Thursday, January 29, 2015

'ஷமிதாப்’ படத்தை சாக்காக வைத்து இளையராஜாவைக் கொண்டாடிவிட்டார் அமிதாப். மும்பையில் நடந்தது என்னவோ இளையராஜா இசையமைத்த 'ஷமிதாப்’ பட இசை வெளியீடுதான். ஆனால், அதை ராஜாவை ஆராதிக்கும் திருவிழாவாக மாற்றிவிட்டனர். ரஜினி, கமல், ஸ்ரீதேவி என அத்தனை பிரபலங்களும் அன்று செம ஃபார்ம்! 
 
அமிதாப் தானே பேசிப் பதிவுசெய்த வீடியோதான் அழைப்பிதழ். அந்த வீடியோ பதிவை ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தன் மொபைல் மூலமே பெர்சனலாக அனுப்பி, விழாவுக்கு அழைத்திருந்தார். இதில் இன்னோர் ஆச்சர்யம்... இந்த விழாவுக்கு ரஜினி, கமல் இருவரும் வருவது இளையராஜாவுக்கு இறுதி நிமிடம் வரை தெரியாதாம். அரங்கத்தில் இருவரையும் பார்த்தது ராஜாவுக்கே இன்ப அதிர்ச்சி.
 
கமல், ஸ்ருதி ஹாசனுடன் வர... சரிகா, அக்ஷரா ஹாசனுடன் வந்திருந்தார். ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா ஒரு பக்கம்... அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா மறுபக்கம்... போனி கபூருடன் ஸ்ரீதேவி என விழா... திருவிழாதான்.
 
'சீனிகம்’ படத்துக்காக ராஜா இசையமைத்த பாடலை ஸ்ரேயா கோஷல் தமிழ் - இந்தியில் கலந்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்க, வரவேற்புரை நிகழ்த்தியது அமிதாப்பின் குரல்.
 
'
ராஜாவின் பாடல்கள், மக்கள் மனதில் தாலாட்டாக, நிம்மதியாக, சோகமாக... எனப் பலவிதங்களில் பயணிக்கின்றன. பொள்ளாச்சி அருகே உடுமலைப்பேட்டையில் உள்ள தியேட்டரில் ராஜா இசையமைத்த படம் வெளியானது. அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த வரை தினமும் ஒரு யானை அங்கு வரும். தியேட்டருக்கு வெளியில் பாடல்களை ரசித்துக் கேட்பதுபோல நின்றுகொண்டிருக்கும். படம் முடிந்ததும் கிளம்பிவிடும். தியேட்டரில் இருந்து அந்தப் படம் எடுக்கப்பட்டதும் அந்த யானை வருவது நின்றுவிட்டது. அப்படி ஒரு யானையையே தன் இசையால் கட்டிப்போட்ட வசீகர இசையமைப்பாளர்’ எனச் சொல்லிக்கொண்டே மேடையில் தோன்றினார் அமிதாப். அரங்கம் முழுக்க ஆர்ப்பரிப்பு!
தொடர்ந்து இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி... என '16 வயதினிலே’ டீம் மேடை ஏறினர்.  
'நீங்கள், ராஜா இருவருமே ஆன்மிகத் தேடல் உள்ளவர்கள். இருவருக்கும் என்ன வித்தியாசம்?’ - ரஜினியிடம் கேட்டார் அமிதாப்.
 
'ஹி இஸ் வெரி நாட்டி’ எனத் தொடங்கிய ரஜினி, 'இப்ப இருக்கிற இளையராஜா கிடையாது அப்ப. நானும் அவரும் விடியுறவரைக்கும் எல்லாம் குடிச்சிருக்கோம்’ என எந்தத் தயக்கமும் இல்லாமல் ரஜினி பேச, கீழே அமர்ந்திருந்த ராஜா, 'ஏய்... அதையெல்லாம் சொல்லாதே’ என்பதுபோல் செல்ல அதட்டலாக ரஜினிக்கு சிக்னல் கொடுத்தார். சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ரஜினி. 'திடீர்னு ஒரு மாறுதல். ஆன்மிகத்துல அவருக்கு நாட்டம். போகப்போக சாமியாராவே மாறிட்டார். ஆரம்பத்துல 'இளையராஜா சார்’னுதான் கூப்பிடுவேன். அந்த மாற்றத்துக்குப் பிறகு 'சாமி’னு கூப்பிடுறேன்’ என்றவர், ராஜாவைப் பார்த்து 'சரிதானே?’ என்பதுபோல் தலையாட்ட, 'ஆமாம்’ எனத் தலையாட்டி ஆமோதித்தார் ராஜா.
 
