Tuesday, March 21, 2017

















செல்போன் வைத்திருக்கும் அத்தனை பேருமே தெரிந்தோ, தெரியாமலோ அது தரும் சில நோய்க்குறிகள் (Syndrome) மற்றும் பிரச்னைகளுக்கு ஆளாகியிருப்பார்கள். அவை...
பேன்டம் ரிங்கிங் சிண்ட்ரோம் (Phantom Ringing Syndrome)
என்ன இது? உங்கள் பாக்கெட்டில் சும்மா இருக்கும் போன் அடித்ததாக உங்களுக்குக் கற்பனையாகத் தோன்றுவது. `ஐடிஸ்ஆர்டர்’ (iDisorder) என்ற புத்தகத்தை எழுதிய லாரி ரோஸன் (Larry Rosen), போன் உபயோகிப்பவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு இந்த சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறுகிறார். அரிக்காமலேயே அரிப்பதுபோலத் தோன்றுவதால், சொறிந்து கொள்வதுதான், இந்த டெக் யுகத்தில், இந்த சிண்ட்ரோமாக உருமாறியிருக்கிறது. `நம் கண்முன் இல்லாத, ஆனால் நாம் பாதி நேரம் சேர்ந்து வாழ்கிற சோஷியல் உலகம் நம் பாக்கெட்டிலேயே இருப்பதால், அது நம்மை அழைப்பதான கற்பனையில் இப்படிச் செய்கிறோம். எதிர்காலத்தில், கூகுள் கிளாஸெல்லாம் வந்துவிட்டால், நம் மூளை இல்லாததையும் காட்டினால் ஆச்சர்யபடுவதற்கில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
நோமோபோபியா (Nomophobia)
`நோ மொபைல் போபியா’வின் (No Mobile Phobia) சுருக்-தான் `நோமோபோபியா’. மொபைலில் சார்ஜ் தீர்ந்து, இன்னும் சில மணி நேரங்களுக்கு மொபைலையோ வேறெந்த கேட்ஜெட் சமாசாரங்களையோ தொட முடியாதென்றால், இந்த போபியா ஆரம்பிக்கும். யாருடைய மொபைலையாவது கையிலெடுக்கத் தோன்றும்; ஆனால் முடியாது. `அப்படித் தோன்றும் எண்ணமுடையவர்கள் `பாவ்லோஸ் டாக்ஸ்’ (Pavlov’s dogs) ஆகிவிட்டார்கள்’ என்கிறது மருத்துவம். ஒரு நாய்க்கு மணி அடிக்கும்போதெல்லாம் எலும்பைவைத்து, பிறகு எலும்பே வைக்காவிட்டாலும் மணி அடித்தால் எலும்பு அதன் நினைவில் வருவதுதான் பாவ்லோஸ் டாக்ஸ் தியரி. அதன்படி எந்த மணி அடித்தாலும், நமக்கானதாகத் தோன்றி, டக்கென்று பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துப் பார்ப்பார்கள். எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்கிற பதற்றத்தின் விளைவாக வரும் FOMO (Fear Of Missing Out)-வின் ஒரு நிலைதான் இதுவும் என்கிறார்கள்.
சைபர்சிக்னெஸ் (Cybersickness)
இணையமாகட்டும், அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில ‘ஆப்’ஸ் ஆகட்டும்... உங்கள் மனதில் பதிந்திருக்கும் லேஅவுட்டில் இருந்தால்தான் அவற்றை ரசிப்பீர்கள். ஆப்பிள் ஒருமுறை தன் புதிய பதிப்பில், அதன் ஆப்ஸ்-ன் சின்னங்களை முப்பரிமாணத்தில் கொடுத்தபோது, அலறினார்கள் உபயோகிப்பாளர்கள். ‘ஐயையோ தலை சுற்றுகிறது... குமட்டுகிறது... யார் இந்த வடிவத்துக்கு ஒப்புதல் கொடுத்த ஆசாமி?’ என்று ஆப்பிள் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு மின்னஞ்சல் ஐடி, கடிதங்களால் நிரம்பி வழிந்தது. 
உதாரணத்துக்கு, நாளைக்கு நீங்கள் விழித்து, மொபைலைத் திறந்ததும், ஃபேஸ்புக் ஐகான் வேறு நிறத்தில், செவ்வகமாக இருந்தால், உங்கள் மனம் அதை ஏற்கவே ஏற்காது. அதனால்தான் நிறுவனங்கள் தங்கள் லோகோவை மாற்றுவதற்கு முன்னர் முழுப் பக்க விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதை அதை ஏற்பதற்குத் தயார் செய்கிறார்கள்.  
தி கூகுள் எஃபெக்ட் (The Google Effect)
இன்டர்நெட் புரட்சிக்குப் பிறகான உலகின் முதல் அறிகுறியாகவே இந்த ‘கூகுள் எஃபெக்ட்’ இருக்கிறது. அதாவது, ‘எல்லாம் நெட்டில் பார்த்துக்கலாம்’ என்கிற மனோபாவத்தால் நம் மூளை மிகக் குறைவான விஷயங்களையே தக்கவைத்துக்கொள்கிறது. `நம் குடியரசுத் தலைவர் யார்?’ என்று யோசிப்பதைக் காட்டிலும். ‘கூகுள் பண்ணினா தெரியப்போகுது’ என்றுதான் எண்ணுகிறோம். நிச்சயமாக இந்த கூகுள் பல விஷயங்களில் உபயோகமாக இருந்தாலும், சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டு, தகவல்களை அறிந்துகொள்வதோ, மூளையில் அதை சேமித்துக்கொள்வதோ இல்லை போன்ற பின் விளைவுகளும் உள்ளன.
சேமிப்பு விழிப்புணர்வு அவசியம் 
வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. 

`செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. 

1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு! 
இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 
2. பொன் மகன் பொது வைப்பு நிதி! 
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 
3. தொடர் வைப்புக் கணக்கு! 
மாதந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை. 
4. கால வைப்புக் கணக்கு! 
குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 
5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்! 
அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 
6. மாதாந்திர வருமானத் திட்டம்! 
நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம். 
7. தேசிய சேமிப்புப் பத்திரம்! 
வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. 
8. கிஸான் விகாஸ் பத்திரம்! 
112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. 
`அதிக வட்டி, அதிக லாபம்' தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை. 50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

Monday, March 6, 2017

என்ன செய்யப்போறோம்னு தெரியலை!

மருத்துவர் கு.சிவராமன்

ருத்தரித்தபோது ஒரு சம்பா, பாலூட்டுகையில் ஒரு சம்பா, உடல் மெலிவுக்கு ஒன்று, உடல் சோர்வுக்கு மற்றொன்று, பஞ்சத்துக்கு ஒன்று, புயலுக்கு இன்னொன்று’ என, நம் தமிழ்நாட்டிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன. வீரிய ஒட்டு ரகங்களின் வரவால் அத்தனையும் வழக்கொழிந்து, 30-40 புதிய ரகங்களை மட்டுமே இன்று நாம் நம் மண்ணில் கொண்டிருக்கிறோம். 


தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி மீட்டெடுக்கும் பணியை, பிறப்பின் கடமையாகச் செய்துவருபவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த `நெல்' ஜெயராமன். தன் ஒற்றை சைக்கிளில் வீதிவீதியாகத் திரிந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்கும் வேலையை மேற்கொள்பவர் `வேளாண் போராளி' ஜெயராமன். 

























`FEDCOT' எனும் நுகர்வோர் அமைப்பை நிறுவி, `எந்த உணவில் எல்லாம் கலப்படம் இருக்கிறது, நுகர்வோர் எப்படியெல்லாம் விழித்தெழ வேண்டும்?’ எனச் செயல்பட்டவர். 



சோறுடைத்த சோழநாட்டு நெற்களம், உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விஷமேற்றப்படுவதைக் கண்டு, மனம் வெதும்பினார். இப்படி, நெற்களத்தில் விஷ வித்துகள் நிறைவதற்குக் காரணம், பாரம்பர்ய நெல் இனங்களை நாம் இழந்ததுதான் என்பதை நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து பணியாற்றுகையில் புரிந்துகொண்டார். அப்போது முதல், பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுப்பதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டு திட்டமிட்டுக் களம் இறங்கினார். 



`உங்களுக்கு ஒரு கிலோ பாரம்பர்ய விதை நெல் வேணுமா... வாங்க வந்து வாங்கிட்டுப் போங்க. பணம் வேண்டாம். அதுக்குப் பதிலாக இரண்டு கிலோ பாரம்பர்ய விதை நெல் விளைஞ்சதும் திருப்பித் தாங்க. இதுதான் ஒப்பந்தம்’ என, கடந்த பல ஆண்டுகளாகப் பாரம்பர்ய ரகங்களைத் தமிழகமெங்கும் விதைக்க வித்திட்டவர்களில் ஒருவர் ஜெயராமன். 



