இவ் வலைப்பூவின் வாசகனே வாசகியே ( ஹி ஹி ஆசைதான்)
வாசிப்பை நேசிப்பவர்களே
வணக்கம்!
இவ் வலைப்பூவில் இனி
என் கவிதைகளையும் இடலாம்
என்று எண்ணியிருக்கிறேன் ....
நான் கவிதைகளுக்கு புதியவன்
ஆனால் கவிதைகளை ரசிப்பவன்
அதன் ருசியை முற்றுப்புள்ளி வரை
முகர்ந்து சுவைக்க சிறிது தெரியும்.
ஆனால்
இலக்கியமாகவோ
இதிகாசமாகவோ
இலக்கண கோடுகள் வரையவும்
மீறவும் தெரியாது...
ஒவ்வொரு கவிதையும்
ஒரு தலைப்பிரசவம் போலவே
எனக்கு தெரியும்.
உண்மையிலேயே
என் தலை
கவிதைத் தலையையும் உடலையும்
பிரசவிக்க வேண்டும்
ஏற்கனவே குருவித்தலையில் பனங்காய் போலே
சோம்பேறித்தனம் தின்னும் உடலாய் நானிருப்பதால்
எழுதுவதில் நான் உண்மையிலேயே ஒரு ஏழை.
என் சிந்தனையையும் கற்பனையையும்
எழுத நினைக்கையில்
வறுமைக்கோட்டிற்கு அதல பாதாளத்தில்
தொங்கி கொண்டிருப்பேன்.
எழுந்து வர
ஏழு தலை முறை
காத்திருக்க வேண்டும்
அப்படி எழுந்து வந்து
எழுதிய அல்லது
எ.................ழு...........தி........................ய............
என் கவிதைகளில்
செத்துப்போன செதில்கள் இருக்கலாம்
உதிர்ந்து போன இறகுகள் இருக்கலாம்
தொலைந்து போன காலங்கள் இருக்கலாம்
இறந்து போன இயற்கை இருக்கலாம்
கடந்து போன காதல்கள் இருக்கலாம்
.....................................................................
அப்படியென்றால் உன் கவிதைகளில்
உயிர் இருக்காதா என்று
நீங்கள்
எள்ளுவது என் காதை திருகுகிறது
வலிப்பதைக் கூட
சொல்லி விடுகிறேன்
எழுதினால் இன்னும் வலிக்கும்....
சரி
என்னென்னவோ இருக்கலாம்
நிகழ்ந்தவை நினைக்கக்கூடாதவை
இனி நிகழ்பவை
நினைத்துப்பார்க்க கூடாதவை
நிகழ்ந்து கொண்டிருப்பவையோடு
கரைந்து விடுவதை
விரும்புகிறவன் நான்.
இறந்த காலங்களிலும்
வருங்காலங்களிலும்
வாழ்வதை விட
தற்போது ஒவ்வொரு நிமிடமும்
மரித்து கொண்டிருக்கும்
இறப்பில் களிப்பு இருக்கிறது
ஏனென்றால்
மரணம்
உண்மை உரைப்பவை
ஞானம் விதைப்பவை.
வலைப்பதிவில்
வரும் கவிதைகள்
என் கர்ப்பம்
அல்லது அடைக் காத்தல்.
என் கூடு முழுதும்
கனவு முட்டைகளே
ஆகவே எழுதுவது
என் பிரசவம்.
கூர்ந்து வாசிக்க அவசியமில்லாத
நெருக்கமான தமிழில்
நெருக்கி எழுதாமல்
விசாலமான திட்டமிட்ட
தமிழ்ததெருவாய் உருவாக்க
முயற்சிக்கிறேன்
முடிந்த அளவு
என் கவிதைத்தெருவுக்கு
ஒரு தடவை வந்துட்டு
போங்க......
ஆனால் என் தெரு
கொஞ்சம் பாம்புத்தெருவாகவே இருக்கும்.
பிழைகள் தமிழை தடுத்தால்
வரிகளின் சொற்கள்
உணர்வுகளை உறுத்தினால்
விசைப்பலகையில் விரல்களை
மெலிதாக தட்டிட்டு போங்க.....
அதை குட்டாகவோ
அடுத்த கவிதைக்கு மெட்டாகவோ
என்னை மெருகேற்றி கொள்கிறேன்.
நன்றி உங்கள்
வாசிப்பு பொறுமைக்கு.
------------------------------------------------------------ஏண்டா டேய்! கவிதை எழுதப்போறேன் னு
ரெண்டு வரில சொல்றதை விட்டுட்டு
மவனே என்னத்தையோ எழுதி சாகடிக்கிறியே டா.............
நீயெல்லாம் நல்லாவே இருக்க .....ச்சீ .................எழுத மாட்டேடா....
பொலம்புறது என் காதுல விழுகுது...
கெளம்புறேன் நான் ........................