'ராஜா உடனான பயணத்தில் மறக்க முடியாதது எது?’ இந்தக் கேள்வி கமலுக்கு.
'ஆரம்பத்துல 'ஹேராம்’ படத்துக்கு வேற ஒரு இசையமைப்பாளர்தான் மியூசிக் பண்ணியிருந்தார். அவர் போட்டுக்கொடுத்த டியூன்ல ஷூட்டிங்கும் முடிச்சுட்டு வந்துட்டேன். அப்புறம் என்னமோ அந்த இசையில் எனக்குத் திருப்தி இல்லை. அப்ப இளையராஜா சார்கிட்ட வந்தேன். 'திரும்ப ஷூட் பண்ணினால் எவ்வளவு செலவாகும்?’னு கேட்டார். 'அது ஆகும்...
 
20 கோடிக்கு மேல’னு சொன்னேன். 'சரி... நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். சவுண்டு இல்லாம பாடல்களை ப்ளே பண்ணி, நடிகர்களின் உதட்டு அசைவுகளுக்கு ஏற்ப பாட்டு எழுதச் சொல்லி அதுக்கு டியூன் போட்டுக்கொடுத்தார். அப்படி மியூசிக் பண்ண எல்லா பாடல்களுமே ஹிட். அதுதான் ராஜா!’
'அவர் டியூன்ல கரெக்ஷன்ஸ் சொல்லியிருக்கீங்களா... ஆர்க்யூ பண்ணுவீங்களா?’ இருவருக்குமான கேள்வி.
 
'அந்த மாதிரி எல்லாம் நான் கேட்டதே இல்லை. அது என் துறையும் கிடையாது’ என்ற ரஜினியிடம், 'அவர் இசையில் நீங்க பாடியிருக்கீங்களே?’ என எடுத்துக்கொடுத்தார் அமிதாப். 'அட... அதை ஏன் கேக்குறீங்க? 'மன்னன்’ படத்துல நாலு வரி பாடினேன். அதுக்கே எனக்கு எட்டு மணி நேரம் ஆச்சு’ என வெட்கத்துடன் சிரித்தார் ரஜினி.
 
கமல் பதில் இது: 'நான் அவர்கிட்ட நிறைய ஆர்க்யூ பண்ணுவேன். அப்ப அவர் சொல்ற பதில்ல இருந்து நிறையக் கத்துக்கலாம் பாருங்க... அதுக்காக! ஆனா, என்ன சண்டை போட்டாலும் கடைசியா எனக்கு என்ன தேவையோ, அதைக் கொடுத்துடுவார்.
 
'தேவர் மகன்’ பட கம்போஸிங். ஒரு இந்திப் பாட்டைச் சொல்லி, 'இந்த மாதிரி வேணும்’னு சொன்னேன். 'நீங்க சிச்சுவேஷன் சொல்லுங்க. பாட்டெல்லாம் சொல்லாதீங்க’னு சொன்னார். 'இல்லல்ல... எனக்கு அந்த மாதிரிதான் வேணும்’னு நான் பிடிவாதமாச் சொன்னேன். 'அட... நீங்க முதல்ல சிச்சுவேஷனைச் சொல்லுங்க. மத்ததெல்லாம் அப்புறம்’னு அவரும் பிடிவாதமா இருந்தார். சிச்சுவேஷன் சொன்னேன். 'இஞ்சி இடுப்பழகி...’ கொடுத்தார்’ என சிலாகித்தார் கமல்.
 
தனுஷ§ம் 'ஷமிதாப்’ இயக்குநர் பால்கியும் மேடைக்கு வந்தனர். 'படத்துக்கு ராஜா போட்டுக்கொடுத்த பாட்டை எங்கே பிளே பண்ணாலும் தனுஷ் ஆடுவார். ஆனா, ராஜா சார் இருக்கிறதால ஆடத் தயங்குறார். அதனால படத்துக்காக அவர் ஆடின பாட்டைப் பார்க்கலாம்’ என்றார் இயக்குநர் பால்கி.
 
