Thursday, March 27, 2014

வாழ்க்கையைக் கொண்டாடியவர்!
சாரு நிவேதிதா, ஓவியம்: பாரதிராஜா
குடித்து ரொம்பக் காலம் ஆயிற்றே என்று, சென்ற வாரத்தில் ஒருநாள் மதியம் ரெமி மார்ட்டினுடன் அமர்ந்தேன். தொட்டுக்கொள்ள ஒரு சாலட் செய்தேன். தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, கோவைக்காய், ஸுக்னி, ஆலிவ் காய், முட்டைக்கோஸ், கேரட் (துருவியது), கேப்ஸிகம் ஆகிய ஒன்பது அயிட்டங்களை பொறுமையாக வெட்டிப் போட்டு, எலுமிச்சைப் பழம் பிழிந்து செய்த சாலட். அப்போதுதான் குஷ்வந்த் சிங்கின் மரணச் செய்தி வந்தது. 'என்ன ஓர் ஒற்றுமை?!’ என்று நினைத்துக்கொண்டேன்.
 
குஷ்வந்த், தன்னை ஒரு குடிகாரன் என்றும், ஸ்த்ரீலோலன் என்றும் சொல்லிக்கொண்டவர். 'எனக்கு ராகிமால்ட் வேண்டாம்; சிங்கிள் மால்ட் விஸ்கி போதும்’ என்பார். பெண்களைப் பற்றி, தனது 97-ம் வயது முடிந்தபோது இப்படிச் சொன்னார், 'பெண்களை தாயாகவும், சகோதரியாகவும், புதல்வியாகவும் கருதும் இந்திய மனோபாவத்தை என்னால் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண்களின் வயது என்னவாக இருந்தாலும், அவர்கள் எனக்கு போகப் பொருள்களே!’
 
ஆனால் வேடிக்கை என்னவென்றால், குஷ்வந்த் தன்னை எப்படிக் காண்பித்துக்கொண்டாரோ அப்படி இல்லை. குடியை எடுத்துக்கொள்வோம். இளமையில் நீண்ட காலம் லண்டனில் வாழ்ந்த தாலோ என்னவோ, அவர் ஐரோப்பியர்களைப் போலவே குடித்தார். அவரைப் போல் அவர் ஒருவர்தான் குடிக்க முடியும். மாலை 7 மணிக்கு ஆரம்பித்து 8 மணி வரை மூன்று பெக். அதுவும் ஸ்காட்ச். அவர் கலந்துகொள்ளும் விருந்துகளிலும் இதே முறையைத்தான் பின்பற்றுவார். அவருடைய இல்லத்தில் அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விருந்திலும் இதே கதைதான். 7 மணியில் இருந்து 8 மணி வரை மூன்று பெக். 8 மணிக்கு இரவு உணவு. 9 மணிக்கு எல்லோரும் கலைந்துவிட வேண்டும்.
 
 
90 வயது வரை இப்படி மூன்று பெக். பிறகு, 95 வரை இரண்டு பெக். அதற்குப் பிறகு 99 வயதில் இறப்பதற்கு முந்தின இரவு வரை ஒரு பெக். இரவு 10 மணிக்குப் படுத்து, காலை 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். காலையில் டென்னிஸ் விளையாட்டு. குளிர் காலமாக இருந்தால், லோதி கார்டனில் வாக்கிங். கோடையாக இருந்தால், ஒரு மணி நேரம் நீச்சல்.
 
குஷ்வந்த் குடிக்கும் ஸ்காட்ச் விஸ்கிதான் எல்லோருக்கும் தெரியுமே தவிர, அவருடைய அன்றாட வாழ்வில் இருந்த 'ராணுவ ஒழுங்கு’ பற்றி அதிகம் பேருக்குத் தெரியாது.
 
1969-ல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் அவருடைய 99-வது வயது வரை அவர் ஒரு பத்தி எழுதினார். அதாவது, 44 ஆண்டுகள் இடைவிடாமல் வந்த அந்தப் பத்தியின் முகப்பில் ஒரு 'பல்ப்’ படம் இருக்கும். பல்புக்குள் குஷ்வந்த் எழுதிக்கொண்டு இருப்பார். அருகே நிறைய புத்தகங்கள் குவிந்திருக்கும். ஒரு பக்கம், அவருக்கு இஷ்டமான ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் இருக்கும். ஆனால், குடியை கொண்டாட்டத்தின் அடையாளமாக நினைக்கும் பலரால், இப்படிப்பட்ட ஒழுங்கான வாழ்க்கையை வாழ முடியுமா? 99 ஆண்டுகள் நீடித்த அவருடைய வாழ்க்கையில், இந்த ஒழுங்கை அவர் ஒரு நாள்கூடத் தளர்த்தியது கிடையாது.
 
தேதான் பெண்கள் விஷயத்திலும். 'பெண்களைப் போகப் பொருள்களாக நினைக்கிறேன்’ என்று அவர் சொன்னாலும், அவர் எப்போதுமே பெண்களின் நேசத்துக்கு உரியவராகவே இருந்தார். காரணம், நம்ப முடியாத அளவுக்கு அவர் வெளிப்படையாக இருந்தார்.
 
