Thursday, November 11, 2021

 இன்சுலினுக்கு இப்போது வயது 100

நன்றி: ஆனந்த விகடன்

நவீன மருத்துவத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இன்சுலினைச் சொல்கிறார்கள். இன்றைக்கு கொரோனாத் தடுப்பூசிகளைக் கண்டறிந்த பல நிறுவனங்கள் இஷ்டத்துக்கு அதற்கு விலை நிர்ணயம் செய்தபோது, ‘ஆராய்ச்சிக்காக அவர்கள் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டாமா?’ என்று நம்மில் பலரே நியாயப்படுத்துகிறோம். (இத்தனைக்கும் இதில் பல தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளுக்கு அரசுகளே நிதி அளித்திருந்தன!) ஆனால், இன்சுலினைக் கண்டுபிடித்தவர்கள் அதன் காப்புரிமைக்காகப் பெற்றது வெறும் ஒரு அமெரிக்க டாலர். மகத்தான அந்த மருந்து, குறைந்த விலையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர்.



சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கையை இன்சுலினுக்கு முன்/இன்சுலினுக்குப் பிறகு என இரண்டாகப் பிரிக்கலாம். குறிப்பாக கணையம் செயலிழந்து இன்சுலின் சுரக்க இயலாத நிலையில் இருக்கும் டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு! 1921-ம் ஆண்டு இன்சுலினைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர்களால் நீண்ட காலம் உயிர்வாழ முடியவில்லை. ஸ்ட்ரிக்ட் டயட் இருக்கச் சொல்வதைத் தவிர, டாக்டர்களுக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், சில ஆண்டுகளில் ஒன்று அது சர்க்கரை முற்றி, சாகும்; அல்லது, பட்டினியால் சாகும். இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அவர்கள் முதுமையை தரிசித்தனர். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பு குறையும்போது இதுவே ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றுகிறது. பல லட்சம் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்த அற்புதக் கண்டுபிடிப்பு அது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இன்சுலினுக்கு மாற்று வேறு எதுவும் வரவில்லை என்பதே அதன் மகத்துவத்தை உணர்த்துகிறது.

இன்சுலினைக் கண்டறியும் முயற்சி, அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் சர்க்கரை நோய் வரும் என்பதால், இந்தப் பரிசோதனையில் ஏராளமான நாய்கள் உயிர்த்தியாகம் செய்தன. ஆரோக்கியமான நாய்களின் கணையத்தை ஆபரேஷன் செய்து அகற்றியபிறகு, அவற்றின் உடலில் சர்க்கரை அதிகரித்தது. எனவே, ‘சர்க்கரை நோய் வருவதற்கு கணையத்தில் ஏற்படும் ஏதோ ஒரு பிரச்னைதான் காரணம்’ என்று டாக்டர்களுக்குப் புரிந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கணையத்தை இப்படி அப்படி ஆராய்ச்சி செய்து சம்பவ இடத்தை நெருங்கினர். கணையத்தின் லங்கார்ஹன் திட்டுக்கள் பகுதியில் சுரக்கும் ஏதோ ஒரு திரவம்தான் சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என்று புரிந்துகொண்டனர். அதற்கு ‘இன்சுலின்’ என்று ஒருவர் பெயரும் வைத்துவிட்டார்.

1916-ம் ஆண்டு ருமேனிய டாக்டரான நிகோலே பாலெஸ்கு என்பவர் ஒரு நாயின் கணையத்திலிருந்து சுரப்பைத் தனியாகப் பிரித்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்கு அதைச் செலுத்தியதும், அதன் ரத்த சர்க்கரை அளவு இயல்பானது. தான் மிக முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்திருப்பது அவருக்குப் புரிந்தது. ஆனால், அந்த நாய் சீக்கிரமே இறந்துவிட்டது. சில நாள்களில் முதல் உலகப் போர் வந்தது. டாக்டர் அவசரமாக ராணுவ சேவைக்குப் போக வேண்டி இருந்ததால், அந்த ஆராய்ச்சி தடைப்பட்டது.


1920 அக்டோபர்… கனடாவைச் சேர்ந்த ஃபிரடெரிக் பேன்டிங் என்ற டாக்டர், நாயின் கணையத்திலிருந்து தூய்மையான இன்சுலினைப் பிரித்தெடுக்க முடியும் என்று தன் ஆராய்ச்சியில் வெற்றி கண்டார். அவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர் மேக்லியோட் என்பவரிடம் போய் இதைச் சொன்னார். பேன்டிங் ஒரு சாதாரண அறுவை சிகிச்சை நிபுணர். பெரிதாக ஆராய்ச்சி செய்த அனுபவமும் இல்லை. அதனால் இவர் சொல்வதை எந்த அளவுக்கு நம்புவது என்று மேக்லியோடுக்குத் தயக்கம் இருந்தது என்றாலும், பேன்டிங் விடாமல் வற்புறுத்தியதால், தன் ஆராய்ச்சி நிலையத்தை அவருக்குக் கொடுத்தார். கூடவே, சார்லஸ் பெஸ்ட் என்ற ஆய்வக உதவியாளரையும் அனுப்பி வைத்தார்.

