அந்த ஆஸ்திரேலியத்தீ
முன்னையிட்ட தீயோ
பின்னையிட்ட தீயோ
நாற்புறமும் எரியுது
அந்த கானகத்துத்தீ
உலகின் இன்னொரு எழவுசெய்தி
தீ நாக்குளால் தீத்தண்டோராவானது
கந்தக புகைகுன்றுகளாய்
கதறி ஓலமிடும்
இதுவரை பச்சை மரங்களால்
வயிறு புடைத்திருந்த அந்த வனம்
இன்று
விலங்குச்சாம்பல் மேடுகளால்
மேலும் வீங்கி வெடித்து கிடக்கிறது
தீச்சூட்டில் கொதித்த
வெப்பநில இடுக்குகளில்
குதிக்கும் கங்காருகளின்
கதறல் மட்டுமல்ல
கானகத்தின் மொத்த சத்தமும்
உறைந்து இறுகி இறுதியானது
வானெங்கும்
கருகிய மனிதமூளை மேகங்கள்
தங்கள் வலிந்த இயலாமையை
வட்டமடித்து பாருக்கு பறைகிறது
இன்னுமொரு செய்தியாய்
அதை நாம்
கவனித்தோ! அல்லாமலோ!
நகர்ந்து செல்கிறோம்!
வனச்சவ உடற்குவியல் மேட்டில்
வெற்றிக்குறிக்கொடி ஏந்தி
உட்கார்ந்து சிரிக்கிறது
உலக வணிகப்பொருளாதாரம்
அக்கொடி ஏந்தும் செய்தி
என்ன தெரியுமா?
இன்னும் இருக்கிறது!
என்ன செய்வீரென்று!
இது நெருப்பூட்டும் விஞ்ஞானத்துக்கும்
அணைக்கும் அறிவியலுக்கும்
சவால் இடரா?
அல்லது
மனிதம் விற்கும்
வணிகச்சூது வேடிக்கையா?
எதுவோ? ஏதுவோ?
ஒரு தேனீயின் மரணம்
இயற்கையின் ஒரு விரல் இறப்பு
என்று உணராத நாம்
ஒரு வனத்தின் மரணம்
இப்பிரபஞ்சத்தின் நுரையீரல் சாவென்று
எப்போது உணர்வோம்?
முதுகில் முப்பொழுதும்
ஆக்சிஜன் அண்டாக்களை கட்டிக்கொண்டே
காசு சம்பாதிப்போமே!
அப்போதா?
No comments:
Post a Comment