'ஜானி’ படத்தில் இடம்பெற்ற 'ஆசையக் காத்துல தூதுவிட்டு...’ பாட்டுக்கு மேற்கத்திய பாணியில் ராஜா இசையமைத்திருக்க, பாடலுக்கு ஸ்ருதி குரல் கொடுத்திருந்தார். அதற்கு தனுஷின் டான்ஸ் அத்தனை ரகளை. ஒளிபரப்பு முடிந்ததும், 'தனுஷ், இப்போது ராஜா சார் வாய்ஸில் பாடுவார்’ என்றார் பால்கி சிரித்துக்கொண்டே. 'ஆட மட்டும் இல்லை... பாடவும் பதற்றமா இருக்கு’ எனச் சொல்லிய தனுஷ், பிறகு பாடத் தொடங்கினார். 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது...’, 'தென்பாண்டிச் சீமையிலே...’ பாடல்களை இளையராஜா குரலில் பாடினார் தனுஷ்.
 
'தனுஷ் பாடினது எப்படி இருக்கு?’ என ராஜாவிடம் பால்கி கேட்க, 'என் குரலைவிட தனுஷ் குரல் நல்லாவே இருக்கு’ என்றார் ராஜா.
 
'நான் இவரோட பாடல்களைக் கேட்டுத்தான் சினிமாவுக்கே வந்தேன்; வளர்ந்தேன். ராஜா சார் மியூசிக், எனக்குள்ள எந்த எமோஷனையும் உண்டாக்கிரும்’ என நெகிழ்ந்தார் தனுஷ்.
 
அடுத்து மேடை ஏறினார்கள் கமலும் அக்ஷராவும். படத்தின் டீஸர், டிரெய்லர்கள் திரையிடப்பட, 'நான் எப்படி நடிச்சிருக்கேன்?’ என, கமலிடம் கேட்டார் அக்ஷரா. 'என் பார்வையில் ஆயிரம் விமர்சனங்கள் சொல்வேன். நீ நல்லா பண்ணியிருக்கேனு நான் சொல்லணும்னு அவசியம் இல்லை. பால்கி இருக்கார். அவர் உன்னை நல்லவிதமாத்தான் வழிநடத்தியிருப்பார்னு எனக்குத் தெரியும். முழுப் படமும் பார்த்துட்டு என் விமர்சனம் சொல்றேன்’ என்ற கமல், மேடையில் இருந்து இறங்கிச் செல்லும் வழியில், சரிகாவுக்குச் சின்னப் புன்னகை, ஒரு கைகுலுக்கலை அளித்தார்.
 
'ஷமிதாப்’ படப் பாடல்களை ஜெயா பச்சன் வெளியிட, குல்சார் பெற்றுக்கொண்டார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் ஒவ்வொரு மேஜையாகச் சென்று விருந்தினர்களை நலம் விசாரித்தனர். அப்போது ரஜினிக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷை எழுப்பிவிட்டு அங்கு அமர்ந்த ஐஸ்வர்யா, ரஜினியுடன் சில நிமிடங்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் வரிசையில் இருந்து, 'ரோபோ-2 எப்போ?’ எனக் குரல்கள் எழ, இருவர் முகத்திலும் புன்னகை. 
 
'எல்லாரும் இளையராஜா சார் இசையமைத்த ஆயிரமாவது படம் 'ஷமிதாப்’னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, பாலா இயக்கும் 'தாரை
தப்பட்டை’ படம்தான் ராஜாவுக்கு ஆயிரமாவது படம். 'ஷமிதாப்’ 1,001-வது படம். 'ஆயிரம் படங்களைக் கடந்துவிட்டார் ராஜா. அதுக்காக ஒரு விழா நடத்திக்கிறோம்’னு பாலாகிட்ட சொன்னதும் இந்தப் பாராட்டு விழாவை விட்டுக்கொடுத்தார் பாலா. ரொம்ப நன்றி பாலா’ என்ற பால்கி, 'பாலா மிகப் பெரிய கிரியேட்டர். அவர் பண்ணதுல பாதிகூட நான் பண்ணலை’ எனக் கூறியபோது, பாலா முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
அமிதாப், பால்கி, தனுஷ், அக்ஷரா என ஒட்டுமொத்த 'ஷமிதாப்’ டீமும் மேடை ஏறியபோது, 'நாங்கள்லாம் 'ஷமிதாப்’ல
50 பெர்சன்ட்தான். மீதி 50 பெர்சன்ட் இவர்தான்’ எனச் சொல்லி அவர்கள் அறிமுகப்படுத்திய நபர்... ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
ராஜாவைக் கொண்டாடுவதில் தமிழ் சினிமாவை முந்திக்கொண்டது பாலிவுட்!