தன் பெயரையே `நெல்' ஜெயராமன் என கெசட்டில் மாற்றிக்கொண்ட அந்த விதை நாயகனுக்கு, பாரம்பர்ய விதைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய விருதும் மாநில விருதும் கிடைத்தன. 2006-ம் ஆண்டு ஆதிரெங்கத்தில் தொடங்கி ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்தி, படித்த இளைஞர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாரம்பர்ய நெல்விதைகளைக் காப்பதன் அவசியத்தைக் கடத்திவருகிறார். 



கடந்த மாதத்தில், ஒருநாள் இப்படி விதைக்கான ஒரு பயணத்தின்போதுதான், அவருக்குச் சிறுநீர்ப்பாதையில் வலியெடுத்தது. மருத்துவ மனைக்குச் சென்றபோது, இயற்கை தன் கோரமுகத்தைக் காட்டியது. 



ஆம், `நெல்' ஜெயராமன் இப்போது  கொடிய புற்றுநோயின் பிடியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மிச்சம் இருக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களையும் தேடிப்பிடித்து, அடுத்த தலைமுறைக்கு, பல மருத்துவக் குணம்கொண்ட அரிசி இனங்களை அடையாளம் காட்டிய அந்த உள்ளத்துக்கு, இன்று மருத்துவம் செய்யக்கூட வசதி இல்லை. 



நெல் ஜெயராமன், இப்போதும் அழவோ அசரவோ இல்லை. ``வைகாசியில் நெல் திருவிழா நடத்தணும். வருஷாவருஷம் எண்ணிக்கை அதிகமாகுது. கடந்த வருஷமே 5,000 பேர் வந்து பாரம்பர்ய நெல் வாங்கிட்டுப் போனாங்க. இந்த வருஷம் அதையும் தாண்டும். ஆடிக்குள்ள வைத்தியத்தை முடிச்சுடணும். புதுசா இன்னும் 15 ரகங்கள் இருக்கு. நாற்றங்காலிடணும்...'' எனப் பேசிக்கொண்டிருக்கிறார். சென்னையின் உயர்ந்த மருத்துவமனையின் நிழலில், ஓரமாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மணலில் அவரது ஒன்பது வயது பாலகன் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான். 



``எங்ககிட்ட இருந்த நெல்லை எல்லாம் வித்து, 95,000 ரூவாதான் வந்துச்சு. ஆனா, இங்கே சிகிச்சைக்கான செலவு 10 லட்சம் ரூபாயைத் தாண்டுங்கிறாங்க. என்ன செய்யப்போறோம்னு தெரியலை'’ என்கிறார் அங்கன்வாடியில் ஊழியராகப் பணிபுரியும் ஜெயராமனின் மனைவி. 



வெடித்து வெம்பி நிற்கும் தமிழ் மண்ணில் `ஜெயராமன்' என்கிற இன்னொரு பாரம்பர்ய நெல், தண்ணீருக்காகக் காத்திருக்கிறது.

நினைவில் ஒரு காட்டை வளருங்கள்!

மு.நியாஸ் அகமது - படம்: த.யோகேஸ்வரன்
``முதலில், உங்கள் நினைவில் ஒரு காட்டை வளருங்கள். கிளைகளைக் கத்தரிக்காமல், வேரை அதன் போக்கில் விட்டு வளருங்கள். உங்களுக்குள் ஒரு மழை பெய்வதை உணர்வீர்கள். உங்களுக்குள் குளிரும் மணமும் கமழும். ஆம், முதலில் உங்கள் நினைவில் ஒரு காட்டை வளருங்கள்.
அது நிஜத்திலும் நிச்சயம் உருமாறும்'' என, ஜென் துறவிபோலப் பேசுகிறார் ஜாதவ் பாயேங். நினைவில் மட்டுமல்ல, நிஜத்திலும் தனி மனிதனாக ஓர் அடர்வனத்தை, பிரம்மபுத்திரா படுகையில் உண்டாக்கியவர். 
அதற்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். இன்று இந்தியக் காடுகளின் ஓர் அடையாளமாக இருப்பவர். திருச்சிக்கு ஒரு நிகழ்வுக்காக வந்தவரோடு உரையாடினோம்.


























