன என்பது நிச்சயம் உண்மை. தனிமனிதனின் புரொடக்ட்டிவிட்டியை மொபைல்போன் இரட்டிப்பாக்கிவிட்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம், 'தண்ணீர் வேண்டுமா, பாத்ரூம் போறீங்களா?’ எனக் கேட்பதைப்போல 'WiFi பாஸ்வேர்டு வேண்டுமா?’ எனக் கேட்பதும் விருந்தோம்பல் என மாறிவிட்டது. 'பேட்டரி ஃபுல்’ என்பதே வெளியே கிளம்புவதற்கு நல்ல நேரம். ஒரு நிமிடம் கிடைத்தாலும், மொபைலில் மூழ்கி முந்தைய நொடியில் உலகில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கிறோம்; கேண்டி கிரஷில் யாருக்கேனும் 'உயிர்’தந்து உதவுகிறோம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணினியும் இணையமும் மக்களிடம் சென்றுசேர எடுத்துக்கொண்ட காலத்தைவிட  ஸ்மார்ட்போனுக்குக் குறைவான காலமே தேவைப்பட்டிருக்கிறது. அப்போது மெயில் அனுப்பிய அப்பாக்களை விட, இப்போது மொபைலில் லைக் போடும் அம்மாக்கள்தான் அதிகம். ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் நகராத நொடிகளை வேகமாக நகர்த்துவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கிறது. அதே சமயம், அதிதீவிர மொபைல் பயன்பாடு மனிதனின் இயல்பையே மாற்றுகிறது எனப் பதறவைக்கின்றன ஸ்மார்ட்போன் ஆய்வுகள்.
நான்கு நண்பர்கள் கேன்டீனுக்கு வருவார்கள். இடம் கிடைத்து அமர்ந்த பின் எல்லா கைகளையும் ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமிக்கும். அரட்டை அடிக்க வந்தவர்கள் மொபைலில் அப்டேட்ஸ் தட்டிக்கொண்டிருப்பார்கள். உச்சக்கட்ட காமெடியாக, எதிரில் இருப்பவருக்கே வாட்ஸ்அப்பில் ஏதேனும் ஃபார்வர்டு செய்தி அனுப்புவார்கள். அவரும் அனுப்பியவரை நிமிர்ந்து பார்க்காமலே, அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.  
 
முன்பு குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் இருந்தது. இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் என பல இலவச மெசெஞ்சர்கள் வந்துவிட்டன. இதனால் தேவையோ இல்லையோ எப்போதும் எதையாவது டைப்செய்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டே ட்விட்டுகிறார்கள். 15 நொடிகளுக்கு மேல் சிக்னலில் நின்றால், மொபைலை எடுத்து நோண்டுகிறார்கள். சிலர் கார் ஓட்டிக்கொண்டே மெசேஜ் அனுப்புவதும் உண்டு. சாப்பிடும்போதும் கையில் மொபைல். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யப் பழகிக்கொள்வதால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல்போகிறது. 'மல்ட்டிஸ்கில்’ என்பதும், 'மல்ட்டிடாஸ்க்’ என்பதும் வெவ்வேறு.  'மல்ட்டிடாஸ்க்கிங்’ என்பது எந்த வேலையும் ஒழுங்காக நடக்காமல் சிக்கலாக்கிக்கொள்ளும் வழிமுறைதான்.
 
பீட்சா வட்டமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதை முக்கோண வடிவமாகத்தான் பார்ப்பார்கள். அதுபோல, ஸ்மார்ட்போனிலேயே வாழ்பவர்களுக்கு நண்பர்கள் என்பவர்கள்கூட நம்பர்கள்தான். மொபைல் மூலமான உரையாடலில் நன்றாகப் பேசும் இவர்கள் நேரில் பேசவே அஞ்சுவார்கள். மனிதர்களின் அடையாளமே இவர்கள் பார்வையில் மாறியிருப்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயம். மொபைல் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள், 'ஸ்மார்ட் தீவு’ என்ற மாய வலைக்குள் சிக்கிக்கொள்வதாகத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
தினம் ஒரு புதுப் பிரச்னையை உருவாக்கும் ஸ்மார்ட்போன்களின் இப்போதைய சங்கடம்...  செல்ஃபி. நம்மை நாமே படம் எடுத்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? இருக்கிறது. அமெரிக்காவில் டீன் ஏஜ் பெண் ஒருவர் ஒரே இரவில் 2,000 செல்ஃபிக்கள் எடுத்திருக்கிறார். அதைவிடக் கொடுமை, அந்த செல்ஃபிக்கள் எவையுமே திருப்தி தராமல் மறுநாள் காலை தற்கொலை செய்துகொண்டார். இப்படியான சம்பவங்கள் அதிகரிக்கவும், செல்ஃபி மீதான அதீத ஆர்வத்தைப் புதுவித மனநோய் என வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.  
 