அவர் மும்பையில் இருந்தபோது தேவயானி என்கிற சினிமா நிருபர், அவரின் நெருங்கிய தோழி. இரண்டு பேரும் சேர்ந்து Stag Partyக்கெல்லாம் போவார்கள். Stag Party என்றால், ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது. (அந்த பார்ட்டியில் நீலப் படம் எல்லாம் போடுவார்கள் என்று எழுதுகிறார் குஷ்வந்த்!) தேவயானி ஒருமுறை, 'தர்மேந்திரா தினமும் இரண்டு நடிகைகளோடு 'கசமுசா’ செய்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போய் படுக்கை அறையில் தன் மனைவியோடு 'ஹோம் வொர்க்’ செய்கிறார்!’ என்று எழுதிவிட்டார். உடனே தர்மேந்திரா, தேவயானியைப் போய்ப் பார்த்து அவர் கன்னத்தில் அறைந்துவிட்டார். தேவயானி, போலீஸில் புகார் செய்ய, விஷயம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து குஷ்வந்த், 'தர்மேந்திராவின் இடத்தில் நான் இருந்தால், நானும் அவர் செய்ததையே செய்திருப்பேன்’ என்று எழுதினார். ஆனால், அதற்குப் பிறகும் தேவயானியும் குஷ்வந்த்தும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள்.
 
குஷ்வந்த்தை ஏன் பெண்கள் நேசித்தார்கள் என்பதற்கு, அவரது வாசகியான பிரேமா சுப்ரமணியம் பற்றி அவர் எழுதியிருப்பதில் இருந்து இன்னொரு யூகம் கிடைக்கிறது. அவரது நட்பு எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்தது என்பதே காரணம். பிரேமா, 20 ஆண்டுகளுக்கு முன்பு  சென்னை ஹிக்கின்பாதம்ஸில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவர். பிறகு, கணவருடன் அமெரிக்கா சென்றுவிட்டார். குஷ்வந்த்துக்கு, பிரேமா ராக்கி கட்டிய சகோதரி. 'பிரேமாவின் ஒவ்வொரு கடிதமும் 30 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்’ என்று சொல்லும் குஷ்வந்த், 'பிரேமா அமெரிக்கா சென்ற பிறகு, அப்படி ஒரு பிராமணத் தமிழ் சகோதரியைச் சந்திக்க முடியவில்லை!’ என்று எழுதுகிறார்.
 
குஷ்வந்த் சிங், இதுவரை 85 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். (அதில் 'பாகிஸ்தானுக்குப் போகும் ரயில்’ ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய நாவல்.) இந்தப் புத்தகங்களில் அவர் வலியுறுத்தும் அடிப்படையான விஷயம் 'வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!’ என்பதுதான். இயல்பிலேயே அழுகுணிகளான இந்தியர்களுக்கு குஷ்வந்த்தின் வாழ்க்கை ஒரு சாகசத்தைப் போலவே இருந்தது. ஆனால், சீக்கியர்களின் இயல்பான குணமே கொண்டாட்டம்தான். 'காவோ... பீயோ... மௌஜ் கரோ!’ என்பார்கள். 'சாப்பிடு... குடி... கொண்டாடு!’ என்று பொருள்.
 
குஷ்வந்த், சீக்கியராகப் பிறந்தது அவர் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், பெண்களைப் பற்றி அவர் சொன்னதைப் போல் நான் தமிழில் சொன்னால் புலனாய்வுப் பத்திரிகையில் என் புகைப்படத்தைப் போட்டு காமக்கொடூரன் என்று எழுதிவிடுவார்கள். முன்பு என்னுடைய வலைதளத்தில், 'I like wine, women and gods’ என்று பதிந்தேன். அதைப் பார்த்துவிட்டுப் பலரும் என்னைப் பற்றி 'செக்ஸ் சைக்கோ’ என்று எழுதியதும், அதை நீக்கும்படி ஆயிற்று. பாலியல் குற்றவாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் வித்தியாசம் தெரியாத சமூகத்தில், குஷ்வந்த்தைப் போல் என்னால் வெளிப்படையாக எழுத முடியவில்லை என்பது என் வருத்தங்களில் ஒன்று.
 
வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்பதை 'Hedonism’ என்பார்கள். இந்திய எழுத்தாளர்களிலேயே ஹெடோனிஸ்டாக வாழ்ந்த ஒரே எழுத்தாளர் குஷ்வந்த். ஆனால், ஹெடோனிஸம் வெகு எளிதில் தவறானப் புரிதலைத் தரக்கூடிய தாகவும் இருக்கிறது. கொண்டாட் டம் என்றால், தன்னையும் அழித்துக் கொண்டு அடுத்தவரையும் துன் புறுத்துதல் என்றே பலருக்கும்  அர்த்தமாகி இருக்கிறது. மது, இசை, பக்தி, மரணம் என்று எதை எடுத் தாலும் இந்தியர்களுக்கு அதீத மாகவும் சத்தமாகவும் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் நம்மவர்களைப் பற்றி சொல்லும்         முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.
 
