சிட்டுக்குருவி சில துளிகள் !
சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.
தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.
சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.
சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.
உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை
No comments:
Post a Comment