அதிர்ச்சியாக இருக்கிறது... சராசரியாக நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவழிக்கிறார்களாம் இந்திய இளைஞர்கள். இதனால் உடல் எடை பிரச்னை, முதுகு வலி எனப் பல கோளாறுகள் வருகின்றன. சிறு வயதில் நம் இடது மூளை வளர்ந்து, பின் வலது மூளை வளரும். ஆனால், ஸ்மார்ட்போன் பயன்பாடு இடது மூளை வளர்ச்சியை மட்டுமே ஊக்குவிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் மனிதர்களுடன் உரையாடாமல் மொபைல், டேப்லட் போன்ற 'இன்ட்டராக்டிவ்’ கருவிகளுடன் அதிக நேரம் செலவிட்டால் அவர்களது யோசிக்கும் முறையே மாறிவிடும். மனிதர்களையும் அவர்கள் இன்னொரு கருவியாக மட்டுமே பார்ப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் அன்பு, பாசம், பயம் போன்ற எந்த மனித உணர்வுக்கும் வேலையே இருக்காது என எச்சரிக்கிறார்கள்.
 
சரி... இதற்கு எல்லாம் என்ன தீர்வு? மொபைல் இல்லாமல் ஒரு நாள் முழுக்க  இருப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால், குறைக்க வேண்டும்! அத்தியாவசிய அழைப்புகள், அலுவலக விஷயங்கள் தவிர, மற்ற எதையும் பயன்படுத்தாமல் உங்கள் மொபைலுடன் ஒரு நாள் இருந்துபாருங்கள். இருக்க முடியாமல் தவித்தால், நீங்கள் எந்த அளவுக்கு மொபைலுக்கு அடிமையாகியிருக்கிறீர்கள் எனப் புரியும். தொழில்நுட்ப வளர்ச்சியும் பணத்தைப்போலத்தான். நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரைதான் அது வரம். அதன் கட்டுப்பாட்டில் நாம் போய்விட்டால், சாபம்!

வினையாகும் விளையாட்டு!
 
மொபைலில் இளைஞர்களின் நேரத்தை அதிகம் தின்பது வாட்ஸ்அப் அல்ல; கேம்ஸ். 'நான் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட ஆரம்பிச்சப்போ பசி, தூக்கம் மறந்து விடிய விடிய விளையாடினேன்’ எனப் பெருமையாகச் சொல்வோம். ஒரு டச் ஸ்கிரீன் மொபைலின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் என்றால், விடாமல் தொட்டுத் தொட்டு விளையாடுவதால், ஆறு மாதங்களிலேயே மொபைலை முடமாக்கிவிடும் விளையாட்டுக்கள். இதற்காகவே மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், மில்லியன் டாலர்களைக் கொட்டி விதவிதமான விளையாட்டுக்களை உருவாக்க உதவுகின்றன. மொபைல்போன்கள் செயல் இழக்க செயல் இழக்க... மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம்தானே!

மொபைல் எனும் ரிமோட்!
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மிந்த்ரா, தனது இணையதளத்தை மூடிவிட்டது. மொபைல் மூலமாக மட்டுமே பொருட்களை வாங்க முடியும். ஏனெனில், மொபைல் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் நம் செயல்திறன் குறைகிறது. பார்ப்பதை எல்லாம் ஓகே செய்யும் முடிவுக்கு நாம் தள்ளப்படுகிறோம். கணினிபோல பல தளங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியாமல்போகிறது. நம் மொபைல் சொல்லும் அனைத்து தகவல்களையும் 'உண்மை’ என நம்புகிறோம். யாரோ ஒருவர் நம்மை நம் மொபைல் மூலம் கட்டுப்படுத்திச் செயல்படவைக்கிறார் என்பதை உணர மறுக்கிறோம்!

மொபைல் மோகம் குறைக்க...
1) காலையில் எழுந்தவுடன் மொபைலில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையும் பார்க்காதீர்கள்.
 
2) தேவை ஏற்படும்போது மட்டும் மொபைலைப்  பயன்படுத்துங்கள். சும்மா இருக்கிறோமே என
மொபைலைக் கையில் எடுக்கும் அடுத்த சில நொடிகள், பல மணி நேரங்களைக் கபளீகரம் செய்யலாம்!

3) என்ன அவசரமாக இருந்தாலும் சில இடங்களில் மொபைலை எடுப்பது இல்லை எனத் தீர்மானமாக இருங்கள்... போக்குவரத்து சிக்னல், கார் ஓட்டும்போது, மருத்துவமனை, துக்க வீடு, வகுப்பறை என்பதுபோல.

4) நீங்கள் மொபைலை எப்படியெல்லாம் உபயோகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணித்துச் சொல்லவும் சில ஆப்ஸ் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்கள்!

