Monday, January 5, 2015

மீனவர்களின்  நண்பன்!
 
ந்தியா - இலங்கை கடல் எல்லையை அறியாமல் அதைத் தாண்டிவிடும் தமிழக மீனவர்களை அடித்தும் உதைத்தும் கைதுசெய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது இலங்கைக் கடற்படை. சில சமயம் எல்லை மீறி, இந்தியக் கடல் பகுதியில் இருக்கும் மீனவர்களையும் வன்மத்தோடு தாக்குகிறார்கள். காப்பாற்றவேண்டிய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க, மீனவர்களுக்குக் கைகொடுக்க முன்வந்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மின்னணுப் பொறியாளர் ரெசிங்டன். இதற்காக அவர் உருவாக்கியிருக்கும் மொபைல் ஆப்ஸ்...  'சேவ் அவர் ரேஸ்’!   
 
ரெசிங்டனைச் சந்தித்தேன்... ''ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். 90-களில் டி.வி பார்க்கணும்னா, ஆன்டனா அவசியம். ஆன்டனாவில் பூஸ்டர் வேணும். ஆனா, நான் பூஸ்டர் இல்லாத ஆன்டனா கண்டுபிடிச்சேன். இப்போ எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷனில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, தனியார் நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் உருவாக்கித் தந்துட்டு இருக்கேன்.
 
நான் எப்போ பேப்பர் படிச்சாலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகிற செய்திகள்இருக்கும். தமிழக மீனவர்களுக்கு உதவுற மாதிரி ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன்.  இந்தியா - இலங்கை இடையே இருக்கிற கடல் எல்லை என்பது கண்களுக்குப் புலப்படாத கோடு. மீனவர்கள் தங்களுக்கே தெரியாமல் எல்லையைத் தாண்டிப் போக வாய்ப்புகள் அதிகம். மூணு வருஷங்கள் உழைச்சு 'சேவ் அவர் ரேஸ்’னு ஒரு ஆப்ஸ் உருவாக்கினேன். அதாவது 'நம் இன மக்களைக் காப்பாற்று’னு அர்த்தம்.
 
 
எல்லா மீனவர்களுக்கும் புரியும்படி முழுக்க முழுக்க தமிழிலேயே இதை உருவாக்கி இருக்கேன். எந்த ஒரு ஸ்மார்ட் போன்லயும் இந்த ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ்க்கு போன் சிக்னலோ, இன்டர்நெட் வசதியோ தேவை இல்லை. இதை ஆன் பண்ணினா, எத்தனை டிகிரி அட்சரேகை, தீர்க்கரேகையில் இருக்கோம்னு காட்டும். அப்புறம் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்தால், பச்சை நிறத்தில் 'உள்ளே’னு காட்டும். அதுவே இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் நெருங்கிட்டால், மஞ்சள் நிறத்தில் 'எச்சரிக்கை’னு மாறும். அதையும் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்தால் 'வெளியே’னு சிவப்பு நிறத்தில் காட்டுவதோடு எச்சரிக்கை அலாரமும் அடிக்கும். தமிழ் வாசிக்கத் தெரியாத மீனவர்களா இருந்தா, சிக்னல் ஸ்டைலில் இருக்கிற பச்சை, மஞ்சள், சிவப்பு பார்த்தே இருக்கிற இடத்தைத் தெரிஞ்சுக்கலாம்.  
  
இன்னும் கூடுதல் வசதியா, அஞ்சு நிமிஷங்களுக்கு ஒருமுறை நாம இருக்கிற இடத்தைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் இருக்கு. அதன் மூலமா மீனவர்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்தாங்கனு ஆதாரபூர்வமாக் காட்ட முடியும். இதனால் 'எல்லை மீறியதா சொல்லி’ தேவை இல்லாம இலங்கைக் கடற்படை நம் மீனவர்களைக் கைது செய்யப்படுவதைத் தடுக்கலாம். அதோடு எந்த இடத்தில் மீன்கள் கூட்டமா இருக்குங்கிறதையும் இந்த ஆப்ஸ் சொல்லும். அங்கே போய் மீன் பிடிக்கலாம். மீன் பிடிச்சுட்டு இருக்கும்போது திடீர்னு இயற்கைச் சீற்றத்தால் படகு திசை மாறிப் போனாலோ, படகு பழுதானாலோ, கரையில் இருக்கிறவங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் சொல்லலாம். அந்த எஸ்.எம்.எஸ் சேவைக்கு மட்டும்தான் செல்போன் சிக்னல் தேவை. அப்படி மெசேஜ் போகும்போது கடைசியா மீனவர்கள் இருந்த இடத்தோட அட்சரேகை, தீர்க்கரேகையும் தகவலாப் போய்ச் சேர்ந்துடும். இதைவெச்சு கடலில் அவங்க இருக்கும் இடத்தைச் சுலபமாக் கண்டுபிடிச்சிடலாம். வானிலை அறிக்கையையும் இந்த ஆப்ஸில் சேர்க்கும் முயற்சியில் இருக்கேன்'' என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரெசிங்டன்.
 
அரசாங்க அதிகாரிகள் ரெசிங்டன் உருவாக்கிய 'சேவ் அவர் ரேஸ்’ ஆப்ஸைப் பரிசோதித்து, திருப்தியான முடிவுகள் கிட்டினால், அனைத்து மீனவர்களையுமே பயன்படுத்தச் சொல்லிப் பரிந்துரைக்கலாமே!

No comments:

Post a Comment