Thursday, January 15, 2015

நல்லாசிரியன் 
 
சிங்கப்பூரைச் சுத்திப் பார்க்க ஆசைப்பட்டார் சதீஷ். வீட்டுக்கு ஒரே மகன். 'இப்போதைக்கு வேண்டாம்... வயல் வேலைக நடந்துக்கிட்டு இருக்கு. பின்னாடி பார்த்துக்கலாம்’ என மறுத்திருக்கிறார்கள் சதீஷின் பெற்றோர். இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி, தற்கொலை செய்துகொண்டார் சதீஷ். 
செகண்ட் ஹேண்டில் மினிடோர் வண்டி ஒன்றை வாங்கினார் சுந்தரமூர்த்தி. அது அடிக்கடி ரிப்பேராகி, செலவுவைத்தது. விரக்தி அடைந்தவர் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
வயலில் வேலையில் இருந்தார் குணசேகரன். மனைவி சாப்பாடு கொண்டுவர கொஞ்சம் தாமதமானது. தன்மானம் தலைதூக்கி, கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற குணசேகரன், தன்னையே அழித்துக்கொண்டார்.
 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது காளாச்சேரி மேற்கு கிராமம். விவசாயம் செழிப்பாக நடைபெறும் இந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 315. சுமார் 15 ஆண்டுகளில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் இருக்கும். கடைசி ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சகுந்தலா, பூங்கோதை, சுகன்யா, சதீஷ்குமார், பாஸ்கர், ரவி, விஜயதாரணி, சின்னையன், செல்லையன், ரேகா, செல்லதுரை, சேகர், சங்கர், செல்வராசு... இவர்களையும் சேர்த்து 35 தற்கொலை மரணங்கள். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை மரணங்கள் பதறவைக்கின்றன. சந்தானம், அவரது மகள் செல்லம்மாள், செல்லம்மாளின் கணவர் தங்கமுத்து, அவர்களின் வாரிசுகளான விஜயகுமாரி வேம்பு, பன்னீர்செல்வம், கணேசன், கணேசனின் மகன் சுந்தரமூர்த்தி... என தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே அழித்துக்கொண்டனர்.
 
 
''என் பையன் 17 வயசுலயே எங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரியே என் சம்சாரமும் என்னை அநாதையா விட்டுட்டுப் போயிட்டா'' எனக் கலங்குகிறார் கண்ணன்.
 
ஆண், பெண் பாகுபாடுகள் இல்லை; வயது வித்தியாசம் இல்லை; சாதி வேறுபாடோ, வர்க்க வேறுபாடோகூடக் கிடையாது. பலவீனமான மனம், கொந்தளிக்கும் கோபம் இந்த இரண்டும் இவர்களின் உயிரைத் தாமாகவே மாய்த்துக்கொள்ள வைத்திருக்கின்றன. அனைத்துப் பிரச்னைகளையும் அடுத்த விநாடியே தீர்க்கக்கூடிய சர்வலோக நிவாரணியாகவே தற்கொலையை மட்டும்தான் நினைத்திருக்கிறார்கள். தம்பி திட்டியதால் அக்கா, மாமியார் கோபப்பட்டதால் மருமகள், அம்மா கண்டித்ததால் மகள், கடன்காரன் கிண்டலாகப் பேசியதால் விவசாயி... என தற்கொலைக்கு முயன்று தோற்றவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் மிக அமைதியாக, ரொம்ப நிம்மதியாக இருக்கிறது இந்தக் கிராமம்.
''எங்களுக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. இப்போ எங்க ஊர் மக்கள் ரொம்பவே மாறிட்டாங்க. என்னதான் மீளவே முடியாத பெரிய பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட, அந்தத் தவறான முடிவுக்கு இப்ப யாருமே போறது இல்லை. எதையும் தாங்கக்கூடிய அளவுக்கு தைரியமும் பக்குவமும் வந்திருச்சு'' எனப் பெருமிதப்படுகிறார் ஊர் நாட்டாமை கண்ணையன்.
 
எப்படி நிகழ்ந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்? இங்கு உள்ள மக்கள் அனைவரும் கைநீட்டுவது... ஆங்கில ஆசிரியர் ஆனந்த்.
 