5) மற்ற முக்கிய வேலைகள் இருக்கும்போது, ஆஃப்லைன் போய்விடுங்கள். 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்க, ஸ்மார்ட்போன் உங்கள் வாழ்க்கைத் துணை கிடையாது!

Wednesday, August 12, 2015

கீரைகளின் பயன்கள்
 
* குடும்பக் கீரைகள்    –  தண்டாங்கீரை, அரைக்கீரை, சிறுக்கீரை

* மரவகைக் கீரைகள் – முருங்கை, அகத்தி
* களைகளாக வளரும் கீரைகள் – குப்பைகீரை, தொவுளிக்கீரை
* கொடி வகைகக் கீரைகள் – தூதுவளை, பிரண்டை
* வாசனைக் கீரைகள் – புதினா, கொத்தமல்லி
 
பயன்கள்
* உடலுக்குத் தேவையான உயிர்சத்துக்களையும், தாது உப்புக்களையும்  
  கொடுக்கின்றன.
* நோய்களைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.
* நல்ல கண்பார்வை பெற உதவுகிறது.
* தோல் வளர்ச்சிக்கும், தோலை பளபளப்பாக, மிருதுவாக வைத்துக்  
  கொள்ளவும் உதவுகின்றன.
* பற்களையும், எலும்புகளையும் பாதுகாக்கின்றன.
* நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்ய உதவுகின்றன.
* மலச் சிக்கலை நீக்குகின்றன.
* இரத்த சோகையைத் தீர்க்கின்றன.
* இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கவும், இதய நோய்
   வராமல் தடுக்கவும் பயன்படுகின்றன.
* புற்றுநோய், நீரிழிவு நோய்களைத் தவிர்க்கவும், அதிகமான உடல் எடையை
  குறைக்கவும் பயன்படுகின்றன.
 
கீரைகளை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவைகள்:
* நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுபவர்கள் சிறுகீரை, அகத்திக்
  கீரைகளை உண்ணக் கூடாது. ஏனெனில் எவ்வளவு வீரியமிக்க மருந்தாக  
  இருந்தாலும் அதன் தன்மையை முறியடித்துவிடும்.
* சிறுகீரையை சமையல் செய்யும்போது இஞ்சி, பூண்டு, பெருங்காயம்
   சேர்ப்பதை தவிர்க்கவும். அப்போதுதான் அதன் முழுபலனை பெற முடியும்.

* பருப்புக் கீரை மிகவும் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. எனவே சீதள
  உடம்புவாகு கொண்டவர்கள் இக்கீரையை ஓரளவுக்குத்தான் சாப்பிட
  வேண்டும். அடிக்கடி சாப்பிடுவதால் கரப்பான், வயிற்றுக் கிருமி உண்டாகும்.

* முருங்கைக் கீரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதியாகும். இதனை
   பகல் நேரத்தில்தான் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிடக் கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் அரைக்கீரை சேர்க்க வேண்டாம்.
* அகத்தி கீரையை அவசரமில்லாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
   சிலருக்கு பேதியாகலாம்.
* அகத்தி கீரையில் தேங்காய்பால், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து 
   சமைப்பதால் அதிக பலன் கிடைக்கும்.
* அகத்திக் கீரை,சிறு குறிஞ்சான் கீரைகளை எண்ணெய்யில் தாளிக்கக்
  கூடாது. மருத்துவ குணம் அகன்று விடும்

Thursday, June 4, 2015

வெற்றிலை போடும் பழக்கம்
 
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
 
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது
 
இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
 
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
 
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது.
 
புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும். இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
 
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
 
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
 
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Wednesday, May 20, 2015

இன்ப சுற்றுலாவில் ஏன் இன்பமே இல்லை ?
ஆர்.சரண்
 
க்னி வெயில், உச்சந்தலையில உளி வெச்சுக் கொத்த ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் என்ன... கூட்டம் கூட்டமா டூருக்குக் கிளம்புவாங்களே நம்ம ஆளுங்க! மொத்தப் பூமிப் பந்தும் பரந்து விரிஞ்சுகிடக்க, 'மிடில் கிளாஸ் மாதவன் சூழ்’ தமிழ்நாட்டுல பெரும்பாலும் சம்மர்னா ஊட்டி, கொடைக்கானல்தானே குல வழக்கம். 
 
இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரம். சுற்றுலா போறதை சாமி குத்தமா நினைக்கிற நாடுகளைப் பத்தி அமெரிக்கப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 'சுற்றுலாப் பொழுதுகளை மோசமாகக் கழிப்போர்’ பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்! எங்கே போகப்போறோம், எங்கே தங்கப்போறோம் என்ற திட்டமிடல் இல்லாமல் கிளம்பிப் போறது, சுற்றுலாவுக்குப் போன இடத்துலயும் ஆபீஸ் வேலையை உட்கார்ந்து செய்றது... இந்த ரெண்டு காரணங்களும் இந்தியர்களின் சுற்றுலாவை வெற்றுலாவா மாத்தியிருக்குனு அந்த ஆய்வு சொல்லுது.
 
