வீட்டிலேயே தயாரிக்கலாம்... இலவச சமையல் எரிவாயு!
அசத்தும் அனிதா!
ந.அபிநயரோஷிணி, படங்கள் : ஜெ.முருகன்
'தண்ணி வரல’, 'கேஸ் விலை ஏறிட்டே போகுது’, 'கரன்ட் பில் தலைசுத்த வைக்குது...’
- இதெல்லாம் பெரும்பாலான பெண்களின் வழக்கமான புலம்பல்.
''எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்காமல், குற்றம்சாட்டாமல்... நாமே மாற்றுவழி யோசிக்கலாமே. அது, சுலபமாக சாத்தியமும் ஆகும்!''
- இது, அனிதா சொல்லும் அனுபவப் பாடம்.
புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வானூர் தாலுகா, பட்டானூர் கிராமத்திலிருக்கும் தன் வீட்டிலேயே இயற்கை முறையில் சமையல் எரிவாயு தயாரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி, மாற்றுவழி அடுப்பு, தோட்டத்துக்கு மண்புழு உரம் தயாரிப்பு, மழைநீர் சேகரிப்பு... என அனைத்திலும் அசத்திக்கொண்டிருக்கும் அனிதாவை, காலைப் பொழுதொன்றில் சந்தித்தோம்.
''அத்தியாவசிய தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ரொம்ப நாளாகவே எனக்கு உண்டு. ஆனால், அதற்கான நேரம் கிடைக்காமல் இருந்தது. 'தானே’ புயல் தாக்குதலில் எங்கள் ஊரும் பாதிக்கப்பட்டபோது தண்ணீர், மின்சாரம் என்று எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இனியும் தாமதிக்கக் கூடாது என்று, அந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான் என் ஆர்வத்தை செயல்வடிவமாக்கினேன்'' என்று சொல்லும் அனிதா, அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினீயர்.
''என் கணவர் ரமேஷ்... ஆர்கிடெக்ட் கம் பில்டர். எங்களின் ஒரே மகள் ஏஞ்சலின் எட்டாவது படிக்கிறாள். நான் பி.டெக் முடித்து புதுச்சேரியில் சிவில் இன்ஜினீயராக பத்து ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது புதுச்சேரியில பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் கட்டியிருக்கிறேன். பிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, டெல்லி அரசு ஐ.டி.ஐ-யில் முதல்வராக வேலை பார்த்தேன். 2010-ம் ஆண்டு அந்தப் பணியிலிருந்து விலகி, புதுச்சேரி திரும்பிய நான்... எம்.டெக் என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் படித்தேன்.
டெக்னாலஜியில் நாம் முன்னேறும் ஒவ்வொரு நொடியும், இயற்கை வளங்களைத் துன்புறுத்தி, சீரழிக்கவும் தயங்குவதில்லை என்கிற உண்மை, அப்போதுதான் எனக்குப் புலப்பட்டது. இயற்கைக்கு எதிரான நம்முடைய செயல்களின் எதிர்விளைவுதான் சுனாமி, தானே புயல் மாதிரியான தாறுமாறான தாக்குதல்கள் எல்லாம். இதற்கான விதைகளை நம் வீட்டிலும் போடக்கூடாது என்று நினைத்தேன். இயற்கையை நேசிக்க ஆரம்பித்தேன்.
சாதாரண குப்பை, சாக்கடை தண்ணி இதையெல்லாம் வெளியில் விடுவது மூலமாகக்கூட, இயற்கையை நாம் சீரழிக்கிறோம் எனும் உண்மை புரிந்ததால், 'சாக்கடை தண்ணீர் சுத்திகரிப்பு' என்பதையே என்னுடைய எம்.டெக் படிப்புக்கான புராஜெக்டாக எடுத்துக்கொண்டேன். இதுக்காக ஒரு பெரிய கம்பெனியை சாம்பிளாக எடுத்து வேலை பார்த்தேன். மனதுக்கு நிறைவான வெற்றி கிடைத்தது. அப்போதுதான், 'ஒரு பெரிய கம்பெனிக்கே இதைஎல்லாம் செய்து தரும்போது, சின்ன அளவில் இருக்கும் நம் வீட்டுக்கு செய்ய முடியாதா?' என்று யோசித்து, கணவரிடம் பேசிப் பேசி, அவருடைய உதவியோடு ஒவ்வொரு விஷயமாக எங்க வீட்டிலேயே அமலுக்கு கொண்டு வந்துவிட்டோம். இப்போது, பிளாஸ்டிக் கவர்களைத் தவிர, வீட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் 'குப்பை’ என்று வெளியே அனுப்புவதில்லை. அனைத்தையும் மறுசுழற்சி செய்து பயன் படுத்துகிறோம்'' என்று ஆச்சர்யப்படுத்தியவர், ஆக்கப்பூர்வமான அந்தப் பணிகளைப் பட்டியலிட்டார்!
ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்!
''
கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. மேலும், சிலிண்டருக்குக் காத்திருக்கும் அவஸ்தையும் அதிகம். இதிலிருந்து விடுபட, நீங்களும் என்னைப் போல் வீட்டிலேயே பயோ கேஸ் அமைக்கலாம். இதற்கு மாடுகள் தேவையில்லை... நம்முடைய கழிப்பறையின் செப்டிக் டேங்கே போதும். இப்போது எங்கள் வீட்டில் 15 x 15 என்ற அளவுக்கு உருண்டையான ஒரு 'டோம்’ இருக்கிறது. இதுதான் மாடர்னைஸ்டு செப்டிக் டேங்க். இது ஒன்றும் புதிதல்ல... 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிராமத்து வீடுகளில் சாண எரிவாயு எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பம்தான்.