``எது உங்களை மரம் நடத் தூண்டியது?”

``1978-ம் ஆண்டு என்பதாக நினைவு. எங்கள் ஊரில் கடும் மழை. அந்த மழையை, நிச்சயம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஏறத்தாழ 12 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் `உலகம் அழியப்போகிறது!' என நினைத்தோம். ஆனால், சில நாள்களிலேயே மழை நின்றுவிட்டது. பிறகுதான் புரிந்தது, அழிவின் தொடக்கம் இப்போதுதான் தொடங்கப்போகிறது என்று. அந்த மழைக்குப் பிறகு, எங்கள் ஊரை கடும் வறட்சி தாக்கியது. வீட்டு விலங்குகள் ஒவ்வொன்றாக மடியத் தொடங்கியது. பிறகு, வெப்பம் தாங்காமல் பாம்புகள் செத்து மடிந்தன. அந்தக் காட்சியை உங்களுக்கு எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை. வீதியெங்கும், செத்துப்போன பாம்புகளின் சடலங்கள். இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு ஒருவிதமான இருள் மனதை ஆட்கொண்டது. 

பழங்குடிகளின் மூத்த தலைவர்களைச் சந்தித்தேன். இதற்கு அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அவர்கள், `இறைவன் நம்மிடம் இந்தப் பூமியைக் கொடுத்தபோது, எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டமான ஒரு நாளில், மனிதன் `தான் மட்டும்தான் இருக்க வேண்டும்' என நினைத்தான். அது இயற்கைக்கு எதிரானது. இது, மனிதனுக்குப் புரியவில்லை. பாவம், அவனும் இல்லாமல் போகப்போகிறான். அதன் தொடக்கம்தான் இது' என்றார்கள். அவர்களே இதற்குத் தீர்வையும் சொன்னார்கள், `இறைவன் எந்த விகிதத்தில் இதை நம்மிடம் கொடுத்தானோ, அதை மீட்டு உருவாக்கு' என்றார்கள். 25 மூங்கில் மரங்களையும் கொடுத்தார்கள். அவைதான் என் பயணத்துக்கான விதைகள். அவையே இன்று ஒரு கானகமாகக் கிளைப் பரப்பி நிற்கின்றன.'' 

 “ ‘நான் காட்டை உருவாக்கப்போகிறேன்’ எனக் கிளம்பியபோது, மக்கள் உங்களை எப்படிப் பார்த்தார்கள்?”

(சிரிக்கிறார்...) ``முட்டாளாகத்தான் பார்த்தார்கள். பரிகாசம் செய்தார்கள். இந்தக் கட்டத்தில், நான் வைத்த செடிகளிடம் சரணடைந்தேன். அவை, என்னை அப்படியே உள்வாங்கிக் கொண்டன. அது, என் மனக்காயங்களுக்கு மருந்து தடவின. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ... அதில் நீங்கள் கரைந்தால், எவ்வளவு பெரிய காயங்களும் உங்களுக்கு வலி தராது. அதுதான் எனக்கு நிகழ்ந்தது. பிறகு, ஊடகங்களும் பல்கலைக்கழகங்களும் என் வேலையை அடையாளம் கண்டு அங்கீகரித்தன. அதன் பிறகு, ஊர் மக்களுடைய பரிசாச மொழி, பாராட்டாக மாறியது. பரிகாசம், பாராட்டு என்பதையெல்லாம் கடந்து, நாம் ஆன்மா சொல்வதைக் கேட்கும்போது, அதற்கு செவிசாய்க்கும்போது, அதை அன்புடன் செய்யும்போது அற்புதங்கள் நிகழும்.”

“நீங்கள் நம் தேசத்தின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``எதை வளர்ச்சி என்கிறீர்கள்? எங்கும் புகை படிந்து இருக்கிறதே... அதை வளர்ச்சி என்கிறீர்களா? இல்லை காங்கிரீட் காடு கட்ட, உயிருள்ள மரங்கள் பெரும் எண்ணிக்கையில் தினம் தினம் வெட்டப்படுகின்றனவே அதை வளர்ச்சி என்கிறீர்களா? உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தண்ணீரை, காற்றை, உணவை, சூழலைத் தராமல் வளர்ச்சியின் பெயரால் என்ன தரப்போகிறீர்கள்?'' 