''எப்ப... யார் சாவாங்களோனு பயந்து கிடப்போம். எங்களுக்கு எப்ப விடிவு காலம் வரும்னு ஏங்கினோம். ஆனா, இவ்வளவு சீக்கிரம் அது வரும்னு நினைச்சுப்பார்க்கலை. 2009-ம் வருஷம் எங்க ஊர் தொடக்கப் பள்ளி,  நடுநிலைப் பள்ளியா தரம் உயர்த்தப்பட்டுச்சு. அப்போ 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்க வந்தார் ஆனந்த் சார். அவரோட விடாமுயற்சியால் 2012-ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னாடி எங்க ஊர்ல ஒரு தற்கொலைகூட நடக்கலை. இனிமேலும் நடக்காது'' என்கிறார், முன்பு தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த விவசாயி சுந்தரம்.  
மென்மையான புன்னகையுடன் வரவேற்கிறார் ஆசிரியர் ஆனந்த். ''நான் இந்த ஸ்கூலுக்கு டீச்சரா வந்தப்ப, இந்த ஊரைப் பத்தி எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. ரேங்க் கார்டுல கையெழுத்து போட, அப்பா-அம்மாவை அழைச்சிக்கிட்டு வரச் சொன்னப்ப, பல  பசங்க கண்கலங்கி அழுதாங்க. யாரைக் கேட்டாலும் 'அப்பா இல்லை’னு சொல்வாங்க. அல்லது 'அம்மா இல்லை’னு சொல்வாங்க. அப்பா-அம்மா ரெண்டு பேரும் இல்லாதவங்களும் இருந்தாங்க. 'இந்த ஊர் ஏன் இப்படி இருக்குது?’னு விசாரிச்சேன். எல்லாரும் தற்கொலை செஞ்சிக்கிட்டு இறந்தது தெரிஞ்சது. 'இனிமேல் இது தொடரக் கூடாது’னு முடிவுபண்ணி, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.
 
ஆண்டு விழாவே கொண்டாடாமல் இருந்த இந்தப் பள்ளியில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தக் கிராமத்தையும் ஒண்ணு திரட்டி ஆண்டு விழா நடத்தினோம். அதில் பக்காவா ப்ளான் பண்ணி உருக்கமான ஒரு ஃபேமிலி டிராமாவை அரங்கேற்றினோம். அப்பா - அம்மாவை இழந்த பையன் ஒருத்தன் படிக்க வழி இல்லாம தெருத் தெருவாப் பிச்சை எடுத்துப் பிழைக்கிறதுதான் கதை. நாடகம் பார்த்த கிராம மக்கள் கதிகலங்கிப்போயிட்டாங்க. ஒரு அம்மா, நாடகம் நடந்துட்டு இருக்கும்போதே கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. மூணு குழந்தைகளின் தாயான அவங்க, தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாத்தப்பட்டவங்க. மக்களின் மனமாற்றத்துக்கான தொடக்கம் அந்த நாடகத்துல இருந்தே ஆரம்பிச்சது.
 
ஊர்ல இருந்த 'டைமண்ட் பாய்ஸ்’ இளைஞர் நற்பணி இயக்கத்திடம் பேசி அவங்களை இந்த நல்ல முயற்சிக்குத் துணைக்குச் சேர்த்துக்கிட்டேன். அவங்க மூலமா என் மாணவர்களை தற்கொலைக்கு எதிரான விழிப்புஉணர்வு கொண்டவங்களா மாத்தினோம். ஒரு குரூப் செட்டானதும் மக்கள்கிட்ட பேசிப் பேசி விழிப்புஉணர்வு ஏற்படுத்தினோம்.
 
மாணவர்களுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் வேஷம் போட்டு, 'எந்த மதமும் தற்கொலையை நியாயப்படுத்தலை’னு எடுத்துச் சொன்னோம். அப்பா, அம்மாவை இழந்த மாணவர்களை வீடு வீடாக் கூட்டிப்போய்,  அவங்க படுற கஷ்டங்களைச் சொல்லவெச்சு மத்தவங்களுக்குப் புரியவெச்சோம். மக்களோட மனம் பிரச்னைகள் பக்கம் திரும்பாம இருக்கவும், பிரச்னையைப் பத்தி யோசிக்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் பிளாஸ்டிக் வொயர்களால் பூ ஜாடிகள் செய்யக் கத்துக்கொடுத்தோம். 'நாம நல்லா பூ ஜாடி பண்றோம்’கிற பெருமிதமும், அதுக்குக் கிடைக்கும் வருமானமும் மக்களை மாத்துச்சு. இந்த உலகத்தில் எல்லோருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு அன்புதான் மருந்து. ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா, அக்கறையா இருக்கணும்னு கத்துக்கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல மாற்றம் வர ஆரம்பிச்சது. ஊருக்குள்ள சிரிச்ச முகங்கள் தெரிய ஆரம்பிச்சது'' என்கிறார் ஆனந்த்.
தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், சர்வதேச அளவில் இயங்கும் 'டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு, ஆனந்துக்கு விருது கொடுத்துக் கௌவரப்படுத்தியிருக்கிறது.  
 