ஆக, 'நாங்களும் டூர் போனோமே... டூர்!’ என ஃபேஸ்புக்கில் போட்டோ போடவே கிளம்பிப் போறவங்கதான் இங்கே அதிகம் மக்களே. அதைக்கூட மன்னிச்சுடலாம். ஆனா, போறது டூருக்கு... அதுக்கு வீட்டு பீரோல இருக்கிற பாதி உடுப்புகளை லக்கேஜ்னு அமுக்கி வெச்சுட்டு சாதா ரயிலை கூட்ஸ் வண்டியா மாத்துவோம் பாருங்க... மன்னிக்கவே முடியாத கும்பிபாகக் குற்றம் அது. அது போதாதுனு போன இடத்துலயும் ஏதோ காணாததைக் கண்ட மாதிரி டி-ஷர்ட், பனியன், ஜட்டிகளை பார்சல் பண்ணி எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஏத்திக்குவோம்.
 
கூகுள் மேப்ல பார்த்த அத்தனை இடங்களையும் ஒரே நாள்ல சுத்திப் பார்க்கலைனா, சாமி கண்ணைக் குத்திடுமா? தெரியாமத்தான் கேட்கிறோம்... குட்டி குலுவான்களையும் சீனியர் சிங்கங்களையும் இழுத்துட்டு, 'இது பேரீச்சம் லேக், இது செட்டியார் பார்க், இது கோக்கர்ஸ் வாக், இது பிரையன்ட் பார்க், இது டால்ஃபின் நோஸ்’னு ரன்னிங் கமென்ட்ரிலயே இடங்களைக் காட்டிட்டு ஹோட்டலுக்கு வந்து கட்டையைச் சாய்க்கிறது... பாவம் பாஸ். அலைஞ்ச அலைச்சல்ல மொத்தக் குடும்பமும் எக்ஸ், ஒய், இஸட் ஷேப்ல மட்டையா மடிஞ்சு ஹோட்டல்லயே தூங்கிக் கிடக்கிறதுக்குப் பேர்தான் இன்பச் சுற்றுலாவா?
அட... இதைக்கூட விட்டுரலாம். இந்த பேச்சுலர் பசங்க பண்றதைப் பத்தி சொல்லவே பயமா இருக்கு! நாலு சுவத்துக்குள்ள பண்ற அம்புட்டு கரைச்சல்களையும் 'ஓப்பன் பப்ளிக்’ல பண்றதுக்குப் பேர்தான் அவங்களைப் பொறுத்தவரை டூர்! வீட்டை விட்டுக் கிளம்பின பத்தாவது நிமிஷம் காருக்குள்ளயே கதகளியை ஆரம்பிச்சுடுறான். சரக்கடி உற்சவத்தை முடிச்சுட்டு இலக்கை அடையிறதுக்குள்ள நாலுவாட்டி மசக்கை ஆகிடுவான். அங்கே போன பிறகு... என்ன நடக்கும்? மறுபடியும், 'அதாரு... உதாரு...’னு காட்டாறா சரக்கைப் பாய்ச்சுவான். இப்படி நித்தம் மூணு வேளை குளிகை கணக்கா குடிமேளா நடத்திட்டு வீடு திரும்புறப்போ, மனசுல மங்கலாக்கூட எந்த ஊருக்குப் போனோம்னு ஞாபகம் இருக்காது!
 
சென்னைக்கு ஓரளவுக்கு அருகே இருக்கும் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போனீங்கன்னா... ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். கடற்கரை ஓரமா வெளிநாட்டு டூரிஸ்ட்கள் ஷோக்கா ஒரு சேர்ல சாய்ஞ்சுட்டே கையில புத்தகமோ, காதுல ஹெட்செட்டோ வெச்சுட்டு அமைதியா கடலைப் பார்த்து ஏகாந்தத்தை ரசிப்பாங்க. கடல்ல இறங்கி சாஃப்ட்டா குளிப்பாங்க. அவங்க குழந்தைங்க ஒரு பக்கம் மணல்ல வீடு கட்டி கிரியேட்டிவ்வா விளையாடுவாங்க. அதிகபட்சம் 2,000 ரூபாய்க்கு அந்த ஊர்ல மட்டுமே கிடைக்கும் ஏதேனும் விசேஷ வஸ்துகளை வாங்குவாங்க. நல்லா வகைதொகையா சாப்பிட்டு, நிம்மதியா தூங்கிட்டு ஊரைப் பார்க்கப் போயிருவாங்க. இதுதான் அவங்களோட ஒட்டுமொத்த இந்திய வெக்கேஷன். 'டூர் போனோமா... உடம்பையும் மனசையும் சார்ஜ் ஏத்தினோமா... மனசு முழுக்க இனிப்பு நினைப்புகளோடு ஊருக்குத் திரும்பினோமா’னு இருப்பாங்க.
 
