Rex Ignatius
Monday, February 3, 2025
டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தவிர, எந்த வங்கிப் பணியாளரும் வாடிக்கையாளரை போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்கவே மாட்டார்கள். சிக்கலில் இருக்கிறேன் என்று பணம் கேட்டு நண்பரிடம் இருந்துவரும் உள்பெட்டி செய்தி அனைத்துமே மோசடிதான்.
பணம் வேண்டும் என்றால் நண்பர்கள் போனில் அழைப்பார்களே தவிர வெறும் செய்தி அனுப்ப மாட்டார்கள்.
பணம் தர வேண்டும் என செல்பேசியில் வரும் எதையும் நம்பாதீர்கள். ‘நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் பேசுவோம், அல்லது உங்கள் அலுவலகத்திற்கு நானே நேரில் வருகிறேன்’ எனச் சொல்லுங்கள்
ஒருவரிடமிருந்து பணத்தை உடனடியாக மோசடி செய்ய வேண்டுமெனில் அவரை யோசிக்கவிடாமல் செய்ய வேண்டும், இதற்கு இரண்டு உத்திகள் போதுமானவை. முதலாவது அவருக்கு அதீத பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கு இன்றுடன் முடக்கப்படுகிறது, நீங்கள் வருமான வரி ஏமாற்றியதால் கைது நடவடிக்கை தொடங்குகிறோம், உங்கள் மகன்/மகள் விபத்தில் சிக்கிவிட்டார், போதைப் பொருள் வழக்கில் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்கள் புகைப்படம் வெளியில் வந்தால் மொத்தச் சமூகமும் சிரிக்கும் என இவையெல்லாம் முதல் உத்தி. போலி லோன் செயலிகளின் கலெக்ஷன் பணியாளர்கள் இதைவிட மார்பிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஆனாலும் துளி பயமின்றி, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
உங்களுக்கு போனஸ் வந்திருக்கிறது, பரிசு விழுந்திருக்கிறது, ஒரு ரூபாய் இன்வெஸ்ட் செய்தால் நூறு ரூபாய், க்ரிப்டோ முதலீடு, வீடியோவை லைக் செய்தால் காசு, ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் காசு என சதுரங்க வேட்டை வகையில் அழைப்புகள் வந்தாலே உஷாராகிவிட வேண்டும்
இந்தச் சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும், இத்தனை லட்சம் உங்களுக்குச் சொந்தம்’ என வரும் அத்தனை அழைப்புகளும் மோசடிதான்.
நம்மைப் பணக்காரனாகவோ, அதிர்ஷ்டசாலியாகவோ ஆக்குவதற்காக எந்த நிறுவனமும் தொடங்கப்படுவதில்லை என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்.
ஒருவேளை மோசடியில் சிக்கிக்கொண்டீர்கள். முதல் முறை பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால், ‘இழந்ததை மீட்கிறேன்’ என மீண்டும் மீண்டும் மோசடியாளர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.
‘சிறிய தொகை... இதைத் தந்தால் போதும், முந்தைய தொகையும் சேர்த்து கிடைத்துவிடும்’ எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெருந்தொகையை மோசடி செய்வதுதான் நவீன மோசடிகளில் மாறாமல் இருக்கும் ஓர் உளவியல் உத்தி.
முதலில் முதலீடு செய்த ஐம்பதாயிரத்தை மீட்க மீண்டும் ஒரு ஐம்பதாயிரம், இப்போது ஒரு லட்சத்தை மீட்க மீண்டும் ஒரு லட்சம் என உங்கள் கவனத்திற்கு வராமலே ஐந்து லட்சத்தை இழந்திருப்பீர்கள். சிறுகச் சிறுக சேமித்தால் எப்படிப் பெரும் பணம் சேருமோ, அதுபோலவே சிறுகச் சிறுக இழந்தாலும் பெரும் பணம் இழப்பு நேரும்,
ஆகவே மோசடியில் ஒருமுறை பணம் இழந்துவிட்டால், புகார் தந்துவிட்டு ‘போனது போனதுதான்’ எனக் காவல்துறை நடவடிக்கைக்காகக் காத்திருங்கள். மோசடியாளர்கள் மீண்டும் அழைத்துப் பணம் கேட்டு மிரட்டுவார்கள், கெஞ்சுவார்கள், கோபமூட்டுவார்கள், அவர்களது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள். முதல்முறை இழந்த மன வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், இரண்டாவது முறை, மூன்றாவது என அனுப்ப அனுப்ப, மொத்தக் கையிருப்பும் கரைந்து வாழ்வு விரக்தியாகிவிடும்.
அதுபோலவே சமூகத்தை இணைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களே இப்போது விலகியிருக்கக் காரணமாக இருக்கின்றன. சதா நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் மனிதர்கள் தெரிவதில்லை. தெரியாத விஷயங்களுக்குப் பணம் அனுப்பும்போது, ஒரு நண்பரிடமாவது கேட்டு, அதுகுறித்த தெளிவுபெற்ற பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.
மேலும் எத்தனை சட்டங்கள் வந்தாலும், தண்டனைகள் கடுமையானாலும், இந்த இணைய வேதாளங்கள் விக்ரமாதித்தனைப் போல நம் முதுகில் அனுதினமும் ஏறத் துடித்துக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் மோசடி அழைப்புகள் மூலம் உங்களைக் குறி வைப்பார்கள். அழைப்பை ஏற்ற முதல் நொடியில், ‘ஆளை விடு சாமி, இது மோசடி' என நீங்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும்
விழிப்புணர்வே மோசடிகளுக்கு எதிரான ஓர் ஆயுதம்!
