அறிவியலின் தோல்வியா... மனிதனின் வியூகமா..!?
சார்லஸ்
239 உயிர்கள்..!? அந்த விமானம் மர்மமாக மறைந்து ஒரு வாரத்துக்கு மேலான பிறகும், இன்னும் தகவல் ஏதும் இல்லை!
239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரத்துக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370, இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் நிமிடம் வரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
விஞ்ஞான வளர்ச்சி, உச்சத்தைத் தொட்டு விட்டதாகச் சொல்லப்படும் இந்த யுகத்தில், ஒரு விமானம் காணாமல்போன ஒரு வாரத்துக்குப் பிறகும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, நிச்சயம் நமது அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் அதிர்ச்சி!
பைலட்களின் பின்புலம், விமான நிறுவனங்களின் அலட்சியம், போலி பாஸ்போர்ட் பயணம், ரேடார்களின் நம்பகத்தன்மை... என மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல்போன விவகாரம், பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
விமானத்தில் கோளாறு, கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது என்று ஆரம்பகட்டத்தில் பரப்பப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பொய்யாகி, விமானம் கடத்தப்பட்டது என்பதே சமீப கணிப்பு. விமான இயக்கத் தொழில்நுட்பம் குறித்து முழுக்கத் தெரிந்தவர்கள்தான் இந்தக் கடத்தலைச் செய்திருக்க முடியும். அது ஒருவர் அல்ல... ஒரு குழுவாகவே செயல்பட்டிருக்கலாம் என்ற திசையில் விரிகிறது விசாரணை!
கோலாலம்பூரில் இருந்து மார்ச் 8-ம் தேதி இரவு 12.41 மணிக்குப் புறப்பட்ட விமானம், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதனுடனான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட, விமானம் காணாமல் போய்விட்டது என்ற தகவலைக் கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் கழித்தே உறுதிசெய்தது மலேசிய ஏர்லைன்ஸ்.
விமானத்தின் தகவல் தொடர்பு வலுக்கட்டாயமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி விமானத்தின் டிரான்ஸ்பான்டர் (தகவல் தொடர்பு சாதனம்) துண்டிக்கப்பட்டபோது விமானம் இருந்த இடம் தாய்லாந்து - வியட்நாம் கடல் வழி. தொடர்பு துண்டிக்கப்பட்ட எட்டு மணி நேரம் கழித்து, ரேடார் சிக்னலில் இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்துகொண்டிருந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், விமானத்தின் இயக்கம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக டிரான்ஸ்பான்டர் கருவியின் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதன் பிறகு சுமார் ஆறு மணி நேரம் விமானம் பறந்துகொண்டிருந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
MH370 விமானக் கடத்தல் விவகாரத்தில் முதல் சந்தேகத்துக்குரிய நபர், விமானத்தின் பைலட் சஹாரி அஹமத் ஷா. 53 வயதான இவர், 1981-ம் ஆண்டுமுதல் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். 18,365 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்ட மிக மூத்த விமானி இவர்.
2007-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் விமானத்தின் துணை பைலட் ஃபரிக் அப்துல் ஹமீதுக்கு வயது 27. இருவருமே மலேசிய நாட்டுக்காரர்கள். இந்த விமானிகள் இருவரும் ஒன்றுசேர்ந்து விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என்பதுதான் அதிகாரபூர்வ விசாரணையின் அடித்தளம்.
பைலட் சஹாரி அஹமத் ஷா பற்றிய புலனாய்வுத் தகவல்களும் அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன. மலேசிய அரசாங்கத்தின் மேல் சஹாரி அதிருப்தியில் இருந்தது தெரியவந்திருக்கிறது. பைலட் அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க் கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என்கிறார்கள். அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த மார்ச் 7-ம் தேதி, சஹாரி அஹமத் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் என்கிறார்கள். (மலேசியாவின் எதிர்க் கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் மீது ஊழல், பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கை புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அவர் மீது தொடர்ச்சியாகப் பொய்ப் புகார்கள் சுமத்தி கைது செய்துவருகிறது மலேசிய அரசு என்பது அன்வர் ஆதரவாளர்களின் வாதம். இதற்கும் இந்த விமானக் கடத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்றரீதியிலும் விசாரணை நீள்கிறது!)
