Monday, November 15, 2021

பழங்குடி மக்களின் ரட்சகன் பிர்சா முண்டா
அந்தோணி அஜய்.ர


ஏராளமான போராட்டங்கள், ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கடந்து இந்திய நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால், நாம் முழுமையாகச் சுதந்திரம் பெற்றுவிட்டோமா? நாம் போற்றிப் புகழும் நம் சுதந்திரத்தின் மீது நமக்கே நிச்சயமாகச் சந்தேகம் எழும், 'பிர்சா முண்டா'-வைத் தெரிந்துகொண்டோமேயானால்...

ஜார்க்கண்டில் கல்வி நிலையங்கள், போக்குவரத்து நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், விமான நிலையம், விளையாட்டு மைதானம் எனப் பல இடங்களில் பிர்சாவின் பெயரைக் காணலாம். `இது பிர்சா முண்டாவின் மண்!' எனக் கூறித்தான் எல்லாக் கட்சிகளும் அங்கு வாக்கு சேகரிக்கின்றன. கட்சி, கொள்கை என எந்த பேதமும் இன்றி யாரும் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கிறார் பிர்சா. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படைதிரட்டி வில், அம்புடன் சண்டையிட்டு மாண்டார் பிர்சா. அந்தக் காலத்தில் துணிவுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்த மிகக் குறைந்த தலைவர்களுள் பிர்சாவும் ஒருவர். வாழும்போது ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும், முண்டா உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்குக் கடவுளாகவும் இருந்தார் பிர்சா.

பிர்சாவின் புகழ் சொல்லும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்று ஜார்க்கண்ட் பழங்குடி இளைஞர்களுக்குக் கேட்கும்போதெல்லாம் புல்லரிக்கக்கூடியதாக இருக்கின்றன

இத்தகைய பெரும் பெயர்கொண்ட பிர்சா முண்டாவை இணையத்தில் `இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்’ என அடையாளம் காணலாம். ஆனால் இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குள் மட்டுமே சுருக்கிவிட முடியாத பழங்குடி மக்களின், மண்ணின் தலைவர் பிர்சா முண்டா!.

பிர்சா 1875-ம் ஆண்டு, எளிமையான பழங்குடிக் குடும்பத்தில் பிறக்கிறார். இந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையும் கலாசாரமும் உயர்ந்தவை எனவும், பாலின பேதமற்றவை எனவும் தற்போது அனைவரும் வியக்கின்றனர். ஆனால், பிர்சாவின் தந்தை சுகுணா முண்டா, தாய் கோர்மி ஹடா முண்டாவுக்கு அத்தகைய அமைதியான வாழ்க்கை கிடைக்கவில்லை. பிர்சா முண்டா இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் என நான்கு பேருடன் பிறந்தார். பிழைப்புக்காக ஊர்களில், கிராமங்களில் கூலிகளாக பிர்சாவின் அம்மாவும் அப்பாவும் அலைந்துகொண்டிருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

குழந்தையான பிர்சா, சால்கண்ட் கிராமத்தில் பெற்றோருடன் வாழ்ந்தார். பிர்சா பிறந்த ஊர் உலிகண்ட் கிராமமா அல்லது சால்கண்ட் கிராமமா என்பது தெரியவில்லை (தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி மாவட்டம்). பள்ளிப் பருவத்தில் டால்கா கிராமத்துக்குச் சென்ற பிர்சா, அங்கு தொடக்கக் கல்வியைப் பெற்றார். படிக்கும்போதே புதிய விவரங்களை அறிவதில் ஆர்வம்காட்டிய பிர்சா, தன் முண்டா இன மக்கள் சந்திக்கும் இன்னல்களையும், குழந்தைப் பருவம் முதலே கவனித்துவந்தார். குழந்தைப் பருவத்தில் பிர்சா நண்பர்களுடன் மணலில் புரண்டு மகிழ்ச்சியாக விளையாடுவார் என அவரைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. உண்மையில் அத்தனை மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் பிர்சாவுக்கு நீடிக்கவில்லை என்பதுதான் உண்மை. பிர்சாவின் ஆசிரியர் ஜெயபால் நாக் அவரை உயர் கல்விக்காக சாய்பசா மிஷனரி பள்ளியில் சேரப் பரிந்துரைத்தார்.

