Thursday, January 29, 2015

'ஷமிதாப்’ படத்தை சாக்காக வைத்து இளையராஜாவைக் கொண்டாடிவிட்டார் அமிதாப். மும்பையில் நடந்தது என்னவோ இளையராஜா இசையமைத்த 'ஷமிதாப்’ பட இசை வெளியீடுதான். ஆனால், அதை ராஜாவை ஆராதிக்கும் திருவிழாவாக மாற்றிவிட்டனர். ரஜினி, கமல், ஸ்ரீதேவி என அத்தனை பிரபலங்களும் அன்று செம ஃபார்ம்! 
 
அமிதாப் தானே பேசிப் பதிவுசெய்த வீடியோதான் அழைப்பிதழ். அந்த வீடியோ பதிவை ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தன் மொபைல் மூலமே பெர்சனலாக அனுப்பி, விழாவுக்கு அழைத்திருந்தார். இதில் இன்னோர் ஆச்சர்யம்... இந்த விழாவுக்கு ரஜினி, கமல் இருவரும் வருவது இளையராஜாவுக்கு இறுதி நிமிடம் வரை தெரியாதாம். அரங்கத்தில் இருவரையும் பார்த்தது ராஜாவுக்கே இன்ப அதிர்ச்சி.
 
கமல், ஸ்ருதி ஹாசனுடன் வர... சரிகா, அக்ஷரா ஹாசனுடன் வந்திருந்தார். ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா ஒரு பக்கம்... அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா மறுபக்கம்... போனி கபூருடன் ஸ்ரீதேவி என விழா... திருவிழாதான்.
 
'சீனிகம்’ படத்துக்காக ராஜா இசையமைத்த பாடலை ஸ்ரேயா கோஷல் தமிழ் - இந்தியில் கலந்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்க, வரவேற்புரை நிகழ்த்தியது அமிதாப்பின் குரல்.
 
'
ராஜாவின் பாடல்கள், மக்கள் மனதில் தாலாட்டாக, நிம்மதியாக, சோகமாக... எனப் பலவிதங்களில் பயணிக்கின்றன. பொள்ளாச்சி அருகே உடுமலைப்பேட்டையில் உள்ள தியேட்டரில் ராஜா இசையமைத்த படம் வெளியானது. அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த வரை தினமும் ஒரு யானை அங்கு வரும். தியேட்டருக்கு வெளியில் பாடல்களை ரசித்துக் கேட்பதுபோல நின்றுகொண்டிருக்கும். படம் முடிந்ததும் கிளம்பிவிடும். தியேட்டரில் இருந்து அந்தப் படம் எடுக்கப்பட்டதும் அந்த யானை வருவது நின்றுவிட்டது. அப்படி ஒரு யானையையே தன் இசையால் கட்டிப்போட்ட வசீகர இசையமைப்பாளர்’ எனச் சொல்லிக்கொண்டே மேடையில் தோன்றினார் அமிதாப். அரங்கம் முழுக்க ஆர்ப்பரிப்பு!
தொடர்ந்து இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீதேவி... என '16 வயதினிலே’ டீம் மேடை ஏறினர்.  
'நீங்கள், ராஜா இருவருமே ஆன்மிகத் தேடல் உள்ளவர்கள். இருவருக்கும் என்ன வித்தியாசம்?’ - ரஜினியிடம் கேட்டார் அமிதாப்.
 
'ஹி இஸ் வெரி நாட்டி’ எனத் தொடங்கிய ரஜினி, 'இப்ப இருக்கிற இளையராஜா கிடையாது அப்ப. நானும் அவரும் விடியுறவரைக்கும் எல்லாம் குடிச்சிருக்கோம்’ என எந்தத் தயக்கமும் இல்லாமல் ரஜினி பேச, கீழே அமர்ந்திருந்த ராஜா, 'ஏய்... அதையெல்லாம் சொல்லாதே’ என்பதுபோல் செல்ல அதட்டலாக ரஜினிக்கு சிக்னல் கொடுத்தார். சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ரஜினி. 'திடீர்னு ஒரு மாறுதல். ஆன்மிகத்துல அவருக்கு நாட்டம். போகப்போக சாமியாராவே மாறிட்டார். ஆரம்பத்துல 'இளையராஜா சார்’னுதான் கூப்பிடுவேன். அந்த மாற்றத்துக்குப் பிறகு 'சாமி’னு கூப்பிடுறேன்’ என்றவர், ராஜாவைப் பார்த்து 'சரிதானே?’ என்பதுபோல் தலையாட்ட, 'ஆமாம்’ எனத் தலையாட்டி ஆமோதித்தார் ராஜா.
 