“சரி... அரசு என்னதான் செய்ய வேண்டும்?”

```ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். ஆம், உண்மையாகத்தான் சொல்கிறேன், அரசு எங்கெல் லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அழிவைத்தான் விதைக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், அது ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். `இல்லை, நான் ஏதாவது செய்வேன்' என்று அரசுகள் அடம்பிடித்தால், நம் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நம் உள்ளூர் காடுகள், விலங்குகள், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவான செய்திகளுடன் பாடப் புத்தகத்தை மாற்ற வேண்டும். 

தனி மனிதனாக நமக்கு சில கடமைகள் இருக்கின்றன. ஆம், உங்கள் குழந்தைகளுடன் காடுகள் குறித்து உரையாடுங்கள். சிறுவர்களாக இருக்கும்போதே, அவர்கள் நினைவில் ஒரு காட்டை வளருங்கள். மற்றதையெல்லாம், வளர்ந்த பிறகு அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.''

Wednesday, March 1, 2017

அசத்தும் அரசு மருத்துவமனை!

வெ.நீலகண்டன் - படங்கள்: வி.சதீஷ்குமார்
துரை டு விருதுநகர் பைபாஸ் சாலையில் நின்று, ``தோப்பூர் அரசு தொற்றுநோய் ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது?'' என்று கேட்டால், ``எது... அந்தக் காட்டு ஆஸ்பத்திரியா?'' என்று கேட்டுவிட்டுத்தான் வழிகாட்டுகிறார்கள். 


 பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு பாதையின் இறுதியில் கனத்த இரும்பு கேட்டுடன்கூடிய கட்டடங்கள் தொடங்குகின்றன. முகப்பில் `பழ விருட்சங்கள்' என எழுதப்பட்டுள்ள பகுதிகளில் மா, பலா, கொய்யா  மரங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் அருகிலேயே அந்த மரத்தை நட்ட நோயாளியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கடந்து நடந்தால், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. விதவிதமான செடி கொடிகள், நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் பூந்தோட்டம் சூழ அமைந்திருக்கிறது மருத்துவமனை வளாகம். ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட், காய்கறித் தோட்டம், அழகுற வண்ணம் தீட்டப்பட்ட நடைபாதைகள், நோயாளிகளுடன் வந்தவர்கள் அமர்ந்து இளைப்பாற சுத்தமான திறந்தவெளிக் கட்டடங்கள், பறவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறு குளங்கள்... என, திரும்பும் பக்கமெல்லாம் ஆச்சர்யங்கள். 

வார்டுகளில் அவ்வளவு தூய்மை. உள்ளே டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மெல்லியச் சத்தத்தில் வானொலி ஒலித்துக்கொண்டிகிறது. ஒரு வார்டின் முகப்பில், சற்று குணமடைந்த நோயாளிகள் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வேறொரு பக்கம், நோயாளிகளுக்கு முடி திருத்தும் சலூன் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம் என்ற உணர்வே எழவில்லை. நோயாளிகளும் அப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள். 

``எப்படி இது சாத்தியம்?'' என்று எவரைக் கேட்டாலும், அந்த ஒற்றை மனிதரை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். அவர்தான் மருத்துவர் காந்திமதிநாதன். தோப்பூர் மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ).

“நான் எதையும் மாத்திடலை சார். எல்லாருமே அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்றோம். அவ்வளவுதான்'' என, தன்னடக்கத்துடன் பேசுகிறார் டாக்டர் காந்திமதிநாதன்.