பெரிய தாழி மாதிரி, சிமென்ட் கொண்டு கட்டப்படும் உருண்டைதான் இந்த 'டோம்'. வீட்டிலிருக்கும் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இதை அகலமாக கட்டிக்கொள்ளலாம். இதன் பக்கவாட்டில் இரண்டு பெரிய பைப்புகள் நுழைவதற்கான துளை மட்டும் போட்டு மூடிவிடவேண்டும். ஒரு துளையில் ஐந்தடி நீளம், ஒன்பது முதல் பத்து அங்குல அகல பைப்பை பதித்து, அதை வீட்டு சமையலறை அருகில் வருவதுபோல் வைத்துவிட வேண்டும். இதில்தான் வீட்டில் வீணாகும் மட்கக்கூடிய அத்தனை குப்பைகளையும் போட்டு, தண்ணீர் ஊற்ற வேண்டும். அது அப்படியே 'டோம்' உள்ளே சென்றுவிடும்.
மற்றொரு துளையில் ஐந்தடி நீளம், 4 அங்குல அகலம் உள்ள பைப்பை இணைத்து, கழிவறைக்கு கொண்டு வரவேண்டும். அங்கிருந்து வெளியாகும் கழிவுகள் எல்லாம் இந்த பைப் மூலமாக 'டோம்' உள்ளே சென்று விழும். எரிவாயு தயாரிக்க ஆரம்பிக்கும் முன்பாக, சாணம் கொண்டு இந்த 'டோம்' நிரப்பப் படவேண்டும். பிறகுதான் கழிவறை சமாசாரங்களும்... மட்கக்கூடிய வீட்டுக் கழிவுகள் அனைத்தையும் உள்ளே போடவேண்டும். 45 நாளில் மீதேன் எரிவாயு உருவாகிவிடும். எல்லார் வீட்டு செப்டிக் டேங்கில் இருந்தும் இப்படி வெளியாகும் மீதேன், வீணே காற்றில் கலந்து, சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே மீதேன் வாயுவை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். நாங்களோ... எங்கள் வீட்டிலேயே உற்பத்தியாகும் மீதேன் வாயுவையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வாங்கினால்... அதிகம்!
பயோ கேஸ் தயாராகும் 'டோம்' உள்ளே இருந்து சிறிது தண்ணீர் வெளியாகும். இதை பம்ப் மூலமாக எடுத்து, பூந்தோட்டத்துக்கு விடுவேன். இந்த நீரை லிட்டருக்கு 50 ரூபாய் என்று விற்கலாம். இது சத்தான உரம் கலந்த நீர். நேரம் கிடைக்காததால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனாலும், என் தோட்டத்துக்குப் பயன்படுகிறது. இதேபோல பாத்ரூமில்இருந்து வெளியேறும் குளியல் நீர், துணி அலசும் நீர் போன்ற கழிவு நீரை... ரசாயனங்களை உறிஞ்சும் தன்மை கொண்ட கல்வாழைச் செடியைப் பயன்படுத்தி சுத்திகரித்து, டாய்லட்டை ஃபிளஷ் அவுட் செய்யப் பயன்படுத்துகிறேன். இந்த பயன்பாட்டுக்கு நல்ல தண்ணீரை செலவழிப்பது தேவையில்லாதது. அதோடு, இப்போது என் வீட்டுக்குப் பக்கத்தில் சாக்கடைத் தேக்கம் என்பதே இல்லை'' என்று விவரித்த அனிதா,
''இப்படி நம்முடைய தேவைகளை சுயசார்போடு பூர்த்தி செய்துகொள்ள எல்லோராலும் முடியும். அதற்கு தேவை... ஆர்வம் மட்டுமே!'' என்று அழுத்தமாக சொன்னார். இப்படி சொல்வதோடு நிற்காமல், இயற்கையைக் காப்பதற்காக வீட்டிலிருந்தே எப்படி வேலையை ஆரம்பிக்கலாம் என்பதை, விழிப்பு உணர்வு பயிற்சியாகவே மக்கள் மத்தியிலும் நடத்திக்கொண்டிருக்கிறார்... நம் அனைவரிடமும் சபாஷ் வாங்கும் இந்த அனிதா!
தேங்காய் ஓடு அடுப்பு!
தேங்காய் ஓடு சீக்கிரம் மட்காது என்பதால், இதை எரிப்பதற்காகவே 'ஆரோவில்’லில் கிடைக்கும் பிரத்யேக அடுப்பை பயன்படுத்துகிறார். இதன் மூலம் தேங்காய் ஓடும் எரிபொருளாக பயன்படுகிறது.
பூந்தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம் என மூன்று வகையான தோட்டங்கள் வைத்திருக்கிறார். இதில் காய்கறித் தோட்டத்துக்கு, சொந்தமாக தயாரிக்கும் மண்புழு உரத்தையே பயன்படுத்துகிறார்.
மாடியில் விழும் மழைநீரை ஒரு தொட்டியில் சேகரித்து, சுத்திகரித்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார். தரையில் விழும் மழைநீரை சேகரித்து, சுத்திகரித்து, சமையல் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்.
வீட்டில் மொத்தம் 14 எல்.இ.டி பல்புகள் பயன்படுத்துகிறார். இதனால், நல்ல வெளிச்சம் கிடைப்பதோடு, கரன்ட் பில்லும் வெகுவாகக் குறைகிறதாம்!
No comments:
Post a Comment