பொதுவாக, ஹெடோனிஸத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள், தங்களது ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் 50 வயதிலேயே மரணத்தைத் தொட்டுவிடுவார்கள். ஆனால், குஷ்வந்த் 99 வயது வரை கொண்டாட்டமாக வாழ்ந்தார். அவருக்கு நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருந்த அதே சமயம், அவர் ஒரு தனிமை விரும்பியாகவும், அமைதியை நேசிப்பவராகவும் இருந்தார்.
 
100 வயது வரை வாழ்வது எப்படி என்பதற்கு, அவர் பலமுறை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். தினசரி உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு, காலை-மாலை தியானம், அளவான, உயர்தரமான மது, உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் கூடியவரை உண்மையே பேசுதல் என்று பட்டியலிட்டுவிட்டு, கடைசியாக ஒன்று சொல்கிறார்... 'ஜீவகாருண்யம்! பலரும் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பார்களே தவிர, இதைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க மாட்டார்கள். நாய், பூனை போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் உலகின் மேலான காரியங் களில் ஒன்று’ என்கிறார். 'பேராசை, வெறுப்பு, துவேஷம், சுயநலம் போன்றவற்றை நம்மிடம் இருந்து அகற்ற சிறிதளவும் முயற்சி செய்யாமல், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சுமார் நான்கு மணி நேரம் வரிசையில் நின்று தரிசிப்பதால் என்ன பயன்?’ என்று கேட்கிறார் குஷ்வந்த்.
 
குஷ்வந்த், ஓர் எழுத்தாளராக மட்டும் இல்லாமல், வாழ்க்கை பற்றிய பார்வையையே மாற்றிய என் ஆசான்களில் ஒருவராகவும் இருந்தார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பல்வேறு விஷயங்களில் முக்கியமானது, புனிதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே விமர்சனத்துக்கு உட்பட்டவைதான் என்ற Iconoclasm. சிலர், மற்றவர்களை விமர்சிப்பார்கள். தனக்கு என்று வந்தால் புனிதமாகிவிடுவார்கள். ஆனால், குஷ்வந்துக்கு இந்தப் பாகுபாடே கிடையாது. அவரைப் பொறுத்தவரை கடவுளாக இருந்தாலும், இறந்து போனவர்களாக இருந்தாலும், தானாக இருந்தாலும் எல்லோருமே ஒன்றுதான்.
 
இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம். செக்ஸ் பற்றி எழுதினால், இந்தியர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் குஷ்வந்த்துக்கு தினமும் ஆபாசக் கடிதங்கள் வருவது வழக்கம். 'என்னைத் திட்ட நினைப்பவர்கள் ஏன் என் வீட்டுப் பெண்களையே திட்டுகிறார்கள்?’ என்று கிண்டலாக ஒருமுறை குஷ்வந்த் குறிப்பிட்டார். நான் சொல்ல வந்தது அது அல்ல. ஒருமுறை, அவர் முகவரிக்கு தபால் அட்டை ஒன்று வந்தது. முகவரியில், 'குஷ்வந்த் சிங், பாஸ்டர்ட், இந்தியா’ என்று மட்டுமே இருந்ததாம். அதை ஃப்ரேம் போட்டு தன் அறையில் மாட்டிவைத்தார் குஷ்வந்த்.
 
எவ்வளவு பெரிய புத்திஜீவியாக இருந்தாலும் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கும்போது பயம் வந்துவிடும். ஆனால், எதைப் பற்றியுமே கவலைப்படாத குஷ்வந்த், 30 வயதைத் தாண்டாத இளைஞராக இருந்தபோதே (1943-ல்) தன் கல்லறை வாக்கியம் எப்படி இருக்கும் என்று எழுதி வெளியிட்டார். அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இது:
'கடவுளையோ, மனிதனையோ யாரையும் விட்டுவைக்காதவன் இங்கே உறங்குகிறான். யாரும் இவனுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம். ஏனென்றால், இவன் ஒரு பொறுக்கி. அசிங்கமாக எழுதுவது இவனுக்கு ஒரு விளையாட்டு. நல்லவேளை செத்துவிட்டான்... ரவுடிக்குப் பிறந்த ரவுடி!’
 
ஆனால், குஷ்வந்த் விரும்பியபடி அவர் புதைக்கப்படவில்லை. மண்ணில் இருந்து வந்த நாம் மண்ணுக்கே போவதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார். பல நிர்வாகக் காரணங்களால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. உயிரோடு இருந்திருந்தால் இதையும் கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
 
குஷ்வந்த் சிங் பற்றி சுருக்கமாகச் சொன்னால், அவரைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோமோ, அதேபோல் அவரைப் படித்த பிறகும் இருக்க முடியாது!

No comments:

Post a Comment