Tuesday, June 14, 2016

 நாக்அவுட் - முகமது அலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1971 மார்ச் 8. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முகமது அலி மீண்டும் பாக்ஸிங் ரிங்குக்குத் திரும்புகிறார். உலகமே அந்த ‘நூற்றாண்டின் சண்டை’க்காகக் காத்திருந்தது. உலக சாம்பியன் ஃப்ரேஸியரை நாக்அவுட் செய்து, முகமது அலி சாம்பியனாகிவிடுவார் என 99 சதவிகிதம் பேர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஃப்ரேஸியர், சாதாரண சோப்ளாங்கி பாக்ஸர் கிடையாது. 26 போட்டிகளில் விளையாடி ஒன்றில்கூட தோற்காத தொடர் வெற்றிவீரர். அதில் 23 முறை நாக்அவுட்டில் வெற்றி பெற்றவர். நியூயார்க்கில் நடந்த போட்டியை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. 
‘நாலே ரவுண்டில் ஃப்ரேஸியர் மண்ணைக் கவ்விவிடுவார்’ என புக்கிகள் பெட்டிங்கில் பிஸியாக இருந்தனர். போட்டி தொடங்கியது. முதல் மூன்று ரவுண்டுகளில் முகமது அலி ஃப்ரேஸியரை விரட்டி விரட்டி குத்தினார். அவருடைய ட்ரேட்மார்க் இடது கை குத்துக்கள் சரமாரியாக விழுந்தன. நான்காவது சுற்றில் போட்டி முடிந்துவிடும் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஆட்டம் திசைமாறியது. ஃப்ரேஸியர், முகமது அலியின் தாடையில் ஒரு குத்துவிட்டார். முகமது அலி நிலைகுலைந்து விழுந்தார். அதற்குப் பிறகு அவரால் சுதாரிக்கவே முடியவில்லை. ஃப்ரேஸியர், முகமது அலியை அடுத்தடுத்த சுற்றுகளில் புரட்டி எடுத்துவிட்டார். முகமது அலியின் இடது கை தாக்குதல்களை எல்லாம் தடுத்து, உள்வாங்கி, அடித்து நொறுக்கினார். 15-வது ரவுண்டில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முகமது அலி தோற்றுவிட்டார்! தொழில்முறை பாக்ஸிங்கில் 31 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் வீரநடை போட்ட காலம் முடிந்தது. முதன்முறையாக பாக்ஸிங் ரிங்கில் ஒரு தோல்வியைச் சந்தித்தார் முகமது அலி. 