ஆனா, நம்மாளுங்க பண்ற அலப்பறை இருக்கே! 'எச்சரிக்கை... மிக ஆபத்தான கடற்கரை. கடந்த ஒரு வருடத்தில் இங்கு 46 பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள்’னு எச்சரிக்கிற பலகையை எத்தி மிதிச்சுட்டு, அந்த அபாயப் பிரதேசத்தில் குடும்பத்தோடு குட்டிக்கரணம் அடிச்சு வித்தை காட்டுவான். ரெண்டு வாட்டி மணலோடு கலந்த உப்புத் தண்ணியைக் குடிச்சு புரையேறி இருமிட்டு, சுத்திமுத்தி பார்த்து... 'யாரும் பார்க்கலையே... பார்க்கலையே’னு பெருமைப்பட்டுக்குவான். சுண்டல், காரப்பொரி, ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், சோளம், மிளகா பஜ்ஜினு வெறிகொண்ட மிருகம் கணக்கா வேட்டையாடுவான். கொடைக்கானல் குணா குகையைப் பார்த்ததுமே, கமல் போல மாறி மத்தவங்களுக்கு மரண பயத்தை உண்டாக்குவான்.
 
அட சம்மர் டூரைவிட... இந்த சம்மர் டூருக்குக் கிளம்புற ஆயத்தம் இருக்கே... கண்ணு வேர்த்திரும்! தினம் 7 மணிக்கு அடிக்கிற அலாரம் அன்னைக்கு மட்டும் 3 மணிக்கே அடிக்கும். இயல்பா பேய்த்தனமா வேலை பார்க்கிற அம்மா அன்னிக்கு ரத்தக்காட்டேரியாவும் மாறி பரபரப்பா வேலை பார்ப்பாங்க.
 
'புளியோதரை’ - இது சுற்றுலா செல்லும் தமிழனின் தேசிய உணவா பாஸ்? சாதத்தை வடிச்சுக் கொட்டி, புளியைக் கரைச்சு ஊத்தி, அழகா வாழை இலை வெட்டி, ஊசிப்போற துவையலோடு சேர்த்துப் பொட்டலம் கட்டி, மொத்தக் குடும்பத்துக்கும் டிரெஸ் எடுத்துவெச்சு, எல்லாரையும் கிளப்பி ரயிலைப் பிடிக்க அரக்கப்பரக்க ஓடி வந்தா... அன்னைக்குனு அதிசயமா ஒரு மணி நேரம் தாமதமா வரும் ரயில். அப்புறம் என்ன... மசமசனு விடியும்... பகபகனு பசிக்கும். புளிச்சாதம் பார்சல் விநியோகிக்கப்படும். சோத்து மூட்டையில கால்வாசியைக் காலி பண்ணிட்டு, ரயில்ல ஏறி உக்கார்ந்து லக்கேஜ் பையைப் பார்த்தா, ஒரு பாக்கெட் வாயைப் பிளந்து ஒட்டுமொத்த பையையும் நாசம் பண்ணிருக்கும். அத்தானின் ஃபேவரிட் டி-ஷர்ட் 'ஆயில் ஷர்ட்’டா மாறியிருக்கும். கடுப்புல வீட்டு அம்மணிக்குத் திட்டு விழ, பதிலுக்கு அந்த அம்மா சும்மா இருக்குமா? சங்கர் சிமென்ட் ஆன்ட்டியா மாறி, 'கிளம்புறப்போ வீட்டைப் பூட்டினீங்களா?, கியாஸை ஆஃப் பண்ணீங்களா?, பீரோவைச் சாத்துனீங்களா’னு தேனீ கூட்டைக் கலைச்சுவிடுவாங்க. குடும்பமே 'டவுட்டு தனபாலா’ மாறி கதிகலங்கி நிக்கும்.
 