மிஷனரிகள் இந்திய மக்களின், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், அது வெறும் சேவை நோக்கோடு மட்டும் செய்யப்பட்டதல்ல என்று பிர்சா எண்ணினார். வெள்ளையர்கள் இங்கிருக்கும் மக்களின் வளங்களைச் சுரண்டுவதற்கு ஏதுவாக, மதம் மாற்றும் பணியில் தீவிரமாகச் செயல்படுவதையும், அதற்காக மிஷனரிகள் உதவுவதையும் பிர்சா விரும்பவில்லை. அதனால், பிர்சாவால் தொடர்ந்து படிக்க முடியாமல்போனது.

மிஷனரியில் சேர பிர்சா மதம் மாறவேண்டியிருந்தது. அதனால் பிர்சா, 'பிர்சா டேவிட்'-ஆக கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். படிக்கும்போது பிர்சாவுக்கு கிறிஸ்தவ மதம், மூட நம்பிக்கைகள் இல்லாத அறிவார்ந்த மதமாகத் தோன்றியது. ஆனால், பிர்சாவின் அந்த நிலைப்பாடு வெகு நாள்கள் நீடிக்கவில்லை. மிஷனரியிலிருந்து வெளியேறினார் பிர்சா. அதன் பிறகு, அவர் 'பிர்சா தாவுத்' என அழைக்கப்பட்டார்.

கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியே வந்த பிறகு, பிர்சா மீண்டும் மூட நம்பிக்கைகள் நிறைந்த பழங்குடி மதத்துக்கு மாற விரும்பவில்லை. அப்போதுதான், பிரிட்டிஷ் கைகளில் சிக்கியிருக்கும் தன் மக்களையும் மண்ணையும் மீட்க வேண்டும் என்ற எண்ணம் அவர் இதயத்தில் ஊறத் தொடங்கியது. தன் சிந்தனையில், தன் மக்களின் நிலைக்கு பிரிட்டிஷ் அரசு மட்டுமின்றி, மக்களின் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களைக் கூலிகளாக்கிவைத்திருக்கும் நில உரிமையாளர்களும்தான் காரணம் என்பதை உணர்ந்தார்.

வைணவ மதத்தில் இருக்கும் சுரண்டல், பழங்குடி மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகள், கிறிஸ்தவ ஏகாதிபத்தியம் ஆகியவற்றைக் களைந்து புதிய நம்பிக்கையை உருவாக்கிய பிர்சா, அதற்கு 'பிர்சைத்' எனப் பெயரிட்டார். பாதிரியார்கள், அர்ச்சகர்களின் பித்தலாட்டங்களைத் தன் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டினார். தாய் மதத்தின் கலாசாரங்களை ஏற்றுக்கொண்டு புதிய மதத்தை உருவாக்கியதால், முண்டா மக்களும் பிர்சாவின் பின் திரண்டனர்.

மக்களின் சொந்த கலாசாரம், சொந்த மதம் போன்ற அடையாளங்கள் அவர்களின் உரிமைகளைக் காக்க உதவும் என்பதை அறிந்திருந்தார் பிர்சா. இருப்பினும், உண்மையான அடையாளம், உரிமை தங்களின் நிலம் என்பதையும் ஆழமாக உணர்ந்து, தன் மக்களுக்கும் எடுத்துரைத்தார். ``உழுபவனுக்கே நிலம் சொந்தம், நிலம் எங்கள் உரிமை!" ஆகிய முழக்கங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். மக்கள் அவருக்கு, 'மண்ணின் தந்தை' எனப் பெயர் சூட்டினர். பிர்சா தனது மதத்தை உருவாக்கும்போது அவருக்கு வயது 20.

1894-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வனச் சட்டம் ஒன்றை இயற்றி, பழங்குடி மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக அறிவித்தது. இதன் மூலம் பழங்குடிகளால் காக்கப்பட்டுவந்த காடும் வளங்களும் பிரிட்டிஷாரால் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கிருந்த பழங்குடி மக்கள் காட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இல்லையென்றால், பிரிட்டிஷ் அரசுக்கு வரிகொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு உள்ளூர் பண்ணையார்கள் பெரிதும் உதவினர். பழங்குடிகளின் நிலங்களை, மலை வளங்களைச் சூறையாட வெள்ளையர்கள் பண்ணையார்களைக் கருவிகளாக்கிக்கொண்டனர். பண்ணையார்களின் வியாபார சூழ்ச்சிகள், கடன் வழங்குதல் உட்பட பல வழிமுறைகளால் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தினர். பழங்குடிகளின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டன.

