நல்லாசிரியன்
சிங்கப்பூரைச் சுத்திப் பார்க்க ஆசைப்பட்டார் சதீஷ். வீட்டுக்கு ஒரே மகன். 'இப்போதைக்கு வேண்டாம்... வயல் வேலைக நடந்துக்கிட்டு இருக்கு. பின்னாடி பார்த்துக்கலாம்’ என மறுத்திருக்கிறார்கள் சதீஷின் பெற்றோர். இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி, தற்கொலை செய்துகொண்டார் சதீஷ்.
செகண்ட் ஹேண்டில் மினிடோர் வண்டி ஒன்றை வாங்கினார் சுந்தரமூர்த்தி. அது அடிக்கடி ரிப்பேராகி, செலவுவைத்தது. விரக்தி அடைந்தவர் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
வயலில் வேலையில் இருந்தார் குணசேகரன். மனைவி சாப்பாடு கொண்டுவர கொஞ்சம் தாமதமானது. தன்மானம் தலைதூக்கி, கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற குணசேகரன், தன்னையே அழித்துக்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது காளாச்சேரி மேற்கு கிராமம். விவசாயம் செழிப்பாக நடைபெறும் இந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை 315. சுமார் 15 ஆண்டுகளில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 100-க்கும் அதிகம் இருக்கும். கடைசி ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சகுந்தலா, பூங்கோதை, சுகன்யா, சதீஷ்குமார், பாஸ்கர், ரவி, விஜயதாரணி, சின்னையன், செல்லையன், ரேகா, செல்லதுரை, சேகர், சங்கர், செல்வராசு... இவர்களையும் சேர்த்து 35 தற்கொலை மரணங்கள். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை மரணங்கள் பதறவைக்கின்றன. சந்தானம், அவரது மகள் செல்லம்மாள், செல்லம்மாளின் கணவர் தங்கமுத்து, அவர்களின் வாரிசுகளான விஜயகுமாரி வேம்பு, பன்னீர்செல்வம், கணேசன், கணேசனின் மகன் சுந்தரமூர்த்தி... என தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே அழித்துக்கொண்டனர்.
''என் பையன் 17 வயசுலயே எங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரியே என் சம்சாரமும் என்னை அநாதையா விட்டுட்டுப் போயிட்டா'' எனக் கலங்குகிறார் கண்ணன்.
ஆண், பெண் பாகுபாடுகள் இல்லை; வயது வித்தியாசம் இல்லை; சாதி வேறுபாடோ, வர்க்க வேறுபாடோகூடக் கிடையாது. பலவீனமான மனம், கொந்தளிக்கும் கோபம் இந்த இரண்டும் இவர்களின் உயிரைத் தாமாகவே மாய்த்துக்கொள்ள வைத்திருக்கின்றன. அனைத்துப் பிரச்னைகளையும் அடுத்த விநாடியே தீர்க்கக்கூடிய சர்வலோக நிவாரணியாகவே தற்கொலையை மட்டும்தான் நினைத்திருக்கிறார்கள். தம்பி திட்டியதால் அக்கா, மாமியார் கோபப்பட்டதால் மருமகள், அம்மா கண்டித்ததால் மகள், கடன்காரன் கிண்டலாகப் பேசியதால் விவசாயி... என தற்கொலைக்கு முயன்று தோற்றவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் மிக அமைதியாக, ரொம்ப நிம்மதியாக இருக்கிறது இந்தக் கிராமம்.
''எங்களுக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. இப்போ எங்க ஊர் மக்கள் ரொம்பவே மாறிட்டாங்க. என்னதான் மீளவே முடியாத பெரிய பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட, அந்தத் தவறான முடிவுக்கு இப்ப யாருமே போறது இல்லை. எதையும் தாங்கக்கூடிய அளவுக்கு தைரியமும் பக்குவமும் வந்திருச்சு'' எனப் பெருமிதப்படுகிறார் ஊர் நாட்டாமை கண்ணையன்.
எப்படி நிகழ்ந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்? இங்கு உள்ள மக்கள் அனைவரும் கைநீட்டுவது... ஆங்கில ஆசிரியர் ஆனந்த்.
''எப்ப... யார் சாவாங்களோனு பயந்து கிடப்போம். எங்களுக்கு எப்ப விடிவு காலம் வரும்னு ஏங்கினோம். ஆனா, இவ்வளவு சீக்கிரம் அது வரும்னு நினைச்சுப்பார்க்கலை. 2009-ம் வருஷம் எங்க ஊர் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியா தரம் உயர்த்தப்பட்டுச்சு. அப்போ 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்க வந்தார் ஆனந்த் சார். அவரோட விடாமுயற்சியால் 2012-ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னாடி எங்க ஊர்ல ஒரு தற்கொலைகூட நடக்கலை. இனிமேலும் நடக்காது'' என்கிறார், முன்பு தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த விவசாயி சுந்தரம்.