தன் வாழ்க்கை முழுக்க இப்படிப்பட்ட மிகப் பெரிய தோல்விகளை, சறுக்கல்களைச் சந்தித்தவர்தான் முகமது அலி. ஆனால், இது எல்லா தோல்விகளைவிட மிகப் பெரியது. `முகமது அலியின் காலம் முடிந்துவிட்டது’ எனப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. தன்னுடைய முற்போக்குக் கருத்துக்களுக்காக பெயர்போன முகமது அலியை ‘இனியாவது வாயை மூடுங்க’ எனக் கேலி செய்தன ஊடகங்கள். முகமது அலி காத்திருந்தார். தன்னுடைய ஆட்டத்தின் முறைகளை மாற்றிக்கொண்டார். பயிற்சியை இன்னும் தீவிரப்படுத்தினார். 
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ம் ஆண்டு, ஜனவரி 28-ம் தேதி அதே நியூயார்க்கில், அதே மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஃப்ரேஸியரை மீண்டும் எதிர்கொண்டார். இந்த முறை 
12 சுற்றுகளில் முகமது அலி வெற்றிபெற்றார். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் ‘ரோப் ஏ டூப்’ என்ற புதிய முறையைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அந்த பாணி, அதே ஆண்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் கைகொடுக்க, முகமது அலி மீண்டும் உலக சாம்பியனாக உயர்ந்தார். சவால்களால் சறுக்கி விழாமல் அதை நேருக்குநேராக எதிர்கொள்வது, காத்திருந்து அதை வெல்வது... பாக்ஸிங் ரிங்கிலும் அதற்கு வெளியிலும் இதுதான் முகமது அலியின் குணம். 
1960-களின் தொடக்கம்... தூங்கும்போதுகூட தன் ஒலிம்பிக் பதக்கத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிய பாக்ஸிங் இளைஞராக இருந்தார் முகமது அலி. அப்போது அவர் பெயர் காசியஸ் மார்சிலஸ் க்ளே, ஜூனியர். ரோமில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்குத் தங்கப்பதக்கம் ஒன்றை பெற்றுத் திரும்பியிருந்தார். தன் நண்பர்களோடு ஹோட்டல் ஒன்றில் விருந்துக்குச் சென்ற முகமது அலிக்கு, அந்த ஹோட்டலில் அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு இருந்த மற்ற வெள்ளை அமெரிக்கர்களும் அவரை சண்டைபோட்டு விரட்ட, கோபத்தோடு கிளம்பிய முகமது அலி, அமெரிக்காவின் ஓஹியோ ஆற்றில் தன் தங்கப்பதக்கத்தை வீசி எறிந்தார். அந்தப் புறக்கணிப்பு, அவரை நிறவெறிக்கு எதிரான புரட்சியாளனாக மாற்றியது. அவர் மால்கம் எக்ஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார். நிறவெறிக்கு எதிரான கருத்துக்களைப் பேச ஆரம்பித்தார். 
1964-ம் ஆண்டில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை வீழ்த்திய பிறகு, அவர் தன்னை ஒரு கறுப்பின இஸ்லாமியனாக அறிவித்துக்கொண்டார். அது நிறவெறிக்கு எதிரான ஒரு நடவடிக்கை. ஆனால் அமெரிக்க ஊடகங்கள், `இது ஒரு விளம்பர ஸ்டன்ட், டிக்கெட் விலையை ஏற்றிக்கொள்ள இப்படி எல்லாம் நாடகமாடுகிறார்’ எனக் கேலி செய்தன. முகமது அலி உறுதியாக இருந்தார். ` `காஸியஸ் க்ளே' என்பது வெள்ளையர்களால் எனக்கு வைக்கப்பட்ட ஓர் அடிமைப் பெயர். நான் இப்போது சுதந்திர மனிதன். நான் யாருக்கும் அடிமை இல்லை. அவர்களுடைய பெயரை நான் திருப்பித் தருகிறேன். எனக்கான ஓர் அழகான ஆப்பிரிக்க பெயரை நானே வைத்துக்கொள்கிறேன்' என்றார். முகமது அலியாக மாறினார்.
வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், முகமது அலியை போரில் கலந்துகொள்ள வற்புறுத்தியது அமெரிக்க அரசு. ‘எனக்கு வியட்நாமியர்களோடு எந்தப் பகையும் இல்லை. எந்த வியட்நாம்காரனும் என்னை `நீக்ரோ’ எனக் கீழ்த்தரமாக அழைத்தது இல்லை’ என்றார். முகமது அலியின் கோபமான எதிர்வினைக்கு, அமெரிக்க அரசு தண்டனை கொடுத்தது. 1967-ம் ஆண்டில் அவர் குத்துச் சண்டையில் கலந்துகொள்ள முடியாதபடி அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அவருடைய உலக சாம்பியன்ஷிப் பறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எல்லாம் முகமது அலி வளைந்துவிடவில்லை.
அவர் அந்தச் சட்டம் செல்லுபடியாகாத ஜார்ஜியாவில் சின்னச்சின்னப் போட்டிகளில் விளையாடினார். ஆனால், போருக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். 
70-களின் இறுதியில் முகமது அலி குத்துச் சண்டையில் தன்னுடைய பிடியைத் தவறவிட்டுக் கொண்டிருந்தார். 1978-ம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 1980-ம் ஆண்டில் அவர் தன் கடன் சுமைகளைக் குறைப்பதற்காக மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் திரும்பினார். உலக சாம்பியன் லாரிஹோம்ஸோடு மோதுவது என எடுத்த முடிவு ஆபத்தில் முடிந்தது. மிகவும் பலவீனமாக இருந்த முகமது அலியை லாரிஹோம்ஸ் அடித்து, சிதைத்தார். 125 குத்துக்களை முகத்திலும் தலையிலும் வாங்கினார் முகமது அலி. பின்னாளில் அவர் பார்க்கின்சன் நோயில் வீழ்ந்ததற்கு இந்தப் போட்டிதான் காரணம் எனக் கருதப்படுகிறது. 
முடக்குவாதத்தில் சிக்கிய முகமது அலி, கொஞ்சம் கொஞ்சமாக நிற்கவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் உடலிலேயே முகமது அலி சிறைவைக்கப்பட்டார். தன் தோல்விகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டதைப்போலவே தன் உடல் தளர்ந்துகொண்டிருந்த நிலையிலும் ஒரு போராளியாக எதிர்த்து நின்றார். தொடர்ந்து இயங்கினார். குத்துச்சண்டைப் போட்டிகளை கவனித்துக்கொண்டிருந்தார். பல்வேறு தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றினார். மனிதநேயராக உலகெங்கும் சுற்றி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நம்பிக்கை அளித்தார். 
முகமது அலி, தன் இளமைக் காலத்தில் கறுப்பின மக்கள் குறித்த அமெரிக்கர்களின் பார்வையை மாற்றியதில் முக்கியப் பங்காற்றியவர். கறுப்பின மக்கள், தங்களுடைய உண்மையான ஆற்றலை அறிந்துகொள்ள அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் உதவியது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்தது. அவருடைய பாக்ஸிங் கைகளைவிடவும் அவரது வாழ்க்கை, வலிமையான அடையாளமாக கறுப்பின மக்களிடையே பரவியது. ஓர் இஸ்லாமியராக அவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், இஸ்லாமின் பெயரால் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்த்துவந்தார். தன் மரணத்துக்குப் பிறகு, தான் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்பதை முகமது அலி சொல்லியிருக்கிறார். 
`நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக அவர்களுடைய சம உரிமைக்காகப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட வேண்டும்.'
இனி, எப்போதும் அப்படித்தான் நம் நினைவில் இருப்பார் முகமது அலி.

No comments:

Post a Comment