இன்று வரை எளிய மக்களின் உரிமைகளைப் பறிக்க அதிகாரவர்க்கம் உபயோகிக்கும் மந்திர வார்த்தைதான் `வளர்ச்சி’ (Development). நிலத்தின் சொந்தக்காரர்களான பழங்குடி மக்கள், பண்ணையார்களுக்கும் முதலாளிகளுக்கும், கூலிகளாக வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த அவலத்தைத் தன் கண்முன்னே கண்ட பிறகு, பிர்சா முண்டா பொறுத்திருக்க முடியாமல் கொதித்துப்போனார். முண்டா இன மக்கள் உட்பட, பல பழங்குடிகளை ஒன்றிணைத்து தன் சிந்தனைகளைப் பரப்பினார். பழங்குடி மதத்திலிருந்து மாறிப்போன பல மக்கள் 'பிர்சைத்'-ஐ ஏற்றுக்கொண்டனர். பிர்சாவை முழுவதும் நம்பிய மக்கள், அவரை இறைத் தூதராக ஏற்றுக்கொண்டனர். அவரிடம் ஆசியும் அறிவுரையும் பெறப் பலர் வந்து சேர்ந்தனர். இவர்களில் முண்டா இன மக்கள் மட்டுமல்லாமல் ஓரான், கரியா மக்களும் அடங்குவர்.

பிர்சாவின் மதத்தை 20 வயது இளைஞனின் குருட்டுத்தனமான முயற்சி என நிச்சயம் ஒதுக்கிவிட முடியாது. 12 வயதில் மிஷனரியிலிருந்து வெளிவந்த பிர்சா, தன் மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கான காரணங்களை ஆராய்ந்ததுடன், அவற்றிலிருந்து அவர்களை மீட்க ஆன்மிகம் உள்ளிட்ட பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தார். பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பெரும்பாலும் மதத்தைச் சார்ந்துதான் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், பிர்சைத் மதக் கோட்பாட்டை உருவாக்கியதுடன், அதை மக்களை எளிதாக ஒன்றிணைக்கவும் பயன்படுத்திக்கொண்டார்.

பிர்சாவை இதுவரை எந்த ஆய்வும் ஆன்மிகவாதியாக நிறுவியதில்லை. `பிர்சைத்’ எனும் மதத்தை பழங்குடிகளின் மூடநம்பிக்கைகளை விலக்கி தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், உறுதியான அடையாளமாக இருக்கவும் மட்டுமே பிர்சா உருவாக்கினார் எனலாம். மற்றபடிக்கு பிர்சா பேசியதெல்லாம் அரசியல்தான். பிர்சா, தன் மக்களை ``உரிமையை மீட்போம்" வாருங்கள் என்றார். மக்களும் அவரை இறைத்தூதனாக ஏற்று, அவரைப் பின்தொடர்ந்தனர்.

1894-ம் ஆண்டு முதல் பிர்சாவின் முண்டா இன மக்களும், ஓரா, காரியா மக்களும் பிர்சாவுடன் சேர்ந்து தங்கள் நிலத்தைக் காக்க முன்வந்தனர். ``நிலம் பழங்குடிகளுக்குச் சொந்தமானது. அதற்காக வெள்ளையர்களுக்கு வரி செலுத்தக் கூடாது. கடன் வழங்கிய பண்ணையார்களுக்கும் பணம் வழங்கக் கூடாது" என்றார். பிர்சா முண்டாவின் பின் பேரணியாக வீரர்கள் திரண்டனர். அதனால், உள்ளூர் மிஷனரிகள் துரத்தப்பட்டனர். பண்ணையார்கள் தாக்கப்பட்டார்கள். இதில், பிரிட்டிஷ் அதிகாரிகளும் தப்பவில்லை

ஆனால், பிரிட்டிஷ் ராணுவம் களமிறங்கிய பின்னர், பிர்சாவின் கூட்டம் மிகச் சிறிதாகத்தான் தெரிந்தது. பிர்சாவும் அவர் ஆதரவாளர்களான கலகக்காரர்களும் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் பிர்சாவும், அவர் ஆதரவாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பழங்குடிகளின் எழுச்சி பிரிட்டிஷ் அரசைக் கோபப்படுத்தியிருந்தது ஒருபுறமென்றால், பிர்சாவின் கலகம் ஆங்கிலேயர்களையும் பண்ணையார்களையும் கலக்கியது மற்றொருபுறம். பிர்சா இனி போராட்டக் களத்தில் இறங்கக் கூடாது, அவரின் சிந்தனைகளை வளரவிடக் கூடாது என்னும் நோக்கில் பிர்சாவின் மீது காசரியாபாத் மத்தியச் சிறையில் நடத்தப்பட்ட சித்ரவதைகள் ஏராளம். ஆனால் பிர்சாவின் மன உறுதி லாக்கப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பணியவில்லை.


