Wednesday, April 1, 2020

இந்தியாவில் கொரோனா -  கற்கத் தவறிய பாடங்கள்!
மருத்துவரின் வேதனைப் பகிர்வு 
நன்றி: ஆனந்த விகடன் 

நாவல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்திய நாடு எதிர் தாக்குதல் நடத்துகிறது. நாட்டின் பிரதமர் தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை எச்சரிக்கிறார். எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் மட்டுமல்ல, படித்தறிந்த வரலாற்றிலும் இதுபோல நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு, மக்கள் வீதிகளில் நடமாடுவது தடை செய்யப்பட்டதில்லை.

அரசு நிர்வாகம் முழு முனைப்போடு செயல்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் முழு நேரப் பணியாளர்களாக, வேலை நேரக் கட்டுப்பாடுகளின்றிப் பணியாற்றுகிறார்கள். சேலம் மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களோடு தொடர்பிலிருந்த 1,08,677 வீடுகளில் வசிக்கும் 3,96,147 நபர்களுக்கு சில நாள்களிலேயே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இவர்களிடம் கொரோனா அறிகுறிகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்பது போல மூக்கு, தொண்டை ஆகிய இடங்களிலிருந்து ஸ்வாப் எடுத்து பரிசோதிக்கப்படவில்லை என்பது குறை.

Representational Image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவரே நேரடியாகச் சென்று, வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று வந்தவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்களா என்பதையும், ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்டறிகிறார். எல்லா இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் இதேபோன்ற சிரத்தையோடு செயல்படுவதைக் காணமுடிகிறது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் கொரோனா ஆபத்து குறித்த முழுமையான புரிதலோடு செயல்படுவதைக் காணமுடிகிறது.

கொரோனா தொற்று சவாலை இந்திய நாடு தன் நிர்வாக அமைப்பின் வாயிலாகவும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் வாயிலாகவும் எதிர்கொள்கிறது. பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்வது போன்ற பேரிடர் மேலாண்மை உத்திகளை அரசு பயன்படுத்துகிறது. பிரதமர், முதலமைச்சர்களோடு பேசுகிறார். முதலமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் நடத்தி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தினந்தோறும் மருத்துவ அதிகாரிகளோடும், பல்துறை அதிகாரிகளுடனும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

நோய், சமூகப் பரவல் கட்டத்தை எட்டும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்கான முனைப்பில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, கொரோனா மருத்துவத்துக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுகிறோம். சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையை, கொரோனா நோய் சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவது குறித்த செய்திகள் வந்திருக்கின்றன.

சீனாவும், மேற்கத்திய நாடுகளும் நம் நாடு போலவே, பேரிடர் மேலாண்மை‌ உத்திகளைப் பயன்படுத்தி கொரோனா தொற்றை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் நானறிந்தவரை இந்திய நாட்டில் நடைபெறாத ஒன்று, சீனாவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது நாவல் கொரோனா குறித்த அறிவியல் ஆராய்ச்சி.


இங்கிலாந்து நாடு, கொரோனா ஆராய்ச்சிக்காக 20 மில்லியன் பவுண்டுகளையும், கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்காக மேலும் 20 மில்லியன் பவுண்டுகளையும் ஒதுக்கியிருக்கிறது. லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கோவிட்-19 என்ற குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்தக் குழு வழங்கும் அறிவுரைகளை அரசு நடைமுறைப்படுத்துகிறது. மார்ச் மாத பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) எனும் மருத்துவப் பத்திரிகையில் கொரோனா பற்றிய பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. கொரோனா நோய் குறித்து கூகுள் இணையதளத்தில் தேடினால், பேராசிரியர் அஸ்ட்ரா கானி, பேராசிரியர் கிரிஸ்டி டொனலி, பேராசிரியர் ஸ்டீபன் ரைலி போன்ற பிரிட்டிஷ் பெயர்களையே காணமுடிகிறது.

Representational Image

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) கொரோனா ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது. www.coronavirus.com என்ற இணையதளத்தின் மூலம் கொரோனா ஆராய்ச்சிகளின் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுகிறது. கொரோனா வைரஸின் மரபணு ஆராய்ச்சிகளும், வைரஸின் செல் கூறு ஆய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கனடா நாடு 273 மில்லியன் டாலர்களை இந்த ஆய்வுக்காக ஒதுக்கியிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஜெர்மனி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டது. தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் 80 மில்லியன் யூரோவை ஒதுக்கீடு செய்தது. சீன நாடு, ஆராய்ச்சிகள் நடத்தி கொரோனா நோய்க்கு பவிபிரவிர் (Favipravir) என்ற மருந்து பயன்படும் என கண்டுபிடித்திருக்கிறது. இந்த மருந்து இப்போது மனிதர்களிடம் சோதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கொரோனா ஆராய்ச்சி குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இணையதளத்திலும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களோ அல்லது அந்த வைரஸ் பற்றிய ஆராய்ச்சி குறித்த தகவல்களோ இல்லை. இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் (Indian Council of Medical Research – ICMR) இணைய தளத்தைப் பார்த்தாலும், இந்தியாவில் கொரோனா ஆய்வுகள் நடந்துகொண்டிருப்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை.

கொரோனா குறித்த இந்திய ஆராய்ச்சிகள் மிக அவசியம். மிக அவசரம். கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் அது ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இத்தாலியிலும், அமெரிக்காவிலும் வயது முதிர்ந்தவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் கொன்றிருக்கிறது. இங்கிலாந்து நாட்டை விட ஸ்பெயின் நாட்டில் வேகமாகவும் அதிகமாகவும் பரவியது.