இப்படியான ரணகளங்களுக்கு மத்தியிலும் எப்படியோ பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போயாச்சுப்பா. ஊட்டிக்குப் போனா தொட்டபெட்டா டெலஸ்கோப்ல மேகமூட்டம் வானத்தைப் பார்க்க, மூணு மணி நேரம் தேவுடு காத்து க்யூல நிப்பான். கொடைக்கானல் மலர் கண்காட்சியில் தீபாவளி சீஸன் ரங்கநாதன் தெரு கணக்கா கூட்டம் அம்மும். வியர்க்க விறுவிறுக்க ஆளுங்களை முட்டி மோதித் திரிஞ்சு முட்டி தேய செட்டிலாவான். சாப்பாட்டை ஃபுல் கட்டு கட்டிட்டா, 'இன்னும் ஏன்டா முழிச்சுட்டு இருக்க கைப்புள்ள... தூங்கு’தான். இதுல குடும்ப உறுப்பினர்களோடு மனம்விட்டு என்ன பேசுறது?! 'அட... பேசிட்டு இருக்கிற நேரத்துல ஏரியை இன்னொரு ரவுண்டு அடிக்கலாம்ல’னு அபத்தமா கேள்வி கேப்பாங்க நம்மாளுங்க.
 
இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் வந்ததுல இருந்து, கம்பளியை இறுக்கிப் போத்திட்டு தூங்கிட்டே இருப்பாங்க சிலர். காட்டேஜ்காரன் இலவசமா ஏற்பாடு பண்ற கேம்ப் ஃபயருக்குக் கூப்பிட்டாக்கூட, 'கங்கு கண்ணுல பட்ருமே... ஆத்தாடி... என்னா குளிரு சாமி!’னு ஃபீல் பண்ணுவாங்க. ஊட்டி, கொடைக்கானல்ல குளிரடிக்காம அனலா அடிக்கும் செல்லம்?! ஊட்டியில செல்ஃபி எடுக்கிறதைவிட குல்ஃபி சாப்பிடுறதுல கிக் அதிகம்னு எப்போ உணர்வீங்க?
 
'ஓய்... குத்தம் சொல்றவன் மனுஷன்; வழிகாட்டுறவன் பெரிய மனுஷன். நீ மனுஷனா... பெரிய மனுஷனா?’னு நீங்க கேட்கிறது புரியுது. அந்த அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியே மகிழ்ச்சியான சுற்றுலாவுக்கு சில டிப்ஸ் கொடுத்திருக்காங்க. அதையும் காதுல போட்டுவிடுறோம்...
 
* கொடைக்கானலோ கோவாவோ... எங்கேயும் ப்ளான் பண்ணிக் கிளம்பணும். பல வலைதளங்கள் பார்த்து கையைக் கடிக்காத பட்ஜெட்ல ஹோட்டல் புக் பண்ணிட்டு நிம்மதியா கிளம்புங்க. ஏன்னா, 'பட்ஜெட் பிக்னிக்’னு ஏலகிரி போய் இறங்கிட்டு, 'என்ன இங்கே ஒண்ணுமே இல்லை?’னு கேட்கிறதுல அர்த்தமே இல்லை. செலவைக் குறைக்கத் திட்டமிடலாம். ஆனா, அதுலயே கடமை கண்ணாயிரமா இருக்கேன்னு சுற்றுலா சந்தோஷத்தை அனுபவிக்க மறந்துராதீங்க!
 
* சின்ன கல்லு... பெத்த லாபம்! கொஞ்சம் லக்கேஜ்... நிறைய சந்தோஷம். எந்த ஊர், எந்த சீஸன்... அதுக்கு ஏத்த மாதிரி திட்டம் போட்டாலே, லக்கேஜ் அளவைக் குறைச்சிரலாம். ஸ்வெட்டர் எடுத்துட்டு ராமேஸ்வரம் போக வேணாம்... பெர்முடாஸ் போட்டுட்டு ஊட்டிக்குப் போக வேணாம்.
 
* அனுபவி ராஜா அனுபவி! முடிஞ்சவரை மொபைல், லேப்டாப் போன்ற எந்திரன்களுக்கு தடா போடுங்க. சுற்றிலும் இருக்கிற இயற்கையை ரசிச்சு மகிழுங்க. ராத்திரி தூறல்ல நனையிறது, அதிகாலைச் சூரியனை ரசிக்கிறதுனு அந்தந்தத் தருணங்களை அதற்கு உண்டான சந்தோஷத்தோடு கொண்டாடுங்க. சுற்றுலாவில், டெட்லைன் கிடையாது; டார்கெட் கிடையாது. கடல் அலையை ரசிச்சபடி அரை மணி நேரம் கூடுதலா காற்று வாங்கினா, குடிமுழுகிப்போயிடாது. 'சூசைட் பாயின்ட்’ படங்கள் வேணும்னா, கூகிள்ல மழையாக் கொட்டும். அங்கே போய் அந்த அபார மலைச் சரிவை ரசிக்காம, கேமரா ஆங்கிள் பார்த்துட்டு இருக்காதீங்க.
 