Saturday, August 31, 2024
தேங்கிய நீர் பாக்டீரியாக்களின் பண்ணை
ஆண்களில் 42 சதவிகிதம் பேரும், பெண்களில் 57 சதவிகிதம் பேரும் உடல்ரீதியாகச் செயலற்றவர்களாக இருக்கிறார்கள்.
உடல் செயல்பாடு இல்லாத இந்த நிலைமை 2000-ல் 22.3% என இருந்தது. 2022-ல் இது 49% என்று உயர்ந்தது. இந்த நிலைமை நீடித்தால், 2030-ல் இந்தியாவில் 60% பேர் போதுமான உடல் தகுதி இல்லாமல், பலவித நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்று அந்த ஆய்வறிக்கை கவலைப்படுகிறது.
இந்த ஆய்வின்படி, போதுமான உடல் உழைப்பும் உடல் செயல்பாடும் இல்லாத மக்கள் வசிக்கும் 195 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 25 வருடங்களில் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்களும் பக்கவாத பாதிப்புகளும் 50% அதிகரித்திருக்கின்றன.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியாகவும், நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 5.5 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.
2016-ல் மட்டும் 2.8 கோடி பேர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார்கள். 1990-ல் புற்றுநோயால் இறந்தவர்கள் 5.5 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை இப்போது 10.6 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
இந்தப் பேராபத்துகளுக்கு, உடல் செயல்பாடு குறைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடல் இயக்கம் ஏன் அவசியம்?
‘வளர்ந்தவர்கள் அனைவருக்கும் தினசரி 45 நிமிடம் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் பயிற்சி உள்ளிட்ட ஒரு காற்றலைப் பயிற்சி (Aerobic exercises) அவசியம். அல்லது வாரத்துக்கு 150 நிமிடம் முதல் 300 நிமிடம் வரை நடைப்பயிற்சி அவசியம்' என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிது.
குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் தினமும் 60 நிமிடம் உடற்பயிற்சி தேவை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அம்மாக்களுக்கும்கூட இது பொருந்தும். இதன்படி செய்தால், அவர்கள் உடல் தகுதி பெறுவது மட்டுமல்லாமல், மனநலமும் உறுதியாகும். வாழ்க்கைத் தரம் உயரும்.
உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களைத் தவிர்க்கலாம். 30% அகால மரணங்களைத் தடுக்கலாம். 8% மனச்சோர்வு மற்றும் மறதி நோயிலிருந்தும் தப்பிக்க முடியும்.
மூத்தோருக்கு எலும்பும் தசைகளும் வலிமை பெற்றுவிடும் என்பதால், நடை தள்ளாட்டமும் தரையில் விழுவதும் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களும் உடல் செயல்பாடு குறைந்து போனதற்குக் காரணம்'' என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் ருடிகர் க்ரெச். ‘‘
அமர்ந்தே பார்க்கும் வேலைகள் அதிகமாகி வருகின்றன. ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்கினோம்.
இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைப்பேசி பொத்தானைத் தட்டி, ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்து விடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக் கொண்டோம்.
கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைப்பேசியைக் கொடுத்து, இணையவழி கற்றலுக்குப் பழக்கப்படுத்தினோம். அவர்கள் கைகளிலிருந்து கைப்பேசியை இப்போது வாங்க முடியவில்லை. வெளியில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள்.
பெரியவர்கள் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். கொரோனா முடிவுக்கு வந்த பின்னும், நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இது நம் ஆரோக்கியத்துக்குக் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?’'
காத்திருக்கும் ஆபத்துகள்
உடல் செயல்பாடு குறைவதால் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மறதி நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்குவது அதிகரிக்கும். மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றால் அகால மரணங்கள் அதிகரிக்கும்
2020-க்கும் 2030-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் 50 கோடி மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
Saturday, September 2, 2023
குழந்தைகளைக் கவனியுங்கள்!
கலைஞர் எனும் பேராளுமை
ஆட்சியாளராக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட முயல்வது வியர்த்தம். ஒற்றை வரியில் சொல்லலாம். இன்று தமிழ்நாடு கண்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களின் ஒவ்வொரு இழையிலும் அவரது பங்களிப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது.
சமூகநீதி ஆட்சியென்பதால் ஒரு சாராருக்கு மட்டுமான ஆட்சியல்ல கலைஞருடையது.
பொது விநியோகத் திட்டம்,
பேருந்துகள் அரசுடைமையாக்கம்,
கூட்டுறவுத்துறை விரிவாக்கம்,
கிராமப்புறம் முழுதும் ஆரம்ப சுகாதார மையங்கள்,
மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி,
அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவபுரம்,
தொழில்துறை வளர்ச்சிக்காக ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்,
ஸ்பிக் போன்ற அரசு-தனியார் கூட்டுத்துறை,
எல்காட்,
மாநில அரசின் கணினிக் கொள்கை,
சென்னை - மதுரை - கோவை என டைடல் பார்க்குகள்,
கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை,
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை,
தமிழில் கற்றோருக்கு முன்னுரிமை...
இலவசங்கள் என இழித்துரைத்துவிட்டு இன்று இந்தியாவே பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் எனும் திராவிட சிந்தனைச் சிற்பியே. வாய் ஓயாமல் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து ஈரமுள்ள / நன்றியுள்ள மக்கள் நெஞ்சில் தனக்கும் அவர்களுக்குமான நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்.
Sugar Free - Health free
உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுடன் வாழ்பவர்கள் சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தாலோ, உணவுகளைச் சாப்பிட்டாலோ, அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை இன்னும் அதிகமாகும். எனவே அவர்கள் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது வழக்கம். இவை தங்களுக்கு ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் இவர்கள் நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.

