Monday, September 6, 2021

அயோத்திதாசப் பண்டிதர் யார், அவர் ஏன் 
திராவிடன் - தமிழன் என்ற அடையாளத்தை முன்னெடுத்தார்?
 நன்றி - கௌதம சன்னா, ஆனந்த விகடன்

அயோத்திதாசப் பண்டிதர்

'திராவிடன்', 'தமிழன்' என்கிற இரண்டு அரசியல் அடையாளச் சொற்களைத் தமிழகத்துக்கு வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் பண்டிதர் அயோத்திதாசர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

3.9.2021 தமிழக சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான். அயோத்திதாசப் பண்டிதருக்கு வடசென்னையில் ஒரு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்ததுடன் நில்லாமல் பண்டிதர் முன்வைத்த இரண்டு வரையறைகளை வலியுறுத்திப் பேசினார்.

'தமிழன்', 'திராவிடம்' என்கின்ற சொற்களைத் தவிர்த்து தமிழக அரசியலைப் பேச முடியாது என்றும், இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றியவர் பண்டிதர் அயோத்திதாசர்தான் என்கின்ற வரலாற்றுக் குறிப்பையும் சொல்லி, திருக்குறளுக்கு அவரது பாட்டனார் ஆற்றிய பணிகளைப் பற்றியும் விவரித்தார்.
ஸ்டாலின்

இக்காலத்தில் இந்தக் கருத்து மிகப் புதிதாக தோன்றலாம். திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் ஒருபுறமும் அதை ஆதரிப்பவர்கள் மறுபுறமும் இருக்கின்ற அதே நேரத்தில் தமிழன் என்கிற சொல்லை உயர்த்திப் பிடிப்பவர்கள் இருதரப்பிலும் இருக்கின்றார்கள். திராவிடம் என்கின்ற சொல்லைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் அச்சொல் திராவிட இயக்கத்தின் கொடை என்கின்ற மூட நம்பிக்கையில் இருக்கின்ற காரணத்தினாலும், திராவிட அரசியல் கட்சிகளை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தினால் வரலாற்று திரிபு செய்து தங்களது எதிர்ப்பை கட்டமைத்துக் கொள்கின்றார்கள்.

அதேநேரத்தில் திராவிடக் கருத்தியலை முன்வைத்தவர்களும் திராவிடம் என்ற சொல்லை அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்திய பண்டிதரின் பங்களிப்பையும் நீண்டகாலம் பேசாமலேயே இருந்தார்கள்.

தமிழ்த்தேசியம் பேசுபவர்களுக்கும் திராவிட தேசியம் பேசியவர்களுக்கும் ஒரு மறைக்கப்பட்ட பொருளாகவே பண்டிதர் அயோத்திதாசர் இருந்து வந்தார். இப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த தடைகளை எல்லாம் உடைத்து பண்டிதருக்கு உரிய அரசு அங்கீகாரத்தை வழங்கி இருக்கின்றார்.

'திராவிடன்', 'தமிழன்' என்கிற இரண்டு அரசியல் அடையாளச் சொற்களைத் தமிழகத்துக்கு வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் பண்டிதர் அயோத்திதாசர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. எனினும் திராவிடர் என்ற சொல்லை பண்டிதர் அயோத்திதாசருடன் பணியாற்றிய ரெவரெண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் 1887-ம் ஆண்டு 'திராவிட பாண்டியன்' என்கின்ற இதழ் தொடங்கியதோடு 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி உருவாக்கியிருந்தார். 'திராவிட பாண்டியன்' இதழில் பண்டிதர் அயோத்திதாசரின் பங்கும் இருந்தது.
அயோத்திதாசர்

அதற்குப் பிறகு 1891-ம் ஆண்டு 'திராவிட மகாஜன சபை'யினைப் அயோத்திதாசர் தொடங்கினார். ஏற்கனவே ரெவரண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மட்டுமே இயங்கி மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது. இருந்தாலும் மாலை நேரப் பள்ளிகள் என்கிற செயல்பாடு தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு விரிந்து பரவின. இருந்தபோதிலும், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபையை பெரும் இயக்கமாக கட்டமைத்தார். அந்த அமைப்பு அன்றைக்கு உருவான காங்கிரஸ் அமைப்போடு நேரடியாகவே மல்லுக்கு நின்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு மனுக்கள் மூலமாக கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தங்களை கொடுத்தது.

