Friday, June 3, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு! 

என்னதான் நடக்கிறது

நீட்’ ( NEET- National Eligibility cum Entrance Test)  என்பது 2013-ம் ஆண்டில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, மருத்துவப் படிப்புக்கான புதிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுமுறை. இதன்படி இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. மற்றும் எம்.எஸ்... ஆகிய மருத்துவப் படிப்புகளைப் படிக்க, இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்று அந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஸீட் ஒதுக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ சிலபஸை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. 

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சி.பி.எஸ்.இ சிலபஸ் அல்லாத தனித்த பாடத் திட்டத்தைக் கொண்டுள்ளவை. இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இனிமேல் சி.பி.எஸ்.இ முறைப்படி அமைந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்றால்தான் மருத்துவப் படிப்புக்கே செல்ல முடியும் என்பது மிகப்பெரிய அநீதி என்று எதிர்ப்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்யக்கோரி மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், ‘ ‘நீட்’ நுழைவுத் தேர்வு, சட்ட விரோதமானது மற்றும் அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிரானது’ என்று கூறி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் அதே உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, ‘நீட்’ தேர்வுக்கு அனுமதி அளித்துள்ளது. மறுபடியும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழவே... இந்த ஓர் ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்குத் தடை கேட்டு ஒருவர் மனு தாக்கல் செய்ய... அதையும் ரத்துசெய்திருக்கிறது நீதிமன்றம். இறுதியாக... ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது, தமிழகம் உள்ளிட்ட தனித்த பாடத் திட்டத்தைப் பின்பற்றும் மாநிலங்களுக்கு, இந்த ஆண்டு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வு உண்டு. 

இது என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினேன். 

‘‘ ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களின் தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் மேல்நிலைக் கல்வி தகுதி இல்லாததா? 10-ம் வகுப்பையும், 12-ம் வகுப்பையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்க முடியாது. 10-ம் வகுப்பு வரையிலும் எல்லாப் பாடங்களையும் படிக்கின்றனர். 11-ம் வகுப்பு செல்லும்போதே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைத் தேர்வுசெய்து அதை ஒட்டியவற்றைத்தான் படிக்கின்றனர். அதில் தேர்வுபெற்றுதான் அவர்கள் உயர் கல்விக்கு வருகின்றனர். அப்படி இருக்கும்போது, மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது அவசியம் இல்லாதது; நியாயமற்றது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மேல்நிலைக் கல்வியைப் பின்பற்றி இதுவரை மருத்துவப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஏதேனும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை முதலில் விளக்க வேண்டும். அப்படி எந்தச் சிக்கலும் இல்லாதபோது எதற்காக இந்தப் புதிய தேர்வுமுறை? ஒருவேளை, ‘இது மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும்’ எனச் சொல்லப்படலாம். இவர்கள் தரம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படி அமைந்திருப்பதைதான். சி.பி.எஸ்.இ-தான் தரமானது என்று யார் முடிவுசெய்வது? 

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலும் ஒரே வகையான பாடத் திட்டத்துடன் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் வரையிலும், மெட்ரிக் என்ற பெயரைவைத்துக்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டிருந்தனர். இப்போது அரசுப் பள்ளியிலும் அதே பாடத் திட்டம் என்பதால், அப்படி வேறுபடுத்திக்காட்டிக்கொள்ள  முடியவில்லை. எனவே சி.பி.எஸ்.இ உயர்ந்தது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். CBSE, CBSE-I (International) என இரண்டு வகையான சி.பி.எஸ்.இ சிலபஸ்கள் இருக்கின்றன. இப்போது சி.பி.எஸ்.இ-தான் சிறந்தது எனச் சொல்பவர்கள், நாளை சி.பி.எஸ்.இ-இன்டர் நேஷனல்தான் சிறந்தது எனச் சொல்வார்களா? அதனால் இது கழுதையின் முன்னே கேரட்டைக் கட்டி வித்தை காட்டும் வேலை. 

மத்திய அரசைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ சிலபஸுக்கு மாற்றிவிட்டால், தங்கள் கொள்கைகளை அமல்படுத்த வசதியாக இருக்கும். சம்ஸ்கிருதத்தைக் கொண்டுவரலாம்; மகாபாரதத்தைப் பாடத்தில் சேர்க்கலாம்; பகவத்கீதையைக் கட்டாயமாக்கலாம். யாரும், ‘நாங்கள் மாநில அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள். இதை ஏற்க முடியாது’ எனச் சொல்ல முடியாது இல்லையா? 

அதனால்தான் மத்திய அரசும் இதை விரும்புகிறது; ஊக்குவிக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநில அரசுக்கும் தன் மாநிலத்தின் நலன் சார்ந்து ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கிக்கொள்ள உரிமை இருக்கிறது. பயிற்று மொழி வரைக்கும் மாநிலமே தீர்மானிக்கலாம். இந்த அதிகாரத்தை பறித்துக்கொள்ள இப்போது மத்திய அரசு முயற்சிசெய்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருக்கிறது. 2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்துசெய்து இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல்கூட பெறப்பட்டுள்ளது.

 இதில் மத்திய அரசு நுழைவதற்கோ, சட்டம் போடுவதற்கோ வாய்ப்பு இல்லை. இதைக் கருத்தில் எடுத்துதான் 2013-ம் ஆண்டில் ‘நீட்‘ நுழைவுத் தேர்வை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 
கல்விசார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இப்போது ‘நீட்’ விஷயத்தில் அப்படி எந்த வல்லுநர் குழு ஆய்வுக்கும் உத்தரவிடாமல் உச்ச நீதிமன்றம் அதிரடியாகச் செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்கும்போது, இந்தத் தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தில் விவாதத்துக்கே வரவில்லை’’ என்கிறார் பிரின்ஸ்.  

அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ அமல்படுத்தப் படும் என்றால், பெற்றோர்கள் மத்தியில் எந்தவித பாடத் திட்டத்தில் பிள்ளைகளைப் படிக்கவைப்பது என்ற குழப்பம் ஏற்படும். இப்படி ஒரு நிலை வந்தால் அல்லது வரக்கூடும் எனத் தெரிந்தால், பெற்றோர்கள் தாங்களாகவே சமச்சீர் கல்வியில் இருந்து பிள்ளைகளை விலக்கி, சி.பி.எஸ்.இ பக்கம் சென்றுவிடுவார்கள். ஏற்கெனவே சி.பி.எஸ்.இ மோகம் பெற்றோரை ஆட்டிப்படைக்கும் நிலையில், ‘சமச்சீரில் படித்தால் தன் பிள்ளையால் டாக்டராக முடியாது’ என்ற நிலை வருமானால், முற்றிலுமாக இதை வெறுத்து ஒதுக்கி அந்தப் பக்கம் ஓடுவார்கள். எனவே, ‘நீட்’ தேர்வு என்பது ஒருவகையில் மாநில வாரியான பாடத் திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும் வேலைதான். 

தேசியக் கட்சிகளுக்கு, குறிப்பாக ஒரு மத அடையாளத்தை தன் முகமாகக் கொண்டிருக்கிற பா.ஜ.க-வுக்கு, பிரதேச அடையாளங்கள் தொல்லையாக இருக்கின்றன. பாய்ச்சலோடு முன்னேறிச் செல்ல மாநிலவாரியான மொழி, கல்விமுறை, கலாசாரம் ஆகியவை தடையாக இருக்கின்றன. ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே கடவுள் என்ற முழக்கத்தை நிறுவுவதற்கு எதிர்படும் தடைகள் அனைத்தையும் உடைக்க நினைக்கிறார்கள். ‘நீட்’ தேர்வின் சாராம்சமும் கிட்டத்தட்ட அதுவேதான். சமச்சீர் கல்வியே பிரச்னை எனத் திசைதிருப்பிவிடும் வேலை, அது கொண்டுவரப்பட்ட நாள் முதலாக நடக்கிறது.  ‘நீட்’ போன்றவற்றைப் பொருத்தமான சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு, சமச்சீர் மீதான எதிர்மறைக் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புகின்றனர்.  மேலும், எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக ஒரு பாடத் திட்டத்தை வகுத்துவிட முடியாது. மாநிலங்கள் ஒரு பாடத் திட்டத்தை வகுத்த பிறகு, தேசிய அளவிலான என்.சி.ஆர்.டி என்ற அமைப்புக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, curriculum focus group என ஒரு குழுவை வைத்துள்ளது. அந்தக் குழு, அந்தக்  குறிப்பிட்ட மாநிலப் பாடத் திட்டத்தின் தரத்தை ஆய்வுசெய்து, தேசியப் பாடத் திட்டத்துடன் ஒன்றிவருகிறதா என்பதைப் பரிசீலித்துப் பிறகுதான் அனுமதிதருகிறது. எனவே, மாநில மொழி பாடத் திட்டங்களின் தரமின்மை குறித்த வாதம் நியாயமற்றது. உண்மையிலேயே தமிழ்நாடு போன்ற மாநில மொழிப் பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என நினைத்தால், அதற்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. தமிழ்நாட்டில், கடந்த 12 ஆண்டுகளாக ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு சிலபஸைச் சீராய்வுசெய்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிலபஸை மேம்படுத்தி, பாடப் புத்தகமும் தயாராகிவிட்டது. அதை அச்சடிக்காமல் வைத்திருக்கிறார்கள். இதைச் செய்தாலே நவீனப் பாடத் திட்டத்துக்கு தமிழக மேல்நிலைக் கல்வி உயர்ந்துவிடும். 

இதில் கவனிக்க வேண்டிய மற்றோர் அம்சம், ‘நீட்’ என்ற இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை, கோச்சிங் வகுப்புகளுக்கான மேலும் ஒரு சந்தையை உருவாக்கும். ஐ.ஐ.டி-க்கு அப்படித்தான் நடக்கிறது. சி.பி.எஸ்.இ முறையில் படித்தவர்கள்தான் ஒவ்வோர் ஆண்டும், அதிக அளவில் ஐ.ஐ.டி-க்குச் செல்கின்றனர். அவர்களில் அதிகப்பட்சம் பேர், ஐ.ஐ.டி-க்கு என்று தனியாக கோச்சிங் கிளாஸ் சென்றவர்களாக இருப்பார்கள். சி.பி.எஸ்.இ சிலபஸ் சிறந்தது என்றால், அதை மட்டுமே படித்து அல்லவா ஐ.ஐ.டி-க்கு செல்ல வேண்டும்? எனவே நீட் நுழைவுத் தேர்வுக்கும் தனிப்பட்ட கோச்சிங் சென்டர்கள் நாடு முழுவதும் உருவாகும். ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பார்கள். அந்தக் கட்டணத்தை நடுத்தர மற்றும் பணக்கார மாணவர்களால் மட்டுமே கட்ட முடியும். மறுபடியும் ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் போட்டியில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்பது எப்படிப் பார்த்தாலும் பெரும்பான்மை ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இதன் அபாயத்தை இன்னும் தமிழ்நாடு முழுமையாக உணரவில்லை. அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், தேர்தல் முடிந்துவிட்டது

No comments:

Post a Comment