எதிரும் புதிருமாய் நான்.
எனெக்கென தோன்றும்
கேள்விக்கணைகள் எப்போதும்
நிழல் போல துரத்துகிறது.
ஆனால் அடைக்கப்பட்ட
மூளையின் வளைவுகளில்
நகரும் படிமங்களாய்.
என் கேள்வியின் நிழல் கருப்பு அல்ல
வெள்ளையும் அல்ல...
மனிதனின் நிறங்களை தின்னக்கூடியவை.
எதிர் தோன்றும் நிகழ்வுக்கேற்ப
வேண்டுமென்றே நிறம் மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி கேள்விகள்
ஏன் நான் இப்படி?
அதற்கும் உடனே ஒரு தர்க்கம்.
நான் என் கேள்விக்கான பதிலை
கேட்கும் போதே
அது இன்னொரு கேள்வியை
தலைக்கு வெளியே பிதுக்குகிறது.
நான் உண்மையிலேயே எனக்கான எதிர்தான்.
இதற்கான விடை
என் கேள்விகளின் ஆரம்ப புள்ளியில்
ஆரம்பிக்கிறது ...
ஒவ்வொரு புள்ளியாக இணைக்கையில்
எனது அலங்கோலம்
கோலமாகவே தெரிகிறது
புள்ளிகள் இல்லாததாய்!
சிக்கலான சிந்தனையாய்!
புரிகிறது நான் புதிர் என்று
எப்போது என்ன நினைப்பேன்?
என்ன செய்வேன்?
எனக்கு தெரிய விளைகையில்
மறுபடியும் கிடைக்கிறது
கேள்வி என்று சொல்லக்கூடிய பதிலும்
கேள்வி என்று சொல்லக்கூடிய பதிலும்
பதில் என்று சொல்லக்கூடிய கேள்வியும்
என் சிலந்திவலை மூலையில்
நேர் கோட்டில்
வளைந்து வளைந்து ஓடுகிறது
தொடர் ஓட்டமாய்
கையில் கேள்விக்கோலுடன்.
ஆம்!
கையில் கேள்விக்கோலுடன்.
ஆம்!
நான் எனக்கு எதிர்தான்.
நான் எனக்கு புதிர்தான்.
மற்றவனுக்கு?
மனநலமற்றவன்தான் .
No comments:
Post a Comment