15 மாதங்களில் பிரதமர் ஆவது எப்படி?
கில்லாடி மோடி
ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்
'இந்தியப் பிரதமர் பதவிக்கு முயற்சிக்கலாமே!’ என்று மோடி சிந்தித்த தினத்திலிருந்து, அடுத்த 15-வது மாதத்தில் அவர் இந்தியப் பிரதமர். இது எப்படிச் சாத்தியம்?
''டெல்லிக்கு வரத் தயாராகிறீர்களா?'' - 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதக் கடைசியில் கேட்கப்பட்ட கேள்வி இது!
''ஊகமான கேள்விக்குப் பதில் தர மாட்டேன்'' - என்று பதில் சொன்னவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. சபர்மதியில் கிடைத்த தொடர் வெற்றி, யமுனையிலும் தொடக்கப் புள்ளியை வைத்துவிட்டது.
அன்று மோடியை மீண்டும் குஜராத் முதல்வர் ஆக்க, அத்வானி, சுஷ்மா, ராஜ்நாத், நிதின் கட்கரி, அருண்ஜெட்லி என அரை டஜன் தலைவர்கள் வந்து 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பேசினார்கள். ஆனால் இன்று, மோடியைப் பிரதமர் ஆக்க இவர்கள் யாருமே தேவைப்படவில்லை. தன்னைப் பிரதமர் ஆக்க, தான் மட்டுமே போதும் என்று மோடி நினைத்தார். மக்கள் நினைப்பும் அப்படியே ஆனதுதான், 336 தொகுதிகளை வாரிக் கொடுத்தது. இது, பா.ஜ.க-வுக்குக் கிடைத்த வெற்றி அல்ல; மோடியின் வெற்றி என்பதை அத்வானி அறிவார். அதனால்தான் அமைதியாக இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ஸும் இதை அறியும். அதனால்தான் பக்குவமாக மோடியைப் பயன்படுத்தப் பார்க்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. வழக்கம் போல் மதத் தீவிர வாதம் பற்றிய வகுப்புதான் அது. உணவு இடைவேளையில் பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். 'பிரதமர் பதவிக்கு மோடிதான் சரியான ஆள். ஆர்.எஸ்.எஸ்-ஸின் வளர்ப்பு’ என்றவர், '2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 25 ஆண்டுகள் இந்தியாவை அந்தக் கட்சிதான் ஆளும். ஒருவேளை வராமல்போனால், இன்னொரு 100 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சி வரவே முடியாது’ என்றாராம். இத்தகைய அரிய வாய்ப்புக்குச் சரியான ஆள் மோடிதான் என்பதைத் தேர்வு செய்ததில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபரேஷன் ஆரம்பம் ஆகிறது.
இந்தியப் பிரிவினைக்கு வித்திட்ட ஜின்னாவைப் புகழ்ந்து அத்வானி பேசியதில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ். அவரை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டது. குஜராத்தில், திடீர் பிம்பமாக மோடி எழுந்து வருவதைப் பார்த்துத் தூக்கிக் கொண்டார்கள். 'எனக்குக் குஜராத்தை முன்னேற்றுவது மட்டுமே குறிக்கோள். என் மனதில் இருப்பது குஜராத்... குஜராத்... குஜராத்!’ என்று 2012 டிசம்பர் வரை சொல்லிக்கொண்டிருந்த மோடிக்கு, பிரதமர் கனவைப் புகட்டியது ஆர்.எஸ்.எஸ்.
'2009-ம் ஆண்டுத் தேர்தலில் தோற்றுப்போன பழைய அத்வானி முகத்தைவிட, புதிய மோடி முகம் எடுபடும்’ என்று பலரும் நினைத்து 'நமோ’ பாடத் தொடங்கினார்கள். ஊகமாக அல்ல, உண்மையாகவே 2013 ஜனவரியிலேயே டெல்லி கிளம்பத் தயாராகிவிட்டார் மோடி.
சோனியாவும் ராகுலும் குஜராத் வந்து மோடிக்கு 'மரண வியாபாரி’ என்ற பட்டம் கொடுத்துச் சீண்டியது, வசதியாகிப்போனது. ''என்னால் குஜராத்தை இவ்வளவு முன்னேற்ற முடிந்தது என்றால், சகோதரி சோனியா, இளவரசர் ராகுலால் ஏன் முடியவில்லை? அவர்கள் நோக்கம் வளர்ச்சி அல்ல, கொள்ளை!'' என்று தொடங்கினார் மோடி.