உல்குலான்:

'உல்குலான்' என்றால், `அடக்க முடியாத போராட்டம்’ என்று பொருள். இந்த முறை பிர்சா மேற்கொண்டது இந்த அடக்க முடியாத போராட்டத்தைத்தான். ஆட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததுதான் தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்த பிர்சா, தலைமறைவாக இருந்து அதிக படையினரைத் திரட்டினார். இம்முறை அம்புகள், ஈட்டிகளுடன் பிர்சா வெள்ளையர்களை எதிர்கொண்டார். சண்டையிடுவதற்குக் கெரில்லா போர் முறையைக் கையாண்டனர். பழங்குடி மக்களின் வாழ்வியலைப் போன்றே போராட்டக் களத்திலும் பெண்களும் பங்கேற்றனர். கெரில்லா போர் முறையை அனைவருக்கும் பயிற்றுவித்தார் பிர்சா. 'கெரில்லா' போர் முறையை பிர்சா எங்கே கற்றுக்கொண்டார் என யாருக்கும் தெரியவில்லை. அதை பிர்சாவே உருவாக்கினார் என்ற கூற்றும் இருக்கிறது. பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கம் நிறைந்த இடங்கள் முதலில் குறிவைக்கப்பட்டன. சோட்டா நாக்பூர் பகுதியிலிருந்து ராஞ்சியின் தென் பகுதி வரை கலகம் பரவியது. எல்லாப் பழங்குடிகளும் பிர்சாவின் பின் திரண்டனர். பழங்குடிகளின் படை வெறும் அம்பும் ஈட்டியும் வைத்துத் தாக்கினாலும், ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளை அலறவிட்டன.

பிர்சா இருக்குமிடமே ஆங்கிலேயர்களால் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. திடீரெனத் தோன்றி மக்களிடம் ஆங்கிலேயருக்கு எதிராக எப்படிச் செயல்பட வேண்டும் எனக் கூறிவிட்டு மறைந்துவிடுவார் பிர்சா. பிர்சாவுக்கு உண்மையாகவே மந்திரசக்தி இருப்பதாகவும் மக்கள் நம்பினர். அதை மெய்ப்பிக்கும்விதமாக, பழங்குடி மக்களை அடிமைகளாக நடத்திய பண்ணையார்கள் மர்மமாகக் கொல்லப்பட்டனர். பின்னர், 1898-ம் ஆண்டு கெரில்லா போர் முறையை விடுத்து, பிரிட்டிஷுடன் நேருக்கு நேராக மோதி பழங்குடிகள் குழு வெற்றியும் கண்டது. ஆனால் மீண்டும் பிரிட்டிஷ் ராணுவம் களமிறக்கப்பட்டது. இந்த முறை பிர்சா மாட்டிக்கொள்ளாமல் தப்பினார். ஆனால் சில போராளிகள் மட்டும் கைதுசெய்யப்பட்டனர். நேரடிப் போர் முறை சரியாக வராது என்பதை உணர்ந்த பிர்சா, மீண்டும் கெரில்லா முறையைப் பின்பற்றத் தொடங்கினார். அப்போதுதான் தொடங்கியது 'உல்குலான்', கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம்போலக் காட்டின் மைந்தர்கள் ஒருங்கிணைந்து தங்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறியத் தொடங்கினார்கள்

பழங்குடிகளின் நிலத்தைப் பறித்துக்கொண்டு நில உடைமைதாரர்களாக இருந்த பண்ணையார்கள், வட்டிக்காரர்கள், வியாபார ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் தாக்கப்பட்டனர். பிர்சாவின் குறி முழுக்க ஏகாதிபத்திய பிரிட்டிஷ்காரர்கள் மீதுதான் இருந்தது. விஷம் தோய்த்த அம்புகளுக்கு காவல்துறையும் பிரிட்டிஷ்காரர்களும் இரையாகினர். பிரிட்டிஷ் சொத்துகள், சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. இந்தத் தகவல்கள் வெளிவர பிர்சா சுற்றுவட்டார மக்களிடையே ரட்சகனாக, நாயகனாகத் தோற்றமளித்தார்.