''மாணவர்கள் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருது இது. எல்லா மாற்றங்களுக்கும் என் மாணவர்கள்தான் காரணம். விருதுகளை எதிர்பார்த்து நான் இந்த வேலையைச் செய்யலை.   என் சின்ன வயசுல என் அப்பா - அம்மா உடம்பு முடியாம இறந்துபோயிட்டாங்க. ஆதரிக்க பெற்றோர் இல்லாம தனியா ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகிறது எவ்வளவு சவாலான விஷயம்னு தெரியும். இப்போ இந்த ஊர் மாறியிருக்கு. எல்லா இரவும் விடியும் என்பது எங்க நம்பிக்கை. அதுக்கு நானும் இந்தக் கிராம மக்களும் கியாரன்டி!'' என்கிறார் ஆசிரியர் ஆனந்த். மாணவர்களின் கைதட்டல் பின்னுகிறது!

Monday, January 5, 2015

மீனவர்களின்  நண்பன்!
 
ந்தியா - இலங்கை கடல் எல்லையை அறியாமல் அதைத் தாண்டிவிடும் தமிழக மீனவர்களை அடித்தும் உதைத்தும் கைதுசெய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது இலங்கைக் கடற்படை. சில சமயம் எல்லை மீறி, இந்தியக் கடல் பகுதியில் இருக்கும் மீனவர்களையும் வன்மத்தோடு தாக்குகிறார்கள். காப்பாற்றவேண்டிய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க, மீனவர்களுக்குக் கைகொடுக்க முன்வந்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மின்னணுப் பொறியாளர் ரெசிங்டன். இதற்காக அவர் உருவாக்கியிருக்கும் மொபைல் ஆப்ஸ்...  'சேவ் அவர் ரேஸ்’!   
 
ரெசிங்டனைச் சந்தித்தேன்... ''ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். 90-களில் டி.வி பார்க்கணும்னா, ஆன்டனா அவசியம். ஆன்டனாவில் பூஸ்டர் வேணும். ஆனா, நான் பூஸ்டர் இல்லாத ஆன்டனா கண்டுபிடிச்சேன். இப்போ எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷனில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, தனியார் நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் உருவாக்கித் தந்துட்டு இருக்கேன்.
 
நான் எப்போ பேப்பர் படிச்சாலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகிற செய்திகள்இருக்கும். தமிழக மீனவர்களுக்கு உதவுற மாதிரி ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன்.  இந்தியா - இலங்கை இடையே இருக்கிற கடல் எல்லை என்பது கண்களுக்குப் புலப்படாத கோடு. மீனவர்கள் தங்களுக்கே தெரியாமல் எல்லையைத் தாண்டிப் போக வாய்ப்புகள் அதிகம். மூணு வருஷங்கள் உழைச்சு 'சேவ் அவர் ரேஸ்’னு ஒரு ஆப்ஸ் உருவாக்கினேன். அதாவது 'நம் இன மக்களைக் காப்பாற்று’னு அர்த்தம்.
 
 
எல்லா மீனவர்களுக்கும் புரியும்படி முழுக்க முழுக்க தமிழிலேயே இதை உருவாக்கி இருக்கேன். எந்த ஒரு ஸ்மார்ட் போன்லயும் இந்த ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ்க்கு போன் சிக்னலோ, இன்டர்நெட் வசதியோ தேவை இல்லை. இதை ஆன் பண்ணினா, எத்தனை டிகிரி அட்சரேகை, தீர்க்கரேகையில் இருக்கோம்னு காட்டும். அப்புறம் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்தால், பச்சை நிறத்தில் 'உள்ளே’னு காட்டும். அதுவே இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் நெருங்கிட்டால், மஞ்சள் நிறத்தில் 'எச்சரிக்கை’னு மாறும். அதையும் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்தால் 'வெளியே’னு சிவப்பு நிறத்தில் காட்டுவதோடு எச்சரிக்கை அலாரமும் அடிக்கும். தமிழ் வாசிக்கத் தெரியாத மீனவர்களா இருந்தா, சிக்னல் ஸ்டைலில் இருக்கிற பச்சை, மஞ்சள், சிவப்பு பார்த்தே இருக்கிற இடத்தைத் தெரிஞ்சுக்கலாம்.  
  