மூன்றாவது முறை வென்றதும் 'நமோ கோஷத்துக்கு’ அகில இந்தியக் கவனம் கிடைத்தது. 'இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்கப்பட்டபோது, 'குஜராத்தை மோடி சுபிட்சம் ஆக்கிவிட்டார்’ என்று பரப்பப்பட்டது. இந்தக் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த சுஷ்மா சுவராஜ், மோடியைப் பெருமைப்படுத்தும் விதமாக, 'பிரதமர் பதவிக்கே தகுதியானவர் மோடி’ என்று சும்மா பேச்சுக்குப் புகழ்ந்தார்... அதுதான் ஆரம்பம்!
ஆர்.எஸ்.எஸ்-ஸின் கனவுக்கு, சரியான ஆளாக நரேந்திர மோடி கண்ணுக்குத் தெரிந்தார். மேல்மட்டத்து விவாதங்களில் அவரது பெயர் அடிபட ஆரம்பித்தபோது, அத்வானி பதற்றம் ஆனார். ஆனால், தன்னுடைய பிடிவாதங்களில் ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. அந்த அமைப்பு, ராஜ்நாத் சிங்கின் சம்மதத்தை முதலில் வாங்கியது. மெதுவாகக் காய் நகர்த்தினார் ராஜ்நாத். ஆரம்பத்தில் மோடி தயங்கினார்; பின்னர் சம்மதித்தார்; ஆனால் நிபந்தனையுடன். 'என்னைப் பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்’ என்பதே அவரது நிபந்தனை. இந்த வார்த்தையை அத்வானி ஏற்க மாட்டார் என்பதால், 'பிரசாரக் குழுத் தலைவர்’ என்ற ஒரு புதிய பதவியைக் கண்டுபிடித்தார்கள்.
2013 ஜனவரி முதல் மே வரைக்கும் இதை ரகசியமாகவே வைத்திருந்தது ஆர்.எஸ்.எஸ்., ஜூன் மாதம் கோவா பா.ஜ.க. நிர்வாகக் குழுவில் அறிவிக்கத் திட்டமிட்டது. அதைத் தெரிந்துகொண்டு அங்கு அத்வானி வரவில்லை. கோவாவில் மோடி பெயர் அறிவிப்பதற்கு முன்னதாக அத்வானி வீட்டுக்குப் போனவர்கள் சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோபலே. இருவரும்
ஆர்.எஸ்.எஸ்-ஸின் முக்கியமான தலைவர்கள். அத்வானி ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி ஆகிய இருவரும் போனில் பேசி கட்டாயப்படுத்தினார்கள். 'பிதாமகன் பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுத்தபடி பாண்டவர்களுக்குப் போதனை செய்கிறார்’ என்று ட்விட்டரில் கண்ணீர்விட்டார் அத்வானி. அவரிடம் இருந்து அந்தஸ்து பறிக்கப்பட்டது!
அதற்குச் சில நாட்களுக்கு முன், புதிய நிர்வாகிகள் பட்டியலோடு அத்வானியைச் சந்தித்தார் ராஜ்நாத் சிங். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் மோடியின் வலது கரமான அமித் ஷா பெயர் அதில் இருந்தது. 'குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றவரை பொதுச் செயலாளர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லிப்பார்த்தார் அத்வானி. அதை ராஜ்நாத் சிங் ஏற்கவில்லை. 'மக்கள் நம்பிக்கையைப் பெற்ற மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்குப் பதவி கொடுங்கள்’ என்றும் அத்வானி சொன்னார். அதையும் ராஜ்நாத் ஏற்கவில்லை. ஸ்மிருதி ராணி, மீனாட்சி லேக்கி... போன்ற மோடிக்கு வேண்டியவர்கள் பெயர்களே அதிகம் இருந்தன.
நிர்வாகிகள் மொத்தமே அவரது ஆட்களாகப் போடப்படுவதை அத்வானி உணர்ந்தார். வெள்ளம் தலைக்கு மேல் ஆகஸ்ட் மாதங்களில் போய்விட்டது. செப்டம்பரில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது. 'மோடி பெயரைச் சொல்லி தேர்தலைச் சந்தித்தால் எப்படி இருக்கும்?, சொல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் எத்தனை இடம் பிடிப்போம்?’ என்று பா.ஜ.க-வின் தேர்தல் ஆய்வாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கணிப்பு நடத்தினார். 'பெயரை அறிவித்தால்தான் பயன் உண்டு!’ என்று அவரும் சொன்னார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.