பலதரப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிர்சாவைப் பார்த்தே அறியாதவர்களும் பிர்சா நம்மைக் காத்திடுவார் என நம்பிக்கையோடு வெள்ளையர்களை எதிர்த்தனர். இழக்கப்பட்ட அவர்களின் உரிமைகள் கைகூடப்போகின்றன என உறுதியாக நம்பினார்கள். பிர்சாவுடன் இணைந்து ஆங்கிலேயர்களை மக்கள் எதிர்த்தனர். 1899 முதல் 1900 வரை உல்குலான் தொடர்ந்தது. மொத்த கலவரத்துக்கும் அச்சாணி பிர்சா முண்டாதான் என்பதால், பிரிட்டிஷ் அரசு அவரைச் சிறைபிடிப்பது என முடிவுசெய்தது. 1899-ம் ஆண்டு பிர்சா குறித்து தகவல் தருவோர்க்கு 500 ரூபாய் தருவதாக அறிவித்தனர். பிர்சா முண்டாவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்பட்டவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். தம்பறி மலைகளில் மறைந்திருந்த பிர்சா முண்டா ஆங்கிலேயர்களிடம் தனக்கு நெருக்கமானவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் பிர்சாவைக் கைதுசெய்தனர். பிர்சாவின் போராட்டம் வேள்பாரியையும், அவரின் கைது ஏசுவையும் நினைவுபடுத்துவதுபோல் இருந்தன.

அதைத் தொடர்ந்து, தம்பறி மலைகளில் வசித்துவந்த முண்டா மக்களை, பிரிட்டிஷ் படை துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லத் தொடங்கியது. கிட்டத்தட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒத்த படுகொலை அங்கு நடந்தது. அந்த இடம் இப்போதும் 'இறந்தவர்களின் மேடு' என்றே அழைக்கப்படுகிறது. இறுதியில் பிர்சாவுடன் 460 பழங்குடியினர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 63 பேருக்கு 15 பல்வேறு வழக்குகளின் கீழ் தண்டனை கிடைத்தது. 39 பேர் நாடுகடத்தப்பட்டனர். 23 பேருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும் கிடைத்தன. ஆனால் பிர்சாவுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. சிறையிலேயே காலத்தைக் கழித்தவர்களில் ஆறு பேர் இறந்துபோனார்கள். அவர்களில் பிர்சாவும் ஒருவர். `பிர்சா ஜூன் 9, 1900-ம் ஆண்டு காலரா நோயால் இறந்துபோனார்’ என ஆங்கிலேயர்கள் கூறினர். ஆனால் சிறைக் குறிப்புப்படி பிர்சாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருந்தன. பிர்சா உணவில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என சில வரலாற்றறிஞர்களும், அவர் ரத்தத்தில் விஷம் செலுத்தப்பட்டு இறந்தார் என சில வரலாற்றறிஞர்களும் கூறுகின்றனர்.

பிர்சா இறந்துவிட்டார். அவர் கடவுள் அல்ல. சாதாரண மனிதன்தான்" என ஆங்கிலயேர்கள் முழக்கமிட்டனர். அதன் மூலம், பிர்சாவால் மக்களிடையே ஏற்பட்டிருந்த எழுச்சி உணர்வை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வாஞ்சையோடிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. இன்று வரையிலும் பழங்குடி மக்கள் பிர்சாவைக் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள்.

காடு சார்ந்து வாழ்தலுக்கும், காட்டை அழித்து செல்வத்தைப் பெருக்குவதற்கும் இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் உணர வேண்டும். அதை உணராத பண்ணையார்களும் வியாபாரிகளும் பிர்சாவின் அம்புகளுக்கு என்று வேண்டுமானாலும் இரையாகலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய வாழ்வியல் சூழலுக்கு, பிர்சா முண்டாவின் தேவை இருக்கத்தான் செய்கிறது. பிர்சா முண்டா மரணம் மட்டும் கலவரத்தை நிறுத்திவிடவில்லை, அவர் பற்றவைத்த நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டுதான் இருந்தது. அதன் விளைவாக 1908-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளுக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றியது. அதன்படி, பழங்குடிகளின் வாழ்விடம் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததுடன், அவர்களால் எளிதாக அதை யாருக்கும் விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், இன்று ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் பழங்குடிகள் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட்டுவருகிறது.

பிர்சாவின், 'நிலம் எங்கள் உரிமை!' எனும் முழக்கம் இன்றளவும் விளிம்புநிலை மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.!

No comments:

Post a Comment