எனினும் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டு விடைத்தேட வேண்டியுள்ளது. ஏன் பண்டிதர் அயோத்திதாசர் திராவிடன் என்ற அடையாளத்தை அப்போது முன்னெடுத்தார்?

இந்த அடையாளத்தை முன்னெடுத்த காலத்தில் மூன்று விதமான இயக்கப் போக்குகள் தமிழகத்தில் உருவாகியிருந்தன. ஒன்று காங்கிரஸ் தலைமையில் உருவாகியிருந்த உயர் சாதியினருக்கான ஒருங்கிணைப்பு. இரண்டாவது, ஆதிதிராவிட மகாஜன சபை; இது நேரடியாகவே தலித் மக்களை முன்னிறுத்தி செயல்பட்ட ஓர் அமைப்பு. மூன்றாவது பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கிய திராவிட மகாஜன சபை. ஏறக்குறைய சம காலத்தில் உருவான இந்த இயக்கங்களினால் தமிழகம் மட்டுமன்றி இந்திய அரசியலுக்கான திசை போக்கு தீர்மானிக்கப்பட்டது. மண்ணின் மைந்தர்களாக திராவிடர்களும், சமூக அதிகாரத்தைக் கைகொண்டவர்களாகவும் ஆரியப் பண்பாட்டை கடைபிடிப்பவர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்ட காங்கிரஸ்காரர்கள்.

இதில் தமிழ்நாட்டுக்கென பொது அடையாளம் ஏதும் முன் வைக்கப்படாத சூழலில்தான் திராவிடர் என்கின்ற அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் முன்வைத்தார். அதுமட்டுமின்றி 'பூர்வ தமிழ்க் குடி' என்றும் 'ஆதித்தமிழர்கள்' என்கின்ற அடையாளத்தையும் முன்வைத்து அவற்றை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதே முன்வைத்திருந்தார் அயோத்திதாச பண்டிதர்.
அயோத்திதாசப் பண்டிதர்

அதற்குப் பிறகு இடையில் பல்வேறு விதமான அரசியல் சமூக மத நடவடிக்கைகளில் பண்டிதர் அயோத்திதாசர் ஈடுபட்டிருந்தாலும் தமது திராவிடன் - பூர்வ தமிழன் - ஆதிதமிழன் என்கிற அடையாள முன்னெடுப்பை அவர் கைவிடவே இல்லை.

1897 பிற்பகுதியில் தென்னிந்திய பவுத்த சங்கம் அல்லது தென்னிந்திய சாக்கிய சங்கம் என்கின்ற பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை அவர் உருவாக்கியிருந்தார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபாலா (இவர்தான் இந்தியாவில் மகாபோதி இயக்கத்தை தொடங்கியவர்) சிங்காரவேலர் (தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படுபவர்) பேராசிரியர் லட்சுமி நரசு (கிறித்துவ கல்லூரி பேராசிரியர்) இந்த பெரும் அறிஞர்கள் இணைந்து பௌத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனகாரிக தர்மபாலா வடநாட்டில் பௌத்தத்தை மீட்க வேண்டும் என்றும், பிற மதத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த புத்தர் ஞானம் அடைந்திருந்த புத்தகயாவை மீட்க வேண்டும் என்று கிளப்பிப் போய் பணியாற்றத் தொடங்கினார். சிங்காரவேலர் இடதுசாரியாக மாறிக் கொண்டிருந்தார். இருந்தும் பண்டிதர் மறைந்த 1914 வரை அவருடன் தொடர்பில் இருந்தார். பேராசிரியர் லஷ்மி நரசு பௌத்த பரப்புரையுடன் மட்டும் நின்றார்; அறிவுத் தளத்தில் செயல்பட்டார். ஆனால் பண்டிதர் அயோத்திதாசர் மட்டும்தான் பௌத்த மறுமலர்ச்சியை இயக்கமாக கட்டமைத்து அதைச் சாதித்து காட்டினார். எனவே சுமார் 800 ஆண்டுகள் தமிழகத்தில் மறைந்து போயிருந்த பௌத்த மதத்தை மீட்டெடுத்த பெருமை பண்டிதர் அயோத்திதாசரையே சேரும்.