இன்னும் கூடுதல் வசதியா, அஞ்சு நிமிஷங்களுக்கு ஒருமுறை நாம இருக்கிற இடத்தைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் இருக்கு. அதன் மூலமா மீனவர்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்தாங்கனு ஆதாரபூர்வமாக் காட்ட முடியும். இதனால் 'எல்லை மீறியதா சொல்லி’ தேவை இல்லாம இலங்கைக் கடற்படை நம் மீனவர்களைக் கைது செய்யப்படுவதைத் தடுக்கலாம். அதோடு எந்த இடத்தில் மீன்கள் கூட்டமா இருக்குங்கிறதையும் இந்த ஆப்ஸ் சொல்லும். அங்கே போய் மீன் பிடிக்கலாம். மீன் பிடிச்சுட்டு இருக்கும்போது திடீர்னு இயற்கைச் சீற்றத்தால் படகு திசை மாறிப் போனாலோ, படகு பழுதானாலோ, கரையில் இருக்கிறவங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் சொல்லலாம். அந்த எஸ்.எம்.எஸ் சேவைக்கு மட்டும்தான் செல்போன் சிக்னல் தேவை. அப்படி மெசேஜ் போகும்போது கடைசியா மீனவர்கள் இருந்த இடத்தோட அட்சரேகை, தீர்க்கரேகையும் தகவலாப் போய்ச் சேர்ந்துடும். இதைவெச்சு கடலில் அவங்க இருக்கும் இடத்தைச் சுலபமாக் கண்டுபிடிச்சிடலாம். வானிலை அறிக்கையையும் இந்த ஆப்ஸில் சேர்க்கும் முயற்சியில் இருக்கேன்'' என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரெசிங்டன்.
 
அரசாங்க அதிகாரிகள் ரெசிங்டன் உருவாக்கிய 'சேவ் அவர் ரேஸ்’ ஆப்ஸைப் பரிசோதித்து, திருப்தியான முடிவுகள் கிட்டினால், அனைத்து மீனவர்களையுமே பயன்படுத்தச் சொல்லிப் பரிந்துரைக்கலாமே!
‘முடியாததை செய்து முடி!’
ஞா.சுதாகர்
னி ஒரு மனிதன் நினைத்தால் உலகை, உலக அரசியலை, சுற்றுச்சூழலை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்... எலன் மஸ்க். ஒப்பீட்டுக்குச் சொல்வது என்றால் எலன் மஸ்க்கை அமெரிக்காவின் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் என அழைக்கலாம். புகழ்மிக்க ஆன்லைன் ஷாப்பிங் தளமான 'பேபால்’ நிறுவனத் தலைவர். பொருட்களை 'பேபால்’ வெப்சைட் மூலம் விற்றுக்கொண்டிருந்தவர், சக்ஸஸ் ரேட்டைத் தொட்டதும், அப்படியே 'பேபால்’ நிறுவனத்தையும் விற்றுவிட்டார். அடுத்ததாக விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் 'ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிவிட்டு, சில பல திட்டங்கள் அறிவித்தார். அப்படியே எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் தனது நண்பர் மார்ட்டின் தொடங்கிய 'டெஸ்லா’ நிறுவனத்தில் பண முதலீடு செய்தார். இங்கேதான் கதையில் ஒரு கசமுசா, செம ட்விஸ்ட் எல்லாமே! 
 
கொஞ்ச நாட்களிலேயே டெஸ்லா நிறுவனத்தை முழுமையாகக் கையில் எடுத்துக்கொண்டார்
 
 
எலன் மஸ்க். கார்களை இயக்க மாற்று எரிபொருள் தேவை என்கிற விவாதம், நம்ம ஊர் 'ரஜினி - அரசியல்’ விவாதம்போல சீசனுக்கு சீசன் கிளம்பும். மாற்று என்ன? எலெக்ட்ரிக் கார்கள்! ஆனால், இதுவரை உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை. சார்ஜ் செய்தாலும் ஸ்மார்ட் போன் மாதிரி பொசுக்கென சார்ஜ் இறங்கிவிடும். இதை உடைத்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார் எலன் மஸ்க்.
 
எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி 100 கிலோமீட்டர் வரைதான் சார்ஜ் நிற்கும் என்பதை மாற்றி, 320 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய ரோட்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தினார். ஆச்சர்யத்தில் ஆடிப்போனது ஆட்டொமொபைல் உலகம். 'டைம்’ பத்திரிகை தனது அட்டைப்படத்தில் ரோட்ஸ்டர் காரை 'சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று’ எனப் பாராட்டி கட்டுரை வெளியிட, பப்ளிக்குட்டி பற்றிகொண்டது. 2008 - 2012-ம் ஆண்டுகளில் மொத்தம் 31 நாடுகளில் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை வெறும் 2,400. ஏனெனில், ரோட்ஸ்டர் கார்கள் ஸ்போர்ட்ஸ் வகையறா கார். இதன்பிறகு 'செடான்’ ரக ஸ்டைலில் சொகுசு கார்களுக்குப் போட்டியாக டெஸ்லா மாடல் ஷி-ஐ களம் இறக்கினார் மஸ்க். ஒரே ரிசல்ட்தான். வென்றால் வரலாறு; தோற்றால் தகராறு.
 
 
2012-ம் ஆண்டு ஜூன் 22. டெஸ்லா எலெக்ட்ரிக் கார் புராஜெக்ட்டுக்காக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், அமெரிக்க மின்சக்தி கழகத்திடம் வாங்கிய கடன் மட்டும் 465 மில்லியன் டாலர். இந்த எலெக்ட்ரிக் டெஸ்லாவில் பேட்டரியை இன்னும் மேம்படுத்தி 426 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும் என்பதும், பேட்டரியில் இருந்தே இரண்டு முறை பேக்கப்பும் எடுக்க முடியும் என்பதும் அத்தனை பேரையும் அசரவைத்தது. ஒரே மாதத்துக்குள் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்கள் அனைத்தும் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்...’ என டெஸ்லாவைப் பாராட்டி எழுத, அந்த வருடம் மட்டும் 22 ஆயிரம் கார்கள் விற்றுத் தீர்ந்தன. 2013-ம் வருடம் அமெரிக்க கார் மார்க்கெட்டில் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ என அனைத்தையும் தாண்டி பிஸ்தா ஆனது டெஸ்லா.
அதில் இருந்து இந்த வருடம் முழுக்க வாரம் சராசரியாக 700 கார்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறது டெஸ்லா மோட்டார்ஸ். 22 வருட தவணையில் கட்டுவதாகச் சொல்லியிருந்த பேங்க் லோன் 465 மில்லியன் டாலரை இரண்டு வருடங்களுக்குள் வட்டியோடு செட்டில் செய்துவிட்டார்கள்.
 
டெஸ்லாவின் சிறப்பே அதன் பேட்டரிதான். சாதாரண லித்தியம் பேட்டரிகளின் செல்களைப்போல
இல்லாமல் உருளை வடிவ முறையில் செல்களை அமைத்து, இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் மஸ்க். பெட்ரோல் போட ஆங்காங்கே பங்குகள் உண்டு. டெஸ்லாவுக்கு? அதற்கும் ரூட் பிடித்துவிட்டார் மஸ்க். நீங்கள் செல்லும் வழியில், ஆங்காங்கே 'எனர்ஜி ஸ்டேஷன்’ என்ற கடைகள் இருக்கும். அங்கு உங்கள் கார் பேட்டரியைக் கொடுத்து சார்ஜ் செய்ய சொல்லிவிட்டு, ஸ்டெப்னி பேட்டரி வாங்கி மாட்டிக்கொள்ளலாம். திரும்பி வரும்போது பேட்டரியை ரிட்டன் வாங்கலாம். இந்த நெட்வொர்க் அமெரிக்கா முழுவதும் விரிவுசெய்யப்பட விற்பனை இன்னும் எகிறிவிட்டது.
 
இதுவரை மேற்கத்திய நாடுகளில் சக்ஸஸ் ரேட் காட்டிவிட்டதால் சீனா, இந்தியா என மிகப் பெரும் சந்தைக்குள் நுழையக் காத்திருக்கிறது டெஸ்லா. ஆனால், அதன் வளர்ச்சியை எண்ணெய் வள நாடுகள் விரும்பவில்லை. எதிர்காலத்தில் தங்களின் வணிகத்துக்கே சங்கு ஊதக்கூடும் என லாபி பண்ணக் காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் புகை கக்காத, இயற்கைச் சூழலைக் கெடுக்காத எலெக்ட்ரிக் கார்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்பி வரவேற்கக் காத்திருக்கிறார்கள். பல சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறார் மஸ்க். காரணம், அவர் டெஸ்லாவுக்கு வைத்திருக்கும் ஸ்லோகன் அப்படி! அது... 'முடியாததைச் செய்து முடி!