காசநோய், காலரா, அம்மை போன்ற நோய்கள், வெகு எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியவை. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக, மதுரையில் இருந்து 18 கி.மீ தொலைவில் தோப்பூர்-ஆஸ்டின்பட்டி என்ற இடத்தில் 1960-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது இந்த மருத்துவமனை. 207 காச நோயாளிகளும், 28 காலரா நோயாளிகளும், 50 அம்மை நோயாளிகளும் தங்கும் வசதிகொண்ட இந்த மருத்துவமனை, தென் தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவாகச் செயல்படுகிறது. தொற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்பதாலும், நகரைவிட்டுத் தொலைவில் இருப்பதாலும் மருத்துவர்களும் சரி, ஊழியர்களும் சரி இங்கே பணிபுரிய தொடக்கத்தில் இருந்தே விரும்புவதில்லை. `தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதுபோல அரசு மருத்துவர்களுக்கான தண்டனைக் களமாக மாற்றப்பட்ட இடம்தான் இந்தத் தோப்பூர் அரசு மருத்துவமனை. அக்கறையின்மையும் பராமரிப்பின்மையும் மருத்துவமனையின் பெயரைக் குலைத்துவிட்டன. 

பல லட்சம் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டிய இந்த மருத்துவமனை, தேய்ந்துபோன நிலையில்தான் இந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார் காந்திமதிநாதன். 

“உண்மையில், நான் விரும்பி இந்த மருத்துவ மனைக்கு வரலை. பணிமாறுதல் கோரியபோது, எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் இந்த மருத்துவ மனைதான். அதுக்கு முன்னால் நான் இந்த மருத்துவமனையைப் பார்த்ததுகூட இல்லை. இப்படியொரு நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியாது. முதல் நாள் இங்கே வந்து பார்த்தப்பவே, நாம தவறான முடிவை எடுத்துட்டோம்னு தெரிஞ்சுபோச்சு. பஸ் வசதிகூட இல்லை. ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் வரணும். உடனடியா, மேலதிகாரிகள்கிட்ட `எனக்கு வேறு மருத்துவமனைக்கு டெபுடேஷன் போட்டுத் தாங்க சார்'ன்னு கேட்டேன். எல்லா இடங்கள்லயும் புதர்கள். கால் வைக்கவே பயமா இருக்கும். திடீர்னு பாம்புகள் ஓடும். இரவு நேரத்தில் சொல்லவே வேணாம்.

காலரா, காசநோய் பற்றி எல்லாம் பொது மக்களுக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை. அதனால் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை அழைச்சுட்டு வருவாங்க. கூட இருந்தால் தொற்றிக்கொள்ளும் என்பதால், கேட்டுக்குள்ள நோயாளியை அனுப்பிட்டு சொந்தக்காரர்கள் கிளம்பிடுவாங்க. நோயாளிகளுக்கு விழிப்புஉணர்வு இல்லாததால், கீழே கால் வைக்கவே சங்கடமா இருக்கும். என்ன செய்றது, எதை மாத்துறதுன்னு எதுவுமே புரியலை. 

ஒருநாள், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியிலிருந்து என்.எஸ்.எஸ் முகாம் நடத்துறதுக்காக 150 மாணவர்கள் வந்தாங்க. `நாங்க என்ன செய்யணும்'ன்னு கேட்டப்போ, `இந்தப் புதர்களைப் பார்க்கும்போதே பயமா இருக்கு. முடிஞ்சா, இதை அகற்றுங்க'ன்னு சொன்னேன். மறுநாள், நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தப்போ, அத்தனைப் புதர்களையும் அகற்றியிருந்தாங்க. மனசாட்சி, சுருக்குன்னு குத்துச்சு. `யார் பெத்த பிள்ளைகளோ... எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இவ்வளவு ஆர்வத்தோடு இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க. 


ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நாம, அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமா'ன்னு உறுத்தல். அந்த உறுத்தலோடு வீட்டுக்குப் போனேன். வழியில் ஜஸ்டின்னு ஒரு நண்பரைச் சந்திச்சேன். நியூராலஜிஸ்ட்டா இருக்கார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு, `மிகச் சரியான ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்கீங்க. எங்க அம்மாவுக்கு 25 வயசுல காசநோய் வந்தது. தோப்பூர் மருத்துவமனையில்தான் வெச்சுக் குணப்படுத்தினோம். அந்த மருத்துவமனையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும். நான் என்ன உதவி வேணும்னாலும் செய்றேன்'னு சொல்லி கண் கலங்கிட்டார். அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் இந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு. 

நல்ல மருத்துவர்கள், அர்ப்பணிப்புள்ள செவிலியர்கள், எதற்கும் தயங்காத ஊழியர்கள்னு ஏகப்பட்ட வளம் இங்கே இருந்தது. அதை உரியமுறையில் பயன்படுத்தணும்னு நினைச்சேன். எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினேன். என்னைவிடவும் எல்லோரும் ஆர்வமா இருந்தாங்க. வேலைகளை மெள்ள  ஆரம்பிச்சோம். இந்த மாற்றத்துல எல்லோருடைய வியர்வையும் உறைஞ்சிருக்கு. எங்களை சுதந்திரமா செயல்படவிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்கு'' என்கிறார் காந்திமதிநாதன். 