'ராஜா உடனான பயணத்தில் மறக்க முடியாதது எது?’ இந்தக் கேள்வி கமலுக்கு.
'ஆரம்பத்துல 'ஹேராம்’ படத்துக்கு வேற ஒரு இசையமைப்பாளர்தான் மியூசிக் பண்ணியிருந்தார். அவர் போட்டுக்கொடுத்த டியூன்ல ஷூட்டிங்கும் முடிச்சுட்டு வந்துட்டேன். அப்புறம் என்னமோ அந்த இசையில் எனக்குத் திருப்தி இல்லை. அப்ப இளையராஜா சார்கிட்ட வந்தேன். 'திரும்ப ஷூட் பண்ணினால் எவ்வளவு செலவாகும்?’னு கேட்டார். 'அது ஆகும்...
 
20 கோடிக்கு மேல’னு சொன்னேன். 'சரி... நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். சவுண்டு இல்லாம பாடல்களை ப்ளே பண்ணி, நடிகர்களின் உதட்டு அசைவுகளுக்கு ஏற்ப பாட்டு எழுதச் சொல்லி அதுக்கு டியூன் போட்டுக்கொடுத்தார். அப்படி மியூசிக் பண்ண எல்லா பாடல்களுமே ஹிட். அதுதான் ராஜா!’
'அவர் டியூன்ல கரெக்ஷன்ஸ் சொல்லியிருக்கீங்களா... ஆர்க்யூ பண்ணுவீங்களா?’ இருவருக்குமான கேள்வி.
 
'அந்த மாதிரி எல்லாம் நான் கேட்டதே இல்லை. அது என் துறையும் கிடையாது’ என்ற ரஜினியிடம், 'அவர் இசையில் நீங்க பாடியிருக்கீங்களே?’ என எடுத்துக்கொடுத்தார் அமிதாப். 'அட... அதை ஏன் கேக்குறீங்க? 'மன்னன்’ படத்துல நாலு வரி பாடினேன். அதுக்கே எனக்கு எட்டு மணி நேரம் ஆச்சு’ என வெட்கத்துடன் சிரித்தார் ரஜினி.
 
கமல் பதில் இது: 'நான் அவர்கிட்ட நிறைய ஆர்க்யூ பண்ணுவேன். அப்ப அவர் சொல்ற பதில்ல இருந்து நிறையக் கத்துக்கலாம் பாருங்க... அதுக்காக! ஆனா, என்ன சண்டை போட்டாலும் கடைசியா எனக்கு என்ன தேவையோ, அதைக் கொடுத்துடுவார்.
 
'தேவர் மகன்’ பட கம்போஸிங். ஒரு இந்திப் பாட்டைச் சொல்லி, 'இந்த மாதிரி வேணும்’னு சொன்னேன். 'நீங்க சிச்சுவேஷன் சொல்லுங்க. பாட்டெல்லாம் சொல்லாதீங்க’னு சொன்னார். 'இல்லல்ல... எனக்கு அந்த மாதிரிதான் வேணும்’னு நான் பிடிவாதமாச் சொன்னேன். 'அட... நீங்க முதல்ல சிச்சுவேஷனைச் சொல்லுங்க. மத்ததெல்லாம் அப்புறம்’னு அவரும் பிடிவாதமா இருந்தார். சிச்சுவேஷன் சொன்னேன். 'இஞ்சி இடுப்பழகி...’ கொடுத்தார்’ என சிலாகித்தார் கமல்.
 
தனுஷ§ம் 'ஷமிதாப்’ இயக்குநர் பால்கியும் மேடைக்கு வந்தனர். 'படத்துக்கு ராஜா போட்டுக்கொடுத்த பாட்டை எங்கே பிளே பண்ணாலும் தனுஷ் ஆடுவார். ஆனா, ராஜா சார் இருக்கிறதால ஆடத் தயங்குறார். அதனால படத்துக்காக அவர் ஆடின பாட்டைப் பார்க்கலாம்’ என்றார் இயக்குநர் பால்கி.
 