'ஏக் பாரத்... ஷ்ரேட் பாரத்’ (ஓர் இந்தியா; மாபெரும் இந்தியா), 'காங்கிரஸ் முகத் பாரத் நிர்மான்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற இரண்டு முழக்கங்களை முன்வைத்தார் மோடி. குஜராத்துக்குள் என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம் இந்தியாவுக்குள்ளும் பரப்பினார். தொடர் யாத்திரைகள் தான் அவர் பாணி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய யாத்திரையில் தான் மட்டுமே பங்கேற்றார். மற்றவர்களுக்கு அழைப்புகூட இல்லை.
திரும்பிய பக்கமெல்லாம் மோடி. நேரில், பேரணியில், ஃப்ளெக்ஸில், ஃபேஸ்புக்கில்... அவர் உருவம். 3டி தொழில்நுட்பம் வரை கபளீகரம் செய்தார்கள். ஒரே நேரத்தில் 53 இடங்களில் மோடி பேசுவது மாதிரி செய்தார்கள். குறிப்பிட்ட நிறுவனம், வேறு யாருக்கும் இந்த வசதியை செய்துதர முடியாத அளவுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. உத்தரப்பிரதேசம் முழுக்கவே ரதம் போனது. கலை நிகழ்ச்சிகள் நடத்தியது. மாலை வேளையில் மோடி பேச்சை ஒளிப்பரப்பியது. தாமரை சின்னம் போட்ட கப் கேக் தரப்பட்டது. குழந்தைகளுக்கு மோடி முகம் கொண்ட மாஸ்க் வழங்கப்பட்டது.
வடநாட்டில் பா.ஜ.க. மகளிர் அணியினர் வீடு வீடாகப் போய் வாசலில் உட்கார்ந்து தாமரை மெஹந்தி போட்டார்கள். இதன் உச்சமாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் சின்னச் சின்ன மோடி சிலைகளை 100 ரூபாய்க்கு விற்றார்கள். அதில் காவி குர்தா, வெள்ளை ஓவர் கோர்ட் போட்டிருந்தார் மோடி. ஆனால், தினமும் அவர் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமான உடையில் தோன்றினார். எம்.ஜி.ஆருக்கு அடுத்து விதவிதமான ஸோலோ ஸ்டில் மோடிக்குத்தான் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்குப் படம் காட்டினார்.
காங்கிரஸுக்கு அம்பானி என்றால், மோடிக்கு அதானி. ஹெலிகாப்டரில், இந்தியாவின் எட்டுத்திக்கும் வலம் வந்தார். லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள், நூற்றுக்கணக்கான கூட்டங்கள், கோடிக்கணக்கான மக்கள் சந்திப்பு என்று கடந்த ஜனவரி முதல் மே வரைக்குமான ஐந்து மாத காலம் அசராமல் அலைந்தார். இப்போது, அறுவடையும் செய்துவிட்டார் மோடி!
''நேரு குடும்பத்தவருக்கு, குஜராத்திகளைக் கண்டாலே பிடிக்காது. படேல், மொரார்ஜி தேசாயை மோசமாக நடத்தினார்கள். இப்போது என்னைக் குறிவைத்துள்ளார்கள்'' என்று சொன்ன குஜராத்தி மோடி, காங்கிரஸைப் பழிவாங்கிவிட்டார். அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது.
''300 எம்.பி-க்களைத் தாருங்கள். இந்தியாவை 60 மாதங்களில் மாற்றிக் காட்டுகிறேன்'' என்றும் மோடி சொன்னார். அவரைப் பிரதமர் வேட்பாளராகக் கொண்டுவந்த ஆர்.எஸ்.எஸ்., வெவ்வேறு அஜெண்டாவுடன் நிற்கிறது. ராமர் கோயில், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் என்ற மூன்றும் அவர்களுக்குப் பிரதானம். ஆனால், பிரதமர் மோடிக்கு எது முக்கியம்?
நாம் பார்க்கப்போகும் இந்திய அரசியல்... இனி இதுதான்!
No comments:
Post a Comment