கொரோனா வைரஸ் கண்ணாடி, மரம், உலோகம் போன்ற உயிரற்ற பொருள்களின் மேல் பல மணி நேரங்கள் (72 மணி நேரம் வரை) உயிர் வாழக்கூடியது. அதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பெரும் தொற்றாக மாறியது. இந்தியச் சூழலிலும், இந்த வைரஸ் பல மணி நேரங்கள் உடலுக்கு வெளியே உயிர் வாழக் கூடியதா என்பதை ஆராய வேண்டும். கொரோனா நோயோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவது, நம் நாட்டில் மிகக் குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது.

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது 31.01.2020 அன்று. நேற்றோடு (31.3.2020) 91 நாள்கள் ஆகின்றன. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி 1251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தாலி நாட்டிலும் 31.1.2020 அன்றுதான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அந்நாட்டில் தொற்று ஏற்பட்டு, 11,591 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இத்தாலி நாட்டில் நடந்ததுபோல இந்தியாவில் ஏன் கொரோனா பரவவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியாவில் இன்றுவரை சமூகப் பரவல் ஏற்படாததற்கு அரசின் நடவடிக்கைகளை மட்டும் காரணமாகக் கூறிவிட முடியாது. மூன்று வார கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு தங்கள் ஊருக்குச் சென்றார்கள். அப்போது, பேருந்துகளில் காற்று புகக் கூட இடமில்லாத நெருக்கடியில் பயணித்தார்கள். ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருந்திருந்தால் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், ஏதோ காரணத்தால் அத்தகைய பரவல் நிகழவில்லை என்பதாகவே தெரிகிறது.

இந்தியச் சூழலில் கொரோனா வைரஸ் எப்படிச் செயல்படும் என்பதை அறிவது அவசியம். மூன்று வாரங்களுக்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்றும், அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாமென்றும் பொய் வதந்திகள் உலவின. இதற்கு பதிலளித்துப் பேசிய நடுவண் அரசின் உயரதிகாரி அத்தகைய திட்டமெதுவுமில்லை என்பதை விளக்கினார். மூன்று வாரத்துக்குப் பிறகு நிலைமை மறு ஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். எதுவாக இருந்தாலும் முடிவுகள் நிர்வாக முடிவுகளாகவே இருக்கும். மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் இந்திய மண்ணில் எப்படிச் செயல்படும் என்பது கண்டறியப்பட்டு அதனடிப்படையில் இந்திய நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும். அந்த அறிவியல் பாதை நமக்கு சாத்தியமில்லை. சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் பின்பற்றிய வழிகளையே நாம் பின்பற்றப் போகிறோம். உள்நாட்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் எதுவும் இங்கில்லை.

அறிவியல் ஆராய்ச்சியில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, நம் நாடு மிகக் கீழே இருக்கிறது. எம்.பி.பி.எஸ், எம்.எஸ்., எம்.சி.ஹெச் என்ற மருத்துவக் கல்வியின் மூன்று நிலைக் கல்விகளையும் பயின்றவன் நான். அந்தப் படிப்புகளின் போது நான் கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மருத்துவத் தகவல்களில், இந்திய நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலம் சொல்லப்பட்ட செய்திகள் ஒன்றிரண்டு இருக்கலாம். மற்ற எல்லாமே மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் கண்டுபிடிப்புகளும் இவற்றில் இருக்கும்.

நவீன மனித வாழ்வின் அச்சாணியாக அறிவுதான் இருக்கிறது. உலகமே அறிவின் பாதையில் நடக்கிறது. 21-ம் நூற்றாண்டில், அறிவுப் பாதையை நாடாமல் இருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. அதைவிட வேதனை, வாழ்க்கையின் சிக்கல்களுக்கு, புராண இதிகாசங்களில் விடை தேடுவது, நம்புவது போன்ற பழைமையைப் போற்றி, அறிவுக்கு எதிராக இயங்கும் பேராபத்தான பிற்போக்கு இயக்கங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.

இந்திய நாடு வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை `மொத்த உள்நாட்டு வருவாய்' என்ற குறியீட்டின் மூலம் கணக்கிடுகிறார்கள். இதே போன்ற வளர்ச்சி தொடருமானால் இந்திய நாடு பல ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியாக மாற வேண்டும். நாடு அறிவியல் பாதையில் சென்றால்தான் வாழ்க்கைத் தரம் மேம்படும். அறிவியல் பார்வையை வளர்ப்பதற்கும், அறிவியலை வளர்ப்பதற்கும் அரசுகள் முனைவதில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலான உணர்வுகளும், மத, இன அடிப்படைவாத சித்தாந்தங்களுமே அரசியல் பிரச்னைகளாக மக்கள் முன் வைக்கப்படுகின்றன. உணர்ச்சியின் அடிப்படையில் வாழும் விலங்குகளாக இருந்த மனித இனம், அறிவியலின் காரணமாக நாகரிக மனிதர்களாக உயர்வு பெற்றது.

இனி வரும் காலங்களில், நம் நாடு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். மாணவர்களிடையே அறிவியல் பார்வையையும், ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்க வேண்டும். மக்களின் வாழ்க்கை முறையே அறிவியலின் வழியிலானதாக மாற வேண்டும்.

கொரோனா உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் அறிவியல் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

-மருத்துவர். இரா. செந்தில்

(தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்)

No comments:

Post a Comment