* ரெஸ்ட் இஸ் பெஸ்ட்! சுற்றுலாவின் முக்கியமான அம்சம்... ஓய்வு. புளியோதரையைக் கிண்டிட்டு வந்துட்டோமேனு கிண்டி ரேஸ் குதிரை மாதிரி சுத்திட்டே இருக்கணும்னு அவசியம் இல்லை. 'நாய்க்கு வேலை இல்லை... நிக்க நேரம் இல்லை’ங்கிற மாதிரி அலைய எதுக்கு அம்புட்டு தூரம் போகணும்? ஒரு நாளின் பாதியை அலைச்சலுக்கும்... மீதியை ஓய்வுக்கும் ஒதுக்குங்க.
கட்டக்கடைசியா...
 
பல ஐரோப்பிய நாடுகள்ல சுற்றுலாவை சலுகையாப் பார்ப்பது இல்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவைனு சட்டமே சொல்லுது. 'நூறு புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானது ஒரு பயணம்’னு சீனப் பழமொழி சொல்லுது. ஆனா, இந்தியா போன்ற வளரும் நாடுகள்ல, 'டூரா... தலைக்கு மேலே வேலை கெடக்கே பாஸ்!’னு சொல்லிட்டே இருக்கோம். அதான், இந்தியா டல்லரசாவே இருக்குது... ஆங்!
இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி
-பாரதி தம்பி

'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப் பரவும் செய்தி. அரசின் விளம்பரங்களும் அமோகமாக இருப்பதால், ஆளாளுக்கு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். '12 ரூபாய்க்கு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசியா? அப்படின்னா எனக்கு 10 பாலிசி போடுங்க’ என்கிறார் ஒருவர். 'ஏற்கெனவே நாம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோமே... அதுவும் இதுவும் வேறு வேறா..?’ என்பது பலரின் குழப்பம். சந்தேகங்களுக்கு விடை தேடுவோமா? 
 
இப்போது மத்திய அரசு இரண்டுவிதமான காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஒன்று, விபத்துக் காப்பீட்டுப் பாலிசி. இதில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம். குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, கை, கால், கண் ஆகிய உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்ய முடியும். விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் வரையிலும் க்ளெய்ம் செய்யலாம். '12 ரூபாய்தானே’ என்பதற்காக 10, 20 பாலிசிகள் எடுக்க முடியாது. ஓர் ஆளுக்கு ஒரு பாலிசிதான். அதற்கும் வங்கியில் சேமிப்புக் கணக்கு அவசியம். பிரீமியம் தொகை, ஒவ்வோர் ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்துதான் எடுக்கப்படும். இந்தத் தொகைத் திருப்பித் தரப்பட மாட்டாது.
'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்பது இரண்டாவது திட்டம். அதாவது, 'பிரதம மந்திரி வாழ்க்கை ஒளி காப்பீடுத் திட்டம்’. இதன்படி ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசிதாரர் எந்தக் காரணத்தினால் மரணம் அடைந்திருந்தாலும் அவரது நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வருடாவருடம் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். இதில் கட்டப்படும் பிரீமியமும் திரும்பத் தரப்பட மாட்டாது.
 
'இந்த இரண்டு பாலிசிகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன், ஒன்றில் அவ்வளவு குறைந்த தொகை..?’ என்றெல்லாம் பலப்பல குழப்பங்கள் நிலவுகின்றன. காப்பீடு தொடர்பான அடிப்படை விவரங்களை இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் விளக்குகிறார்.
 
''இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோமென்ட் பாலிசி (Endowment policy). இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இன்ஷூரன்ஸ் என்றாலே ஒரு முதலீடு என்பதைப்போல நம் ஊரில் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
 
முதலீடு செய்ய லாபகரமான வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டுகிறீர்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்.          20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும் எனச் சொல்வார்கள். இது 4 முதல் 6 சதவிகித லாபம்தான். ஆனால், பாதுகாப்பான பி.பி.எஃப் திட்டத்தில் 8.5 சதவிகிதம் உறுதியான லாபம் கிடைக்கிறது. அதனால் இன்ஷூரன்ஸ் என்பதை முதலீடாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.
 
உண்மையில் டேர்ம் பாலிசிதான் இன்ஷூரன்ஸின் முழுமையான அர்த்தத்தை வழங்குகிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டால், அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அவர் எவ்வளவு சம்பாதித்துத் தருவாரோ, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதற்கான காப்பீடு இது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 10-ல் இருந்து         15 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுக்கலாம். உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய் என்றால், 30 முதல் 45 லட்சம் வரையிலும் டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
 
விபத்துக் காப்பீடுத் திட்டம் என்பது, முழுக்க முழுக்க விபத்து நேர்ந்தால் மட்டுமே க்ளெய்ம் செய்யக்கூடியது. இதற்கான பிரீமியம் குறைவுதான். உதாரணத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு தோராயமாக 200 ரூபாய் பிரீமியம் வரும். உங்களின் வருமான வரம்பைப் பொறுத்து, விபத்துக் காப்பீடு தொகையும் முடிவு செய்யப்படும். இதில் பிரீமியம் எனக் கட்டும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு பணம் சென்றுவிடும். டேர்ம் பாலிசி எடுக்கும்போதே, விபத்துக் காப்பீடையும் அதனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு 'ரைடர்’ எனப் பெயர்.
 