விபத்துக்குள்ளான விமானத்தின் துணை பைலட் ஃபைசல், ஒரு ஜாலி பார்ட்டி என்கிறது முதல் கட்ட விசாரணை. இவர் கடந்த 2011-ம் ஆண்டு தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில், மாடல் அழகிகளுடன் விமான காக்பிட்டிலேயே ஜாலியாக இருந்தார், புகைபிடித்தார் என்ற விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியது.
காக்பிட்டில் அனுமதி இல்லாதவர்கள் உள்ளே வர முடியுமா என்பது குறித்து இந்திய விமானங்களை இயக்கும் பைலட் ஒருவரிடம் கேட்டேன். ''2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு விமானங்களில் பாதுகாப்பு விஷயங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டன. இதில் முக்கியமான ஒன்று, 'காக்பிட்டில் விமானிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது’ என்பதுதான். 'விமானப் பணிப்பெண்கள், அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்கு மேல் பைலட் அறையில் இருக்கக் கூடாது’ என்பது விதி. ஆனால், அது அவ்வளவு கெடுபிடியாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை!
ஒவ்வொரு விமானப் பயணத்துக்கு முன்னும் பின்னும் பைலட்களுக்கும் ஆல்கஹால் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம். விமானத்தை இயக்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக பைலட் மது அருந்தி யிருக்கக் கூடாது என்பதோடு, பைலட்டின் ரத்தத்தில் 0.04 சதவிகிதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு இருந்தால், அவர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படக் கூடாது என்பதும் விதி. ஆனால், விமானத்தை, தரையிறக்கிய பிறகு ஆல்கஹால் டெஸ்ட் பெரும்பாலும் நடத்தப் படுவது இல்லை.
விமானப் பணிபெண்கள், பணியாளர்களைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் பறக்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் நிறைய நேரம் பறந்தால்தான் அதிகச் சம்பளம் கிடைக்கும் என்பதால், இடைவெளி இல்லாமல் பறக்கிறார்கள். அதனால் களைப்பை மறக்க, பயணிகளுக்கான மதுவை பைலட்களும் விமானப் பணியாளர்களும் அருந்துவது உண்டு!'' என்று அதிரவைக்கிறார் அவர்.
போயிங் விமானங்களின் தரம், கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறித்து போயிங் விமான நிறுவன அதிகாரி ஒருவரிடம் பேசினேன். தன் அடையாளம் மறைத்துக்கொண்டு அவர் சொன்னது இங்கே... ''ஒரு விமானத்தை பயணிகள் உபயோகத்துக்கு அளிப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பரிசோத னைகள் மேற்கொள்ளப்படும். பனிமலை, அதிக வெப்பப் பகுதி, கடும் மழைப்பிரதேசம்... என எல்லா இடங்களிலும் கடுமையாகச் சோதிக்கப் பட்டுத்தான் விமானங்கள் விற்பனைக்கு வரும். ஒரு விமானத்தின் ஆயுட்காலம் அதிகபட்சம் 50 ஆண்டுகள். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக 15-20 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலே, ஒரு விமானத்தை பயணிகள் பயன்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு, சரக்கு விமானங்களாக மாற்றிவிடுவார்கள். ஒவ்வொரு விமானமும் அதிநவீனப் பாதுகாப்புக் கருவிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
தவிர, விமான இன்ஜினின் செயல்பாடுகள் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதாவது விமானத்தின் இன்ஜினில் இருக்கும் சென்சார், குறிப்பிட்ட இடைவெளியில் இன்ஜினின் செயல்திறன் பற்றிய அறிக்கையை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதனால் விமான இன்ஜினில் மிகச் சிறிய கோளாறுகூட விமானம் தயாரித்த நிறுவனத்துக்கு உடனடியாகத் தெரிந்துவிடும். அவர்கள் உடனே விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிடுவார்கள்!'' என்றார்.
ஆக, MH370 விமானத்தின் 'தலைமறைவு’க்குக் காரணம் இயந்திரங்களின் பழுது அல்ல என்பதுதான் அதிர்ச்சி!
No comments:
Post a Comment