கூகுள் வீடு
உலகின் முதல் வாய்ஸ் கமாண்ட் எது எனத் தெரியுமா? அரண்மனையில் ஹாயாக அமர்ந்திருக்கும் மன்னன் ‘யாரங்கே...’ எனச் சொன்னதும் 10 பேர் ஓடி வந்து நிற்பார்களே... அதுவாக இருக்குமோ!
உலகின் முதல் பாஸ்வேர்டு எது தெரியுமா? 1950-களில் வந்த ஒரு படத்தில், ஹீரோ ஒரு குகையின் முன் நின்று, `அண்டா கா கசம்... அபு கா ஹூக்கும்... திறந்திடு சீசேம்’ எனச் சொன்னதும் கதவு திறக்குமே... அதுவாக இருக்குமோ!
இந்த இரண்டு அரசகாலக் காட்சிகளிலும் ‘ஆக்ஷன்’ என்பது மனிதர்களால்தான் நடக்கிறது. ஓடி வரும் சேவகன்தான் அரசன் சொன்னதைச் செய்வான். பாஸ்வேர்டைக் கேட்டதும் உள்ளிருக்கும் அடிமைகள் சக்கரத்தைச் சுற்றச் சுற்ற கதவு திறக்கும். மனிதர்கள் இருக்கும் அந்த இடத்தில் மெஷின் வந்துவிட்டால், அதுதான் `ஸ்மார்ட் காலம்’. இந்த ஸ்மார்ட் யுகத்தை ஆளும் கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பான ‘கூகுள் ஹோம்’தான் சமீபத்திய ஆன்லைன் சென்சேஷன்.
கூகுள் ஹோம்? நாம் சொல்வதைக் கேட்டு, அதற்குத் தேவையான தகவல்களை கூகுளின் மற்ற சேவைகளில் தேடி நமக்குப் பதிலாகத் தரும் ஒரு தானியங்கு சேவைதான் ‘கூகுள் ஹோம்’.
காலையில் எழுந்தவுடன் பாத்ரூமில் பல் துலக்கிக்கொண்டே `இன்னைக்கு மழை வருமா?' என்றால், உடனே கூகுள் வெதரில் என்ன அப்டேட் இருக்கிறது என்பதைத் தேடி, `நல்ல மழை இருக்காம்...
குடையை மறக்காதீங்க' என பதில் சொல்லும். டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து சட்டையை மாட்டிக்கொண்டே `யார் யாருக்கு இன்று அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறேன்?’ எனக் கேட்டால், கூகுள் கேலண்டரில் தேடி, அவர்கள் பெயரைச் சொல்லும். டைனிங் டேபிளுக்கு வந்து ‘இன்று என் டயட் என்ன?’ என்றால் அதையும் சொல்லும். மாலை வீடு திரும்பியதும், ‘ `ஜித்து ஜில்லாடி...' பாட்டைப் போடுப்பா’ என்றால் உடனே தேவா பாடத் தொடங்குவார். உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும், என்ன கேட்டாலும் தேடிப்பிடித்துப் பதில் சொல்லிவிடும் கூகுள் ஹோம். எப்படி?
கூகுள் ஹோமில் மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன. ஒன்று, ப்ளூடூத் அல்லது வைஃபை மூலம் கனெக்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர். இரண்டு, உங்கள் குரலை மிக நுண்ணியமாகக் கண்டறியக்கூடிய மைக்குகள். இவற்றை உங்கள் வீட்டின் எல்லா அறைகளிலும் பொருத்திவிட வேண்டும். மூன்று, இதன் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ப்ராசஸர். நீங்கள் சொல்வதை மைக் மூலம் கேட்டு, தேவையான தகவலை இணையம் மூலம் ப்ராஸசர் தேடி, பதிலை ஸ்பீக்கர் மூலம் உங்களுக்குச் சொல்லும்... தீர்ந்தது விஷயம்.
ஆப்பிள் மொபைல்களில் அறிமுகப்படுத்தப் பட்ட ‘சிரி’யின் விஸ்வரூப வெர்ஷன்தான் `கூகுள் ஹோம்' எனச் சொல்லலாம். அது மொபைல் அளவில் செய்வதை இது வீடு முழுக்கச் செய்கிறது. கூகுள் தரும் பல சேவைகளைத்தான் பெரும் பாலோனோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதை எல்லாம் கூகுள் ஹோம் ஒருங்கிணைத்துத் தருவதால், மற்ற வாய்ஸ்- அசிஸ்டென்ட்களைவிட கூகுள் ஹோமுக்கு மவுசு அதிகம்.
கூகுள் தனது சேவைகளைத் தாண்டி, பல முன்னணி நிறுவனங்களுடன் கைகோக்க இருக்கிறது. டி.வி., வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகுள் ஹோம் இணையும்போது அந்த ஸ்மார்ட் பொருட்களையும் நம் குரல் மூலமே செயல்படுத்த முடியும். இனி, ரிமோட்டுக்கு சண்டை வராது. `ஓவர் சத்தமா இருக்கு... கொஞ்சம் சவுண்ட் குறை எல்ஜி' என அம்மா கிச்சனில் இருந்தே சொல்லிவிடுவார். ஆனால், யார் குரலை அது கேட்க வேண்டும் என்பதில் குடும்பப் போரே வரலாம்.
கூகுள் ஹோமின் இன்னொரு ஸ்பெஷல், இதன் கூடவே வரும் குரோம் காஸ்ட் மென்பொருள். வீட்டில் இருக்கும் எல்லா அறை களையும் கோ-ஆர்டினேட் செய்யும் வேலையைக் கச்சித மாகச் செய்யும். கூகுள் ஹோம் ஸ்பீக்கரும் பார்க்க ஸ்லீக் ஆக இருக்கிறது. இதன் அடிப் பாகத்தை அந்தந்த அறையின் சுவர் நிறத்துக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள முடியும் என்பது ஹைலைட்.
ஆப்பிளின் சேவைக்கு `சிரி’ எனப் பெயர். அமேஸானின் புராடக்டை `அலெக்ஸா' என அழைத்தார்கள். மெஷின் என்றாலும் நாம் கேட்பதற் கெல்லாம் பதில் சொல்வதால், அதையும் சக மனிதனாகவே நாம் உணர்வோம். அதனால் அதற்கு `சிரி', `அலெக்ஸா' போன்ற பெயர்கள் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். `சிரி... இப்ப என்ன படம் சத்யம்ல ஓடுது?', `அலெக்ஸா... பெங்களூருக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ?' எனக் கேட்கும்போது அவற்றையும் நம் குடும்பத்தில் ஓர் உறுப்பினர்போல நினைப்போம். கூகுள் அப்படி ஒரு பெயரை இன்னும் சூட்டவில்லை. இதை ஒரு முக்கியமான குறையாக நினைக்கிறார்கள் டெக்கி விமர்சகர்கள். விலை, கிட்டத்தட்ட அமேஸான் எக்கோ விலையாக இருக்கலாம். இந்திய மதிப்பில் 15,000 ரூபாய்.
இந்த மேஜிக் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். `தமிழுக்கு இப்ப வராதா?’ என்ற கேள்விக்கு கபாலியைப்போல கையைப் பிசைகிறார்கள் கூகுள் ஃபேன்ஸ். அப்படியே வந்தாலும், சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ் என பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். அது நடக்கும் வரை `ஹே கூகுள்... வில் இட் ரெயின் டுடே?'தான்
No comments:
Post a Comment