1921 ஜூலை 30… பேன்டிங்கும் பெஸ்ட்டும் இணைந்து ஒரு நாயின் கணையத்திலிருந்து இன்சுலினை வெற்றிகரமாகப் பிரித்து எடுத்தனர். ‘‘இதன்மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்’’ என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு சக டாக்டர்கள் சிரித்தனர். ‘‘பழுப்பு நிறத்தில் சேறு மாதிரி இருக்கும் இதைப் போய் மருந்து என்கிறீர்களே?’’ என்று கேட்டனர்.

‘நாய் எண் 410’ என்று பெயரிடப்பட்ட தீவிர சர்க்கரை நோயாளி நாய் ஒன்றுக்கு அந்த இன்சுலின் செலுத்தப்பட்டது. நாயின் ரத்த சர்க்கரை அளவு சில நிமிடங்களில் இயல்புக்கு வந்தது. மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த நாயை, பேன்டிங் கண்டுபிடித்த இன்சுலின் 70 நாள்கள் உயிருடன் வைத்திருந்தது. இன்சுலின் தீர்ந்தபிறகே அந்த நாய் செத்துப்போனது.

இன்சுலினின் செயல்திறனைப் பார்த்துப் பேராசிரியர் மேக்லியோட் திகைத்துவிட்டார். ஒரு மாபெரும் மருத்துவத் திருப்பத்தின் மையத்தில் நிற்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டார். தன் ஆய்வுக்கூடத்தில் நடைபெற்று வந்த மற்ற ஆராய்ச்சிகளையெல்லாம் நிறுத்திவிட்டு இன்சுலின் ஆராய்ச்சிக்கு இடவசதி செய்து கொடுத்தார். நாய்களிலிருந்து எடுக்கும் இன்சுலின் போதுமானதாக இல்லை என்பதால், கன்றுக்குட்டிகளிலிருந்து எடுத்தார் பேன்டிங். என்றாலும் ‘இது மனிதர்களுக்குக் கொடுக்கும் அளவுக்குப் பாதுகாப்பானதா’ என்ற சந்தேகம் மேக்லியோடுக்கு இருந்தது. ஜேம்ஸ் காலிப் என்ற உயிர் வேதியியலாளரை உதவிக்கு அழைத்தார். இப்போது குழு முழு வேகத்துடன் உழைத்து ஒரே மாதத்தில் தூய்மையான இன்சுலினைப் பிரித்தெடுத்தது.

1922 ஜனவரி 11. கனடாவின் டொரன்டோ பொது மருத்துவமனை. முற்றிய டைப் 1 சர்க்கரை நோயுடன் லியனார்டு தாம்சன் என்ற 14 வயதுச் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். கோமா நிலைக்குச் செல்லும் அளவுக்கு பாதிப்பு. அவனுக்கு இன்சுலினைச் செலுத்த அனுமதி கேட்டார் டாக்டர் பேன்டிங். இதுவரை மனிதர்கள் யாரிடமும் பரிசோதிக்கப்படாத மருந்து. ‘இதைக் கொடுக்காவிட்டாலும் மகன் சாகத்தான் போகிறான். கொடுத்து ஏதாவது பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை’ என்று தந்தை ஹரோல்டு தாம்சன் சம்மதம் தெரிவித்தார்.

இப்படித்தான் இன்சுலின் இன்ஜெக்‌ஷனைப் பெற்ற முதல் மனிதன் ஆனான் லியனார்டு தாம்சன். அது அவன் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் குறைத்தது. ஆனால், எல்லோரும் நினைத்ததுபோல அது பரிசுத்தமான இன்சுலின் இல்லை. அதனால் லியனார்டு உடலில் அலர்ஜி ஏற்பட்டது. அடுத்த டோஸ் இன்சுலின் தருவதை உடனடியாக நிறுத்தினர். உயிர் வேதியியலாளர் ஜேம்ஸ் காலிப் அடுத்த 12 நாள்கள் இரவும் பகலுமாகப் பல வேதிவினைகளைச் செய்து அந்த இன்சுலினைத் தூய்மையாக்கினார். ஜனவரி 23-ம் தேதி லியனார்டுக்கு இரண்டாவது டோஸ் இன்சுலின் போடப்பட்டது. இப்போது அலர்ஜி ஏற்படவில்லை. எலும்பும் தோலுமாகக் படுக்கையில் கிடந்த அந்தச் சிறுவன், அடுத்தடுத்து இன்சுலின் போட்டதும் உற்சாகமாகி எழுந்து விளையாட ஆரம்பித்தான். டாக்டர் பேன்டிங் குழுவினர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.



சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது’ என்ற செய்தி காட்டுத்தீப்போல உலகெங்கும் பரவியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இவான்ஸ் ஹ்யூக்ஸின் மகள் எலிசபெத் ஒரு சர்க்கரை நோயாளி. அமைச்சர் தன் மகளை அழைத்துக்கொண்டு கனடாவுக்கு விரைந்து வந்தார். அவரே இன்சுலின் போட்டுக்கொண்ட முதல் அமெரிக்கர். இப்படி வெளிநாடுகளிலிருந்து பலர் வருவது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு மருத்துவர்களும் இன்சுலினைக் கேட்க ஆரம்பித்தார்கள். அமெரிக்காவின் ஏலி லில்லி மருந்து நிறுவனம் இதற்காக ஒப்பந்தம் செய்து, 1922 நவம்பரில் விற்பனைக்கே கொண்டுவந்துவிட்டது.

இன்சுலினைக் கண்டுபிடித்ததற்காக 1923-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஃபிரடெரிக் பேன்டிங் மற்றும் பேராசிரியர் மேக்லியோட் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. ‘என் ஆராய்ச்சிக்கு உதவிய பெஸ்ட்டுக்கும் இதில் பங்கு உண்டு’ என்று சொல்லி, அவருடன் தன் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொண்டார் பேன்டிங். ‘இன்சுலினைச் சுத்திகரிக்க உதவிய ஜேம்ஸ் காலிப்புக்கும் இதில் பங்கு உண்டு’ என்று சொல்லி, தன் பரிசுத் தொகையை அவருடன் பகிர்ந்துகொண்டார் மேக்லியோட். இந்த அரிதான பெருந்தன்மையைக் கண்டு நோபல் கமிட்டி திகைத்துவிட்டது.

தாங்கள் கண்டுபிடித்த இன்சுலினுக்குக் காப்புரிமை வாங்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை. ஒரு சர்க்கரை நோயாளி ஆயுள் முழுக்க இன்சுலினைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், உலகம் முழுக்க எல்லோருக்கும் இது மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், இவர்களின் அனுமதி இல்லாமலே ஒரு மருந்து நிறுவனம் இதற்குக் காப்புரிமை வாங்க முயன்றது. அப்படி அவர்கள் செய்திருந்தால், அவர்கள் மட்டுமே இன்சுலினைத் தயாரித்திருக்க முடியும். அதற்கு என்ன விலை சொன்னாலும், உலகம் கொடுத்திருக்க வேண்டும்.

இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்காக இவர்கள் நால்வரும் இணைந்து, இன்சுலின் காப்புரிமையை டொரன்டோ பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்துவிட்டு ஒற்றை அமெரிக்க டாலரை அடையாளத் தொகையாகப் பெற்றுக்கொண்டார்கள். ‘இன்சுலினைப் பிரித்தெடுக்கும் வழிமுறையை நாங்கள் வெளிப்படையாகத் தருகிறோம். யார் வேண்டுமானாலும் இந்த முறையைப் பின்பற்றித் தயாரிக்கலாம். ஆனால், கொள்ளை லாபம் பார்க்க முயற்சி செய்யக் கூடாது’ என்று எழுதியும் கொடுத்தார்கள். மருத்துவ அறத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது இந்தச் செயல்.



ஆரம்பக்காலத்தில் கால்நடைகள் மற்றும் பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் பிரித்தெடுக்கப்பட்டது. அதில் சிலருக்கு அலர்ஜி வந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தெடிக் இன்சுலின் அறிமுகமானபிறகு, யாருக்கும் அலர்ஜி பிரச்னை இல்லை. இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப் எல்லாம் வந்தபிறகு இதைப் பயன்படுத்துவது இன்னும் எளிதாகிவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை ஏறினால் பெரும் கூக்குரல் எழுவதுபோலவே, இன்சுலின் விலை ஏறினாலும் சர்ச்சையாகிறது. மாத பட்ஜெட்டில் இன்சுலினுக்கு ஒரு தொகை ஒதுக்க வேண்டிய நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கின்றன. இப்போது அமெரிக்காவில் இன்சுலின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பது அங்கே ஜோ பைடன் அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செய்வது… சில கண்டுபிடிப்பாளர்கள் போல பல மருந்து நிறுவனங்கள் மருத்துவ அறத்தைப் பின்பற்றுவதில்லையே!


No comments:

Post a Comment