எங்கு சென்றாலும்
சாதி இந்தியன் இப்படித்தான்
ஜென்டில்மேன் படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை மிக வெளிப்படையாக முன் வைத்த படம். இப்படத்தின் கதையில் முதலில் பிராமண இளைஞனே கத்தியைத் தூக்குவதாக இருந்ததாம். அது வேண்டாம் என ஆலோசனை வழங்கியிருக்கிறார் கமல். ( 23-10-95 அன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கமல்ஹாசன்.) பிராமணர்கள் கத்தியைத் தூக்கினார்களா இல்லையா என்பதற்கு வரலாறே சான்றாக நிற்கிறது. அதையும் நம்ப முடியாமல் போனால் மனு சாஸ்திரம் எழுத்து வடிவில் சாட்சியாய் நிற்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைப் பற்றி ஒடுக்கியவர்களின் வழி வந்தவர்கள் சாட்சியம் கூற முடியுமா? அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் சாட்சியம் கூற முடியுமா?
மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் வாங்கிய ஒரு பிராமண மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்கிற பச்சைப் பொய்யை சொல்லிய படம் ' ஜென்டில்மேன்'. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் தன் பெயரைக் காணாமல் அதிர்ந்து போகிறான் அந்த ( மீசை வழித்த வெள்ளைத் தோல் ) பிராமண மாணவன். அப்போது அவளுக்குப் பின்னால் தன் பெயர் பட்டியலில் இருக்கக்கண்டு குதியாட்டம் போடுகிறான் ஒரு கறுப்புநிற மாணவன். இதன் அர்த்தம் என்ன? மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றாலும் கறுப்பு நிற
அ-பிராமணர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தாலும் பிராமணர்களுக்கு அங்கே இடமில்லை.
இதை உண்மை என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்குச் சமூகத்தில் எங்கே பார்த்தாலும் சூத்திரர்களும், தலித்துகளும்தானே இடம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் நிலைமை அப்படியில்லையே? எத்தனை பிராமணர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்? எத்தனை பிராமணக் குழந்தைகள் நான் முன்னர் குறிப்பிட்ட குழந்தைத் தொழிலாளர்களாக செத்துக்கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பிராமணர்கள் மனித மலத்தை அள்ளித் தூக்கிச் சுமக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்? எத்தனை பிராமணர்கள் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்திகரிப்பு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்? கல்லுடைக்கும் தொழிலாளி யாகவோ, விவசாயக் கூலியாகவோ, செருப்பு தைக்கும் தொழிலாளியாகவோ எத்தனை பிராமணர்கள் இருக்கிறார்கள்? ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லையே? ஆனால் இதற்கு மாறாக ஒரு Indian institute of technology-ஐ எடுத்துக்கொண்டால், அங்கே முக்கால்வாசிப் பேர் பிராமணர்களாகத்தானே இருக்கிறார்கள்? இவ்வளவு இட ஒதுக்கீட்டுக்குப் பிறகும் எல்லா வங்கிகளிலும் பெரும்பாலும் பிராமணர்களாகத்தானே இருக்கிறார்கள்? அது எப்படி சாத்தியமாகிறது?
ஆக, மலம் அள்ளுகிறவன் மலம் அள்ளுகிறவனாகவே இருக்கட்டும். பிராமணன் ஐஐடி-யில் படித்து அமெரிக்க வேலைக்குச் செல்லட்டும் என்பதுதானே கமல், ஷங்கர், பாலகுமாரன் போன்றவர்களின் வாதம்? " நான் சொல்லிய மாற்றத்தை ஷங்கர் ஜென்டில்மேன் இல் செய்துவிட்டார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்" என்கிறார் கமல். அதாவது படத்தின் கதாநாயகன், பிராமணனைப் போல் காட்டப்பட்டாலும், கடைசியில் அவன் சூத்திரன்தான் என்று தெரிகிறது. " இட ஒதுக்கீட்டை ஒரு பிராமணன் எதிர்ப்பதை விட
அ-பிராமணன் எதிர்ப்பதுதான் சரி" என்பதுதான் கமல் சொல்லி, ஷங்கர் செய்திருக்கும் மாற்றம்! சூத்திரனின் கையை எடுத்து அவன் கையாலேயே அவன் கண்ணைக் குத்திக்கொள்ள செய்வதுதான் சரி என்று மாற்றம் சொல்லியிருக்கிறார் கமல்.
அரசுதான் மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது; எதிர்த்துக் கேட்பவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறது; அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் கோடி கோடியாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறா ர்கள். அரசு நிறுவனங்களும் கலாச்சாரவாதிகளும் இதற்குத் துணை போகின்றன(ர்). உண்மையில் இதுதான் பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஒருவன் தனது எழுதுகோலையோ அல்லது ஆயுதத்தையோ எடுத்தால் அவனை 'பயங்கரவாதி' என்றும் 'பொறுக்கி' என்றும் சொன்னால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலைப் பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தமாகும்.
- 1995 ஆம் ஆண்டு குருதிப்புனல் படத்திற்காக சாரு எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது. 25 ஆண்டுகளுக்கு முன்னராகவே எழுதப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும் !
இதோடு சேர்த்து சாருவின் 'ராஸ லீலா' நாவலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடுகிறேன். நாவலில் வரும் பிரதான பாத்திரமான கண்ணாயிரம் பெருமாள் ஃபிரான்ஸ் போகிறார். அங்கு நாய் வளர்ப்பு பற்றி பார்க்கிறார். அதனைக் குறித்து விவரிக்கும் பகுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
" வாக்கிங் போகும்போது ரோட்டோரங்களில் அவை கழிக்கும் மலஜலத்தைத் துப்புரவுப் பணியாளர் யாரும் விளக்குமாற்றை வைத்துப் பெருக்கிக்கொண்டிருப்பதில்லை. ஒரு பெரிய எந்திரம் ராட்சச பிரஷ் ஒன்றின் மூலம் துடைத்து, காற்றின் மூலமாகக் குப்பைகளை உள்ளிழுக்கிறது. பின்னர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சாலைகளை மிகச் சுத்தமாகக் குளிப்பாட்டி விடுகிறது. ஒரே ஒருவர்தான் இந்த லாரி வடிவ எந்திரத்தை இயக்குகிறார். Manhole எதுவும் இல்லை. யாரும் குவாட்டர் பாட்டில் ரம் அடித்துவிட்டு அதற்குள் கோமணத்துடன் இறங்கி உடல் முழுக்க பீயும் சாக்கடையும் ஒழுக சுத்தம் செய்வதில்லை.
எட்வின் தோழி ஒருத்தி - ஃபிரெஞ்ச்சுக்காரி - இந்தியா பற்றிப் பெருமாளிடம் புகழோ புகழ் என்று புகழ்ந்துகொண்டிருந்தாள். பெருமாள் அவளுக்கு மயிலாப்பூர் மாமி என்று பட்டப் பெயர் வைத்திருந்தான். இவளைப் போலவே இந்தியாவைப் புகழும் பெரும் கூட்டம் ஒன்று ஐரோப்பாவில் அலைந்து கொண்டிருக்கிறது. இவர்களையெல்லாம் கொஞ்ச நாட்களாவது இந்தியாவிலுள்ள Man-holeகளில் இறக்கி விட வேண்டும் என்று நினைத்துக்கொள்வான் பெருமாள்."
No comments:
Post a Comment