'ஜானி’ படத்தில் இடம்பெற்ற 'ஆசையக் காத்துல தூதுவிட்டு...’ பாட்டுக்கு மேற்கத்திய பாணியில் ராஜா இசையமைத்திருக்க, பாடலுக்கு ஸ்ருதி குரல் கொடுத்திருந்தார். அதற்கு தனுஷின் டான்ஸ் அத்தனை ரகளை. ஒளிபரப்பு முடிந்ததும், 'தனுஷ், இப்போது ராஜா சார் வாய்ஸில் பாடுவார்’ என்றார் பால்கி சிரித்துக்கொண்டே. 'ஆட மட்டும் இல்லை... பாடவும் பதற்றமா இருக்கு’ எனச் சொல்லிய தனுஷ், பிறகு பாடத் தொடங்கினார். 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது...’, 'தென்பாண்டிச் சீமையிலே...’ பாடல்களை இளையராஜா குரலில் பாடினார் தனுஷ்.
 
'தனுஷ் பாடினது எப்படி இருக்கு?’ என ராஜாவிடம் பால்கி கேட்க, 'என் குரலைவிட தனுஷ் குரல் நல்லாவே இருக்கு’ என்றார் ராஜா.
 
'நான் இவரோட பாடல்களைக் கேட்டுத்தான் சினிமாவுக்கே வந்தேன்; வளர்ந்தேன். ராஜா சார் மியூசிக், எனக்குள்ள எந்த எமோஷனையும் உண்டாக்கிரும்’ என நெகிழ்ந்தார் தனுஷ்.
 
அடுத்து மேடை ஏறினார்கள் கமலும் அக்ஷராவும். படத்தின் டீஸர், டிரெய்லர்கள் திரையிடப்பட, 'நான் எப்படி நடிச்சிருக்கேன்?’ என, கமலிடம் கேட்டார் அக்ஷரா. 'என் பார்வையில் ஆயிரம் விமர்சனங்கள் சொல்வேன். நீ நல்லா பண்ணியிருக்கேனு நான் சொல்லணும்னு அவசியம் இல்லை. பால்கி இருக்கார். அவர் உன்னை நல்லவிதமாத்தான் வழிநடத்தியிருப்பார்னு எனக்குத் தெரியும். முழுப் படமும் பார்த்துட்டு என் விமர்சனம் சொல்றேன்’ என்ற கமல், மேடையில் இருந்து இறங்கிச் செல்லும் வழியில், சரிகாவுக்குச் சின்னப் புன்னகை, ஒரு கைகுலுக்கலை அளித்தார்.
 
'ஷமிதாப்’ படப் பாடல்களை ஜெயா பச்சன் வெளியிட, குல்சார் பெற்றுக்கொண்டார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் ஒவ்வொரு மேஜையாகச் சென்று விருந்தினர்களை நலம் விசாரித்தனர். அப்போது ரஜினிக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷை எழுப்பிவிட்டு அங்கு அமர்ந்த ஐஸ்வர்யா, ரஜினியுடன் சில நிமிடங்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் வரிசையில் இருந்து, 'ரோபோ-2 எப்போ?’ எனக் குரல்கள் எழ, இருவர் முகத்திலும் புன்னகை. 
 
'எல்லாரும் இளையராஜா சார் இசையமைத்த ஆயிரமாவது படம் 'ஷமிதாப்’னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, பாலா இயக்கும் 'தாரை
தப்பட்டை’ படம்தான் ராஜாவுக்கு ஆயிரமாவது படம். 'ஷமிதாப்’ 1,001-வது படம். 'ஆயிரம் படங்களைக் கடந்துவிட்டார் ராஜா. அதுக்காக ஒரு விழா நடத்திக்கிறோம்’னு பாலாகிட்ட சொன்னதும் இந்தப் பாராட்டு விழாவை விட்டுக்கொடுத்தார் பாலா. ரொம்ப நன்றி பாலா’ என்ற பால்கி, 'பாலா மிகப் பெரிய கிரியேட்டர். அவர் பண்ணதுல பாதிகூட நான் பண்ணலை’ எனக் கூறியபோது, பாலா முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
அமிதாப், பால்கி, தனுஷ், அக்ஷரா என ஒட்டுமொத்த 'ஷமிதாப்’ டீமும் மேடை ஏறியபோது, 'நாங்கள்லாம் 'ஷமிதாப்’ல
50 பெர்சன்ட்தான். மீதி 50 பெர்சன்ட் இவர்தான்’ எனச் சொல்லி அவர்கள் அறிமுகப்படுத்திய நபர்... ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
ராஜாவைக் கொண்டாடுவதில் தமிழ் சினிமாவை முந்திக்கொண்டது பாலிவுட்!

No comments:

Post a Comment