செல்போன் வைத்திருக்கும் அத்தனை பேருமே தெரிந்தோ, தெரியாமலோ அது தரும் சில நோய்க்குறிகள் (Syndrome) மற்றும் பிரச்னைகளுக்கு ஆளாகியிருப்பார்கள். அவை...
பேன்டம் ரிங்கிங் சிண்ட்ரோம் (Phantom Ringing Syndrome)
என்ன இது? உங்கள் பாக்கெட்டில் சும்மா இருக்கும் போன் அடித்ததாக உங்களுக்குக் கற்பனையாகத் தோன்றுவது. `ஐடிஸ்ஆர்டர்’ (iDisorder) என்ற புத்தகத்தை எழுதிய லாரி ரோஸன் (Larry Rosen), போன் உபயோகிப்பவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு இந்த சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறுகிறார். அரிக்காமலேயே அரிப்பதுபோலத் தோன்றுவதால், சொறிந்து கொள்வதுதான், இந்த டெக் யுகத்தில், இந்த சிண்ட்ரோமாக உருமாறியிருக்கிறது. `நம் கண்முன் இல்லாத, ஆனால் நாம் பாதி நேரம் சேர்ந்து வாழ்கிற சோஷியல் உலகம் நம் பாக்கெட்டிலேயே இருப்பதால், அது நம்மை அழைப்பதான கற்பனையில் இப்படிச் செய்கிறோம். எதிர்காலத்தில், கூகுள் கிளாஸெல்லாம் வந்துவிட்டால், நம் மூளை இல்லாததையும் காட்டினால் ஆச்சர்யபடுவதற்கில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
நோமோபோபியா (Nomophobia)
`நோ மொபைல் போபியா’வின் (No Mobile Phobia) சுருக்-தான் `நோமோபோபியா’. மொபைலில் சார்ஜ் தீர்ந்து, இன்னும் சில மணி நேரங்களுக்கு மொபைலையோ வேறெந்த கேட்ஜெட் சமாசாரங்களையோ தொட முடியாதென்றால், இந்த போபியா ஆரம்பிக்கும். யாருடைய மொபைலையாவது கையிலெடுக்கத் தோன்றும்; ஆனால் முடியாது. `அப்படித் தோன்றும் எண்ணமுடையவர்கள் `பாவ்லோஸ் டாக்ஸ்’ (Pavlov’s dogs) ஆகிவிட்டார்கள்’ என்கிறது மருத்துவம். ஒரு நாய்க்கு மணி அடிக்கும்போதெல்லாம் எலும்பைவைத்து, பிறகு எலும்பே வைக்காவிட்டாலும் மணி அடித்தால் எலும்பு அதன் நினைவில் வருவதுதான் பாவ்லோஸ் டாக்ஸ் தியரி. அதன்படி எந்த மணி அடித்தாலும், நமக்கானதாகத் தோன்றி, டக்கென்று பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துப் பார்ப்பார்கள். எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்கிற பதற்றத்தின் விளைவாக வரும் FOMO (Fear Of Missing Out)-வின் ஒரு நிலைதான் இதுவும் என்கிறார்கள்.
சைபர்சிக்னெஸ் (Cybersickness)
இணையமாகட்டும், அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில ‘ஆப்’ஸ் ஆகட்டும்... உங்கள் மனதில் பதிந்திருக்கும் லேஅவுட்டில் இருந்தால்தான் அவற்றை ரசிப்பீர்கள். ஆப்பிள் ஒருமுறை தன் புதிய பதிப்பில், அதன் ஆப்ஸ்-ன் சின்னங்களை முப்பரிமாணத்தில் கொடுத்தபோது, அலறினார்கள் உபயோகிப்பாளர்கள். ‘ஐயையோ தலை சுற்றுகிறது... குமட்டுகிறது... யார் இந்த வடிவத்துக்கு ஒப்புதல் கொடுத்த ஆசாமி?’ என்று ஆப்பிள் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு மின்னஞ்சல் ஐடி, கடிதங்களால் நிரம்பி வழிந்தது.
உதாரணத்துக்கு, நாளைக்கு நீங்கள் விழித்து, மொபைலைத் திறந்ததும், ஃபேஸ்புக் ஐகான் வேறு நிறத்தில், செவ்வகமாக இருந்தால், உங்கள் மனம் அதை ஏற்கவே ஏற்காது. அதனால்தான் நிறுவனங்கள் தங்கள் லோகோவை மாற்றுவதற்கு முன்னர் முழுப் பக்க விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதை அதை ஏற்பதற்குத் தயார் செய்கிறார்கள்.
தி கூகுள் எஃபெக்ட் (The Google Effect)
இன்டர்நெட் புரட்சிக்குப் பிறகான உலகின் முதல் அறிகுறியாகவே இந்த ‘கூகுள் எஃபெக்ட்’ இருக்கிறது. அதாவது, ‘எல்லாம் நெட்டில் பார்த்துக்கலாம்’ என்கிற மனோபாவத்தால் நம் மூளை மிகக் குறைவான விஷயங்களையே தக்கவைத்துக்கொள்கிறது. `நம் குடியரசுத் தலைவர் யார்?’ என்று யோசிப்பதைக் காட்டிலும். ‘கூகுள் பண்ணினா தெரியப்போகுது’ என்றுதான் எண்ணுகிறோம். நிச்சயமாக இந்த கூகுள் பல விஷயங்களில் உபயோகமாக இருந்தாலும், சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டு, தகவல்களை அறிந்துகொள்வதோ, மூளையில் அதை சேமித்துக்கொள்வதோ இல்லை போன்ற பின் விளைவுகளும் உள்ளன.
No comments:
Post a Comment