இப்போது 140 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இறப்புவிகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 6 மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 30 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதுதவிர, ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் உள்ளனர். இந்த மருத்துவமனையின் முகம் மாறியதில், ஒப்பந்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது.

“ஒரே எண்ண ஓட்டத்தில் எல்லோரையும் இணைச்சதுதான் காந்திமதிநாதன் சார் செய்த முதல் வேலை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வோம். ஸ்ட்ரெச்சர் தள்ள ஆள் இல்லைன்னா, நர்ஸே தள்ளிட்டு வருவாங்க. மருத்துவமனைக்குள்ள குப்பையை யார் பார்த்தாலும் உடனே எடுத்து அதுக்கான தொட்டியில் போடுவோம். சுய பொறுப்புணர்வு, இந்த மருத்துவமனையை மட்டும் இல்லை... எங்க வாழ்க்கை முறையையும் மாத்தியிருக்கு. 

சுற்றுப்புறச்சூழலை மாத்தினதோடு நோய் பாதிக்கப்பட்டவங்களோட மனநிலையை மாத்தவும் முயற்சிசெஞ்சோம். ரொம்பவும் விரக்தியா இருப்பாங்க. தேற்றவே முடியாது. அவங்களை உற்சாகப்படுத்துற மாதிரி ஏதாவது செய்யணும்னு முடிவுசெஞ்சோம். சாரோட நண்பர் ஒருத்தர் பத்து எஃப்.எம் ரேடியோ, ஸ்பீக்கர், சென்ட்ரல் மானிட்டர் செட்டோடு வாங்கித் தந்தார். அதை வார்டுகள்ல வெச்சோம். நல்ல மாற்றம் தெரிஞ்சது. அதன் பிறகுதான் டி.வி வாங்கினோம். அது மருத்துவமனையின் இறுக்கத்தை மொத்தமா மாத்திடுச்சு. வீடு மாதிரி எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சாங்க. சில நாள்கள்லயே ஒரு நூலகத்தை உருவாக்கிட்டார் காந்திமதிநாதன் சார். நிறைய நண்பர்கள், அவங்க கலெக்‌ஷன்ல இருந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தாங்க. இப்போ 6,000 நூல்கள் இங்கே இருக்கு'' எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகரன்.

நூலகத்துக்கு எதிரே இருக்கிறது, நோயாளிகளுக்கான விளையாட்டு அறை. கேரம் போர்டு, செஸ் என, பல உள்விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. பெண் நோயாளிகள், தங்கள் இடத்துக்கே பொருள்களை எடுத்துச் சென்று தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன.

“எங்க டீன் எங்களோட முயற்சிகளுக்கு உத்வேகமா இருக்கார். தீவிர சிகிச்சைப் பிரிவு கேட்டோம். உடனே தந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டப்போ, ஒரே நேரத்துல 24 பேருக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் சென்ட்ரல் சிலிண்டர் அமைச்சுத் தந்தார். 

``நம்மைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திலும் அந்த மாதிரி மனிதர்களோட பங்களிப்பு நிறைஞ்சிருக்கு. இங்கு நடந்துள்ள பெரும்பாலான பணிகள் நல்ல மனிதர்களோட உதவியால்தான் நடந்திருக்கு. கேன்சரால் பாதிக்கப்பட்டு, அந்த நோயை வென்று மீண்ட ஒருத்தர் இங்கே வந்து, இவங்க எல்லாருக்கும் கவுன்சலிங் கொடுக்கிறார். நிறையப் பேரோட உதவியும் உழைப்பும் இதுக்குள்ள மறைஞ்சிருக்கு. இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கு. மூலிகைத் தோட்டம் ஒண்ணு வெக்கணும். நோயாளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்தணும்...'' காந்திமதிநாதனின் கனவுகள் விரிகின்றன. 


பேருந்தையே கண்டிராத இந்தச் சாலைகளில் இப்போது தினமும் ஏழு முறை பேருந்துகள் வந்து போகின்றன. சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள், செவிலியர்களையும் மருத்துவமனையையும் பிரிய மனமில்லாமல் செல்லும் அதிசயம் இங்கே நிகழ்கிறது. பாழடைந்து கிடந்த ஓர் அரசு மருத்துவமனையை, ஒரு மருத்துவரின் முனைப்பு சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஏழு கோடி மக்கள் இருக்கிறோம். எல்லோரும் மனது வைத்தால்..!