தமது இயக்கத்துக்கென தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் பௌத்த கோயில்கள் எனப்படும் விகாரைகளை உருவாக்கினார். சென்னை பெரம்பூரில் அதற்கென தலைமை பௌத்த விகாரையினை உருவாக்கினார். பெரம்பூர் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள நெல்வயல் சாலையில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய பௌத்த சங்க விகாரத்தை நாம் காணமுடியும்.
ஒரு பைசா தமிழன்

1907-ம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்கிற இதழைத் தொடங்கினார் அயோத்திதாசர். இந்த இதழ் ஓராண்டு காலம் நடைபெற்றது. ஒரு பைசா தமிழன் என்றால் ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லாத தமிழன் என்று பொருள். அந்த அளவுக்கு அன்றைக்கு தமிழன் என்றால் மரியாதை குறைவு என்ற சூழல். அந்த சிந்தனையை மாற்றி, ஒரு பைசாவுக்குக் கூட மதிப்பில்லாத தமிழனாக கருதப்படுகிறவன் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன் தான் என்கின்ற பொருள்பட 'ஒரு பைசா தமிழன்' என்று பெயர் வைத்திருந்தார். எனவே தமிழன் என்கின்ற சொல்லாடலைத் தமிழ்ச் சமூகம் அன்றைக்கு எவ்வளவு மோசமாக நினைத்துக் கொண்டிருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பைசா தமிழன் என்கின்ற இந்தச் சொல்லாடல் உருவாக்கப்படுவதற்கு முன்பும் சரி பின்பும் சரி, தமிழன் என்ற அடையாளத்தைத் தமிழ்பேசும் சமூகங்கள் அன்றைக்கு விரும்பவே இல்லை. ஓர் ஒற்றை பொது அடையாளத்துக்குள் வந்தால் தாங்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கக்கூடிய சாதிபேத அடையாளங்களை முற்றிலும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தினால் தமிழன் என்கிற அடையாளத்துக்குள் தமிழர்கள் வரத் தயங்கினார்கள். அதைக் குத்திக்காட்டும் விதமாகத்தான் அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ஒரு பைசா தமிழன் என்கின்ற பெயரை வைத்து இதழைத் தொடங்கி நடத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே பல்வேறு தளங்களிலிருந்து கடிதங்கள் அவருக்கு வந்தன. ஒரு பைசா தமிழன் என்கின்ற சொல் சரியானது அல்ல, அதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் வாசகர்கள்.

அதன்படி வாசகர்களின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையின் பெயரை 1908-ம் ஆண்டு 'தமிழன்' என மாற்றி அமைத்தார். இந்திய வரலாற்றில் குறிப்பாக 1920-ம் நூற்றாண்டுகளில் எந்தப் பெயரை சொல்ல மக்கள் தயங்கினார்களோ அதே பெயரை வைக்க வேண்டும் என அந்த மக்களே கோரிக்கை வைக்கக்கூடிய அளவுக்குக் கொண்டு வந்ததுதான் அயோத்திதாச பண்டிதரின் மிகப்பெரிய சாதனை. தமிழன் என்கின்ற சமூக அரசியல் அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் நிலைநாட்டி விட்டாலும், யாரெல்லாம் தமிழராக இருக்க முடியும் என்கின்ற வரையறையையும் அவர் அதில் சேர்த்து வைத்திருந்தார். தமிழன் என்றால் “சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்” என்கின்ற வரையறையை அவர் வைத்திருந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர்

அவரைப் பொறுத்தவரையில் திராவிடம் என்பது இணைய ரீதியான பெயர் அல்ல; பௌத்த அடிப்படையில் பொருள் புரிந்து கொண்ட திராவிடம் என்கின்ற சொல்லின் தொடர்ச்சியாகவே அதைப் பார்த்தார். சாதி பேதமற்ற திராவிடர்கள் தான் தமிழர்கள் என்பது அயோத்திதாச பண்டிதரின் வரையறுப்பு என்றால், தமிழர்களின் ஆதி அடையாளம் சாதி பேதமற்ற நிலை அவர் காலத்திய சாதிய அடையாளங்களோடு நேரடியாக மோதியது. சாதி எவ்வளவு புரையோடிவிட்டது என்றால், தமிழன் என்ற அடையாளத்தை மறுக்கக் கூடிய அளவிற்கு சாதி உணர்வுகள் கூர்மை பெற்று இருந்தனர் என்பதற்கும் இதுவே தெளிவான சான்று. ஆனால் தமது முயற்சியில் அவர் தளரவில்லை. தனது கருத்தியல் அடித்தளத்தைத் தமிழன் இதழின் வாயிலாக மிக விரிவாக அவர் உருவாக்கினார். விளைவாக பிற்காலத்தில் தமிழன் மற்றும் திராவிடம் என்கிற இரண்டு சொற்களும் அரசியல் அரங்கில் முதன்மை இடத்தைப் பிடித்தன. ஆனால் அவையிரண்டும் தனித்தனி பொருளில் புரிந்து கொள்ளப்பட்டு அவை பெரும் அரசியல் இயக்கமாகத் தமிழகத்தின் அரசியல் அடித்தளத்தை நிர்ணயிக்கும் இயக்கங்களாக உருமாறியிருந்தன.

இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கின்ற அதேநேரத்தில் மிக லாவகமாகப் பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கிய திராவிடர் குறித்த வரையறையை மறைத்து விடுவார்கள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட திராவிடம் என்ற சொல் குறித்து பண்டிதர் முன்வைத்த வரப்புகளில் அதிகமாக பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். இரண்டு போக்குகளில் இருந்து மீண்டு வருவது என்பது பண்டிதருக்கு எளிதாகப் படவில்லை. ஆனால் தொடர்ந்த விவாதங்களின் மூலமும் கருத்தியல் பரிமாற்றங்களின் மூலமும் வரலாற்று ஆய்வுகளின் மூலமும் இன்றைக்குப் பண்டிதர் தனக்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றார்.
அயோத்திதாசப் பண்டிதர்

ராயப்பேட்டையில் மருந்து வியாபாரியாகவும், மருத்துவராகவும் வேலையார்த்து வந்த கந்தசாமியின் மகனாக, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தெளிந்து ஓடிக்கொண்டிருந்த கூவம் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த மக்கிமாநகர் அல்லது மக்கீஸ் தோட்டம் என்கிற இடத்தில் 1845ஆம் ஆண்டு மே 20ம் நாள் பிறந்தவர் காத்தவராயன். வள்ளக்காலத்தி வீ.அயோத்திதாசப்பண்டிதர் என்பவரிடம் வடசென்னை காசிமாநகர் என்று அழைக்கப்பட்ட காசிமேட்டில் கல்வி பயின்றார். மருத்துவம், இலக்கியம், இலக்கணம், சமஸ்கிருதம், சோதிடம் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சிப் பெற்றார். குருவின் மீதிருந்த பக்தியின் காரணமாக தனது பெயரை க.அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.

பாட்டனாருடன் நீலகிரி போனபோது அங்கே தோடர் பழங்குடி பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்துக் கொண்டார். ஒரு குழந்தை பிறந்தது. பிறவியேலேயே கண்பார்வையற்ற குழந்தை விரைவில் இறந்து போனது. பிறகு மனைவியும் இறந்துப் போனார். எனவே தமிழ்நாட்டைவிட்டு கிளம்பி பர்மாவில் போய் பத்தாண்டுகள் அலைந்து திரிந்தார். பின்பு நாடு திரும்பி நீலகிரியில் அத்வைதானந்த சபை என்னும் அத்வைத மடத்தினை நிறுவினார். அதன் மூலம் சித்த மருத்தவ பரப்புரையும் மேற்கொண்டிருந்தார். கொஞ்சகாலம் கழித்து ரெட்டமலை சீனிவாசனாரின் தமக்கையாரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் மெட்ராசுக்கே திரும்பினார். 1914 மே மாதம் 5-ம் நாள் மறையும் வரை ராயபேட்டையிலே வசித்து வந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர்

தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தையென வர்ணிக்கப்படும் பண்டிதர் அயோத்திதாசர் பிறந்து 175 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் மறைந்து 107 ஆண்டுகள் ஆகிறது. இத்தனைக் காலம் கடந்து தமிழகத்தின் அரசியல் வரலாற்றின் அடையாள அடிப்படையை வகுத்துக் கொடுத்த அயோத்திதாச பண்டிதருக்குக் கிடைத்திருக்கின்ற அங்கீகாரத்தின் தாமதம் நெடும் போராட்டத்திற்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது.

பகவன் புத்தரை குறித்து பண்டிதர் எழுதிய ஒரு சிறு நூலுக்கு அவர் வைத்த தலைப்பு 'இரவு பகலற்ற ஒளி' என்பதாகும். அந்தத் தலைப்பையே அயோத்திதாசரின் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அணியாகச் சேர்த்திருந்தார். நிச்சயம் அயோத்திதாசர் அவர்களுடைய பணிகள் இரவு பகலற்ற ஒளி போல ஒளிரும் என நம்புவோம்.

No comments:

Post a Comment