Monday, January 5, 2015

‘முடியாததை செய்து முடி!’
ஞா.சுதாகர்
னி ஒரு மனிதன் நினைத்தால் உலகை, உலக அரசியலை, சுற்றுச்சூழலை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்... எலன் மஸ்க். ஒப்பீட்டுக்குச் சொல்வது என்றால் எலன் மஸ்க்கை அமெரிக்காவின் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் என அழைக்கலாம். புகழ்மிக்க ஆன்லைன் ஷாப்பிங் தளமான 'பேபால்’ நிறுவனத் தலைவர். பொருட்களை 'பேபால்’ வெப்சைட் மூலம் விற்றுக்கொண்டிருந்தவர், சக்ஸஸ் ரேட்டைத் தொட்டதும், அப்படியே 'பேபால்’ நிறுவனத்தையும் விற்றுவிட்டார். அடுத்ததாக விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் 'ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிவிட்டு, சில பல திட்டங்கள் அறிவித்தார். அப்படியே எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் தனது நண்பர் மார்ட்டின் தொடங்கிய 'டெஸ்லா’ நிறுவனத்தில் பண முதலீடு செய்தார். இங்கேதான் கதையில் ஒரு கசமுசா, செம ட்விஸ்ட் எல்லாமே! 
 
கொஞ்ச நாட்களிலேயே டெஸ்லா நிறுவனத்தை முழுமையாகக் கையில் எடுத்துக்கொண்டார்
 
 
எலன் மஸ்க். கார்களை இயக்க மாற்று எரிபொருள் தேவை என்கிற விவாதம், நம்ம ஊர் 'ரஜினி - அரசியல்’ விவாதம்போல சீசனுக்கு சீசன் கிளம்பும். மாற்று என்ன? எலெக்ட்ரிக் கார்கள்! ஆனால், இதுவரை உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களால் வேகமாகச் செல்ல முடியவில்லை. சார்ஜ் செய்தாலும் ஸ்மார்ட் போன் மாதிரி பொசுக்கென சார்ஜ் இறங்கிவிடும். இதை உடைத்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார் எலன் மஸ்க்.
 
எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி 100 கிலோமீட்டர் வரைதான் சார்ஜ் நிற்கும் என்பதை மாற்றி, 320 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய ரோட்ஸ்டர் காரை அறிமுகப்படுத்தினார். ஆச்சர்யத்தில் ஆடிப்போனது ஆட்டொமொபைல் உலகம். 'டைம்’ பத்திரிகை தனது அட்டைப்படத்தில் ரோட்ஸ்டர் காரை 'சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று’ எனப் பாராட்டி கட்டுரை வெளியிட, பப்ளிக்குட்டி பற்றிகொண்டது. 2008 - 2012-ம் ஆண்டுகளில் மொத்தம் 31 நாடுகளில் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை வெறும் 2,400. ஏனெனில், ரோட்ஸ்டர் கார்கள் ஸ்போர்ட்ஸ் வகையறா கார். இதன்பிறகு 'செடான்’ ரக ஸ்டைலில் சொகுசு கார்களுக்குப் போட்டியாக டெஸ்லா மாடல் ஷி-ஐ களம் இறக்கினார் மஸ்க். ஒரே ரிசல்ட்தான். வென்றால் வரலாறு; தோற்றால் தகராறு.
 
 
2012-ம் ஆண்டு ஜூன் 22. டெஸ்லா எலெக்ட்ரிக் கார் புராஜெக்ட்டுக்காக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம், அமெரிக்க மின்சக்தி கழகத்திடம் வாங்கிய கடன் மட்டும் 465 மில்லியன் டாலர். இந்த எலெக்ட்ரிக் டெஸ்லாவில் பேட்டரியை இன்னும் மேம்படுத்தி 426 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும் என்பதும், பேட்டரியில் இருந்தே இரண்டு முறை பேக்கப்பும் எடுக்க முடியும் என்பதும் அத்தனை பேரையும் அசரவைத்தது. ஒரே மாதத்துக்குள் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்கள் அனைத்தும் 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்...’ என டெஸ்லாவைப் பாராட்டி எழுத, அந்த வருடம் மட்டும் 22 ஆயிரம் கார்கள் விற்றுத் தீர்ந்தன. 2013-ம் வருடம் அமெரிக்க கார் மார்க்கெட்டில் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ என அனைத்தையும் தாண்டி பிஸ்தா ஆனது டெஸ்லா.
அதில் இருந்து இந்த வருடம் முழுக்க வாரம் சராசரியாக 700 கார்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறது டெஸ்லா மோட்டார்ஸ். 22 வருட தவணையில் கட்டுவதாகச் சொல்லியிருந்த பேங்க் லோன் 465 மில்லியன் டாலரை இரண்டு வருடங்களுக்குள் வட்டியோடு செட்டில் செய்துவிட்டார்கள்.
 
டெஸ்லாவின் சிறப்பே அதன் பேட்டரிதான். சாதாரண லித்தியம் பேட்டரிகளின் செல்களைப்போல
இல்லாமல் உருளை வடிவ முறையில் செல்களை அமைத்து, இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் மஸ்க். பெட்ரோல் போட ஆங்காங்கே பங்குகள் உண்டு. டெஸ்லாவுக்கு? அதற்கும் ரூட் பிடித்துவிட்டார் மஸ்க். நீங்கள் செல்லும் வழியில், ஆங்காங்கே 'எனர்ஜி ஸ்டேஷன்’ என்ற கடைகள் இருக்கும். அங்கு உங்கள் கார் பேட்டரியைக் கொடுத்து சார்ஜ் செய்ய சொல்லிவிட்டு, ஸ்டெப்னி பேட்டரி வாங்கி மாட்டிக்கொள்ளலாம். திரும்பி வரும்போது பேட்டரியை ரிட்டன் வாங்கலாம். இந்த நெட்வொர்க் அமெரிக்கா முழுவதும் விரிவுசெய்யப்பட விற்பனை இன்னும் எகிறிவிட்டது.
 
இதுவரை மேற்கத்திய நாடுகளில் சக்ஸஸ் ரேட் காட்டிவிட்டதால் சீனா, இந்தியா என மிகப் பெரும் சந்தைக்குள் நுழையக் காத்திருக்கிறது டெஸ்லா. ஆனால், அதன் வளர்ச்சியை எண்ணெய் வள நாடுகள் விரும்பவில்லை. எதிர்காலத்தில் தங்களின் வணிகத்துக்கே சங்கு ஊதக்கூடும் என லாபி பண்ணக் காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் புகை கக்காத, இயற்கைச் சூழலைக் கெடுக்காத எலெக்ட்ரிக் கார்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்பி வரவேற்கக் காத்திருக்கிறார்கள். பல சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறார் மஸ்க். காரணம், அவர் டெஸ்லாவுக்கு வைத்திருக்கும் ஸ்லோகன் அப்படி! அது... 'முடியாததைச் செய்து முடி!

No comments:

Post a Comment