என்ன செய்யப்போறோம்னு தெரியலை!
மருத்துவர் கு.சிவராமன்
கருத்தரித்தபோது ஒரு சம்பா, பாலூட்டுகையில் ஒரு சம்பா, உடல் மெலிவுக்கு ஒன்று, உடல் சோர்வுக்கு மற்றொன்று, பஞ்சத்துக்கு ஒன்று, புயலுக்கு இன்னொன்று’ என, நம் தமிழ்நாட்டிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன. வீரிய ஒட்டு ரகங்களின் வரவால் அத்தனையும் வழக்கொழிந்து, 30-40 புதிய ரகங்களை மட்டுமே இன்று நாம் நம் மண்ணில் கொண்டிருக்கிறோம்.
தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி மீட்டெடுக்கும் பணியை, பிறப்பின் கடமையாகச் செய்துவருபவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த `நெல்' ஜெயராமன். தன் ஒற்றை சைக்கிளில் வீதிவீதியாகத் திரிந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்கும் வேலையை மேற்கொள்பவர் `வேளாண் போராளி' ஜெயராமன்.
`FEDCOT' எனும் நுகர்வோர் அமைப்பை நிறுவி, `எந்த உணவில் எல்லாம் கலப்படம் இருக்கிறது, நுகர்வோர் எப்படியெல்லாம் விழித்தெழ வேண்டும்?’ எனச் செயல்பட்டவர்.
சோறுடைத்த சோழநாட்டு நெற்களம், உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விஷமேற்றப்படுவதைக் கண்டு, மனம் வெதும்பினார். இப்படி, நெற்களத்தில் விஷ வித்துகள் நிறைவதற்குக் காரணம், பாரம்பர்ய நெல் இனங்களை நாம் இழந்ததுதான் என்பதை நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து பணியாற்றுகையில் புரிந்துகொண்டார். அப்போது முதல், பாரம்பர்ய நெல் விதைகளை மீட்டெடுப்பதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டு திட்டமிட்டுக் களம் இறங்கினார்.
`உங்களுக்கு ஒரு கிலோ பாரம்பர்ய விதை நெல் வேணுமா... வாங்க வந்து வாங்கிட்டுப் போங்க. பணம் வேண்டாம். அதுக்குப் பதிலாக இரண்டு கிலோ பாரம்பர்ய விதை நெல் விளைஞ்சதும் திருப்பித் தாங்க. இதுதான் ஒப்பந்தம்’ என, கடந்த பல ஆண்டுகளாகப் பாரம்பர்ய ரகங்களைத் தமிழகமெங்கும் விதைக்க வித்திட்டவர்களில் ஒருவர் ஜெயராமன்.
தன் பெயரையே `நெல்' ஜெயராமன் என கெசட்டில் மாற்றிக்கொண்ட அந்த விதை நாயகனுக்கு, பாரம்பர்ய விதைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய விருதும் மாநில விருதும் கிடைத்தன. 2006-ம் ஆண்டு ஆதிரெங்கத்தில் தொடங்கி ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்தி, படித்த இளைஞர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாரம்பர்ய நெல்விதைகளைக் காப்பதன் அவசியத்தைக் கடத்திவருகிறார்.
கடந்த மாதத்தில், ஒருநாள் இப்படி விதைக்கான ஒரு பயணத்தின்போதுதான், அவருக்குச் சிறுநீர்ப்பாதையில் வலியெடுத்தது. மருத்துவ மனைக்குச் சென்றபோது, இயற்கை தன் கோரமுகத்தைக் காட்டியது.
ஆம், `நெல்' ஜெயராமன் இப்போது கொடிய புற்றுநோயின் பிடியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மிச்சம் இருக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களையும் தேடிப்பிடித்து, அடுத்த தலைமுறைக்கு, பல மருத்துவக் குணம்கொண்ட அரிசி இனங்களை அடையாளம் காட்டிய அந்த உள்ளத்துக்கு, இன்று மருத்துவம் செய்யக்கூட வசதி இல்லை.
நெல் ஜெயராமன், இப்போதும் அழவோ அசரவோ இல்லை. ``வைகாசியில் நெல் திருவிழா நடத்தணும். வருஷாவருஷம் எண்ணிக்கை அதிகமாகுது. கடந்த வருஷமே 5,000 பேர் வந்து பாரம்பர்ய நெல் வாங்கிட்டுப் போனாங்க. இந்த வருஷம் அதையும் தாண்டும். ஆடிக்குள்ள வைத்தியத்தை முடிச்சுடணும். புதுசா இன்னும் 15 ரகங்கள் இருக்கு. நாற்றங்காலிடணும்...'' எனப் பேசிக்கொண்டிருக்கிறார். சென்னையின் உயர்ந்த மருத்துவமனையின் நிழலில், ஓரமாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மணலில் அவரது ஒன்பது வயது பாலகன் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான்.
``எங்ககிட்ட இருந்த நெல்லை எல்லாம் வித்து, 95,000 ரூவாதான் வந்துச்சு. ஆனா, இங்கே சிகிச்சைக்கான செலவு 10 லட்சம் ரூபாயைத் தாண்டுங்கிறாங்க. என்ன செய்யப்போறோம்னு தெரியலை'’ என்கிறார் அங்கன்வாடியில் ஊழியராகப் பணிபுரியும் ஜெயராமனின் மனைவி.
வெடித்து வெம்பி நிற்கும் தமிழ் மண்ணில் `ஜெயராமன்' என்கிற இன்னொரு பாரம்பர்ய நெல், தண்ணீருக்காகக் காத்திருக்கிறது.
No comments:
Post a Comment