மென்மையான புன்னகையுடன் வரவேற்கிறார் ஆசிரியர் ஆனந்த். ''நான் இந்த ஸ்கூலுக்கு டீச்சரா வந்தப்ப, இந்த ஊரைப் பத்தி எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. ரேங்க் கார்டுல கையெழுத்து போட, அப்பா-அம்மாவை அழைச்சிக்கிட்டு வரச் சொன்னப்ப, பல பசங்க கண்கலங்கி அழுதாங்க. யாரைக் கேட்டாலும் 'அப்பா இல்லை’னு சொல்வாங்க. அல்லது 'அம்மா இல்லை’னு சொல்வாங்க. அப்பா-அம்மா ரெண்டு பேரும் இல்லாதவங்களும் இருந்தாங்க. 'இந்த ஊர் ஏன் இப்படி இருக்குது?’னு விசாரிச்சேன். எல்லாரும் தற்கொலை செஞ்சிக்கிட்டு இறந்தது தெரிஞ்சது. 'இனிமேல் இது தொடரக் கூடாது’னு முடிவுபண்ணி, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.
ஆண்டு விழாவே கொண்டாடாமல் இருந்த இந்தப் பள்ளியில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தக் கிராமத்தையும் ஒண்ணு திரட்டி ஆண்டு விழா நடத்தினோம். அதில் பக்காவா ப்ளான் பண்ணி உருக்கமான ஒரு ஃபேமிலி டிராமாவை அரங்கேற்றினோம். அப்பா - அம்மாவை இழந்த பையன் ஒருத்தன் படிக்க வழி இல்லாம தெருத் தெருவாப் பிச்சை எடுத்துப் பிழைக்கிறதுதான் கதை. நாடகம் பார்த்த கிராம மக்கள் கதிகலங்கிப்போயிட்டாங்க. ஒரு அம்மா, நாடகம் நடந்துட்டு இருக்கும்போதே கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. மூணு குழந்தைகளின் தாயான அவங்க, தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாத்தப்பட்டவங்க. மக்களின் மனமாற்றத்துக்கான தொடக்கம் அந்த நாடகத்துல இருந்தே ஆரம்பிச்சது.
ஊர்ல இருந்த 'டைமண்ட் பாய்ஸ்’ இளைஞர் நற்பணி இயக்கத்திடம் பேசி அவங்களை இந்த நல்ல முயற்சிக்குத் துணைக்குச் சேர்த்துக்கிட்டேன். அவங்க மூலமா என் மாணவர்களை தற்கொலைக்கு எதிரான விழிப்புஉணர்வு கொண்டவங்களா மாத்தினோம். ஒரு குரூப் செட்டானதும் மக்கள்கிட்ட பேசிப் பேசி விழிப்புஉணர்வு ஏற்படுத்தினோம்.
மாணவர்களுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் வேஷம் போட்டு, 'எந்த மதமும் தற்கொலையை நியாயப்படுத்தலை’னு எடுத்துச் சொன்னோம். அப்பா, அம்மாவை இழந்த மாணவர்களை வீடு வீடாக் கூட்டிப்போய், அவங்க படுற கஷ்டங்களைச் சொல்லவெச்சு மத்தவங்களுக்குப் புரியவெச்சோம். மக்களோட மனம் பிரச்னைகள் பக்கம் திரும்பாம இருக்கவும், பிரச்னையைப் பத்தி யோசிக்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் பிளாஸ்டிக் வொயர்களால் பூ ஜாடிகள் செய்யக் கத்துக்கொடுத்தோம். 'நாம நல்லா பூ ஜாடி பண்றோம்’கிற பெருமிதமும், அதுக்குக் கிடைக்கும் வருமானமும் மக்களை மாத்துச்சு. இந்த உலகத்தில் எல்லோருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு அன்புதான் மருந்து. ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா, அக்கறையா இருக்கணும்னு கத்துக்கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மனசுல மாற்றம் வர ஆரம்பிச்சது. ஊருக்குள்ள சிரிச்ச முகங்கள் தெரிய ஆரம்பிச்சது'' என்கிறார் ஆனந்த்.
தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், சர்வதேச அளவில் இயங்கும் 'டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு, ஆனந்துக்கு விருது கொடுத்துக் கௌவரப்படுத்தியிருக்கிறது.
''மாணவர்கள் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருது இது. எல்லா மாற்றங்களுக்கும் என் மாணவர்கள்தான் காரணம். விருதுகளை எதிர்பார்த்து நான் இந்த வேலையைச் செய்யலை. என் சின்ன வயசுல என் அப்பா - அம்மா உடம்பு முடியாம இறந்துபோயிட்டாங்க. ஆதரிக்க பெற்றோர் இல்லாம தனியா ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகிறது எவ்வளவு சவாலான விஷயம்னு தெரியும். இப்போ இந்த ஊர் மாறியிருக்கு. எல்லா இரவும் விடியும் என்பது எங்க நம்பிக்கை. அதுக்கு நானும் இந்தக் கிராம மக்களும் கியாரன்டி!'' என்கிறார் ஆசிரியர் ஆனந்த். மாணவர்களின் கைதட்டல் பின்னுகிறது!
No comments:
Post a Comment