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அல்லது மெடிக்ளெய்ம் என்பது மற்றொரு முக்கியமான பாலிசி. நோய்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில், நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய பாலிசி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து 3 முதல்           5 லட்சம் ரூபாய்க்காவது மெடிக்ளெய்ம் எடுத்துக்கொள்வது நல்லது.
இன்றைய சூழலில் ஒருவர் விபத்துக் காப்பீடு பாலிசி, டேர்ம் பாலிசி, மெடிக்ளெய்ம் பாலிசி ஆகிய மூன்று பாலிசிகளை வைத்திருப்பது அவசியம். விபத்துக் காப்பீடுப் பாலிசியை தனியாக எடுக்காமல், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ஒரு ரைடராகச் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி ஒருவரிடம் எத்தனை எண்டோமென்ட் பாலிசி இருந்தாலும், அத்தனையையும் அவர் க்ளெய்ம் செய்ய முடியும்!''
 
ஏன்... எதற்கு... எப்படி?
தற்போது அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 12 ரூபாய், ஆயுள் காப்பீடு பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் 330 ரூபாய். இரண்டிலும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அடிப்படை சந்தேகங்களுக்கான விளக்கங்கள் இங்கே...
''யாரெல்லாம் இந்த பாலிசிகளை எடுக்க முடியும்?''
''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் எவரும் இதில் சேரலாம்!''  
''சேர என்ன செய்ய வேண்டும்?''
''நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று விசாரித்தால் விண்ணப்பம் தருவார்கள். அதை நிரப்பிக்கொடுத்தால் போதுமானது!''
''வயது வரம்பு என்ன?''
''12 ரூபாய் பிரீமியம் கட்டும் விபத்துக் காப்பீடு பாலிசியில் சேர, 18-70 வயது உடையவராக இருக்க வேண்டும். 330 ரூபாய் பிரீமியம் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசியில் சேர்வதற்கு 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்!''
''ஒருவர், எத்தனை பாலிசிகள் எடுக்கலாம்?''
''ஒரு நபர் ஒரு விபத்துக் காப்பீடு பாலிசியும்,
ஒரு டேர்ம் பாலிசியும் மட்டுமே எடுக்க முடியும்!''
''ஒருவேளை ஒருவர் மூன்று வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், ஒவ்வொன்றின் மூலமாகவும் ஒரு பாலிசி எடுக்கலாமா?''
''முடியாது. அப்படியே எடுத்தாலும் ஏதேனும்
ஒரு பாலிசிதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்!''
''இந்த பாலிசி எனக்கு மட்டும்தானா... குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாமா?''
''குடும்பத்தினருக்குக் காப்பீடு அளிக்காது. விபத்துக் காப்பீடு பாலிசியின்படி விபத்து ஏற்பட்டால் அவரோ, வாரிசுதாரரோ இழப்பீட்டைப் பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசியின்படி, மரணம் ஏற்பட்டால் அவர் குறிப்பிட்டுள்ள வாரிசுக்கு, அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்!''
''இப்போது பாலிசியில் சேர்ந்துவிட்டு, வேண்டாம் என்றால் இடையில் விலக முடியுமா?''
''இது தொடர்பான அறிவிப்புகளில், பாலிசியை இடையில் நிறுத்திக்கொள்வது குறித்த விவரங்கள் இதுவரை குறிப்பிடப்படவில்லை!''
 
''பாலிசி அமைந்த வங்கிக் கணக்கை மாற்ற வேண்டியிருந்தால் என்னவாகும்?''
''நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை, அந்த         ஓர் ஆண்டுக்கானது மட்டுமே. எனவே அடுத்த ஆண்டு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ, நீங்கள் அந்த பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றாலோ,  உங்கள் பாலிசி காலாவதியாகிவிடும். வேறொரு வங்கிக் கணக்கின்மூலம் புதிதாக விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்!''
''க்ளெய்ம் செய்ய, என்ன செய்ய வேண்டும்?''
 
''விபத்துக் காப்பீடு பாலிசியின் மூலம் க்ளெய்ம் செய்ய, விபத்து ஏற்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்., காப்பீடுத் தொகை செலுத்தியதற்கான ரசீது, விபத்து மூலம் மரணம் நேர்ந்திருந்தால் மரணச் சான்றிதழ்... ஆகியவற்றை எந்த வங்கிக் கணக்கின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். 330 ரூபாய் கட்டும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் இதே நடைமுறைதான்!''